Election bannerElection banner
Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-25

ஆயுளை பத்திரப்படுத்துவோம்! கே.குமார சிவாச்சாரியார்

 ருவரது ஆயுட் காலத்தை அற்ப ஆயுள், மத்திமமான ஆயுள், தீர்க்க ஆயுள் என்று பிரித்துக் கூறும், ஜோதிடவியல் கணக்கு. ஆயுள்காரகனான சனி, குரு, சந்திரன் ஆகியோரது பார்வையில் இருந்தாலும், இந்த கிரகங்கள் ஆயுள் ஸ்தானாதிபதியைப் பார்த்தாலும், ஜென்ம ராசியைப் பார்த்தாலும் பூரண ஆயுள் கிட்டும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-25

• லக்னத்துக்கு அதிபனும், சந்திரனும் பலம் பெற்றிருந்தால் ஜாதகருக்குத் தீர்க்காயுள் கிடைக்கும்.

•  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து, ஆயுள்காரகனான சனி, ராகு மற்றும் கேதுவுடன் விரய நிலையில் இருந்தால்... அற்பாயுள் தோஷம் இருப்பினும், குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்த்தால் ஆயுள் பங்கத்தைத் தராமல் மத்திம ஆயுளைத் தரும்.

•  ஜனன லக்னத்துக்கு 8-ம் இடத்தின் அதிபன், எந்த ராசியில் உள்ளாரோ அதில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நோய் உபா தைகள் ஏற்படலாம். அதேபோன்று, லக்னத்துக்கு 5, 9-ல் சனி இருந்தும், தீய கிரகங்களின் பார்வை இருந்தால் நோய்கள் தாக்க வழி உண்டு.

•  கும்பத்தில் ஆரோக்கியகாரகன் சூரியன் இருக்கப் பிறந்தவர்களுக்கு, உடல் பலமாக இருப்பினும் இதயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். லக்னத்துக்கு 2 மற்றும் 12-ம் இடங்களில் பாப கிரகங்கள் கூடி நின்றால் நோயுடன் வறுமையும் தாக்க நேரிடலாம். ஒருவரது ஜனன ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் லக்னத்தில் இருக்க, லக்னாதிபதி 2, 8, 12-ல் அமர்ந்து கேந்திரங்களில் பாபர்கள் இருப்பார்கள் எனில், அந்த ஜாதகர் நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-25

இப்படியான கிரக நிலை குறைபாடுகள் இருப்பின், தகுந்த வழிபாடுகள் செய்து நிவர்த்தி பெறலாம். சென்ற இதழில் பூரண ஆயுள் தரும் ஸ்ரீதன்வந்த்ரி பகவான் வழிபாடு குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக 'ஆயுள் பத்திர வழிபாடு’ குறித்து இந்த இதழில் அறிவோம்.

தேகத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் சீர்படச் செய்து, நம் ஆயுளைப் பத்திரப்படுத்து வதற்கு - ஒருவரது ஜாதகத்தில் ஆயுள் பாதக நிலை வரும் நேரத்தில், பாதிப்பில் இருந்து மீள, ஆயுள் பத்திர வழிபாடு கைகொடுக்கும்.

3 x 16 செ.மீ. அளவுள்ள பனை ஓலையில், ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் அட்சர மூலத்தை, உங்களுடைய பெயருடன் (கோரோசனம், சந்தனம், துளசிச்சாறு கலவையால்) எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உடல் நலக் குறைபாடு குறித்த விவரத்தையும் பெயருடன் நட்சத்திரம் குறிப்பிட்டு... சனி, செவ்வாய் மற்றும் திரயோதசி திதி நாட்களில், மாலை வேளையில் இலகுவாக (எளிய முறையில்) 5 அல்லது 6 முறை ஜபம் செய்த பிறகு, ஸ்ரீதன்வந்த்ரி பகவான் காயத்ரி மந்திரத்தையும் ஜபிக்க வேண்டும். இதற்கு ஆயுள் பத்திர வழிபாடு என்று பெயர்.

தொடர்ந்து 52 தினங்கள் செய்த பின்னர், கலசத்திலும் இந்த மந்திர பூஜையை செய்துவிட்டு, வீடு முழுவதும் கலச தீர்த்தத்தைத் தெளித்து, பின்னர் நீராடவும்.

- வழிபடுவோம்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-25

ஸ்ரீதன்வந்த்ரி பகவான்!

நான்முகனான பிரம்மதேவன், ஆயுர்வேத வைத்திய முறைகளை அறிந்து, அதற்கான விளக்க உரை எழுதி தட்ச பிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவக் கலையைக் கற்றுக்கொண்டனர்.

உலக மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பிரம்மன் இந்திரனுக்கும் இந்தக் கலையை உபதேசித்தார். அவன் தேவ கணங்கள் ஒவ்வொருவருக்கும் உரிய பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்கும்போது, பிணிகளைத் தீர்த்து ஆயுளை நீட்டிக்கும் பொறுப்பை ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்த்ரி பகவானிடம் அளித்ததாக ஒரு புராணத் தகவல் உண்டு.

ஆயுர்வேத மருத்துவக் கலையின் வேத ஸ்கந்தங்களைப் பெற்றிருந்த ஸ்ரீதன்வந்த்ரி பகவான்தான் துவக்கம், மத்திமம், பூரண ஆயுள் மற்றும் மரண முறைகளை அறிந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மனித இனம் தீர்க்க ஆயுள் பெறுவதற்கான மருந்துகளையும், பிரயோக வழிகளையும் கூறியதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன.

காசி மாநகரத்தை ஆட்சி புரிந்து வந்த தன்வன் என்பவனின் மகன் தன்வந்த்ரி என்ற பெயரில் இருந்ததாகவும், அவனுடைய பேரன் திவோதசன் என்பவன் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் மருத்துவம் செய்ததாகவும் புராணத் தகவல்கள் உண்டு.

ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் அவதாரம் குறித்து எல்லோருக்கும் தெரிந்த கதை, பாற்கடல் சம்பவம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கைகளில் அமிர்தகலசம் மற்றும் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட மருத்துவ சாஸ்திர விதிகளோடு, சங்கு- சக்கரம் ஏந்தியவராக ஸ்ரீதன்வந்த்ரி பகவான் வெளிவந்ததாக பாகவதம் முதலான ஞானநூல்கள் விவரிக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு