Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம்:20 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம்:20 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

ரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் சாஸ்திர விதிமுறை களைப் பின்பற்ற பலருக்கும் நேரம் இருப்பதில்லை. மேலும், நாள் நட்சத்திரம் பார்ப்பது அநாகரிகமான செயல் என்றும் சிலர் கருதுகிறார்கள்!

பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறான். மூன்று நாட்கள்தான் தங்குவான். அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்கிற அவசரம். திருமண மண்டபம் கிடைக்காவிட்டால், ஸ்டார் ஹோட்டலில் திருமணம், இல்லாவிட்டால் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் என்று நடைபெறுகிறது. இதே வேகத்தில் திருமண வாழ்விலும் பிரச்னைகள் ஏற்படும்போது, பரிகாரம் உண்டா என்று ஜோதிடர்களைத் தேடி அலைகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத்தால் உறவுகள் பாதிக்கப்படும்போது, திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும் சூழ்நிலை வரும்போது, அதற்காக ஜோதிடரை அணுகும்போது, திருமணம் செய்துகொண்ட நாள்- நட்சத்திரம் சரியில்லை என்று தெரியவரும். அப்போதுதான் நாம் அவசரப்பட்டு செய்த காரியத்தின் விளைவு நமக்குத் தெரியவரும். ஆக, நல்ல காரியங்களைப் பற்றிய நாட்களை சாஸ்திர ரீதியாக முடிவு செய்யுங்கள். பின்னால் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

இந்த அத்தியாயத்தில் திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது குறித்து அறிந்துகொள்வோம்.

ஜோதிட புராணம்!

திருமணம் என்பது மனித வாழ்வில் அமையும் ஒரு முக்கியமான சுபகாரியம். ஓர் ஆணும் பெண்ணும் தக்க பருவத்தில் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கை தொடங்குவது, முக்கியமான மனித தர்மம். அதனால்தான் இதை 'இல்லறம்’ என்று குறிப்பிட்டார்கள். நல்ல முறையில் இல்லறம் நடத்தி, உயர்வான குழந்தைச் செல்வங்களைப் பெற்று, குலத்துக்குப் பெருமை தேடித் தருவதுதான் உயர்ந்த திருமண வாழ்க்கை.

பெண்ணைப் பெற்றோர், தங்கள் பெண்ணுக்கு நல்ல கணவனைத் தேடுவார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் நல்ல மருமகளைத் தேடுவார்கள். ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்குவதானால், சில நேரம் ஒன்றிரண்டு கடைகள் ஏறி இறங்குகிறோம். வாங்க விரும்பும் பொருளின் பல்வேறு வகைகளைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறோம். அந்தப் பொருளுக்கு கியாரண்டி இருக்கிறதா, கொடுக்கும் விலை நியாயமானதா என்றெல்லாம் யோசிக்கிறோம்.

ஏர்கண்டிஷனரோ, டி.வியோ, ஏன் ஒரு புடவை வாங்கும்போது கூட பலரும் அஷ்டமி- நவமி தவிர்த்து, ராகு காலம்- யமகண்டம் கழித்து பொருள் வாங்குவார்கள். உயிரற்ற, சில காலமே பயன்படக்கூடிய பொருட்களை வாங்குவதற்கே இத்தனை விதிமுறைகள் இருக்கிறதென்றால், மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்ய விரும்பும்போது எத்தனை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

முதலில் ஒரு நல்ல திருமண வாழ்க்கைக்கு என்னென்ன முக்கிய அம்சங்கள் அமைய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.

• கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மெச்சிக்கொள்ள வேண்டும்; பாராட்ட வேண்டும் (Mutual admiration).

• கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பூரணமாக நம்ப வேண்டும் (Mutual implicit faith).

•  கணவனும் மனைவியும் அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டும். (Mutual dependency)

•  தாம்பத்ய உறவில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. (Physical compatibility)

•  கணவன்- மனைவி இருவரும் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான மணவாழ்க்கை நடத்த வேண்டும். (Longevity of  married life)

• குடும்பத்திலுள்ள பெரியவர்களை மதித்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஒரே மனத்துடன் நிறைவேற்ற வேண்டும். (Respect & reverence to elders)

•  குல கௌரவத்தையும் கலாசாரத்தையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் முழு மனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். (Preserving cultural heritage))

•  அருட்செல்வமும் பொருட் செல்வமும் சம்பாதித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லவர்களாக, தூய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். (Wealth & Welfare)

•  ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். (Mutual understanding & flexibility)

•  நோயற்ற வாழ்வு வாழும் வழிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும். (Healthy life)

ஜோதிட புராணம்!

காதல் திருமணமானாலும், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமணமானாலும் இந்தப் பத்து அம்சங்களும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இவற்றில் ஒரு சில இல்லாமல் போனாலும் திருமண வாழ்க்கையில் அபிப்ராய பேதங்கள், ஒருவருக்கொருவர் வெறுப்பு, பழிவாங்கும் மனப்பான்மை, ஒருவரையருவர் ஏமாற்றி வாழும் வாழ்க்கை, குடும்பத்தில் கலகம் போன்ற தீய விளைவுகள் ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கை முறிந்து விவாகரத்து பெறவேண்டிய நிலையும் ஏற்படலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன?

திருமணங்கள் அவசரத்தில் நிகழ்கின்றன. திருமண வயதில் உள்ள ஆணும் பெண்ணும் கல்விக்கும், தொழிற் கல்விக்கும் முக்கியத்துவம் தந்து, மேலும் மேலும் உயர்கல்வி படித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்குள் ஆண்- பெண்ணுக்கு 23-24 வயதாகிவிடுகிறது. அதற்கு மேல் வேலையில் சேர்ந்து வாழ்க்கையை வசதியாக வைத்துக்கொள்ளத் தேவையான பொருளாதாரத்தைத் தேடி ஆண், பெண் இருவருமே அலைகின்றனர். அப்போது, 'கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசியம்?’ என்று அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். அவர்கள் விரும்பியது கிடைக்கலாம்; அல்லது கிடைக்காமல் போகலாம்; அதன்பிறகு 28-30 வயதில் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். காலம் கடந்துவிட்ட நிலையில் கல்யாணம் நடந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இங்கே ஒரு அவசரம் ஏற்படுகிறது.

கல்யாண மண்டபம், மாப்பிள்ளைக்கு வசதியான நாட்கள், பெண்ணுக்கு வசதியான நாட்கள்,  'அவர்களும் வசதியானவர்கள்; நாங்களும் வசதியானவர்கள்; நல்ல இடம் முடித்து விடலாம்’ எனும் அவசரம். இப்படி இன்னும் பல காரணங்களால் அவசரம். அதனால், சரியாக விசாரிக்க முடியவில்லை. இன்டர்நெட்- ஸ்கைப்பில் பார்த்து முடிவாகிவிட்டது. இனி, ஜாதகம் பார்க்க வேண்டாம். ஜாதகம் பார்த்து, ஒருவேளை அதில் பொருந்தாது என்று வந்தால், எடுத்த முடிவை மாற்ற முடியாது என்பதால், சாஸ்திர நம்பிக்கை, சம்பிரதாய முறைகள் போன்றவற்றை மீறி திருமணங்கள் அவசரமாக நடத்தப்படும்போது... பத்தில் ஐந்து இறையருளால் பிழைத்துவிடுகின்றன.  மீதி பிரச்னையாகிவிடுகிறது.

ஜோதிட புராணம்!

நிதானமாகத் திருமணம் நடத்தினாலும் அவசரமாக நடத்தினாலும் முன் குறிப்பிட்ட 10 அம்சங்களும் இருக்கின்றனவா என்று கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். அதற்கு ஓர் ஆதாரம்தான் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது!

ஜாதகத்திலிருந்து ஒருவரின் குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அவருடைய ஆயுள் பாவத்தைத் தெரிந்து கொள்ளலாம். அவரது சௌகர்யம் மற்றும் சௌபாக்யங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால்... முன் குறிப்பிட்ட பத்து அம்சங்களைப் பற்றி விசாரித்தோ அல்லது ஆராய்ந்தோ தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், சரியாகக் கணிக்கப்பட்ட ஆண், பெண் ஜாதகங்களிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.

எனவேதான், திருமணம் நிச்சயிப்பதற்கு முன், ஆண்-பெண் ஆகிய இருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து தசவித அல்லது எண் வகைப் பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டியது அவசியமாகிறது. தசவிதப் பொருத்தம் என்பது ஜாதகப்படி அமையும் ஒருவரது நட்சத்திரத்தை ஆதாரமாக வைத்துச் சொல்லப்படுவது.

தசவிதப் பொருத்தம் வருமாறு:

தினப்பொருத்தம்: ஆண்- பெண் ஆகியோரின் நட்சத்திரங்களின் வரிசை எண்ணை வைத்துக் கணக்கிடுவது. இது தோற்றப் பொருத்தத்தையும் ஆயுள் பாவத்தையும் குறிக்கும்.

கணப் பொருத்தம்: நட்சத்திரங்களை தேவ கணம், மனித கணம், அசுர கணம் என மூவகையாகப் பிரித்து, ஆண்- பெண் நட்சத்திரங்கள் எந்த கணத்தைச் சேரும் என்பதை வைத்துப் பொருத்தம் பார்ப்பது. இது, தம்பதிகளின் குணங்கள், நடத்தை, குடும்ப உறவுகள் பற்றித் தெரிவிக்கும்.

மாகேந்திரப் பொருத்தம்: இது பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை உள்ள எண்ணை வைத்துப் பலன் சொல்லு தலாகும். இது, புத்திர பாக்கியம் அல்லது புத்திர தோஷம் பற்றி அறிய உதவும்.

ஸ்திரீ தீர்க்கம்: திருமணமான பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா என்பதை இதனால் அறியலாம். இதுவும் நட்சத்திர எண் வரிசையின் அடிப்படையில் கூறப்படுகிறது.

யோனிப் பொருத்தம்: தாம்பத்திய உறவு பற்றியது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மிருகங்களின் தன்மையை வைத்து யோனிப் பொருத்தம் கணக்கிடப்படுகிறது.

ராசிப் பொருத்தம்: ஆண், பெண் நட்சத்திரப்படி அவர்களுக்கு உரிய ராசியை வைத்துக் கணக்கிடப்படுவது இந்த ராசிப் பொருத்தம்தான். கணவன்- மனைவியின் அந்நியோன்யத்தையும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மையையும் குறிக்கிறது.

ஜோதிட புராணம்!

ராசி அதிபதி: ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நவக்கிரக தேவதை அதிபதியாகிறார். அந்த தேவதைகளிடையே உள்ள நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை வைத்துப் பொருத்தம் பார்ப்பது ஓர் அம்சம். ராசி அதிபதிகளின் நிலைதான் கணவன்- மனைவிக்குள் சண்டை, சச்சரவு, மனக்கசப்பு இல்லாமல் வாழ்வார்களா என்பதை நிர்ணயிக்கும்.

வசியப் பொருத்தம்: 12 ராசிகளை ஆண் ராசி, பெண் ராசி என்று பிரித்து அதில் அமையும் ஆண்- பெண் அமைப்புகளை வைத்து பொருத்தம் பார்ப்பது. கணவன்- மனைவியின் இணை பிரியாத்தன்மை இதன் மூலம் தெரியும்.

ரஜ்ஜுப் பொருத்தம்: இதுவும் பெண் தீர்க்க சுமங்கலியாக, நெடுநாள் மணவாழ்க்கை நடத்துவது பற்றித் தெரிவிக்கும். ரஜ்ஜுவை சிரோ ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, ஊரு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு என்று 5 வகையாகப் பிரித்து, ஒவ்வொரு ரஜ்ஜுவில் அமையும் ஒரு சில நட்சத்திரங்களை கணக்கிட்டு இந்த பொருத்தம் நிர்ணயிக்கப்படுகிறது.

வேதைப் பொருத்தம்: பிரிவு, விவாகரத்து போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இந்தப் பொருத்தம் முக்கியமானது.

இந்தப் பத்துப் பொருத்தங்களின் முழு விவரங்களை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism