தொடர்கள்
Published:Updated:

ஆரூடம் அறிவோம் : 17

ஜோதிட புராணம்! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

ம் முன்னோர்கள் ஒவ்வொரு நாளையும் 24 கூறாக்கி ஒவ்வொரு கூறினையும் ஹோரா என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். இந்தச் சொல் ஓரை என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரைகளின் அடிப்படையில்தான் வார நாட்கள் தோன்றின என்றும் ஒரு கருத்து உண்டு. 24 ஓரைகளும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 நவக்ரஹ தேவதைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன (ராகு கேதுக்களுக்கு ஓரை கிடையாது).

ஒவ்வொரு நாளும் உதயத்தில் எந்த நவக்ரஹத்தின் ஓரை அமைகிறதோ அந்த நாள் அவர்கள் பெயரால் அறியப்படுகிறது. இப்படி வந்ததே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய வார நாட்கள் ஏழாகும். ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தை ஒட்டி வரும் முதல் ஓரை, சூரியன் ஓரையாகும். அதனைத்தொடர்ந்து சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு கிரஹத்துக்குரிய ஹோரை நேரமாகும். சூரிய உதய நேரம் சிறிது மாறுபட்டிருந்தாலும் ஹோரை நேரம் காலை 6 மணி முதல் கணக்கிடப்படுகிறது.

ஆரூடம் அறிவோம் : 17

ஹோரை நேரங்கள் சுப ஹோரை, அசுப ஹோரை என இருவகைப்படுகின்றன. சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரின் ஹோரை நேரம் சுப ஹோரை எனப்படுகிறது. இந்த நேரத்தில் திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். சுபமுகூர்த்த வேளை நிச்சயிக்கும் காலத்தில் அந்த நாளுக்குரிய சுப ஹோரை நாழிகையை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஹோரைகள் அசுப ஹோரைகள். இந்த ஹோரை நாழிகைகளில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நலம். ஒவ்வொரு கிழமையிலும் எந்தெந்த மணியளவில் இந்த சுப, அசுப ஹோரைக்காலம் அமைகிறது என்பதை பின்காணும் அட்டவணையிலிருந்து அறியலாம். இந்த ஹோரை விபரங்களை பஞ்சாங்கத்திலிருந்து அறியலாம்.

பொதுவாக, காலை சூரிய உதயம் முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை உள்ள வேளைகளில்தான் ஹோரை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும். இரவு, நள்ளிரவு வேளைகளில் ஹோரைகள் பார்க்க வேண்டிய அவசியம் இராது. சுபகாரியங்களுக்கு சுபமுகூர்த்தங்களை நிர்ணயிக்கும்போது அது சுப ஹோரையாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்தான்.

அன்றாடக் காரியங்களுக்கு, அலுவலகம் போக, நடந்து கொண்டிருக்கும் காரியங்களைத் தொடர, அத்யாவசியமான கடமைகளைச் செய்ய ஹோரை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காரியத்திற்கும் ராகு காலம், யமகண்டம், ஹோரை பார்த்துத்தான் செய்ய வேண்டுமென்றால் சில நாட்களில் அத்தியாவசிய வேலைகளைக் கூட நம்மால் செய்ய முடியாது. நாள் நக்ஷத்திரம், நல்ல வேளை பார்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அது நம் அன்றாட அத்யாவசியக் கடமைகளைச் செய்வதில் தடங்கலை ஏற்படுத்தி, நம்மை சோம்பேறியாக்கிவிடக்கூடாது.

ஆரூடம் அறிவோம் : 17

நிகழ்வுகளை இரண்டாகப் பிரிக்கலாம். நாமாகத் திட்டமிட்டு நடத்தும் நிகழ்வுகள், நம்மைக் கேட்காமலே நம்மை நடத்திச் செல்லும் நிகழ்வுகள். முதல் வகையை நாம் திட்டமிடலாம். அப்போது நாள் நக்ஷத்திரம், நாழிகை, நல்ல நேரம் பார்த்துத் திட்டமிடலாம். இரண்டாவது வகை நம் கையில் இல்லை.

அதற்கு நாள் நக்ஷத்திரம் நம்மால் நிர்ணயிக்க முடியாது, அவையும் நன்றாக நடக்க கடவுளை நம்பி பிரார்த்தனை செய்து நம் கடமையைச் செய்ய வேண்டும். இனி முக்குண வேளை என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஆரூடம் அறிவோம் : 17

நாட்களின் முக்குண வேளை

மனிதனுக்குரிய குணங்கள் மூன்று. அவை சுத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்பவை.

சத்வம் என்பது சாத்வீகமான குணம். நல்ல சிந்தனை, நல்ல செயல்கள், பொறுமை, தயை,  இவையெல்லாம் சத்வ குணத்தின் வெளிப்பாடுகள்.

ரஜோ குணம் என்பது ஆடம்பரம், ஆசை, அஹங்காரம், பொறாமை போன்றவற்றின் பிரதிபலிப்புகளாக அமையும்.

எதிலும் சோர்வு, சோம்பேறித்தனம், பயம், செயல்களை தாமதப்படுத்தும் இயல்பு போன்றவை தமோகுண இயல்பாகும்.

ஆரூடம் அறிவோம் : 17

மனிதன் அன்றாட வாழ்க்கையில் சில சமயங்களில் சாத்வீகமாகவும், சில சமயங்களில் ராஜசீகமாகவும், வேறு சமயங்களில் தாமஸமாகவும், செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. நம்மையும் நமது செயல்களையும் ஆட்டிப்படைக்கும் காலக்கணக்கையும் நம் முன்னோர்கள் முக்குண வேளையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

தேவதா பிரதிஷ்டை, க்ருஹ ஆரம்பம், க்ருஹப்பிரவேசம், சீமந்தம், உபநயனம், விவாகம் போன்ற சுப காரியங்களுக்கு முகூர்த்த லக்னங்களை நிச்சயிக்கும்போது, அது சத்வகாலமா, ரஜோ காலமா, தமோ காலமா என்பனவற்றைக் கணக்கிட்டு நிர்ணயிக்கிறார்கள்.

எனவே, ஒவ்வொரு நாளையும் ஒன்றரை மணி நேரம் அல்லது மூன்றே கால் நாழிகைகளாகப் பிரித்து, அவை முக்குண வேளையில், எந்த வேளை என்பதை ஜோதிஷ சாஸ்திரத்தில் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

- தொடரும்...