Published:Updated:

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

பிரீமியம் ஸ்டோரி
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
##~##

பொதுப் பலன்கள்

புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12.00-க்கு 1.1.2014-ம் ஆண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி ஆன்மிகம், பகுத்தறிவுக்குரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் (2+0+1+4=7) இந்த ஆண்டு பிறப்பதால் மக்கள் எதிலும் மாற்றத்தை விரும்புவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கத் துணிவார்கள். ஆன்மிகத்தின் ஆழத்தையும் எளிதாக உணர்வார்கள். மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும்.

கெஜகேசரி யோகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கல்வித்துறை மேம்படும். போலி கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்குச் சம்பளம் உயரும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும். மருத்துவம், ஆடிட்டிங், சட்டம், மெக்கானிக் ரோபோ இன்ஜினீயரிங் படிப்புகள் பிரபலமடையும். அறிவியலறிஞர்கள் உருவாவார்கள். இந்தியா அதிநவீன ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் ஏவும். குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்திருப்பதால் நாகரிகமற்ற வகையில் அரசியல்வாதிகளின் அணுகுமுறை இருக்கும். மக்களிடம் சேமிப்பு குறையும். தங்கம் விலை அதிகமாகும். இந்தியாவின் தங்கப் பயன்பாட்டு சதவிகிதம் வருடத்தின் முற்பகுதியில் குறைந்து, பிற்பகுதியில் கூடுதலாகும். வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தமுடியாமல் பலரும் சிரமத்துக்குள்ளாவார்கள். வங்கிகளின் வட்டி விகிதம் உயரும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

பாலியல் குற்றங்கள், பலாத்காரங்கள் குறையும். ஆனால், பெண் ஆதிக்க கிரகமான சுக்ரன் வக்கரித்து நிற்பதால், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகமாகும். இரண்டாவது திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை கூடும். சாலை விபத்துகளாலும், மனஉளைச்சலாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும். உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களும், ஆட்சிக் கவிழ்ப்புகளும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளும் பெருகும். பல தொழிற்கூடங்கள் மூடப்படும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வாகனங்களின் விலை விழும். ஆனால், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிலையற்றதாகி, உயரும். முறையற்ற உறவு முறை அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்கள் பாதிப்படைவார்கள்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

21.6.2014 வரை, கலைகளுக்குரிய கிரகமான சுக்ரனின் வீட்டில் சனியும் ராகுவும் தொடர்வதாலும், 18.10.14 முதல் 15.12.14 வரை சுக்ரன் பலவீனமாவதாலும், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்கள் பாதிப்படைவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சிரமப்படுவார்கள். வீடுகளின் விற்பனை குறையும். கட்டட விபத்துகள் அதிகரிக்கும். பசுக்கள் புதுவித நோயால் பாதிப்படையும். ஆடு மற்றும் நாய்களும் வைரஸால் பாதிப்படையும். அறுவடைக் காலத்தில் மழை அதிகரிக்கும்.  வருட தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாய் பலவீனமடைவதால், ரியல் எஸ்டேட் விழும். ஆனால், செவ்வாய் 2.9.2014 முதல் வலுவடைவதால், அதுமுதல் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஐசான் வால் நட்சத்திர இயக்கத்தால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசியலில் திடீர் திருப்பங்களும், மாறுபட்ட கூட்டணியும் அமையும். இந்தியா அண்டை நாடுகளுடன் மறைமுக யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். ஆட்சியாளர்கள் நிம்மதியிழப்பார்கள்.

பரிகாரம்:

நியாயத்துக்கும், நேர்மைக்கும், பக்தி மார்க்கத்துக்கும் உரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அழியும் நிலையிலுள்ள ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் புதுப்பிக்க உதவுங்கள். தவறான வழியில் வரும் சொத்து, சுகங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

கொள்கைப் பிடிப்பு கொண்ட மேஷராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பண வரவு அதிகரிக்கும்; செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பிதுர் வழி சொத்து கைக்கு வரும்.

வருடப் பிறப்பின்போது ராசிநாதன் செவ்வாய் 6-ல் பலம் பெற்று அமர்ந்திருப்பதால், மனப்போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவர். பாக்கி பணத்தைக் கொடுத்து  புதிய சொத்தை பத்திரப்பதிவு செய்வீர்கள். உடன் பிறந்த வர்களால் உதவிகள் உண்டு. அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும்.

புத்தாண்டு பிறப்பின்போது புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பர்.  வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடக்கும்.மகனுக்கு நல்ல வேலையும், வாழ்க்கைத் துணையும் அமையும்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்ப தால், புதிய முயற்சிகள் தள்ளிப்போகும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை குரு 4-ல் வீட்டிலேயே அமர்வதால், இழுபறியான காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு

சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சொத்து வாங்கும்போது, சட்ட நிபுணர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும்.

4.2.14 முதல் 24.3.14 வரை; 16.7.14 முதல் 14.10.14 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் சிறு விபத்து, உடன்பிறந்தோருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். 20.6.14 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் ஏற்பட லாம். மனைவிக்கு தைராய்டு போன்ற பிரச்னைகள் வந்து செல்லும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசியைவிட்டு கேது விலகி, 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைகள் வந்து சேரும். மனைவியுடனான மோதல்கள் நீங்கும். அவருடைய ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடை விலகும். சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

இந்த ஆண்டில் சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகவும், 18.12.14 முதல் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் தம்பதிக்கு இடையே சச்சரவுகள் எழும். கவனக் குறைவால் ஆபரணங்களை இழக்க நேரிடும். எவருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அரசுக்கு வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். புதியவர்களிடம் கவனமாகப் பழகவும்.

வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். தொழில் ரகசியத்தைக் காப்பாற்றுங்கள். பாக்கிகளை கஷ்டப்பட்டு வசூலிப்பீர்கள். துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபம் அடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்கு தாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்கள், கூடுதல் நேரம் உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிப்பு உண்டு. சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்கள் ஜூனியர்களிடம் வேலை வாங்குவது கஷ்டமாக இருக்கும். இடமாற்றங்கள் உண்டு. சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.

கன்னிப்பெண்கள், போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்களுக்கு மந்தம், மறதி வந்து நீங்கும். விரும்பிய பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மாநில அளவில் பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர், கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அனுபவ அறிவாலும், சாமர்த்தியத்தாலும் உங்களை வெற்றி பெற வைக்கும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

தையும் தாங்கும் இதயம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு 6-ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக இருக்கும்போது 2014 பிறக்கிறது. தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை- ஆபரணச் சேர்க்கை உண்டு. 8-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், திடீர் பயணங்கள் ஏற்படும். சிறு சிறு விபத்து களும் உண்டாகலாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டில் அமர்வதால்  வேலைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ராகுவும் ஜூன்- 20 வரை 6-ல் நிற்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவ பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிருங்கள்.  

இந்த ஆண்டு முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்ப தால் எதிரிகளும் நண்பர்களாவர். தடைப்பட்டிருந்த வீட்டுப் பணியை மீண்டும் துவங்க, வங்கிக் கடன் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையுடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருடைய பிணிகள் எல்லாம் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வருடத்தின் இறுதியில் 18.12.14 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறார். தம்பதிக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போகவும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துபோகும்.  

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுச் செயல்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.    

கன்னிப்பெண்களுக்கு சமயோசித புத்தி அதிகரிக்கும். கல்வி மேம்படும். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலருடைய சுயரூபத்தை இப்போது உணருவீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள கீரை- காய் வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு, அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வாய்க்கும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவார்கள். கலைத் துறையினருக்கு, உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, உங்களின் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சி களில் வெற்றி தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

நேர்மைவாதிகள் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் 2014-ம் ஆண்டு பிறக்கிறது. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். உங்கள் ராசிநாதன் புதன் 7-ல் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

12.6.14 வரை ஜென்ம குருவாக இருப்பதால் வேலைச் சுமை இருக்கும். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு 2-ம் வீட்டில் தொடர்வதால், பண வரவு உண்டு. பிரிந்த தம்பதி ஒன்றுசேருவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.  

20.6.14 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை- கால் வலி வந்துபோகும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் விலகியிருங்கள்.

18.12.14 முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வர். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரிகளுக்கு, பற்று- வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறார் வேண்டாம். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாகச் சேர்க்கப் பாருங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு, ஜூன் 21-ம் தேதி முதல் கேது 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை- நிறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பளப் பாக்கி வந்து சேரும்.

கன்னிப்பெண்கள், தங்களின் பலம்- பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும்.

மாணவர்களே! உங்களின் தனித் திறமையை வெளிப் படுத்த முயற்சி செய்யுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள். அதிகாலையில் எழுந்து படிப்பது, உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.  

அரசியல்வாதிகள், தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். சுற்றியிருக்கும் சகாக்கள் சிலர், உங்கள் மீது அதிருப்தி அடைவதற்கு வாய்ப்பு உண்டு. நேசத்துடன் நடந்துகொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு, சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள். உங்களின் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில், இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி, உங்களுக்கு நிம்மதியற்ற அனுபவங்களைத் தருவதுபோல் இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

ரவணைத்துப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் யோகாதிபதி செவ்வாய், ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது 2014 புத்தாண்டு பிறக்கிறது. திடீர் யோகம், பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புற நகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். ராசிக்கு 6-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்ப தால் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.

ஜுன் 12-ம் தேதி வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை. எவருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, ஜென்ம குருவாக திகழ்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். வேலை அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்கவேண்டாம். தங்க ஆபரணங்களைக்

கவனமாகக் கையாளுங்கள். சிறு சிறு அவமானங்கள், மறைமுக எதிர்ப்புகள் உருவாகும்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ல் ராகுவும் நீடிப்பதால் அதிக வேலைகளால் அவதிக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டு வடத்தில் வலி, தலைசுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. ஜூன் 21 முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 9-ல் கேது தொடர்வதால், பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3-ம்

வீட்டில் அமர்வதால், மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.            

இந்த புத்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால். மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்துமோதல்கள் வரும். வெளியூர் கிளம்பும்போது, வீட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு களில் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.          

வியாபாரிகளுக்கு, இந்தப் புத்தாண்டில் ஏற்ற -இறக்கங் கள் இருக்கும். ஜூன் மாதம் முதல் ஜென்ம குரு தொடங்கு வதால், புதியவரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். எவருக்கும் முன்பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் பிரிவு வரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலை யற்ற சூழல் உருவாகும். மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். சிலர், உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள்.

கன்னிப்பெண்கள், பெற்றோருக்குத் தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள், கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள், தனி ஆவர்த்தனம் செய்யவேண்டாம். கட்சி மேலிடத்து விஷயங்களில் ரகசியம் காக்கவும். கலைத் துறையினரே! உங்கள் படைப்புகள் குறித்து வெளியே விவாதிக்கவேண்டாம்.

மொத்தத்தில், இந்த 2014-ம் ஆண்டும் சுற்றியிருப்பவர் களின் சுயநலத்தை உணரவைப்பதாக இருப்பதுடன், இடம் மற்றும் சூழல் அறிந்து செயல்படும் அவசியத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

னக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர் நீங்கள். இந்தப் புத்தாண்டு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறக்கிறது. அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுரியமான பேச்சால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கடன்கள் ஓரளவு அடைபடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 5-ல் புதன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வருடப் பிறப்பு முதல் ஜூன் 12-ம் தேதி வரை, குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், செல்வம், செல்வாக்கு கூடும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எவருக்காகவும் சாட்சிக் கையப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர் களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்துபோகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் ஒத்துழைப்பார். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும்.

ஜூன்  21 முதல் வருடம் முடியும்வரை, ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வாகனத்தில் புறப்படுமுன் எரிபொருள், பிரேக் போன்றவற்றை சோதித்துக் கொள்ளுங்கள். மற்றவர் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

இந்தப் புத்தாண்டில் சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

வருட இறுதியில் 18.12.14 முதல் 4-ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகவும் வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையும் உண்டு.

வியாபாரம் செழிக்கும். சிலர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால், மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப் பார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, காய்கறி, ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும். கன்னிப் பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு, படிப்பில் முன்னேற்றம் உண்டு. கலைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகள், மக்களின் நல்லபிமானத்தைப் பெறுவர். கலைத் துறை யினரின் படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

நுணுக்கமான செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பண வரவு உண்டு. வழக்கு சாதகமாகும். வீடுகட்டும் பணி மீண்டும் துவங்கும். தாய் வழிச் சொத்துக்களைப் பெறுவதில், தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.

வருட பிறப்பின்போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்கள் எழலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வர். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களைச்  சரிபார்க்கவும். வாகன விபத்துகள் ஏற்படலாம். புத்தாண்டு பிறக்கும்போது, சுக்கிரன் உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தான மான 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால், வேலைகள் அதிகமாகும். மறைமுக அவமானம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர் கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். பழைய கடன் பிரச்னை மனத்தை வாட்டும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்துசெல்லும். மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

வருட இறுதியில் 17.12.14 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல், காது வலி வந்து நீங்கும். கண் பரிசோதனை அவசியம். பிள்ளைகளை விட்டுப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

எவருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். 18.12.14 முதல் சனி 3-ல் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தைரியம் கூடும்.

வியாபாரிகளுக்கு, இந்தாண்டு பற்று- வரவு உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவர். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவர். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமென்ட், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, ஜூன் 12-ம் தேதி வரை வேலைச் சுமை வாட்டும். 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதைத் தெளிவாக உணர்வீர்கள். கல்யாணம் கூடி வரும்.மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர் கள் மத்தியில் பாராட்டப்படுவார்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர்க் கட்சி யினரும் மதிக்கும்படி செயல்படுவர். கலைத் துறையினர், புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி அலைச்சல், ஆரோக்கிய குறைவைத் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

மாதானத்தை விரும்புபவர் நீங்கள். உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.  

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும்வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். ஜூன் 20-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால்  கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள்.    

இந்த ஆண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 2-ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும்.  எவ்வளவு பணம் வந்தாலும் சேமித்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல், நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.  

வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும்.  கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். அரிசி, பூ, எலெக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜூன் 12-ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால் ஜூன் 13-ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக் கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது.

கன்னிப்பெண்களே!  முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள்.  

மாணவர்களே! பொறுப்பாகப் படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். கவனம் தேவை!

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

இந்த 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னேற்றத்தையும் வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

ன்மானம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், பணவரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  4.2.14 முதல் 24.3.14 வரை மற்றும் 16.7.14 முதல் 1.9.14 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்கிய குறைவு, சிறுசிறு விபத்துகள், சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 2.9.14 முதல் செவ்வாய் வலுவடைவதால் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவார்கள்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால், செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால், நண்பர்கள், உறவினர்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு.

இந்த ஆண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.14 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச் சுமை இருக்கும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அவற்றைச் சரியாக பின்பற்றாமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னை அச்சம் தரும். இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது.  

வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கன்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.      

உத்தியோகஸ்தர்களே! ஜூன் 12-ம் தேதி வரை கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையெனப் புலம்புவீர்கள். ஜூன் 13 முதல், மதிப்பு கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்வுக்காக சில தேர்வுகளை எழுதத் திட்டமிடுவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வி அவர்கள் எதிர்பார்த்த படி அமையும். நல்ல வரனும் அமையும். மாணவர்கள் கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவர். அரசியல்வாதிகள் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவர். கலைத் துறையினர், வதந்திகளிலிருந்து விடுபடுவர்.

மொத்தத்தில் இந்த 2014-ம் ஆண்டு மனநிம்மதியையும், வசதி- வாய்ப்புகளையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் நீங்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ல் நிற்பதால், இழுபறியான வேலைகள் முடியும். வருடப் பிறப்பின்போது செவ்வாய் 10-ல் நிற்பதால், புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

12.6.14 வரை உங்கள் ராசிநாதன் குரு 7-ல் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். அழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர்ப் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாகக் கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 5-ல் கேது நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடிமனத்தில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு முழுக்க சனி லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால், உங்களின் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.  

வியாபாரிகள் போட்டிகளையும் தாண்டி லாபம் பெறுவர். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். ஸ்டேஷனரி, ஃபேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.    

உத்யோகஸ்தர்களுக்கு, ஜூன் 12-ம் தேதி வரை அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். 13-ம் தேதி முதல் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்கக் கொஞ்சம் போராட வேண்டி வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.  

கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித்தள்ளுவீர்கள்.

மாணவர்களே! சாதித்துக்காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது; அதற்கான உழைப்பு வேண்டும். பாடங்களை அன்றன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமையின் ஆதரவால் கட்சியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். புகழடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, கடந்த ஆண்டை விட அதிக பண வரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

ண்பாட்டை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்ல வீடு அமையும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நிறைவேறும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். உற்சாகம் அடைவீர்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.  

இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும். ஆனால் வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பண வரவு உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

வியாபாரிகளுக்கு, ஜூன் மாதம் முதல் வியாபாரம் சூடு பிடிக்கும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை

வாங்குவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது பங்கு தாரரால் பயனடைவீர்கள். கணினி உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும், 10-ல் சனி தொடர்வதால் மறைமுகப் பிரச்னைகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.  கன்னிப் பெண்கள் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும்.

அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி செயல்படுவார்கள். கலைத்துறையினர், யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவார்கள்.  

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

நேர்மறை எண்ணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக்காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் போராட்டங் களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.

வருடம் பிறக்கும்போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், சின்னச் சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். எவருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்ப தால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர் பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும்.

13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால், சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். 20.6.14 வரை உங்கள் ராசிக்கு 3-ல் கேது நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராசிக்கு 9-ல் ராகு நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும். 21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனி 9-ல் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 10-ல் அமர்வதால், வீரியத்தை விட காரியம்தான் பெரிது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். புதுப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  

உத்தியோகஸ்தர்கள் ஜூன் 12-ம் தேதி வரை பணிகளை தொய்வின்றி முடிப்பீர்கள். 13-ம் தேதி முதல் உங்களையும் அறியாமல் ஒருவித பயம் இருந்துகொண்டேயிருக்கும். அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கன்னிப்பெண்களின் ஆசைகள் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை. எதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய்ச் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும்.        

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெறுவதற்குப் போராட வேண்டும். அதிக செலவு செய்யவும் நேரிடும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும். கலைத்துறையினர்களே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

னத்தில் பட்டதை மறைக்காமல் பேசுபவர் நீங்கள்.உங்கள் ராசிக்கு 10-ல் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். வீடு- வாகனம் அமையும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும்போது பிறப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப்பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு.வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் பதற்றம் கூடும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் மன இறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.

20.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும். 21.6.14 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ல் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்த ஆண்டு முழுக்க சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால், அவ்வப்போது கோபப்படுவீர்கள். இழந்த தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. முன்பின் தெரியவாதவர்களிடம், குடும்ப அந்தரங்க விஷயங் களைச் சொல்லி ஆதாயம் தேடாதீர்கள். பெரிய நோய்க்கான அறிகுறிகள் எல்லாம் இருப்பதைப்போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும்போது பெரிய பாதிப்புகள் இருக்காது. என்றாலும், கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 9-ல் அமர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.

வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். ஜூன் மாதத்திலிருந்து போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி, என்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி வரை அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஜூன் - 13 முதல் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னிப்பெண்கள், தடைப்பட்ட கல்வியை தொடர்வார்கள். மே மாதம் வரை அலைச்சல், டென்ஷன் இருக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். திருமணம் கூடி வரும். மாணவர்கள் கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவார்கள். போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். கலைத்துறையினர், வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவால் உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

புத்தாண்டில் சகல நலன்களும் பெருகட்டும்!

 லகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எல்லா நன்மைகளையும் பெற்று வளமுடன் வாழ வேண்டியே, அருணகிரிநாதர்  திருப்புகழ் அருளிச் சென்றுள்ளார். கந்தக் கடவுளின் புகழ்பாடும் திருப்புகழில் அனுதினமும் சில பாடல்களையாவது படித்து, வேலவனை வழிபட, வினைகள் யாவும் நீங்கும். வேண்டும் வரம் கிடைக்கும். புத்தாண்டு முதல் சகல வளங்களும் பெற்று, நாம் வாழ்வில் ஏற்றம்பெற கீழ்க்காணும் பாடல்களைப் பாடி, கந்தனை வழிபடுவோம்.

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

திருமணம் நடக்க...

விறல்மாறன் ஐந்து மலர்வாளி சிந்த

   மிகவானில் இந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல ஒன்ற

    வினைமாதர் தம்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட

     கொடிதான துன்ப மயல்தீரக்

குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து

    குறைதீர வந்து  குறுகாயோ

கல்வியில் சிறக்க...  

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்

        அந்திபகல் அற்றநினை வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை      

     அன்பொடுது திக்கமனம் அருள்வாயே

  தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற

      சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

     சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே  

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

செல்வம் பெற... அனுபவிக்க...

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

     தவமுறைதி யானம் வைக்க அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த

    தமியன்மிடி யால்ம யக்கம் உறுவேனோ  

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறைஇ வேளை செப்பு

   கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

கடகபுய மீதி மணிஅணிபொன் மாலை செச்சை

கமழுமண மார்க டப்பம் அணிவோனே

தருணம் இதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

      சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியும் நீகொ டுத்து

     தவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா  

அருணதள பாத பத்மம் அநுதினமுமே துதிக்க

  அறியதமிழ் தான் அளித்த  மயில்வீரா

அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது தித்த

  அழக! திரு வேர கத்தின் முருகோனே!

செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை தினங்களில் முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு