சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

எண்ணும் உணவும்!

எண்ணும் உணவும்!

##~##

ங்கிலாந்தில் பிரபல ஜோதிட அறிஞராகத் திகழ்ந்தவர் ஷீரோ. சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இந்த அறிஞர், இந்தியாவுக்கு வந்து ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தெளிந்தார். அத்துடன் தனது அனுபவம் மற்றும் பண்டைய நூல் ஆதாரங்களைக் கொண்டு மனிதர்களைத் தரம் பிரித்து ஆய்வு செய்து, பொதுவான பிணிகள் குறித்து அவர் தந்த குறிப்புகள் பெரிதும் வரவேற்பு பெற்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக இதய நோய்கள், படபடப்பு, ரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வை பாதிப்பு வரலாம். உணவுடன் ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், பேரீச்சம்பழம், குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து அருந்துதல் நலன் தரும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு வயிறு, ஜீரணம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, ஈரல் நோய், குடல், வாய்ப்புண், சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். இவர்கள் இனிப்பைக் குறைப்பது அவசியம். கோதுமை நன்மை தரும். முட்டைகோஸ், வாழை, முலாம்பழம், வெள்ளரிப் பழம், கீரை வகைகள் ஏற்றவை. பாகற்காய், வேப்பம் பூ ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய்கள், மூச்சுப்பிடிப்பு, நரம்பு நோய்கள் வரலாம். உணவுடன் நெல்லிக்கனி, மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, அத்திப்பழம், பாதாம் ஆகியன ஏற்றவை. ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கலாம். கோதுமையும் நல்லது.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரத்தச் சோகை, மனச் சோர்வு, வாயுக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் வலிகள் வரலாம். வாயுக் கோளாறு உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளியைக் குறைப்பதும் அவசியம். இஞ்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணும் உணவும்!
எண்ணும் உணவும்!

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, பாரிச வாயு, தூக்கக் குறைவு வரலாம். அதீத யோசனை, வேலைகளைக் குறைக்கவும். பாதாம், பிஸ்தா, கேரட், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூக்கு, தொண்டை, நுரையீரல் நோய்களும், வயது ஏற ஏற இதய நோய்களும், மர்ம உறுப்புகளில் பிணிகளும் வரலாம். கீரைகள், பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, அத்தி, முலாம்பழம், பால், தேன் ஆகியன பலன் தரும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியர்வை மற்றும் தோல் வியாதிகள், மனச் சோர்வு, உஷ்ணக் கட்டிகள் வரலாம். இல்லாத நோய் குறித்த வீண் கவலையும் எழும். இவர்கள் கீரை வகைகள், முட்டைகோஸ், பூசணி, வெள்ளரி, திராட்சை, அன்னாசி, ஆரஞ்சுப் பழரசங்கள் அருந்துவது நல்லது.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பித்த நோய், பித்த ஜுரம், காமாலை, கை- கால் மூட்டுவலி, தலைவலி, வாத நோய்கள் வரலாம். அசைவம் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். காய்-கனிகள், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உஷ்ண வியாதிகள், அம்மை நோய்கள், ரண காயங்கள் வரலாம். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனம் நல்ல பலன் தரும். நுங்கு, இளநீர் அருந்தலாம். மிளகாய், புளி நீக்க வேண்டும். மிளகு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை சேர்க்கலாம்.

- ஆர்.சுப்ரமணியன், சென்னை

எண்ணும் உணவும்!

செவிச்செல்வம்

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்கிறார் வள்ளுவர். காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமானது, ஒருவன் சம்பாதிக்கும் செல்வங்களில் எல்லாம் தலைசிறந்தது ஆகும். அத்தகைய செவிப்புலன் நமக்குச் சிறப்பாக அமைய, உள்ளங்கையில் சனி மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

நம் உட்செவியின் செவிப்பறை, நடுச்செவி எலும்பு, நத்தை வடிவ எலும்பு என சகலமும் நன்கு அமைந்து, இறுதிகாலம் வரையிலும் நமது கேட்கும் திறன் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சனி மேடு  நன்கு பரந்துவிரிந்து சதைப்பற்றுடன் காணப்பட வேண்டும்.

படத்தில் உள்ளதுபோன்று சனி மேடு நன்கு அமைந்திருப்பதுடன், குரு மேட்டுக்குக் கீழே உள்ளங்கையின் விளிம்பில் இருந்து துவங்கி, கீழே செவ்வாய்  மேட்டைக் கடந்து சுக்கிரமேட்டை வளைத்து, கங்கண ரேகை அருகில் முடிவதாக ஆயுள் ரேகை அமைய வேண்டும். அத்துடன், இந்த ரேகையானது சரியான ஆழத்துடன், தெளிவாக- சீராக, தேன் நிறத்தில் இறுதிவரை அமைவது விசேஷம்.  ஆயுள் ரேகை இப்படி அமையப்பெற்ற அன்பர்களுக்கு உறுதியான பற்களும், ஆரோக்கியமான செவியும், கட்டான உடல் அமைப்பும் வாய்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் இருக்கும்.

- காஞ்சி எஸ்.சண்முகம்