Published:Updated:

ஆரூடம் அறிவோம்: 25

ஜோதிட புராணம்! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: தமிழ்

ஆரூடம் அறிவோம்: 25

ஜோதிட புராணம்! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: தமிழ்

Published:Updated:

நட்சத்திரங்களும் குணாதிசயங்களும்

மிருகசீர்ஷம் அல்லது மிருகசீரிடம்:

ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரூடம் அறிவோம்: 25

பொதுவான குணங்கள்:

எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுதந்திரமானவர்கள்.

ராசி

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் அமையும். எனவே, இந்த ராசி அதிபதிகள் சுக்கிரனும் புதனும் ஆவர்.

நான்கு பாதங்களின் குணங்கள்:

முதல் பாதம்:

இந்தப் பாதத்தை ஆளும் கிரகம் சூரியன். அபார தன்னம்பிக்கை, துணிச்சல், எல்லாம் தெரியும் என்ற கர்வம், முடியாத செயல்களையும் முடியும் எனக் கருதி எடுத்துக்கொள்ளும் ஆற்றல், விளம்பரப் பிரியம் போன்ற குணங்கள் இருக்கும்.

இரண்டாம் பாதம்:

இந்தப் பாதத்தை ஆள்பவர் புதன். இவர்களிடம் நல்ல கல்வியறிவும் தெய்வ பக்தியும் இருக்கும். முன்கோபமும், உணர்ச்சிவசப்படும் தன்மையும் இருக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றையும் ரசித்து நடப்பவர்கள்.

மூன்றாம் பாதம்:

சுக்கிரனின் அம்சம். வசீகரமான தோற்றம், ஆடை அணிகலன்களில் ஆசை, அன்பு, காதல், பாசம் போன்ற உணர்வுகள் உண்டு.

நான்காம் பாதம்:

இதன் அதிபதி செவ்வாய். ஆசை, காதல், பாசம் மேலோங்கி இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்பவர்கள். பிடிவாதமும் கோபமும் இருக்கும். எதையும் தேவைக்கு அதிகமாக விரும்புபவர்கள்; விரும்பியதைச் செய்பவர்கள். அதனால் பிரச்னைகளை உண்டாக்கிக் கொள்பவர்கள்.

ஆரூடம் அறிவோம்: 25

திருவாதிரை:

இது மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். 'சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். மார்கழி மாதம், திருவாதிரை அன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.

பொதுவான குணங்கள்:

நல்ல தோற்றம், அழகு, உடல் வலிமை உள்ளவர்கள். திடசித்தமும், எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் இருக்கும். இரக்கம், தயாள குணம், தர்ம சிந்தனை, பிறருக்கு உதவும் தன்மை இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவர்கள். கோப தாபம் இருக்கும். அவசரப்பட்டுச் செயல்களைச் செய்வார்கள். தவறு நேர்ந்தால், திருத்திக் கொள்வார்கள்.

ஆரூடம் அறிவோம்: 25

முதல் பாதம்:

இந்தப் பாதத்தை ஆள்பவர் குரு பகவான். இவர்களிடம் ஞானம், உயர்கல்வி, தர்ம சிந்தை இருக்கும். 'கோபம் இருக்குமிடம் குணமும் இருக்கும்’ என்பார்கள். இவர்களிடம் கோபமும் குணமும் சேர்ந்தே இருக்கும்.

இரண்டாம் பாதம்:

சனிபகவான் ஆளும் இந்த நட்சத்திரத்தின் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சமர்த்தர்கள். எல்லோரையும் அடக்கியாள நினைப்பவர்கள். பிடிவாதம் கொண்டவர்கள். பிறரைத் துன்புறுத்தியாவது தான் பலனடைய வேண்டும் என்ற சுயநலம் மிக்கவர்கள். நல்லவர்களின் சேர்க்கையும், நல்ல குருவின் வழிகாட்டுதலும் இருந்தால் இவர்கள் நல்லவர்கள் ஆகமுடியும்.

மூன்றாம் பாதம்:

இதனை ஆள்பவர் சனி. இவர்கள் முரட்டுப் பிடிவாதம் உள்ளவர்கள். தான் விரும்பியது சரியா தவறா என்று சிந்திக்காமல் அதை அடைய முயற்சிப்பவர்கள். எப்படியேனும் பொருள் ஈட்டி, பிறரை அடக்கியாள விரும்புபவர்கள். புகழை விரும்பி தானதர்மம் செய்பவர்கள். ஆத்திரப்பட்டு எதனையும் செய்துவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படுபவர்கள். அவசரப்பட்டுத் தவறான முடிவை எடுத்துவிட்டுத் தோல்வியைச் சந்திப்பவர்கள்.

நான்காம் பாதம்:

இதன் தலைவர் குருபகவான். இவர்களிடம் பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பிறருக்கு சேவை செய்யும் ஆர்வம் உள்ளவர்கள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கிலும் நாட்டம் உள்ளவர்கள்.

ஆரூடம் அறிவோம்: 25

புனர்பூசம்;

இதனை புனர்வஸு என்றும் சொல்வார்கள். 'புனர்’ என்றால் 'மீண்டும்’ என்று பொருள். 'வஸு’ என்பது 'சிறப்பு’ அல்லது 'நல்லது’ என்பதைக் குறிக்கும். 'மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள். பகவான் ஸ்ரீவிஷ்ணு ராமனாக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான குணங்கள்:

தெளிவான அறிவு, பற்று, பாசம், நேர்மை, நியாய உணர்வு, தயாள குணம், பொறுமை போன்ற உயரிய குணங்கள் இவர்களுக்கு உரியது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவர்கள். பிறர் நலம் நாடுபவர்கள். ஆன்மிகத் துறையிலும், பொதுச் சேவையிலும் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் இந்த நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.

முதல் பாதம்:

இதன் தலைவர் செவ்வாய். பாசமும் கோபமும் இவர்களது சுபாவமாக அமையும். ஒழுக்கம் உள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள். பிறரோடு உரையாடுவதில் சமர்த்தர்கள்.

இரண்டாம் பாதம்:

சுக்கிரன் ஆளும் இந்தப் பாதத்துக்கு உரியவர்கள் சுக போகங்களை விரும்புபவர்கள். பிறர் நலத்தில் நாட்டம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

மூன்றாம் பாதம்:

புனர்பூசம் 3-ம் பாதம் புதனுக்கு உரியது. இதில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு, ஒழுக்கம், தெய்வ பக்தி, சேவை செய்யும் மனப்பான்மை போன்ற உயர்ந்த குணமுடையவர்கள். நீண்ட ஆயுள் இருந்தாலும், எப்போதும் உடல் நலக் குறைவும், மன இறுக்கமும் இருக்கும்.

நான்காம் பாதம்:

சந்திரன் இதன் அதிபதி. வாழ்க்கைத் தேவைகளில் விருப்பமும் ஆசையும் கொண்டவர்கள். நல்ல தோற்றமும் அழகும் உள்ளவர்கள். அறிவைப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவர்கள்.

ஆரூடம் அறிவோம்: 25

பூசம்;

இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் 'புஷ்டி’ என்றால் 'பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று!

பொதுவான குணங்கள்:

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள். புத்திக்கூர்மை உள்ளவர்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியவர்கள். சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். அடக்கமானவர்கள். அதே நேரம், ஆத்திரமும் கோபமும் உள்ளவர்கள்.

முதல் பாதம்:

சூரிய பகவான் இதன் அம்சம். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல், கொள்கைப் பிடிப்பு, நியாய உணர்வு, நேர்மை, ஒழுக்கம் ஆகிய இயல்புகள் உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்பு, வித்தியாசமாகச் சிந்திக்கும் திறமை, கலையுணர்வு ஆகியவையும் உள்ளவர்கள்.

இரண்டாம் பாதம்:

இதனை ஆள்பவர் புதன். அழகிய தோற்றம், அன்பு, பண்பு, வைராக்யம், ஆசை, பாசம் உள்ளவர்கள். கோபமும் குணமும் சேர்ந்திருப்பவர்கள்.

மூன்றாம் பாதம்:

சுக்கிரன் இதன் அதிபதி. பிடிவாதம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், கடுமையான உழைப்பு, பிறரை வழிநடத்திச் செல்லும் ஆற்றல், ஆன்மிகத்தில் ஈடுபாடு, தெய்வ பக்தி ஆகியவை இவர்களின் குணங்கள்.

நான்காம் பாதம்:

செவ்வாயின் ஆட்சி அமைபவர்கள். பேராசை, பொருளீட்டுவதில் ஆர்வம், சுகபோகங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். தாங்கள் ஜெயிப்பதற்காகத் தவறான வழிகளையும் பயன்படுத்தக்கூடியவர்கள்; சுயநலவாதிகள்.

ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்...