சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆரூடம் அறிவோம்:19

ஜோதிட புராணம்!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

சுபமுகூர்த்தங்கள் உள்ள நாட்கள் குறித்த தகவல்கள் பஞ்சாங்கங்களில் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மாதத்தில் பல சுப முகூர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் தனிப்பட்ட ஒருவருடைய திருமணத்துக்கு உகந்த சுபமுகூர்த்தம் எது என்பதை ஜோதிட சாஸ்திரம் காட்டும் வழிமுறைப்படி தெரிந்துகொண்டு, திருமண நாளை முடிவு செய்ய வேண்டும். குடும்ப ஜோதிடரைக் கலந்து ஆலோசித்து முடிவு செய்வது நலம்.

அதேநேரம், நாள்- நட்சத்திரம், முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்கள் எப்படி நிச்சயிக்கிறார்கள் என்பதற்கான ஆதார விவரங்களை நாமும் அறிந்துவைத்திருப்பது சிறப்பு.

மாதங்கள்: ஆடி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் திருமணத்துக்கான முகூர்த்தங்கள் வைக்கப்படுவது தற்காலத்தில் சம்பிரதாயமாகிவிட்டது.

நாள்: பொதுவாக சுபமுகூர்த்தங்கள் வைப்பதற்கு சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்கள் உத்தமமாகக் கருதப்படுகின்றன. வடஇந்தியாவில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்ற அடிப்படையில், அந்த நாளிலும் திருமணம் நடைபெறுகிறது.

ஆரூடம் அறிவோம்:19

திதி: திருமண முகூர்த்தம் நிச்சயிக்க, அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்ப்பார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த திதிகள் இருந்தாலும், முகூர்த்தம் வைக்கும் நேரத்தில் அந்த திதிகள் மாறிவிட்டால், அந்த நாளை எடுத்துக்கொள்ளலாம்.

நட்சத்திரம்: மணமகன், மணமகள் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரங்களை மனத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமண முகூர்த்தம் வைக்க வேண்டும்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 10-வது நட்சத்திரம் கர்மம், 16-வது நட்சத்திரம் சாங்காதிகம், 18-வது நட்சத்திரம் சாமுதாயிகம்,  23-வது நட்சத்திரம் வைணாதிகம், 25-வது நட்சத்திரம் மானசம் என்று பெயர் பெறும். இந்த நட்சத்திரங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிச்சயிக்கக்கூடாது. உதாரணமாக, மணமகனின் நட்சத்திரம் அசுவினி என்றால், அதற்கு 10-வது நட்சத்திரம் மகம்; 16-வது நட்சத்திரம் விசாகம்; 18-வது கேட்டை, 23-வது அவிட்டம், 25-வது பூரட்டாதி. ஆக, இந்த நட்சத்திர நாட்களில் அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவேண்டும்.

தாரா பலம்: எந்த ஒரு சுப காரியம் செய்யும்போதும் 'தாராபலம் சந்திரபலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம், ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.

இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு 'தாரா பலம்’ மிக அவசியம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும்.

இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம். சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.

மீதி 1 எனில், ஜென்ம தாரை. இதைத் தவிர்க்கவேண்டும்.

மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.

மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.

மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.

மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்க வேண்டும்.

மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.

மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.

மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.

மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக்கொள்ளலாம்.

ஆரூடம் அறிவோம்:19

உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.

அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.

ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை 9-க்கும் குறைவாக இருந்தால், அந்த எண்ணிக்கையையே மீதியாகக் கொள்ள வேண்டும்.

ஆரூடம் அறிவோம்:19

நேரம்: பொதுவாக அந்தந்த நாளுக்கு உரிய ராகு காலத்தையும், யமகண்டத்தையும் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டும். காலை நேரங்களில் திருமண முகூர்த்தம் வைப்பது நலம். வட இந்தியாவிலும், வேறு சில சமய தர்மங்களை கடைப்பிடிப்பவர்களும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும்கூட திருமணம் நடத்துவது உண்டு. அது அவரவர் குல சம்பிரதாயமாக இருக்கிறது.  அப்படி இருந்தாலும், அதுவும் மேற்கூறிய பலன்களை அனுசரித்தே நிர்ணயிக்கப்படும்.

கரிநாள்: பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அதில் சில நாட்களை கரிநாள் என்று குறித்திருப்பார்கள். அந்த நாட்களிலும் திருமணம் செய்யக்கூடாது.

சந்திராஷ்டமம்: ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நக்ஷத்திரங்கள் விசாகம் 4-ம்  பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.

சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாட்கள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லாரது நட்சத்திரங்களுக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது. அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும்.

சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.

ஆரூடம் அறிவோம்:19

- தொடரும்...