Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26

விபத்துகளை விலக்கும் ரதபந்த வழிபாடுகே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26

விபத்துகளை விலக்கும் ரதபந்த வழிபாடுகே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:

னிதர்களுக்கு இருக்கும் யோகங்களில் வாகன யோகமும் ஒன்று. பொருள் ஈட்டுவதற்கு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வாகனங்கள் இன்றைக்கு அவசியமானதாகிவிட்டன.

வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்களும் சர்வசாதாரணமாகிவிட்டன. சாலை விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஒரு யந்திர வழிபாட்டை நமக்காக வகுத்துத் தந்திருக்கிறார். அதுதான் ரதபந்த வழிபாடு.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரதபந்த ஸ்தாபனம் செய்யும் முறை:

ரதபந்தம் என்கிற தேர் போன்ற வடிவத்தை, சுத்தமான செப்புத் தகட்டில் வரைந்துகொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று முருகன் திருவுருவப் படத்தை அலங்கரித்து, அதன் எதிரில் ரதபந்த யந்திரத்தை வைத்து, முருகப் பெருமானுடைய சக்தி வாய்ந்த மந்திரமான குமாரஸ்தவத்தினை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். அடுத்து, முருகனது மூலமந்திரத்தை ஆறு முறை ஜபம் செய்ய வேண்டும். பின்பு, ரதபந்தத் துதியை மூன்று முறை ஜெபித்து, நமது வாகனத்தைச் சுத்தம் செய்து, பூ சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து, தூபதீபம் காட்ட வேண்டும். பிறகு, யந்திரத்தை வாகனத்தின் முன்பகுதியில் சான்றிதழ்கள் (லைசென்ஸ்) வைக்கும் இடத்தில் வைத்து, மீண்டும் ரதபந்தத் துதியை மூன்று முறை கூறவேண்டும்.

பூஜையின்போது தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம் படைத்துக் கற்பூர ஆரத்தி செய்தல் அவசியம். மிகப்பெரிய கனரக வாகனங்களை வைத்து போக்குவரத்துத் தொழில் செய்பவர்கள், விபத்துக் காப்பு யந்திர வழிபாட்டைத் தங்களது ஜென்ம நட்சத்திர நாள் அல்லாத தினங்களில் செய்வதோடு, ஆண்டுக்கு ஒருமுறை யக்ஞ வழிபாடு நடத்தி விபத்துக் காப்புமுறை செய்துகொள்வதும் நலன் தரும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26

விபத்துக் காப்பு யந்திர முறை செய்தல்:

பஞ்சாங்க சுத்தியுள்ள வெள்ளிக்கிழமை அன்று அம்மன் சந்நிதியில் விபத்துக் காப்பு யந்திரத்தைச் செப்புத் தகட்டில் வரைந்து வைத்து, உளுந்து வடையும் தயிர் சாதமும் படைத்து, தூபதீப நிவேதனம் செய்து, ஆரத்தி செய்த பிறகு, ஒரு மண்டல காலத்துக்கு இந்த மந்திரத்தை ஜெபம் செய்து வழிபட வேண்டும். பின்பு, வாகனங்களிலோ தொழிற்கூடத்தின் ஈசான்ய மூலையிலோ இந்த யந்திரத்தைப் பதித்துவிட்டு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சாம்பிராணி மற்றும் குங்கிலிய தீபம் இட்டு வர வேண்டும்.

சூலேன பாஹி தோதேவி பாஹி
கட்கேன சாம்பிகே; கண்டா ஸ்வப்னேன: பாஹி
சாபஸ்ய நிஸ்வனே சை:

பொதுவாக, ரதபந்தத்தை செவ்வாய் தசையிலும், விபத்துக் காப்பை ராகு தசை காலத்திலும், புதன் தசை சனிபுக்திக் காலத்திலும் செய்து வைத்து வழிபடுவது அவசியம்.

ரதபந்தத்தை வாகனங்களில் ஸ்தாபனம் செய்யும்போதும், விபத்துக் காப்பு யந்திரத்தை வைக்கும்போதும் அப்பர் சுவாமிகளின் விபத்துக்களிலிருந்து காக்கும் நமச்சிவாயப் பதிகங்களை மூன்று முறை சொல்லுவது நல்லது.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
புண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல் கீழ்க் கிடக்கினும் மருளின் நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நவச்சிவாயவே!

வெந்தநீர் அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே!

சலம் இவன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்
நலம் இவன் நாள்தொறும் நல்குவான் அவன்
குலம் இவர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் ஆரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே!

ஜோதிடரீதியாக வாகன விபத்துக் காப்பு தேவைப்படும் காலங்கள்:

சனிதசை நடக்கும் காலங்களில் ராகு- கேது செவ்வாய் புக்தி, ராகு தசையில் கேது, சனிபுக்தி, கேது தசையில் செவ்வாய், புதன் ராகு புக்திகளில் வாகனங்களைச் செலுத்துவதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

1. பிருகத் ஜாதக நூல் மரணயோக அத்தியாயம் முதல் செய்யுளில், உதய லக்னத்துக்கு 8-ல் சூரியன் இருந்தால், விபத்தின் வழியாகச் சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், எட்டுக்கு உடையவர் அதிபலம் பெறுவதால் அடிக்கடி கண்டங்கள் மற்றும் அது தொடர்பான இடர்கள் வரலாம். 4-க்கு உடையவர் மற்றும் செவ்வாய், சேர்க்கையாகி பலம் பெற்றிருந்தால், வாகனங்களை இழக்கும் அளவுக்கு விபத்து ஏற்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

2. ராகு தசையில் சனி புக்தி நடக்கும்போது எதிர்பாராத வாகன விபத்தும், மருத்துவச் செலவுகளும் ஏற்படக் கூடும்.

3. ராகு- கேது, செவ்வாய், சனி, பலம் இல்லாத சந்திரன், பாவரோடு கூடிய புதன் ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும் சேரும்போதும், துர்ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போதும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

4. நம் வாழ்நாளில் அக்னி மாருத யோகம் எனப்படுகிற துர்யோகம் ஏற்பட்டாலும், ஜாதகத்தில் அந்த அமைப்பு இருந்தாலும் விபத்துகளால் ஊனம், உயிரிழப்புகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது சனி, ராகு, செவ்வாய், கேது ஆகியோர்  1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களில் இருக்கும்போதும், இரு அசுபர்கள் பார்வையிடுகிறபோதும், பாவர் வீட்டில் சேரும்போதும் கவனமாக அதற்குண்டான பரிகாரங்களைச் செய்தல் வேண்டும்.

5. லக்னத்தில் சூரியனும், எட்டாமிடத்தில் செவ்வாயும் அமர்ந்திருக்கையில், தேய்பிறைச் சந்திரனும் ராகுவும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான விபத்தைச் சந்திக்கக்கூடும். லக்னத்தில் ராகு அல்லது கேதுவோடு சனி, சூரியன் சேர்ந்தால் பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடலாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26

6. ஏழாமிடத்தில் கேது தனித்திருந்தால் நீர்வழிப் பயணத்திலும் வான்வழிப் பயணத்திலும் சில இடையூறுகள், உடல் நலம் குறித்த வகையில் உண்டாகலாம்.

7. நான்காம் இடத்தில் செவ்வாய் இருக்க, அது அவரது சொந்த வீடாக இல்லாவிட்டால், அந்த ஜாதகர் விபத்துகள் மூலமாகச் சில பொருள் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.

8. சூரியதசை நடந்துகொண்டிருக்கும்போது சனி புக்தி வந்தால் சில வாகன விபத்துகள் நேரலாம் என்று அடிப்படை ஜோதிட விதிகள் கூறுகின்றன.

விபத்துகளைத் தவிர்க்கலாமே!

ராகு காலம், எமகண்டம், மரணயோகம், கிரஹண காலம், அசுபரது ஹோரைகள் ஆகியவற்றைக் கவனிக்காமல், காலை நேரத்தில் வண்டியைப் பிடிக்க அவசரகதியில் மக்கள் பறக்கின்றனர். முன்னரே புறப்பட்டு மெதுவாகச் சென்றால், விபத்துக்களைத் தவிர்க்கலாம் அல்லவா?

வியாழக்கிழமை மதியம் 3.30-க்கு ரயில் புறப்படும் என்றால், 2.30 மணிக்கு ராகு காலத்தில் வீட்டை விட்டுப் புறப்பட முடியாது. 1 மணிக்கே புறப்பட்டாலும், ரயில்வே ஸ்டேஷனில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும். அதற்காக, எளிய பரிகார விதி ஒன்றை முற்காலத்தில் கடைப்பிடித்தார்கள். இதற்கு 'பரஸ்தானம்’ வைத்தல் என்று பெயர். அதாவது, 1.15 மணிக்குப் பக்கத்து வீட்டு வாசற்படி அருகில் சில பைகளைக் கொண்டு போய் வைத்துவிட்டு, 2.45 மணிக்கு கழிவிடை நேரத்தில் தயிர், வெல்லம் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவார்கள்.

அதுபோலவே, மணமகள் திருமண மண்டபத்துக்குச் செல்லும் தினம் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால், 4 1/2 - 6 மணி ராகு காலமாகும். அப்போது 4 மணிக்கு யாத்ரா தானம் என்ற வழிபாட்டை(பரிகார முறையை)ச் செய்துவிட்டு, 5.45 மணிக்குப் புறப்படுவார்கள். அவசரத்தையும் வேகத்தையும் விடுத்து, நிதானமாகச் சென்றால், ஆபத்துக்களைத் தவிர்த்து, ஆனந்த வாழ்வைப் பெறலாம்.

ரதபந்தத்தில் உள்ள செய்யுள்:

இருள்பொரு தாவம்பலச் சித்தென்னு முருகா
நீடிரு வண்ணோர் தேடு மருந்தே மாண்
பொரு வாச்சீர் தேசுதருஞ் செந்தி
நறுந் தீர்த்த விறலோங்கு சிதவா
சிறந்த மாவன் பருள்

- வழிபடுவோம்