சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-20 கே.குமார சிவாச்சாரியார்

##~##

சொத்துப் பிரச்னை, நிலத் தகராறு, அவதூறு, விவாகரத்து உட்பட பல்வேறு பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் தேடி ஆயிரமாயிரம் வழக்குகள் வழக்கமாகிவிட்ட காலம் இது.

'தோலா வழக்கு மீளாத் துயரைத் தரும்’ என்பது முன்னோரின் சொல் வழக்கு. ஒரு சில குடும்பங்களில் வழக்கறிஞர்களுக்கும், வழக்கு தொடர்பான செலவினங்களுக்குமே ஒரு தொகையை மாதாந்திரச் செலவுப் பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைமை!

இப்படி, வழக்குகளில் சிக்கி அல்லல்படும் கிரகநிலைகள் என்னென்ன? வீண் வழக்குகளில் இருந்து விடுபடவும், நியாயமான வழியில் நீதி நமக்குச் சாதகமாகவும் வழி என்ன? இவை குறித்து விளக்கமாக அறிவோமா?

கிரக நிலைகள்...

• ஜாதகத்தில் 2-ஆம் வீட்டுக்கு உடையவன் குரு, புதன், சுக்ரனோடு ஒன்றுசேர்ந்து 6,8,12-ம் இடங்களில் இருந்தால், பொருள் மற்றும் பணத் தொகை குறித்த வழக்குகள் வரும்.

•  6, 8, 12-ம் வீட்டுக்கு உடையவர்கள் 10-ல் இருந்தால் வம்பு- வழக்குகளில் சிக்க நேரிடும்.

வழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு!

ராகுவும், சூரியனும் 7-ம் இடத்தில் கூடியிருந்தால், பெண்கள் வழியாகத் தீராத வழக்குகள் ஏற்படலாம். சந்திரனோடு ராகுவோ கேதுவோ கூடியிருக்கையில், பாவக் கிரகங்களின் பார்வையும் நிலைத்தால், பெரும் செல்வம் சேர்ந்து, வழக்குகளால் விரயமாகும் நிலை ஏற்படும். லக்னத்தில் பாவர் ஒருவர் அமர்ந்து, லக்னாதிபதி பலம் குறைவாக இருந்தால், வழக்குகளால் உடல் நலிவும் தேவையில்லாத மனக்கவலையும் உருவாகும்.

•  3-ம் வீட்டுக்கு உடைய கிரகம் பலமில்லாமல் போய்விட்டால்,  அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலத்தில், உடன்பிறந்தோருடன் சொத்து விஷயமாக பிரச்னைகளும் பிரிவுகளும் ஏற்படும். அதேபோல், 4-ம் வீட்டுக்குடையவன் பலவீனமாகி அவரது தசை நடக்கும் காலங்களில், சகோதரர்களுடன் சொத்துப் பிரச்னை, அதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலைச்சலும் வீண் செலவுகளும் வரும்.

•  6-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமடைந்து அவரது தசை நடக்கும்போது... அரசியல்வாதிகள், பகைவர்கள் மற்றும் முகம் தெரியாதவர்கள் மூலம் வீடு-வாகனம் ஆகியவற்றை வழக்குகளால் பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.

•  10-ம் வீட்டுக்கு உரியவன் பலவீனமாகி தீய இடத்தில் இருப்பார் எனில், அவரது தசை நடக்கின்ற காலகட்டங்களில் அண்டை வீட்டாருடன் இடப் பிரச்னை, எல்லைப் பிரச்னை ஏற்படும். வழக்குகளுக்கு ஆளாகி சில இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.

•  12-ம் வீட்டுக்குடையவன் பலவீனமாகி அவரது தசை நடக்கின்ற காலத்தில், வழக்குகளுக்கு பயந்து வெளிதேசத்துக்குச் செல்ல நேரிடும். அதன் பலனாக வழக்கு எதிரிகளுக்குச் சாதகமாகவும், சொத்துக்கள் பறிபோகவும் வாய்ப்பு உண்டு.

வழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு!

•  9-ம் வீட்டோன் பன்னிரண்டில் அமர்ந்து, 12-ம் வீட்டோன் பலம் குறைவாகி, 2-ம் வீட்டிலும் 3-ம் வீட்டிலும் பாவர் இருந்தால், ஜாதகர் வழக்குகளுக்கு ஆட்பட்டு கடன்பட்டு அதை நடத்திச் செல்லும் சூழல் உருவாகும்.

•  2-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமாகி, அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலங்களில் தேவையற்ற வழக்குகளால் மனக்கிலேசம் வந்து சேரலாம்.

•  லக்னாதிபதி பலவீனமடைந்து அவரது தசை நடக்கும் காலங்களில் தேவையில்லாத வழக்குகளால் மனநிம்மதி கெடும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். குருதசை கேது புத்தி நடக்கும் காலத்தில், சுகமான வாழ்க்கையில் திளைத்திருக்கும் வேளையில், திடீர் வழக்கு வந்து சேரலாம்.

•  9-ம் வீட்டோன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து பாவக் கிரகங்கள் பார்த்தால்... அந்த ஜாதகர்களுக்கு வழக்குகளுக்குச் செலவழிக்க பண நெருக்கடி ஏற்படும். எதிரிகளிடம் இருந்து தனது சொத்தைக் காப்பாற்ற, வேறு சொத்தில் சிறு பகுதியை விற்று வழக்காட வேண்டியது வரும்.

சில ஜாதகர்களுக்கு விசேஷமான கிரக அமைப்புகள் இருப்பது உண்டு. இவர்கள் வழக்குகளை நடத்துவதிலும் அதிர்ஷ்டங்களைப் பெற்றிருப்பார்கள். 6-ம் வீட்டுக்கு உடையவன் பலமாக இருக்க சுபக் கிரகங்களின் பார்வை பெற்று, 9-ம் வீட்டில் சேர்ந்து, 9-ம் வீட்டோனது பார்வையைப் பெற்றால்... இந்த ஜாதகர்களின் எதிரிகள், அவர்கள் உருவாக்கும் பொய்சாட்சிகளாலேயே வழக்கில் தோல்வியைச் சந்திப்பார்கள். அவர்களிடம் பணம் பெற்று, மற்ற வழக்குகளை நடத்தும் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாய்க்கும்.

வராஹமிஹிரர், யவனர், பட்டோத்பலர் முதலானோர், தங்களுடைய ஜோதிட நூல்களில் மனிதனை வாட்டும் வழக்குகள் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல், அவற்றால் கௌரவ பங்கம் ஏற்படும் என்று கோடிட்டுக் காட்டி உள்ளார்கள். வழக்குகளை எளிதில் எதிர்கொண்டு, நியாயம் பெறுவதற்கு வழிபாடுகள் பக்கபலமாக அமையும். அவற்றில் ஒன்று நீதி தேவதை என்று போற்றப்படும் அஸ்வாரூடா தேவி வழிபாடு.

வழக்கறிஞர்கள், நீதித் துறையில் பணி செய்பவர்கள், வழக்குகளில் தீர்ப்பளிக்க முடியாமல் தவிக்கும் நீதிமான்கள் ஆகியோரும் நீதி தேவதையான அஸ்வாரூடா தேவியை வழிபடுவதால் தொழிலில் சிறந்து விளங்க முடியும். ஆனால், தவறான வழியில் நீதி தேடும் நபர்கள், இதில் பலன்பெற முடியாது.

குதிரையை அஸ்வம் என்பார்கள். அந்த அஸ்வத்தின் மீது விருப்பத்துடன் ஏறிச் செல்லும் தேவியே அஸ்வ ஆரூடா எனப்படுகிறாள். லலிதா சகஸ்ரநாமத்தில் 25-வது நாமாவளியில் 'அச்வாரூடா திஷ்டி தாஸ்வ கோடி கோடி பிராங்ருதாயை நம:’ என்று, இந்த தேவியானவள், ஆவரண பீடத்தில் உபதேவியாக வழிபடப்படுகிறாள்.

வாழ்வில் எந்த இடத்துக்குச் சென்றாலும் நீதி கிடைக்கவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், இந்த தேவியை வழிபட்டால் நீதி கிடைக்கும் என்று, 'சித்திவிவாசவிருத்தி’ எனும் தத்துவசார நூலில் சொல்லப்பட்டுள்ளது.

வழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு!

சாம்ராஜ்ய லக்ஷ்மியின் ரூப தியானத்தில், 'சதுரங்க பலோபேதாம் தனதான்ய சுகேஸ்வரீம் அஸ்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்’ என்ற வரிகள் உண்டு. அரசாங்க அனுகூலம், வழக்கு வெற்றிக்கு இந்த தேவியை வழிபடலாம் என்றும் குறிப்பு உண்டு.

இந்த தேவி சிவப்பு நிற ஆடையை உடுத்திக்கொண்டு, பொன் ஆபரணங்களை அணிந்து, கைகளில் வாள்- கேடயத்துடனும் திகழ்வாள். சிவப்பு நிறக் குதிரைக் கூட்டங்களின் குளம்படி ஓசையுடன், செங்குதிரை மேல் அமர்ந்தவாறு மிடுக்கான தோற்றத்துடன் ஓர் அரசியைப் போல் அஸ்வாரூடாவான நீதிதேவதை எழுந்தருள்கிறாள். இந்த அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கும்.

தியான ஸ்லோகம்...

ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்
வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம்
வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா
ததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர
குஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்
தேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்
பார்வதீம் பாவயாமி!

பஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.

முதலில் கலச ஸ்தாபனம் செய்து, கிழக்கு முகமாக தேவியை கலசத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். யாகாக்னி மேடை செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்தவாறு, ஐவகைப் பழங்கள், எள், புளிச்சாதம் ஆகிய நிவேதனங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு நவதானியங்கள், கொள்ளு, சிவப்பு நிற மலர்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பித்து, பசு நெய்யுடன் தாமரை மலர் சேர்த்து மூலமந்திரம் கூறி யக்ஞம் செய்யலாம்.

மேலும் சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளிலும், விசேஷமாக ஐயனார், முனீஸ்வரன் சந்நிதிகளின் எதிரில் உள்ள குதிரைச் சிலைகளில், முன் செல்லும் பாவனையில் உள்ள காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். (12 தினங்கள் கழிந்ததும், மீண்டும் 90 நாட்கள் வரை ஜபிக்கலாம்.) ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.

ஓம் அஸ்வாரூடா: மகா மந்திரஸ்ய: தேவரிஷி: அனுஷ்டுப் சந்த:

கிரீந்திர சுதா தேவதா  (மார்பில் கை வைத்து)

ஆம் - ஹ்ருதயே ஹ்ரீம் - சிரசே. ஹ்ரோம் - சிகா தேஹி - கவசம்

(உடல் முழுவதும் தொட்டு)

பரமேஸ்வரீ - நேத்ரம் (கண்களைத் தொட்டு),

மூலமந்திர ஜபம் கரிஷ்யே

- என்று கூறி பிரதான ஜபத்தைச் செய்ய வேண்டும்.

'ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா’ இதுவே பிரதான மூலமந்திரமாக உள்ளது.

- வழிபடுவோம்