Published:Updated:

யோகம் தரும் மாருதி வழிபாடு

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-22 கே.குமார சிவாச்சாரியார்

##~##

வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.

வெற்றி(லை) மாலை: அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கும் பக்தர்களில் சிலருக்கே இதன் பொருள் புரிந்திருக்கிறது. சீதாபிராட்டியை அனுமன் அசோக வனத்தில் ராமதூதனாகச் சந்தித்தபோது, சீதை அனுமனின் தலையில் வெற்றிலையை வைத்து 'எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!’ என்று ஆசி அருளினார்.  இதனால், வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் வளம் பெறலாம் என்பது ஐதீகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வடைமாலை வழிபாடு: நவதான்யங்களில், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சக்தியைக் கொடுப்பது உளுந்து. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி உளுந்து வடையைச் செய்து கொடுத்ததால், ஸ்ரீஅனுமன் ஆரோக்கியமாகவும் திடமாகவும் திகழ்ந்தாராம். எனவே, அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால், நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

யோகம் தரும் மாருதி வழிபாடு

வெண்ணெய்க் காப்பு: ராவணனுக்கும் ஸ்ரீராமனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள். ஸ்ரீஅனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும் தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார்.  அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு. அதன்படியே செய்தார் அனுமன். காரியங்களில் வெற்றி கிடைத்திட, தேக ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபடலாம்.

செந்தூரக் காப்பு வழிபாடு: அசோகவனத்தில் சீதையிடம் ராமதூதனாக வந்து சந்தித்த அனுமன் சொன்னதைக் கேட்டு, நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டு, மகிழ்ந்து சிரித்தாளாம் சீதாதேவி. இதைக் கண்ட அனுமனும் மகிழ்ந்து, செந்தூரத்தை உடலெங்கும் பூசிக்கொண்டாராம். எனவே, செந்தூரக் காப்பு செய்து ஸ்ரீஅனுமனை வழிபட்டால், வீட்டிலும் மனத்திலும் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.

வாலில் பொட்டிட்டுப் பிரார்த்தனை: பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழக் குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது. அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, 'நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு. அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க முடியாமல் போகவே, அதிர்ந்து போனான் பீமன். கர்வம் அடங்கினான். பின்பு, அந்தக் குரங்குதான் ஸ்ரீஅனுமன் என்பதை அறிந்து, 'நான் அனுமனின் பக்தன். என்னால் முடியும்’ என்று சொல்லியபடி வாலை நகர்த்த முயல, அனுமன் மகிழ்ந்து அவனுக்குத் தன் வாலை நகர்த்தி உதவினார்.

யோகம் தரும் மாருதி வழிபாடு

'அனுமனின் வாலுக்கே இத்தனைச் சக்தி இருக்கிறதே! இதை வணங்கினாலே அருள் பெறலாமே’ என்று எண்ணினான் பீமன்.எனவே, வால் வழிபாடு விசேஷம்!  

அனுமனின் அருளை எளிதில் பெற, வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். அதேபோல், மங்கல வடிவான மணியைக் கட்டி வழிபடும் வழக்கமும் உண்டு. அனுமனின் வாலில் நவகிரகங்கள் சேர்ந்திருப்பதாக அவரது வழிபாட்டுக் கல்பம் கூறுகிறது. ஏழரைச் சனி காலங்களில் அனுமன் வழிபாடு, நம்மை அரணெனக் காக்கும்.

பூஜை அறையில் மாருதி கோலமிட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.

'அஸ்யஸ்ரீ ஹனுமான் மகா மந்த்ரஸ்ய
ஸ்ரீராமச்சந்திரோ பகவான் ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஹனுமான் தேவதா
ஹ்ரீம் பீஜம் - ஸ்ரீம் சக்தி: கில - கில - பூ - பூ காரிணே இதி கீலகம்
சர்வ அரிஷ்ட சர்வானுகூலே, கிரஹ தோஷ நிவாரண ஜபே விநியோக:
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம். ஹ்ரீம் ஹ்ரூம் இதி கரந்யாச அங்கந்யாஸ பூர்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:’

- என்று கை கூப்பியபடி சொல்லுங்கள்.

யோகம் தரும் மாருதி வழிபாடு

தியானம்

'வந்தே வித்யுத் ஜ்வலன விலஸத் ப்ரம்ம சூத்ரோஜ் வலந்தம்
கர்ணத்வந்த்வே கனக ரசிதே குண்டலே தாரயந்தம்
ஸத்கௌபீனம் கபிலாங்ருதம் காமரூபம் கபீந்த்ரம்
புத்ரம் வாயோ நினசுத சுகதம் வஜ்ர தேஹம் வரேண்யம்’

- என்று தியானித்து, கோலத்தில் இந்த ஸ்ரீஅனுமன் நாமார்ச்சனையைச் சொல்லி, துளசியால் அர்ச்சிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீம் கௌண்டின்ய கோத்ர ஜாதாய நம: ஓம் ஸ்ரீ கேசரீ சுதாய நம:
ஓம் ஸ்ரீ அஞ்சநா கர்ப்ப நம: ஓம் ஸ்ரீ அனுமதே நம: ஓம் ஸ்ரீ சிரஞ்சீவனே நம:
ஓம் ஸ்ரீ பஞ்சவஜ்த்ராய நம: ஓம் ஸ்ரீ சர்வ மந்த்ர ஸ்வரூபவதே நம:
ஓம் ஸ்ரீ சர்வ தந்த்ர ஸ்வரூபினே நம: ஓம் ஸ்ரீ சர்வ ரோக ஹராய நம:
ஓம் ஸ்ரீ சர்வ துக்க ஹராய நம: ஓம் ஸ்ரீ சர்வ க்ரஹ விநாசினே நம:
ஓம் ஸ்ரீ சர்வ மாயா விபஞ்சநாய நம: ஓம் ஸ்ரீ சர்வ வித்யா சம்பத் ப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீ சீதாசமேத ஸ்ரீராமபாத ஸேவா துரந்தராய நம:’

தூபம் தீபம், நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி செய்த பிறகு குங்குமம், செந்தூரம், சந்தனம், துளசி இட்டுக்கொண்டு, மும்முறை ஆத்ம பிரதட்சிணம் செய்து, வரைந்துள்ள கோலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்’ என்று கூறி துளசியும் குங்குமமும் போடவும். பிறகு, மூல மந்திரத்தை 21 தடவை கூறவேண்டும்.

யோகம் தரும் மாருதி வழிபாடு

'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராமதூதாய லங்கா வித்வம்சனாய
அஞ்சனா கர்ப்ப சம்பூதாய சாகினீ டாகினீ வித்வம்சனாய, கிலகில பூ பூ காரிணே
விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரூம் பட்   ஸ்வாஹா’

படத்தில், அனுமனுடைய வால் பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்து, மூன்று முறை ஜெயபஞ்சகத்தைப் படிக்கவேண்டும். இப்படி 47 நாட்கள் படித்து, பொட்டு வைத்து வந்தால், நினைத்ததெல்லாம் நடந்தேறும்; ஞானமும் யோகமும் பெறலாம்.

ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்தில் இருக்கும் அனுமனைத் தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்!

- வழிபடுவோம்...