Published:Updated:

சகலமும் அருளும் சுக்ர யோகம்!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

##~##

 17.9.2005 இதழிலிருந்து...

செழிப்பும், புகழும், செல்வமும், நல்ல பெயரும் நல்லோர் சேர்க்கையும் ஒருவருக்கு உண்டானால், அவருக்கு சுக்கிர தசை அடிக்கிறது என்கிறோம். குருட்டு அதிர்ஷ்டம் அடித்து ஒருவர் குடிசை வீட்டிலிருந்து திடீரென அடுக்கு மாளிகைக்குப் போகும் அளவுக்கு செல்வந்தரானால், அதையும் சுக்கிர தசை என்பார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை என்பது இருபது ஆண்டுகளுக்கு நடக்கும். மற்ற நேரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தாலும், இந்த இருபது ஆண்டுகளில், ஆசைப்படும் அனைத்தையும் கொடுத்துச் சந்தோஷப்படுத்துவார் சுக்கிரன்.

சந்தோஷமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குழந்தைகளால் கிடைக்கும் மன நிம்மதி, நல்ல பெயர், புகழ், வாகனங்கள் வாங்கும் பாக்கியம், தொழில் மேம்பாடு என அனைத்தையும் கொடுப்பார் சுக்கிரன். இளம்வயதில் சுக்கிர தசை அடித்தால், கண்டிப்பாக அந்த ராசிக்காரருக்குத் திருமணம் நடக்கும்!

ஆனால், சுக்கிரன் இருக்கும் இடம், உடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சிலருக்கு மோசமான பலன்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்க்கை முழுக்கவே சுக்கிர தசை நடக்கும் பாக்கியம் இல்லாமலும் போய்விடும்.

சகலமும் அருளும் சுக்ர யோகம்!

சுக்கிர தசை நடக்கும்போது சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்தச் சமயத்தில் கிடைக்கும் பலன்கள் மாறுபடும். லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், எந்தச் செயலை எடுத்தாலும் அதில் வெற்றி கிட்டும். நல்ல அரசாங்க வேலை கிடைக்கும். படிப்பு, சுகமான வாழ்வு என எல்லாமே நிறைவாக அமையும்.

இரண்டாவது இடத்தில் இருந்தால், அந்த ராசிக்காரர் இலக்கியப் படைப்பாளியாக இருப்பார். பேச்சுத் திறன், அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம் என எல்லாமும் இருக்கும். நிறைய வழிகளில் பண வரவு இருக்கும். ருசியாகச் சாப்பிடுவதில் ஆசை கொண்டவராக இருப்பார்.

சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருந்தால், அவர் தைரிய சாலியாகவும் எப்போதும் உற்சாகத்துடனும் இருப்பார். விதம் விதமான வாகனங்கள் வாங்கும் யோகம் இருக்கும்.

நான்காம் இடத்தில் இருந்தால், ராஜபோக வாழ்க்கைத் தான்! அரசியல் செல்வாக்குப் படைத்தவராக இருப்பார். உலகம் முழுக்கப் பெயர் தெரிகிற அளவு பிரபலமாவார். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வெற்றி கிட்டும்.

சகலமும் அருளும் சுக்ர யோகம்!

ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், கல்வி மற்றும் கலைகளில் திறமைசாலியாக இருப்பார். நிறையக் குழந்தைகள் பிறக்கும். பெரிய பதவி கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பார். இவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவருக்கு சுக்கிர தசைகூட நல்லதாக அமையாது. பண விஷயமாக பயமும், பொருள் நாசமும் ஏற்படும். எப்போதும் ஏதாவது உபத்திரவம் இருக்கும். பிறப்பு தொடர்பான உடல் பாகங்களில் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏழாம் இடத்தில் இருந்தால், குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். சந்தோஷமான விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால்கூட அவற்றை அனுபவிக்க முடியாதபடி உடல் நலம் மோசமாக இருக்கும். அஷ்டமம் எனப்படும் எட்டாம் இடத்தில் இருக்கும்போது, இஷ்டமில்லாத காரியங்கள் நடக்கும். ஆனால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. மற்ற கிரகங்கள் எட்டில் இருக்கும்போது அதிக உபத்திரவங்கள் தரும். அந்த அளவுக்கு சுக்கிரன் மோசமில்லை.

ஒன்பதாம் இடத்தில் இருந்தால், பெயரும் புகழும் கிடைக்கும். நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பணம் வரும்.

பத்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். உயர்ந்த அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.

சகலமும் அருளும் சுக்ர யோகம்!

பதினோராவது இடத்தில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் அதிகமான சுகத்தை அனுபவிப்பார்கள். கலைகளில் ஆர்வம் காட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள். பன்னிரண்டாவது இடத்தில் எந்தக் கிரகம் இருந்தாலும் பொதுவாக மோசமான பலன்களையே தரும். இங்கு இருந்து நல்லது செய்யும் ஒரே கிரகம் சுக்கிரன்தான்! உடல்நலம் மேம்படும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பண வரவு நிறைய இருக்கும். ஆனால், தாயாருக்கு உடல் நலக் கோளாறு வரும் ஆபத்து இருக்கிறது.

இந்த இடங்களில் சுக்கிரனுடன் இருக்கும் கிரகங்களின் கூட்டணி, பலன்களில் சில மாற்றங்களைச் செய்யக்கூடும். குறிப்பாக சுக்கிரன் சூரியனோடு சேர்ந்திருந்தால், அது மோச மான காலம். விவசாயம் மற்றும் பொருளாதார பாதிப்பு வரும். மனைவியின் உடல்நலம் கெடும். சந்திரனோடு சுக்கிரன் சேர்ந்திருந்தால், அது சுபம். வாகன யோகம் கிட்டும்... சுகமான வாழ்க்கையும் கிடைக்கும்.

புதனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், செல்வாக்கான உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஜாதகதாரரின் மனைவி கஷ்டப்பட நேரிடும். வியாழனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், அது நல்ல அம்சம். எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு தலைமைப் பொறுப்பில் இவர் இருப்பார். நிறையச் சம்பாதிப்பார்.

சனியுடன் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகதாரர் பெண்களுடன் அதிக நெருக்கம் காட்டுவார். மனைவிக்கு உடல்நலம் கெடும். ராகு மற்றும் கேதுவோடு சுக்கிரன் சேர்ந்திருந்தால், அவர் விதவையை மறுமணம் செய்ய நேரிடலாம்.

பொதுவாக, சுக்கிரன் பாவக் கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும், இதைப் போக்குவதற்கு நவக்கிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்ய வேண்டும். இதற்குப் பெயர் 'சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்தப் பாவக் கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

பொதுவாக, சின்னப் பிரச்னைகளுக்கு சுக்கிர சாந்தி செய்வது இல்லை. தாள முடியாத அளவு உபத்திரவம் இருந்தால் மட்டுமே செய்கிறார்கள்.

சகலமும் அருளும் சுக்ர யோகம்!

சுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், அது மோசமான பலன்களைத் தரும். தலை, வயிறு, கண் தொடர்பான நோய்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் தவறிப்போவது போன்ற சூழ்நிலைகள் நேரிடும்.

சுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், உடம்பு பாடாய்ப் படுத்தும். வாத, பித்த ரோகங்கள் வரும். இதே போல செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் விளையும். கேது புக்தி இருந்தாலும் உடல்நலம் கெடும். நினைத்தே பார்க்காத வகைகளில் உபத்திரவம் நேரிடும்.

இது போன்ற பிரச்னைகளிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள். சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.

சுக்கிர சாந்தி செய்யும்போது மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. 'நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக்கிழமைகள் படித்து, மகாலட்சுமியை வணங்கி வந்தால் சுக்கிர சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு