Published:Updated:

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்

ஒவ்வொரு  நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணங்களும், வாழ்க்கைமுறைகளும் இருக்கும். அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளைத் தாண்டிச் செல்வதற்கு பரிகாரங்களும் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள்,  மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.


நட்சத்திர தேவதை    : அஜைகபாதன். 11 ருத்ரர்களில் ஒருவர். 
வடிவம்    :    சதுர வடிவில் இருக்கும் இரண்டு  நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு.
எழுத்துகள்    : ஸே, ஸோ, தா, தீ.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:
இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மெல்லிய நடை உடையவர்கள்; வெகுளி: விலையுயர்ந்த ஆபரணங்களை அணிபவர்கள் என்று கூறுகிறது. 
ஜாதக அலங்காரம், தங்கள் மீது குற்றம் சுமத்துபவரை  சகித்துக்கொள்ளாதவர்; வழக்குகளை நியாயமாகத் தீர்ப்பவர்; பால், நெய், தயிர் இவற்றை விரும்பி உண்பவர்; பெண்களுக்காக வீண் செலவு செய்யாதவர்; கல்வி உடையவர் என்கிறது.
 பிருகத் ஜாதகம், ... பெண்களால் அடக்கப்படுபவர்; தனவந்தர்; சாதுரியமாகப் பேசிப் பொருள் திரட்டுபவர் என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதற்கேற்ப, மனதில் எப்போதும் பெரிய சிந்தனைகள் பிறக்கும். தொலைநோக்குச் சிந்தனை அதிகம் உண்டு. இவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாகுவார்ர்கள்; மற்றவர்களையும் இவர்கள் விமர்சிப்பார்கள்; பிழைக்கத் தெரியாதவர்; அப்பாவி என்று சந்திர சேகர காவியம் என்ற நூல் விளம்புகிறது. 
பனி, புயல், வெயில், மழை ஆகியவற்றைப் பார்க்காமல் கடுந்தவம் புரியும் சித்தர்களைப் போல சுற்றுப்புறச் சூழ்நிலையால், பாதிக்கப்படாதவர். தன் நிலை தவறாதவர். உணர்ச்சிகளை ஆறாம் அறிவால் அடக்கி, பதற்றமில்லாமல் பக்குவமாக வெளிப்படுத்தும் முதிர்ச்சி இவர்களிடம் உண்டு. 

அனைத்தையும் அறிந்திருந்தும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுடையதுதான் சரி என்று வாதிடாமல், மாற்றார் கருத்துக்கும் மதிப்பளிப்பார்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றி யோசிப்பவராகவும், அவர்கள் நலனில் அக்கறைகொள்பவராகவும் இருப்பார்கள்; முன்கோபி; இருந்தாலும் குணவான் என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது. 
தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள்; சமூக ஆர்வலராக இருப்பாகள்; அனைத்துத் துறையையும் அறிந்து வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்; குடும்பத்தில் குறைவான ஈடுபாடுள்ளவர்; துறவறம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர் என்று சிற்றம்பல சேகரம் என்ற நூல் கூறுகிறது. 
காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாதவர். கொள்கை, கோட்பாடுகளிலிருந்து பிறழ மாட்டார்கள். ஆறாவது அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் செய்வார்கள். மற்றவர்களுடைய நிர்ப்பந்தத்துக்கு உடன்படாதவர். தங்கள் சொத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். பிறருடைய சொத்துக்கும் ஆசைப்பட மாட்டார்கள். 
குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்ந்து கொண்டிருப்பார். சித்தர்களாக, மகான்களாக  இவர்களில் அனேகர் இருப்பார்கள். கல்வியாளர், அறிவியல் அறிஞர், பேராசிரியர், ஆசிரியர் ஆகியோராக பணியில்  இருப்பார்கள். இவர்களில் பலர் கல்லூரி, ஆசிரியப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை நடத்துபவராக இருப்பார்கள். 

27 வயது முதல்  இவர்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும். 26 வயது வரை கொஞ்சம் தடுமாற்றமாக இருப்பார்கள். சிறு வயதிலேயே பல பெரிய அனுபவங்களையும் கசப்பு உணர்வுகளையும் சந்திப்பார்கள். அதனால்தான் ஆரம்பத்தில் வாழ்க்கையில் கொஞ்சம் பற்று குறைந்தும் பின்பு பற்று ஏற்பட்டும் பிறகு மீண்டும் பற்றற்றும் இருப்பார்கள். அதிகமாக யோசிப்பார்கள்; யாருக்கும் தொந்தரவு தர மாட்டார்கள்; சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார்கள். 
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரங்கள்:
பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
 
திருவானைக்காவில் அருள்புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை வணங்குதல் நலம்.
பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்: 
ஆனைமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாசானியம்மனை வணங்குதல் நலம்.
பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்: 
கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ பட்டீஸ்வரரையும் ஸ்ரீ நடராஜப் பெருமானையும் வணங்குதல் நலம்.
பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்: 
பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணியை வணங்குதல் நலம்.