Published:Updated:

இழப்புகள் இனி இல்லை!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-21கே.குமார சிவாச்சாரியார்

இழப்புகள் இனி இல்லை!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-21கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:
##~##

வாழ்க்கைக்கு ஆதாரமான சொத்துக்களும், பொருளாதார பலமும் கைவிட்டுப் போகும் நிலை வந்தால், மனோபலம் கொண்ட மாமனிதர்களும் நிலைகுலைந்து போவார்கள். இது போன்ற நிலைமை ஏற்படுவதற்கான ஜாதக நிலைகள் என்னென்ன? தெரிந்துகொள்வோமா?

• லக்னாதிபதி பலவீனத்துடன் காணப்பட்டு, 6, 12-ல் மறைந்திருக்கும்போது, லக்னத்தை அசுபர்கள் பார்த்தால், ஜாதகருக்கு முன்னோர் சொத்துக்கள் கிடைக்காமல் கைவிட்டுப் போகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  சூரியனும் தேய்பிறைச் சந்திரனும் 12-ல் கூடி நின்றால், அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்றிருக்க, அதை முறையாகத் திருப்பிச் செலுத்தமுடியாமல், சொத்துக்கள் ஜப்திக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

•  இரண்டாம் பாவத்தில் செவ்வாய் அமர்ந்து பாவர்களது பார்வை பெற்றால், ஏராளமான பணம்- பொருள் இழப்புக்கு வாய்ப்பு உண்டு.

•  பன்னிரண்டுக்கு உடையவன் பாவியாகி, அவன் பாவிகளோடு கூடியோ, பார்வை பெற்றோ காணப்பட்டால், துரோகம் இழைப்ப வர்களுடன் சேர்ந்து புத்தி இழந்து, சொத்துக்களை இழக்க நேரிடும்.

இழப்புகள் இனி இல்லை!

•  4-ம் வீட்டுக்கு அதிபன் நீசம் அடைந்தாலும், பகை வீட்டில் அமர்ந்தாலும், 12-க்கு உரியவன் 2-ல் இருக்கும்போது லக்னாதிபதியும் 4-ம் அதிபனும் சூரியனோடு சேர்ந்து, அவர்கள் சுபகிரஹங்களின் பார்வை பெறாமல் இருப்பின், ஜாதகரின் வீடு- வாகனங்கள் இழப்புக்கு ஆளாகலாம்.

•  5-க்கு உடையவன் பகையாகி, 8-க்கு உடையவன் 5-ல் அமர்ந் தால், பகைவர்களால் பூர்வீகச் சொத்துக்கள் வஞ்சகமாகக் கைப்பற்றப்பட்டு நஷ்டம் ஏற்படும்.

•  'பராசர ஹோரா’ எனும் ஜோதிட ஆய்வு நூலின் கருத்துப்படி, 1, 6-க்கு உடையவர்கள் சேர்க்கையாகி, சூரியனின் பார்வை இருந்தால், அரசால் செல்வ இழப்புக்கு ஆளாக நேரிடலாம்.

•  1, 6-க்கு உடையவர்கள் சேர்ந்திருக்க, அவர்களைச் சனி பார்வையிட்டால்... வேண்டாத செலவுகள், கோர்ட்டுக்கும் வக்கீல்களுக்கும் செலவழிப்பது ஆகிய காரணங்களால் பொருள் இழப்பும் மன உளைச்சலும் உருவாகும்.

•  3-வது ஆதிபத்தியமும், ஏழு, லக்னம் ஆகிய இரண்டு ஆதிபத்தியங்களும் கெட்டுவிட்டால், குடும்பப் பகை, பொன் வைரங்களால் பண நஷ்டம் உண்டாகும். குடும்பப் பகையால் சொத்து இழப்பு, நண்பர்களால் வழக்கு, மனையை இழத்தல், வில்லங்கங்களைச் சந்தித்தல், மனம் பரிதவிப்பு ஆகிய துர்நிலைகள் உருவாகலாம். ஆனால், மேஷம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய லக்னங்களுக்கு ஆறாம் அதிபனின் தசாபுக்தி பூர்த்தியாகும் காலத்தில், நஷ்டங்கள்- விரயச் சூழ்நிலைகள் ஓரளவு குறையும்.

இழப்புகள் இனி இல்லை!

•  லக்னாதிபதி 8-ம் இடத்தில் நின்றால், அவரது தசாகாலங்களில் தீராத பகை, பொருள் இழப்பு, அவமானம், தொழில் முடக்கம், பெண் மூலமாக உண்டாகும் கூட்டுச்சதியால் பணவிரயம் ஆகியவை ஏற்படலாம்.

•  சுக்கிரன் 6-ல் நின்றாலும், அந்த தசாகாலங்களில் (ரிஷபம், சிம்மம், கடகம், துலாம், கன்னி, தனுசு லக்னங்கள் தவிர) எதிர்ப்பு, ஏமாற்றம், பிறரால் வஞ்சிக்கப்படுதல் ஆகிய அசுப பலன்கள் உண்டு.

• லக்னத்திற்கு அதிபதி 6-லும், 6-க்கு உடையவர் லக்னத்திலும் இருக்க, தனாதிபதியைச் சந்திரன் பார்வையிட்டால், மத்திம வயதில் செல்வ இழப்பு ஏற்படலாம்.

இழப்புகள் இனி இல்லை!

இத்தகைய ஜாதக நிலைகள் உள்ளவர்கள் தங்களுடைய பொருள், சொத்து இழப்புகளைத் தவிர்த்து நன்மையடைய, கார்த்தவீர்ய வழிபாடு உதவும். இந்த வழிபாடானது, இழந்த செல்வம், புகழ் அனைத்தையும் மீண்டும் பெறச்செய்து, நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

பாரதப் போரின்போது பாண்டவ சேனையைப் பல பிரிவுகளாகப் பிரியச் செய்து திசைதிருப்பி, நிலைதடுமாறச் செய்து கொண்டிருந்தார்கள் கௌரவர்கள். அர்ஜூனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட, அவர் தனது சுதர்சனச் சக்கரத்தில் இருந்து கார்த்தவீர்யனைத் தோற்றுவித்ததாகவும், பகவானின் அறிவுரைப்படி கார்த்தவீர்யனை வழிபட்டு, பாண்டவர்கள் ஜெயம் அடைந்ததாகவும் செவிவழிக் கதைகள் உண்டு.

ஒரு முறை, ஜமதக்னி முனிவரிடம் இருந்த தேவலோகப் பசுவான காமதேனுவைத் தனக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டான் கார்த்தவீர்யன். முனிவர் மறுக்கவே, வலுக்கட்டாயமாகப் பசுவை இழுத்துச் சென்றான். அவனுடைய இடத்துக்குச் சென்ற தேவலோகத்துப் பசு, கொட்டிலை நாசப்படுத்தி, கயிற்றை அறுத்தெறிந்துவிட்டு, முனிவரது குடிலை வந்தடைந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில், காமதேனுவிடம் உதைபட்ட கார்த்தவீர்யன் அதன் காரணமாகவே மேலும் பல தெய்விக சக்திகளைப் பெற்றதாகவும் கதையுண்டு.

முற்காலங்களில் கிராமப்புறங்களில், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக எல்லை தெய்வங்களிடம் பிரார்த்திக்கும் வழக்கம் இருந்தது. எல்லை தெய்வங்களில் ஒருவரான காத்தவராய சாமிக்கு முன்பாக சீட்டுக்கட்டிப் போட்டு வேண்டுதல் செய்வார்கள். இந்தக் காத்தவராயனும், கார்த்தவீர்யனும் வேறு வேறு என்பதை அறிய வேண்டும்.

சிவ பக்தனான கார்த்தவீர்யனுக்கு உரிய பிரயோக வழிபாட்டை முறையாகச் செய்தால், இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.

கார்த்தவீர்ய வழிபாடு...

பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாட்கள் அல்லது பௌர்ணமி தினங்களில் கார்த்தவீர்யனை வழிபடலாம். அன்று அதிகாலையில் நீராடி, பூஜையறையைத் தூய்மை செய்து கோலமிட்டு, அலங்கரிக்க வேண்டும். மணைப்பலகை ஒன்றையும் தயார் செய்யவேண்டும். அதில் வண்ணப்பொடிகளால் கார்த்தவீர்யன் யந்திரத்தை வரைய வேண்டும் (பார்க்க: படம்). அல்லது, காகிதத்தில் வரைந்தும் ஒட்டிக்கொள்ளலாம். பிறகு, அதன்மீது தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். அரிசியின் மீது கலசம் வைத்து அலங்கரித்து, அதில் கார்த்தவீர்யனை எழுந்தருளச் செய்து பூஜிக்க வேண்டும்.

ஓம் கார்த்தவீர்யாய நம: ஓம் மகாதீராய நம:  ஓம் பராக்ரமாய நம:
ஓம் நஷ்ட நிவர்த்தகாய நம: ஓம் பகவத் ரூபாய நம:   ஓம் வீர ரூபாய நம:
ஓம் விக்ன நாசனாய நம: ஓம் புண்யாத்மனே நம: ஓம் சக்ர மூலாய நம:
ஓம் நிரஞ்சநாய நம: ஓம் தத்தாத்ரேய க்ருபாய நம: ஓம் சீக்ர பலாய நம:

- என்று கூறி, மலர்கள் தூவி அர்ச்சிக்க வேண்டும். பின்னர் புளி அன்னம், பழங்கள் மற்றும் தாம்பூலம் படைத்து ஆரத்தி காட்டி, கைகூப்பியபடி, கீழ்க்காணும் மந்திரத்தை மூன்று முறை கூறி வணங்க வேண்டும்.

ஓம் கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜாபாஹு  சகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரன மாத்ரேண கதம் நஷ்டஞ்ச லப்யதே

அடுத்ததாக, கீழ்க்காணும் கார்த்தவீர்ய காயத்ரியை 21 முறை சொல்ல வேண்டும்.

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே மகாவீராய தீமஹி
தந்நோ அர்ஜுன ப்ரசோதயாத்

பிறகு, கார்த்தவீர்ய மூல மந்திரத்தை முறையாக- உங்கள் நஷ்டத்துக்கு ஏற்ப ஜபிக்கவேண்டும். பொருள் இழப்பு மிகப் பெரியது எனில், 6 x 6 அளவுள்ள செப்புத் தகட்டில் கார்த்தவீர்ய யந்திரத்தை பங்கம் இல்லாமல் கவனத்துடன் விதிப்படி வரைந்து,  ஆசார்யர் ஒருவருடைய உதவியுடன் நெய், எள், பார்லி அரிசி, நாயுருவிக் குச்சி, தர்ப்பை ஆகியவற்றால் யக்ஞ வழிபாடு செய்தால், இழந்த பொருளை மீண்டும் பெறலாம் என்கிறது, பிரயோக சாஸ்திரம்.

மந்திர ஜெபமுறை:

ஓம் அஸ்ய ஸ்ரீகார்த்த வீர்ய மகா மந்திரஸ்ய
தத்தாத்ரேய ரிஷி: அனுஷ்டுப் சந்த:
கார்த்த வீர்யார்ஜுனோ தேவதா: ஓம் பீஜம் - நம: சக்தி’
ஸ்ரீ நஷ்ட அனுகூல ஜபே விநியோக:

- என்று அங்க நியாசம் செய்யவேண்டும்.

இனி, மூல மந்திர ஜபம்...

1. ஓம் ப்ரமோ ப்ரீம் க்லீம் ப்ரூம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஸ்ரீம்
ஹூம்பட் கார்த்த வீர்யார்ஜுனாய நம:

2. ஓம் நம: கார்த்த வீர்யார்ஜுனாய ஹூம் பட் ஸ்வாஹா

3. ஓம் நமோ பகவதே கார்த்த வீர்யார்ஜுனாய ஹூம்பட் ஸ்வாஹா

இங்குள்ள மூன்று வகை மூல மந்திரங்களில், முதல் மந்திரத்தை 1000 தடவை ஜபம் செய்யவேண்டும். 2-வது மந்திரத்தால் 108 முறை நெய் ஹோமம் செய்து, அடுத்ததாக 2 மற்றும் 3-ம் மந்திரத்தைக் கொண்டு சுத்த நீரில் சிறிதளவு பால், மஞ்சள் தூள் கலந்து அர்க்கிய தர்ப்பணமாக... 108 முறை மேற்கு நோக்கிச் செய்தல் வேண்டும்.

பிறகு மாலை வேளையில் ஆலயம், மடம், ஆற்றுப்படுகை போன்ற பொதுவான இடம் ஒன்றில் மேற்கு முகமாக அமர்ந்து ஜபம் செய்து வர, கைவிட்டுப் போன பொருட்கள் மற்றும் இழந்த சொத்துக்கள் கைக்குத் திரும்ப வந்து சேரும்.

ரயில், விமானம் மூலம் நெடுந்தூரம் பயணப்படும்போது, இந்த எளிய கார்த்தவீர்ய யந்திரத்தை ஒரு செப்புத் தகட்டில் வரைந்து எடுத்துக்கொண்டு போனால், வழியில் திருட்டு பயம் ஏற்படாது என்பது முற்காலத்தவர்களின் நம்பிக்கை. வீட்டில் இதை வரைந்து வைத்து முறையாக ஆவாகனம் செய்து வழிபட்டு, 60 வகை யாக மூலப் பொருட்களோடு பார்லி அரிசியும் சேர்த்து, அக்னி வழிபாடு செய்துவிட்டால் பொருள், பணம் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு செல்வம் சேரும்.

- வழிபடுவோம்