Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம்: 23 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம்: 23 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

திருமணம் நிச்சயிப்பதற்கான தசவித (10) பொருத்தங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தொடர்ந்து, எண்விதப் பொருத்தங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தசவிதப் பொருத்தங்களின் சாராம்சமும் இதில் அடங்கும். வட இந்தியாவில் இம்முறை பின்பற்றப்படுகிறது. இணையதளங்கள் மூலம் திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக அமைந்துள்ள வகையில் இது அடங்கும். ஒரு ஜாதகத்தைப் பரிசீலனை செய்யும்போது நட்சத்திரத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் விபரங்கள் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவை முறையே நட்சத்திர அதிபதி, ராசி, ராசி அதிபதி, பாயா (நட்சத்திரத்துக்கு உரிய உலோகம்), யோகம், கரணம், கணம், யோனி, நாடி, வரன் வஸ்யம், வர்க்கம் போன்றவை.

எண்விதப் பொருத்தத்தில் கீழ்க்காணும் விஷயங்கள் அடங்கும். வரன் (தினம்), வஸ்யம், தாரா, யோனி, க்ருஹம், கணம், பகூத் (ராசி, ராசி அதிபதி) நாடி. இவற்றில் தாரா, க்ருஹம், நாடி தவிர மற்றவை தசவிதப் பொருத்தத்திலும் அடங்கியுள்ளது.

தாரா: விதிவசத்தால் திருமண வாழ்க்கையில் குறை அல்லது பிரிவு, மரணம் போன்றவை நிகழாமல் இருக்குமா என்பதை அறிய உதவும்.

ஜோதிட புராணம்!

க்ருஹம்: ஆண்-பெண்ணின் குணாதிசயங்கள், விருப்பு, வெறுப்பு, ஆசை, பாசம் போன்ற இயல்புகள் பொருந்துகின்றனவா என்பதைத் தெரிவிக்கும். இன்றைய உலகில் திருமணங்களில் உறவுகள் முறிந்து போவதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகிறது. ஒருவரை ஒருவர் அடக்கியாளும் இயல்பு உள்ள ஆண்-பெண் திருமணம் செய்துகொண்டால், அதன் விளைவால் திருமண வாழ்க்கைப் பாதிக்கப்படும். இந்த ஸ்வபாவப் பொருத்தத்தைப் பார்த்தால் மட்டும் போதாது; பெண்ணும், பிள்ளையும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துப் பேசி முடிவு செய்ய வேண்டும். இதைத்தான் சுருக்கமாக ஆங்கிலத்தில் (ஈகோ கிளாஷ்)) என்கிறார்கள்.

நாடி: இது மிக முக்கியம். தாம்பத்திய உறவு, தாம்பத்திய சுகம், அதனால் வம்ஸம் விருத்தி அடைவது, சந்தான பாக்கியம் போன்ற விஷயங்களை நிர்ணயிப்பது நாடிப் பொருத்தம்தான்.

நாடி வகைகள்...

நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களில், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு நாடி உண்டு எனக் குறிப்பிட்டிருந்தோம். அவை மூன்று வகையாகும். ஆதி நாடி அல்லது தக்ஷிண பார்ஸ்வ நாடி, மத்யம நாடி - மத்ய பார்ஸ்வ நாடி, அந்திம நாடி - வாம பார்ஸ்வ நாடி ஆகியன.

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தக்ஷிண பார்ஸ்வ நாடி அல்லது ஆதிநாடியைச் சேர்ந்தவை.

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மத்திய நாடியில் சேரும்.

கிருத்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் அந்திம நாடியில் சேரும்.

பெண் நாடியும், ஆண் நாடியும் வித்தியா சமாக வந்தால், நாடிப் பொருத்தம் அமையும். இரண்டும் மத்ய நாடியானால் சிலாக்கியம் இல்லை.  மற்றெல்லாப் பொருத்தங்களிலும் ஓரளவு விதிவிலக்கு தர முடியும். ஆனால் நாடிப் பொருத்தம் இல்லையென்றால் அந்தத் திருமண வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத சில சிக்கல்கள் ஏற்படலாம்.

எண்விதப் பொருத்த மதிப்பெண்கள்

இந்த எண் வகைப் பொருத்தங்களுக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் சில மதிப்பெண்கள் உண்டு.

1. நாடி (உடல் பொருத்தம்) - 8

2. பகூத் (ராசி, ராசி அதிபதி பொருத்தம்) - 7

3. கணம் (சுமுகமான உறவு முறைகள்) - 6

4. க்ருஹம் - (ஸ்வபாவம்) - 5

5. யோனி - (மனப்பொருத்தம் அந்நியோன்யம்) - 4

6. தாரா - (விதிவச நிகழ்வுகள் பாதிக்காமல் இருக்க) - 3

7. வஸ்யம் - (ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது) - 2

8. வரன் - தோற்றப் பொருத்தம் - 1

ஜோதிட புராணம்!

கணினி மூலம் அல்லது இணையதளத்தில் பார்க்கும்போது ஆண், பெண் நக்ஷத்திரங்கள், ராசி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பொருத்தங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தெரியும். அதன் மொத்த எண்ணிக்கை 36-க்கு... 18-க்கு மேல் 27-க்குள் இருந்தால், அந்தப் பொருத்தங்களை ஆராய்ந்து முடிவு செய்யலாம். 27-க்கு மேல் இருந்தால் அது உத்தமமான பொருத்தம் எனக் கொள்ளலாம்.

எதுவானாலும் மேல்வாரியாக பொருத்தம் என எடுத்துக்கொள்ள இந்த முறைகள் உதவும். ஆனால், ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, யோக பலன்களைத் தெரிந்து கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும். ஜாதகப் பொருத்தம் இருக்கிறதென நிர்ணயித்து, பிடிவாதமாக அந்தத் திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்வது தவறு.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது ஏற்படும் உணர்வலைகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்தாலும் முடிவுகளைப் பிள்ளைகளிடம் விடுவது நல்லது. இதில் பலவந்தம் இருக்கக்கூடாது. அதனால், பின்னால் வரும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க நேரிடும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, கண்டிப்பாக இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது.

னி, செவ்வாய் தோஷம் குறித்து தெரிந்துகொள்வோம்.

திருமணங்களுக்குப் பெரும்பாலும் தடையாக இருப்பது, செவ்வாய் தோஷம்தான். பொதுவாக திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, இந்த தோஷம் இருக்கிறதா என்று கவனமாக ஆய்வு செய்வார்கள். நீண்டநாள் அந்நியோன்யமான திருமண வாழ்க்கைக்குத் தடையாக இது கருதப்படுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷமாகக் கருதப்படுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவில் செவ்வாய் தோஷம் இருந்தால் தோஷம் நிவர்த்தியாகக் கருதப்படுகிறது. ஒருவருக்குச் செவ்வாய் தோஷம்  இருந்து மற்றவருக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்றால் திருமணப் பொருத்தம் அமையாது.

செவ்வாய்தோஷ விதிவிலக்கு

இந்த செவ்வாய் தோஷத்திற்கு பல விதிவிலக்குகள் உள்ளன. அவை வருமாறு

செவ்வாய் ஆட்சியாக உள்ள மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளிலும், செவ்வாய் உச்சமாயுள்ள மகர ராசியிலும் செவ்வாய் இருந்தால்... அது 2, 4, 7, 8, 12 என எதுவானாலும் செவ்வாய் தோஷம் கிடையாது,

குரு, சூரியன், சனி, சந்திரன் ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்றுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும், அவற்றால் பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2-ம் இடம் அமைந்த செவ்வாயின் ராசிகள், புதனுடைய ஆட்சி உச்ச வீடுகளான மிதுனம், கன்னியானாலும் தோஷம் கிடையாது.

7-ம் இடம் அமைந்த செவ்வாய் கடகம், மகர ராசியினால் தோஷமில்லை.

8-ம் இடம் அமைந்த செவ்வாய் குருவுடைய ஆட்சி வீடான தனுசு, மீனமானால் தோஷம் இல்லை.

ஒரு சிலர் பெண் அல்லது பையனின் ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே 2, 4, 7, 8, 12 என்று எண்ணிவிட்டு அங்கே செவ்வாய் இருந்தால், உடனேயே செவ்வாய் தோஷம் என்று தீர்மானித்து ஒதுக்கிவிடுகிறார்கள். இது தவறு. செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உள்ளதா என்று பார்த்து தெரிந்துகொண்டு முடிவு செய்ய வேண்டும்.

ஜோதிடர்கள் பெண் அல்லது ஆணின் ஜாதகத்தை எழுதிக் கொடுக்கும்போது இந்த விதிவிலக்குகளைப் பரிசீலனை செய்து செவ்வாய் தோஷம் இல்லை என்று குறிப்பிடு வது, 'செவ்வாய் தோஷம் இருக்கிறது’ என்று தவறாக எண்ணிக்கொண்டு குழம்பியுள்ள பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஜோதிட புராணம்!

செவ்வாய் தோஷ பரிகாரம்

சில நேரங்களில், 'மனப் பொருத்தம் ஏற்பட்டுவிட்ட நிலையில், இந்த தோஷம் உள்ள ஆண்-பெண் ஜாதகத்தை இணைக்கும்போது அதற்கு பரிகாரம் உண்டா?’ என்று கேட்பார்கள்.

செவ்வாயின் அதிபதி முருகப் பெருமான். அவரை வழிபட்டு, முருகன் ஆலயத்திலோ, ஆலயம் சார்ந்த திருமண மண்டபத்திலோ திருமணம் நடத்தினால், முருகன் அருளால் தோஷத்தினால் ஏற்படும் துன்பம் நீங்கும்.

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்

மங்களன், அங்காரகன், செவ்வாய் என்று அழைக்கப்படும் கிரகம். மனித உடலின் ரத்த ஓட்டத்துக்கு, உடலின் வெப்ப நிலைக்கு ஆதாரமானவர். ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அது உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, மனோதைரியம் ஆகியவற்றைத் தரும். செவ்வாய் இருக்கும் நிலையால் ஆண் அல்லது பெண் குடும்ப வாழ்க்கையில் பெறும் தாம்பத்திய சுகம், குழந்தை பாக்கியம் போன்றவற்றை அறியலாம். எனவேதான், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, செவ்வாயின் பலம் - பலவீனம் பரிசீலிக்கப்படுகிறது. பூமி, வீடு, வாசல் பெறுகின்ற பாக்கியத்தையும் செவ்வாய் கிரகத்தின் நிலையில் அறியலாம்.

செவ்வாய் தசை காட்டும் மனித இயல்புகள்

* லக்னத்திலிருந்து செவ்வாய் இருக்கின்ற இடத்தை வைத்து ஒருவரின் குணாதிசயங் களையும் அறியலாம். உதாரணமாக

- லக்னத்திற்கு 2-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகரிடம் கோபமும் இருக்கும்; குணமும் இருக்கும். நியாய உணர்வு உள்ளவராக இருப்பார். மனதில் பட்டதைச் சொல்வார்.

- லக்னத்திற்கு 4-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகர் உஷ்ண தேகம் உள்ளவராக இருப்பார். அடிக்கடி இடம் மாறி தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

- லக்னத்திற்கு 7-ல் செவ்வாய் இருந்தால் கோபமும், பரபரப்பும் டென்ஷனும் உள்ளவராக இருப்பார்.

- லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகர் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் கோபதாபங்கள் உடையவராகவும் இருப்பார்.

லக்னத்துக்கு 12-ல் செவ்வாய் அமைந்துள்ள ஜாதகர் எப்போதும் சிந்திப்பவராகவும் கோபம், விருப்பு- வெறுப்பு உள்ளவராகவும் இருப்பார்.

இதெல்லாம் பொதுவான குணங்கள். ஒருவரின் குணாதிசயங்களை நிர்ணயிக்கும் போது செவ்வாய் கிரக நிலையை வைத்து மட்டும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு கிரகமும் அமைந்துள்ள நிலையை வைத்து வெவ்வேறு குணாதிசயங்கள் அமையலாம். எனவே, நல்ல ஜோதிடரிடம் காட்டி முடிவு செய்வதுதான் நல்லது.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism