##~##

சூரியன் - 10-ம் தேதி வரை பூராடம் நட்சத்திரத்திலும்; 11-ம் தேதி முதல் உத்திராடம் நட்சத்திரத்திலும்... செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரத்திலும்... புதன் - 20-ம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்திலும்; 21-ம் தேதி முதல் அவிட்டம் நட்சத்திரத்திலும்... குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்... சுக்ரன் - 20-ம் தேதி வரை உத்திராடம் நட்சத்திரத்திலும்; 21-ம் தேதி முதல் பூராடத்திலும்...   சனி - விசாகம் நட்சத்திரத்திலும்... ராகு - சுவாதி நட்சத்திரத்திலும்... கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

பரணி, மிருகசீரிடம், சித்திரை, பூராடம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். பணவரவு கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசுவினி, கார்த்திகை, உத்திரம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்ய குறைவும், திடீர் செலவுகளும், பயணங்களும் ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்

அசுவினி

உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால், பேச்சில் அறிவுக் கூர்மை வெளிப்படும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.  ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். என்றாலும் உங்களுக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கருத்து மோதல்கள் வரும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள்,  வேலையாட்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துகொண்டேயிருக்கும்.

பரணி

11-ம் தேதி முதல் உங்களின் ஜென்மத் தாரையை விட்டு சூரியன் விலகுவதால் உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். கோபம் குறையும். தள்ளிப் போன அரசாங்க விஷயம் விரைந்து முடியும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரனும் 20-ம் தேதி வரை தனத்தாரையில் செல்வதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால், பூர்வீக சொத்து விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லதுதான். சகோதர வகையில் பிணக்குகள் வரும். குரு, சனி, கேது ஆகிய கிரகங்கள் சாதகமான நட்சத்திரத்தில் நிற்பதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். புது வேலை அமையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள்.

கிருத்திகை

உங்களின் நட்சத்திராதிபதி சூரியன் 11-ம் தேதி முதல் உங்களின் திரிஜென்மத் தாரையில் நுழைவதால், அடிவயிற்றில் வலி, கண் எரிச்சல், வேனல் கட்டி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். செவ்வாய் உங்களின் தனத்தாரையில் தொடர்வதால், எதிர்பார்த்த வேலைகள் தாமதமானாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். 20-ம் தேதி வரை சுக்ரனும் உங்களின் திரிஜென்மத்தாரையில் நிற்பதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, வாகனப் பழுது வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டில் குடி நீர், கழிவு நீர் குழாய் பழுதாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

ரோகிணி

குரு உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் செல்வாக்கு, பணவரவு உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.  மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. செவ்வாய் உங்களின் அனுஜென்மத் தாரையில் செல்வதால் சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து சிக்கல்கள் ஏற்படுவதுடன், வீடு, மனை வாங்குவது, விற்பது தாமதமாக முடியும். சனி சாதகமாக இருப்பதால், அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

மிருகசீரிடம்

சர்ப்ப கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். குருவும், சனியும் சாதகமாக இல்லாததால் சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

திருவாதிரை

செவ்வாயும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளை வளர்ப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை உண்டு. பணவரவு அதிகரிக்கும். சூரியனும், சுக்ரனும் சாதகமாக இல்லாததால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமை இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு உங்களின் அனுஜென்மத் தாரையில் செல்வதால், யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையெனப் புலம்புவீர்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரைக் கலந்து பேசுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் வரும்.  உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

புனர்பூசம்

11-ம் தேதி முதல் சூரியன் உங்களுக்கு உதவித் தாரையில் செல்வதால், போராட்டங்களைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 20-ம் தேதி வரை சுக்ரனும் உதவி புரிவதால்,  பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.  20-ம் தேதி வரை வதைத் தாரையில் புதன் செல்வதால், உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். ஜென்ம நட்சத்திரத்தில் குருவும், அனுஜென்மத் தாரையில் சனியும் சென்றுகொண்டிருப்பதால், பிறரைக் குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக்கொள்ளப் பாருங்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில யுக்திகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.

பூசம்

முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், எதிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சூரியன் 11-ம் தேதி முதல் பகைத் தாரையில் செல்வதால், அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.  வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.

ஆயில்யம்

குரு உங்களுக்கு நட்புத் தாரையில் செல்வதால் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் மனத்தைப் புரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். செவ்வாயும், புதனும் சாதகமாக இல்லாததால் உறவினர், சகோதர வகையில் விரிசல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். கை, காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.

மகம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் அமர்ந்திருந்தாலும், உங்கள் நட்சத்திரத்துக்கு சுகத் தாரையில் செல்வதால் கனிவாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.  பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.  ஆடை, ஆபரணம் சேரும். குற்றம், குறை கூறிக்கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனம் மாறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 11-ம் தேதி முதல் சூரியனும், 20-ம் தேதி வரை சுக்ரனும் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன், மனக்குழப்பம், காரியத் தாமதம் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம்.

பூரம்

11-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியனும், 20-ம் தேதி வரை உங்களின் நட்சத்திர நாயகனான சுக்ரனும் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். தடைப்பட்ட சில காரியங்களை வி.ஐ.பி-களின் உதவியுடன் முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணவரவு திருப்தி தரும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும்.  அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், பேச்சால் பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

உத்திரம்

11-ம் தேதி முதல் உங்களின் அனுஜென்மத் தாரையிலேயே சூரியன் நுழைவதால், முன்கோபம், உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி வந்துபோகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 20-ம் தேதி வரை சுக்ரனும் அனுஜென்மத் தாரையில் செல்வதால் சில நேரங்களில் மனைவி உங்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டுவார். அதற்காக  கோபப்பட்டுக் கொள்ளாதீர்கள். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். 20-ம் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் ஆறுதலடைவீர்கள். செவ்வாய் உங்களுக்கு தனத்தாரையில் செல்வதால் ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  சனியும், ராகுவும் சரியில்லாதால் வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.

அஸ்தம்

செவ்வாய் உங்கள் நட்சத்திரத்தில் அமர்ந்து கொண்டு, உங்களை அலைக்கழித்து, கோபப்படுத்தி, பிரச்னைகளில் சிக்க வைத்தாலும், உங்களுக்கு சூரியன் நட்புக் கரம் நீட்டியிருப்பதால் எதிர்ப்புகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.  20-ம் தேதி வரை சுக்ரனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். மனைவிவழியில் உதவிகள் உண்டு.  வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குருவும், சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சகோதர வகையில் மனவருத்தங்கள் வரும். வியாபாரத்தில் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள்.

சித்திரை

உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் அதிநட்புத் தாரையில் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறன்,  வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். சகோதரருக்கு வேலை அமையும். 20-ம் தேதி வரை புதனும் உங்களுக்கு அதிநட்புத் தாரையில் செல்வதால் பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். குருவும், சனியும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் அடுக்கடுக்கான வேலைகளால் மனஉளைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். 11-ம் தேதி முதல் சூரியனும் சாதகமாவதால் அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.

சுவாதி

உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தைரியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குரு தனத்தாரையில் செல்வதால் பணவரவு திருப்தி தரும். ஆனால் ஏழரைச் சனியும் நடைபெறுவதால், எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்கமுடியாது. கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும் என்றாலும், சுக்ரன் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு சிறுசிறு உடல் நலக் குறைவுகள் வந்து நீங்கும். ராசிக்கு 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் லாபம் வரும். புதிய முயற்சிகளும் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.

விசாகம்

உங்கள் நட்சத்திரத்துக்குச் சாதகமாக சூரியன் நிற்பதால், குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்கால் இருந்த பிரச்னைகள், கவலைகள் நீங்கி சாதகமாகும். ஆனாலும் சனிபகவான் உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திலேயே செல்வதால், பெரிய நோய்கள் இருப்பது போன்ற கவலைகள் வந்து நீங்கும்.  உங்கள் நட்சத்திர நாயகனான குரு வக்ரமாகி நிற்பதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். பிள்ளைகளால் செலவுகள், அலைச்சல் அதிகமாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், மனைவிவழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.  உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.

அனுஷம்

முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், முயற்சிகள் யாவும் பலிதமாகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாயும் வலுவாக இருப்பதால், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உங்களுக்கும் பொறுப்புகள் கூடிவரும். வழக்குகளில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சூரியனின் போக்கு சரியில்லாததால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கலந்தாலோசிப்பது நல்லது.  உங்களின் நட்சத்திர நாயகன் சனிபகவான் சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.  வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

கேட்டை

14-ம் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். முன்கோபம் குறையும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதையும் தற்சமயம் உணருவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இல்லாததால், வேலைச்சுமை அதிகமாகும். சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். குரு வக்ரமாகி சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு.

மூலம்

உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதுடன் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், அந்தஸ்து ஒரு படி உயரும். பணவரவு திருப்தி தரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும்.   புது இடத்தில் மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால், புதிதாக அறிமுகமாகிறவர் மூலமாக பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குருபகவான் வதைத் தாரையில் செல்வதால், மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாகத் தலையிடாதீர்கள். சுக்ரன் சாதகமாக இல்லாததாலும், கேது திரிஜென்மத் தாரையில் செல்வதாலும், நகைகளை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். வாடிக்கையாளர்கள் பெருகுவர். உத்தியோகத்தில் அலைச்சலும், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.

பூராடம்

உங்கள் நட்சத்திர நாயகனான சுக்ரன் வக்ரமானாலும், தனத்தாரையில் செல்வதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும்.  வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள்.   சூரியன் தனத்தாரையில் செல்வதால், அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கேது சாதகமாக இருப்பதால் ஊர்த் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும். சகோதரர்களால் செலவுகளும் அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்ப்புகளும், போட்டிகளும் குறையும். கடையை அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

உத்திராடம்

உங்களுடைய நட்சத்திரத்திலேயே சுக்ரனும், சூரியனும் செல்வதால், ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால், புதிய பாதை தெரியும். ராகுவும், கேதுவும் சாதகமாக இருப்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை நீங்களே பரிசோதித்துப் பார்த்து சரிபடுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பங்குதாரருடன் மோதல் வரும். உத்தியோகத்தில் ஓரளவு நிம்மதி உண்டு.

திருவோணம்

உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் குரு மறைந்திருந்தாலும், வக்ரமாகி சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். அக்கம்பக்கம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு இருந்த ஆரோக்யக் குறைவு நீங்கும்.  சூரியன் அதிநட்புத் தாரையில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக இல்லாததால் உறவினர்களுடன் அளவாகப் பழகுங்கள். அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். சுக்ரனும், சனியும் சாதகமாக இருப்பதால் புது வாகனம் அமையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.

அவிட்டம்

உங்களுடைய நட்சத்திர நாயகன் செவ்வாய் பகவான் அதிநட்புத் தாரையில் செல்வதால், செல்வாக்கு கூடும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.  சூரியனும் சாதகமாக இருப்பதால் வழக்கில் இருந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குருவும், சனியும் சாதகமாக இல்லாததால், செலவினங்கள் அதிகமாகும். சிலரை நினைத்துக் கோபப்படுவீர்கள்.  பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல்கள் விலகும்.  வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

சதயம்

உங்கள் பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு அதிகரித்தாலும் திடீர் செலவுகளாலும், திடீர் பயணங்களாலும் பற்றாக்குறை ஏற்படும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.  உங்கள் ராசிநாதன் சனி சாதகமாக இருப்பதால் வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.  யோகாதிபதி சுக்ரன் வக்ரம் பெற்று நிற்பதால், சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வரும்.  அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு தனத்தாரையில் செல்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால், தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

பூரட்டாதி

சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் வீடு மாறக்கூடிய சூழல் உருவாகும். ராகு வலுவாக இருப்பதால் பிறமொழி பேசுபவர்கள் உதவுவார்கள்.  பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். குருவும், சனியும் சரியில்லாததால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். சிலர் உங்களுடைய கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.  அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

உத்திரட்டாதி

ராசிநாதன் குருவும், யோகாதிபதி செவ்வாயும் வலுவாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.  வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டு. தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.  பழைய கடனை பைசல் செய்வதற்குப் புது வழி கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற புது மனை அமையும். வாகனப் பழுது நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.

ரேவதி

சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாகத் தீர்வு காண்பீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் வளைந்து கொடுத்து வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.  யோகாதிபதி செவ்வாய் வலுவிழந்திருப்பதால் வீண் டென்ஷன், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து சிக்கல்கள் வந்து செல்லும். ராசிநாதன் குருபகவான் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அஷ்டமத்துச் சனியால், அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.   வியாபாரத்தில் அதிரடி முடிவுகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism