Election bannerElection banner
Published:Updated:

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

ஜாதகத்தில் பித்ரு தோஷம்... ராம்திலக்

##~##

வாழை என்பது தழைத்துக்கொண்டே இருப்பது. சந்ததியும் அப்படித்தான்! அதனால்தான், 'உங்க வம்சம் வாழையடி வாழையா வளரணும்’ என்று வாழ்த்துவார்கள் பெரியோர்கள். அப்படி நம் வம்சம் வளர்வதற்கு, முன்னோர்களின் ஆசிர்வாதமும் அருளும் மிக முக்கியம். பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோரின் ஆசி கிடைக்காத வீட்டில், சுபிட்சம் தங்காது. இதை, பித்ரு தோஷம் என்பார்கள்.

பித்ரு தோஷம் என்பது நம்முடைய மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும். சங்கடங்களும் பிரச்னைகளும் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும்.

சிலரது குடும்பத்தில் எப்போதும் ஏதாவதொரு சண்டை, சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். மகப்பேறு பிரச்னை ஏற்படும். பலமுறை கருக்கலைவும் உண்டாகும். குழந்தை பாக்கியம் என்பது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.

ஒரு சிலர், சுறுசுறுப்பாகவே இருக்க மாட்டார்கள்.  எதையோ பறிகொடுத்தவர்கள்போல, எதற்கோ ஏங்குகிறவர்கள்போலக் காணப்படுவார்கள். அவர்களுக்குள் ஏதோ ஓர் இனம்புரியாத சோகம் இருந்துகொண்டே இருக்கும்.

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

வேறு சிலர், மருத்துவர்களால்கூட இன்ன நோய் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் புதுவிதமான நோய்களால் அவதிப்படுவார்கள். சிலரது தொழிலில் முடக்க நிலை ஏற்படும்.கல்வியிலும் தடை உண்டாகும்.

ஜாதகமும் தசாபுக்திகளும் நன்றாக இருந்தும், ஏன் இப்படிச் சிலருக்கு ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இவை அனைத்தும் பித்ரு தோஷத்தால் வந்த விளைவுகளாக இருக்கும்.

ஜாதகத்தில், சூரியன் பித்ருகாரகர் ஆவார். தந்தையைக் குறிக்கும் காரக கிரகம்.

9-ம் இடம் பித்ரு ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 9-ம் வீட்டுக்கு உரிய கிரகம் தந்தையைக் குறிக்கும்.

9-ம் பாவத்துக்குக் காரகத்துவம் உடைய கிரகம் சூரியன் தவிர, குருவும் ஆவார்.

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் கரும்பாம்பான ராகுவும் 9-ஆம் இடத்தில் இருந்தால், பித்ரு தோஷம் உண்டாகும். பித்ருகாரகனான சூரியனுடன் பாபக் கிரகமான சனி சேர்ந்தாலும், பித்ரு தோஷம் உண்டாகும். சூரியனுடன் செம்பாம்பான கேது சேர்ந்தாலும், பித்ரு தோஷம் ஏற்படும்.

லக்னம் பலமானால் லக்னத்தில் இருந்தும், சந்திரன் பலமாக இருந்தால் சந்திரனில் இருந்தும் இதைப் பார்ப்பது உண்டு.  

நம் முன்னோர்கள் இறந்த பிறகு மோட்ச நிலை அடைந்துவிட்டால், அவர்களால் நமக்கு எந்தவிதத் தொந்தரவும், கெடுதல்களும் ஏற்படாது. மோட்சம் அடையாத ஆத்மாக்கள் அதை அடையும்வரை நம்முடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பர் பெரியோர்.

இயற்கை மரணம் அடையாதவர்கள், இளம் வயதில் நிறைவேறாத ஆசைகளுடன் மரணம் அடைந்தவர்கள், கெட்ட காரியங்களில் ஈடுபட்டவர்கள், துர்குணமும் கெட்ட பழக்கவழக்கங்களும் உடையவர்கள், அடக்கமுடியாத கோபம் உள்ளவர்கள், பழிவாங்கும் நிலையில் இறந்தவர்கள் ஆகியோர் தன் வழி வந்தவர்களுக்குப் பாதிப்பு உண்டாக்குகிறார்கள்.

நாம் என்னதான் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று வேண்டிக்கொண்டாலும், அவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பாதிப்பு அடைவார்கள் என்பதை உறுதிபடச் சொல்கிறார்கள், முன்னோர்கள்!  

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

இதனால்தான் இந்து தர்ம நெறிப்படி பித்ரு தோஷ நிவர்த்தி செய்யப்படுகிறது.

மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றி, மண்ணுலகில் வாழ்ந்து, மீண்டும் அவரிடமே ஐக்கியமாகிறோம். இதையே முக்தி அடைதல் என்கிறோம்.

முக்தி அடைந்தவர் யார், அடையாதவர் யார் என்பதை நம்மால் அறியமுடியாது. எனவே, இறந்த நம் முன்னோர்கள் அனைவருமே முக்தி பெறவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வதே சிறப்பு. இது, இறந்து போனவருக்கும் சாந்தியைத் தரும். வாழ்கின்ற நமக்கும் நிம்மதியைக் கொடுக்கும். அடுத்து வரும் நம் தலைமுறைகளும் சிறப்புற்று வாழும்.  

நினைவு நாள் மட்டுமின்றி, மாதந்தோறும் அமாவாசை நாளில், முன்னோருக்கான காரியத்தைச் செவ்வனே செய்பவர் வீட்டில், பீடைகள் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது அவசியம். எவ்வளவு வேலைகள், பண நெருக்கடிகள் இருந்தாலும், வருடம் ஒருமுறை செய்யவேண்டிய சிராத்தத்தைத் தவறாமல் செய்ய வேண்டும்.

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

பசுவின் சாணத்தால் செய்த வறட்டியால், வீட்டில் வேத விற்பன்னர்களைக் கொண்டு அக்னி வளர்த்து, அதில் பசு நெய்யால் ஆஹுதி செய்வதுடன், நம் முன்னோர்களின் (இறந்தவர்களின்) பெயர்களைச் சொல்லி சாதத்தையும் நெய்யையும் அதில் இட்டு பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அமாவாசை நாளில், பித்ருக்கள் நெகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது உறுதி!

வேத விற்பன்னர்களைக் கொண்டு வீட்டில் தில ஹோமமும் செய்து பித்ரு கடமையைச் செய்யலாம். பசுவுக்கு உணவு கொடுப்பதன் மூலமும், ஏழைப் பெண் யாரேனும் திருமணம் ஆகாமல், பொருளாதார நெருக்கடியால் சிரமப்படுகிறார் என்றால், அவரது திருமணம் நடைபெற உதவி செய்வதன் மூலமும் பித்ரு தோஷம் நீங்கும்.

அமாவாசையில், புனித நதிகளில் நீராடி, பித்ரு கடன் தீர்ப்பதும் பாவம் போக்கவல்லது என்பார்கள். குறிப்பாக ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புனித இடங்களுக்குச் சென்று பித்ரு தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். காவிரி, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளில் நீராடலாம். பித்ரு காரகன் சூரியனுக்கு உகந்த மாணிக்கக் கல்லை மோதிர விரலில் அணிவதும் சிறப்பு சேர்க்கும்.  

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

மந்திரங்களிலேயே உயர்ந்தது எனப் போற்றப்படுவது ஸ்ரீகாயத்ரி மந்திரம். அந்த மந்திரத்தைத் தினமும் 108 அல்லது 1008 முறை சொல்வது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் ஜபிக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மை உண்டாகும். முகத்தில் தேஜஸ் கூடும். மனதுள் தெளிவு குடிகொள்ளும். பித்ரு தோஷம் மட்டுமல்லாது, எல்லாவித தோஷங்களும் நீங்கும்.

அமாவாசை அன்றோ, முன்னோர்களின் நினைவு நாளன்றோ பாலால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் நல்லது.

மாதந்தோறும் வருகிற அமாவாசையை விட, தை அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவை மிகுந்த புண்ணியத்தைத் தருகிற முக்கியமான நாட்கள். எனவே வருகிற தை அமாவாசை நாளில், முன்னோர்களை ஆராதனை செய்யுங்கள்.

'முன்னோர்கள் இறந்த தேதி மறந்துடுச்சே! அதனாலதான் நான் திதி, திவசம்னு எதுவும் பண்ணமுடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன்’  எனப் புலம்புவோரும் தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் திதி கொடுத்து, முன்னோர்களை வணங்கி வழிபடலாம். இதனால், பித்ருக்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.

குருவும், பித்ருக்களுக்குக் காரகர். எனவே, குருவருள் கிடைத்துவிட்டால், சகல தோஷங்களும் நம்மை விட்டு அகலும். ஆகவே, தை அமாவாசை நாளில், குருவைத் தியானிப்போம். முன்னோர் கடமையைச் செய்து அவர்களின் ஆசியைப் பெறுவோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு