Published:Updated:

ரேவதி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள்

ரேவதி நட்சத்திரக்காரர்கள்
ரேவதி நட்சத்திரக்காரர்கள்

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், அவர்கள் வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். உத்திரட்டாதி நட்சத்திரத்தைத் தொடர்ந்து ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

நட்சத்திர தேவதை : ஆதித்தர்களில் ஒருவரான பூஷா.

வடிவம் : மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக்கொண்ட கூட்டம்.

எழுத்துகள் : தே, தோ, ச, சீ.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

புதனின் மூன்றாவது நட்சத்திரம் ரேவதி. நட்சத்திர மாலை,

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அழகுடையவர்; மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியவர்; அறிஞர்களுக்கும் ஞானிகளுக்கும் நண்பர்; மற்றவர்கள் வணங்கத்தக்கவர்; பெருந்தன்மையாளர்; செல்வந்தர் என்று கூறுகிறது.

ஜாதக அலங்காரம், ஆயுட் காலத்தில் பாதி வரை மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்பவர்; நல்லவன்; மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்; குணவான் என்று கூறுகிறது.

யவன ஜாதகம், தனமுள்ளவர்; பளிச்சென்ற தோற்றமுள்ளவர்; பண்டிதன்; கோட்டைகளைக் கைப்பற்றுபவன்; பயணப் பிரியர் என்கிறது.

பிருகத் ஜாதகம், அங்கக் குறை இல்லாதவர், பிறர் பொருள் மீது ஆசையில்லாதவர் என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல தங்களை மாற்றிக் கொள்வார்கள். உள்ளுணர்வால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். பெற்ற அனுபவ அறிவை, கற்ற தத்துவங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறுவார்கள். கவர்ந்திழுக்கும் கண்களை உடையவராகவும் பெண்களை நேசிப்பவராகவும் திறமையாகப் பேசுபவராகவும் வேதம் அறிந்தவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள்.

லட்சம் மக்கள் கூடியிருக்கும் கூட்டமென்றாலும் தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வார்கள். இவர்கள் எல்லோராலும் விரும்பப்படுபவர். மூலதனம் இல்லாமல் மூளை பலத்தால் முன்னேறுவார்கள். சட்ட திட்டங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் கட்டுப்பட்டவர். மாற்று பாலாரிடம் ஈடுபாடு உடையவர். உறவினர்களைக் காட்டிலும் அன்னியர்களிடம் பழகுவீர்கள். பல மொழிகளில் பண்டிதர். சமயோஜிதத்தால் மற்றவர்களை வசியப்படுத்தக்கூடிய வார்த்தை சாதுரியம் உள்ளவர்.

செடி, கொடிகள் வாடினாலே வருத்தப்படும் அளவுக்கு ஜீவகாருண்யம் உடையவர். எப்போதும் சிரித்த முகத்துடனும் அழகிய பல் வரிசையுடனும் காட்சி தருபவர். பொதுவாக இவர்களுக்கு 21 வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். வாகனத்திலிருந்து விழுவதால், இவர்களுக்கு அடிபடும். 24-வது வயதில் எல்லா இன்பங்களும் உண்டாகும். விளையாட்டுப் பிரியராகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

நாற்பது வயதானாலும் 32 வயதைப்போல் தோற்றம் இருக்கும் ஆதலால், உங்களுடைய உண்மையான வயதைக் கண்டறிவது மிகவும் கடினம். மனைவி மீது பிரியமுள்ளவர். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவர். மூடக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சபை நாகரிகம் தெரிந்தவர். உங்களில் பலர் ஓவியர், எழுத்தாளர், படைப்பாளி ஆகியோராக இருப்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல கிளப்புகளில் பெரிய பதவியை வகிப்பார்கள். உடன்பிறந்தவர்களுக்காகப் பூர்வீக சொத்தைக்கூட விட்டுக்கொடுப்பார்கள். வஞ்சகமாக யோசிக்கத் தெரியாதவர். இவர்கள் மனம் தெளிந்த நீரோடை போல் சுத்தமாக இருக்கும். தாராள மனமும் அளவுக்கு அதிகமான இளகிய மனமும் இவர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். இவர்கள் தைரியசாலிதான்; ஆனால், நோயுற்றால் கலவரமடைவார்கள். இவர்களில் பலர் அமைச்சர், அறங்காவலர் ஆகியோராக இருப்பார்கள். சமூகத்தில் ஒரு வி.ஐ.பியாக விளங்குவீர்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:

ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:

உத்திரமேரூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள தில்லை விளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதாபிராட்டி உடனுறை ஸ்ரீகோதண்டராமனையும் வினய ஆஞ்சநேயனையும் வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:

கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயனை வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

திருக்காவலூரில் (காவலூரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானை வணங்குதல் நலம்.