சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

குரு சந்திர யோகம்

குரு பிரம்மா... ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

குரு சந்திர யோகம்

குருவின் அருளாலே குற்றமெல்லாம் போகும்
மருள் நீங்கி மாட்சியே ஓங்கும்
சுரகுருவே உம்மைப் பணிந்தேன் இனி ஓர்
பாவமும் சூழாது எம்மைக் காப்பாய் நீயே!

வக்கிரகங்களில் தெய்விக அறிவுக்கும், வேதாந்த ஞானத்துக்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்பொருளானவரும், தேவர்களின் குருவும், சகல சாஸ்திரங்களின் மூலமும், சதுர பீடம் உடையவரும், 'பீதாம்பரர், லோக பூஜ்யர்’ என்று பலரால் வர்ணிக்கப்படும் பல பெருமைகளைக் கொண்டவருமான குருபகவான், மற்ற கிரகங்களைவிட சக்தி வாய்ந்தவர்.

'குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்றும், 'குருவின் அருட்பார்வை கோடி நன்மை அருளும்’ என்றும் போற்றப்படும் குருபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் குபேர சம்பத்தைப் பெற்று, உலகோர் போற்றும் உயர்ந்த அந்தஸ்துடன், நேர்மையுடனும் புகழுடனும் வாழ்வார்.

ஆன்மிகரீதியிலான முன்னேற்றம்கூட குருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். மற்ற கிரகங்களின் நிலை சற்று ஏறத்தாழ இருப்பினும், மனித உடலில் இதயத்தின் சொந்தக்காரரான குருபகவான் உச்சம் (அ) ஆட்சி என்னும் நல்ல நிலையில் அமையப் பெறுவாராயின், ஜாதகர் நிலை உயர்வது உறுதி!

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து நிற்கும் குருபகவான், நவக்கிரகங்களில் அளவிடற்கரிய ஒளி வீசிப் பிரகாசிக்கும் தன்மை கொண்டவர்; தன்னிகரற்றவர். பிரம்ம ஞானத்தை உணர்ந்த ஞானிகளையும் பக்தர்களையும் மேதைகளையும் உருவாக்கியவர். சாத்விக குணமும், மந்தகாசமான முகமும்கொண்ட குருபகவான், மங்கல நிகழ்வுகளின் கர்த்தாவும் ஆவார். நல்ல நண்பர்களின் சேர்க்கையை அருள்பவரும் குருபகவான்தான்.

குரு சந்திர யோகம்

லக்னத்தை குரு பார்ப்பின் ஆயுள் தீர்க்கம்; வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பின் முதல் மாணவன்; ஜீவனத்துக்கும் குருவே காரகன்; திருமணத்துக்கும் குரு பலமே பிரதானம் என இவர் பெருமைகள் அதிகம். எனவேதான், இவர் பிரகஸ்பதி, பொன்னன், தனகாரகர், வாகீசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஜாதகத்தில் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்க வல்லவர். கிரகங்களில் இவர் ஆண் கிரகம். பஞ்ச பூதங்களில் இவர் ஆகாயம். வடகிழக்குத் திசையில் சஞ்சாரம் செய்யும் சுப கிரகமான குரு, பகலில் பலம் மிகுந்த தன் சுப பார்வையினால் இதர கிரகங்களுக்கும் பலம் அளிப்பார்.

மனோகாரகனும், மனித உடலில் முகம், வயிறு இவற்றின் அதிபதியும், இறைவனின் இரண்டு கண்களில் ஒருவருமான சந்திரன், இவருக்கு மிகவும் பிரியமானவர். இவர் தனித்து நின்று பலன் அளிப்பதைவிட சில கிரகங்களுடன் சேரும்போது மிகப் பெரும் யோகம் கூடும்.

சந்திரன், குரு இருவரும் சேர்ந்திருப்பது 'குரு சந்திர யோகம்’ எனப்படும். இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெறுபவர்கள் பேரும் புகழும், தாயின் முழு அன்பும் பெறுபவர்கள் ஆவார்கள்.

குரு பகவான் தான் அமர்ந்த ஸ்தானத்தில் இருந்து பலன் அளிப்பதைக் காட்டிலும், இவரின் பார்வைக்கு பலம் அதிகம். இவர் 5, 7, 9 என, தான் அமர்ந்த இடத்தில் இருந்து கிரகங்களைப் பார்வையிடும்போது, மிகப் பெரிய யோகம் தரவல்லவர்.

உதாரணமாக, ஒருவர் மீன லக்னம் எனக் கொள்வோம். மீனத்தில் குரு ஆட்சி பெற்று, 5-ம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமைய, குருவின் பார்வை பெற்று குரு சந்திர யோகமாகி, ஜாதகர் உன்னத நிலையை அடைவார். 7-ம் பார்வையும், 9- ம் பார்வையும் அமையப் பெற்றவர்கள் சாதனையாளர்களாய்த் திகழ்வார்கள். அதுபோன்றே, குரு தசையில் சந்திர புக்தியில் (சுப ஆதிபத்யம்) பெற்றிருப்பின் ஜாதகருக்கு பிரபல யோகம் வந்து சேரும். அதை விளக்கும் பாடல் வரிகள்:

குரு சந்திர யோகம்

நின்றதோர் குருவில் இந்து
நேர் பதினாறு மாதம்
நடைபெறும் காலம் ஜாதகர்
சொற்புகழ் யோகவான்
சுந்தர வதனம் உளான்,
    வெள்ளி நற் சிவிகை முத்து
வெண்குடை பணிகள்
உண்டாம், நன்று நல்
மனையாள் மைந்தன், அற்புத
பூமியும் சேர்த்து
இவ் அவனியில்
வாழ்வார்தாமே.

சந்திர மகாதசையில் குருபுக்தியில் நற் பலன்கள் அபரிமிதமாய் வந்து சேரும்.

சந்திரனுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 என்னும் இடங்களில் அமைவது கஜகேசரி யோகம் எனப்படும். இதன் பலனாக செல்வாக்கும், நற்பெயரும், புகழும், பகைவர்களை வெல்லும் திறமும் ஜாதகர் பெற்றிருப்பதுடன், ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருப்பினும் அவையும் பகலவனைக் கண்ட பனி போல் குருவின் அருளால் நீங்கும்.

பஞ்ச பூதங்களில் அப்பு கிரகமும், ஜலப் பிரதேசங்களை ஆள்பவரும், ரத்தினங்களில் முத்து ஆபரணம், சங்கு, வெண்கலம் ஆகியவற்றின் அதிபதியும், சாம்பிராணி தூபப் பிரியரும், உப்பின் சுவை கொண்டவருமான சந்திரன், பார்வதிதேவியை அதிதேவதையாகக் கொண்டவர். இவரே நோயற்ற வாழ்வுக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் துணை புரிபவர். இவர் குருவுடன் இணையும்போதும், அவரின் பார்வையைப் பெறும்போதும், பெரும் பலன்களை அள்ளித் தருவார்.

விதியை மாற்றும் வல்லமை படைத்தவர் குரு பகவான். மற்றவர்கள் பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு வெற்றியையும், வாழ்வில் ஏற்படும் சஞ்சலத்தைத் தீர்த்து, சந்தோஷத்தையும் அளிப்பதில் குருவே வல்லவர். குருவின் வீடான தனுசு, மீனம் இரு ராசிகளில் சந்திர பகவான் இருப்பின், நற்பலன்கள் கிட்டும். இவ்விரு ராசியில் குருவும் நிற்பின் பிரபல யோகம்.

சந்திரனுக்கு 2-ல் குரு நிற்பின் சுனபா யோகம், 12-ல் நிற்பின் அனபா யோகம் என்பர். ஜாதகரை தன் சுய முயற்சியினால் வாழ்வில் வெற்றியடைய வைப்பார். கடகத்தில் குரு  உச்சம் பெறுவதால், கடல் கடந்து செல்லும் பாக்கியம் கிட்டும். வாக்கு வன்மையும், புத்ர சுகமும் உண்டாகும். ஜாதகத்தில்  குரு மற்றும் சந்திர பலம் இல்லாத அன்பர்கள் கவலை கொள்ள வேண்டாம். மனத்தூய்மையோடு குரு மற்றும் சந்திர பகவானின் பாதம் பணிந்து வேண்டினால், நம் வாழ்விலும் சலனங்களை நீக்கி, சந்தோஷத்தை அருள்வார்கள்.