சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-27கே.குமார சிவாச்சாரியார்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்! அதனால்தான், திருமண விஷயத்தைப் பொறுத்தவரை பெண்ணைப் பெற்றவர்களும் சரி, பிள்ளையைப் பெற்றவர்களும் சரி... நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தங்கள் மகளுக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லையே என்று பெற்றோர் தவிக்கும் நிலை மாறி, தங்கள் மகனுக்குத் தகுந்த பெண் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிற காலம் நடந்து கொண்டிருக்கிறது. மகனுக்கு வயது கூடிக்கொண்டே போவதைப் பற்றிக் கவலைப்படாமல், தகுதியான பெண்ணைத் தேடுவதிலேயே காலத்தைக் கடத்திவிடுகிறார்கள் பெற்றோர்.

திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..!

ஒரு ஆணின் லக்னத்தை வைத்து, திருமண யோகம் என்கிற குருவின் பர்யாய காலம் எந்த வயதில் வரும் என்பதை அறிந்து, அதற்குள் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட வேண்டும்.

ஆண்களுக்குத் திருமணத் தடையை விலக்குகிற கந்தர்வராஜ வழிபாடு என்னும் எளிய பூஜை முறையை இங்கே விவரிக்கும் முன், உங்களிடம் ஒரு சில வார்த்தைகள்... காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், பருவத்தே பயிர் செய் என்கிற பொன்மொழிகளின்படி, உரிய காலத்தில் அமைகிற வரனை ஏற்பது நல்லது.குரு பலன் கிடைக்கும் வயதுக் கிரமங்கள்: குரு, மங்களனாகிய செவ்வாய், களத்திரனாகிய சுக்கிரன், லக்னாதிபதி, களத்திரஸ்தான அதிபதி ஆகியோரின் ஸ்தான அமைப்பைப் பொறுத்து, உத்தேசமான விவாக கால வயதுக் கிரமம், இங்கே 12 ராசிகளுக்கும் சிறு பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். குருவின் சுற்று மூன்று முறைகள் எடுத்துக் கொள்ளும்.

மேஷம் 23 - 27-1/2 - 32

ரிஷபம் 24 - 28 - 31

மிதுனம் 25 - 27-1/2 - 30

திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..!

கடகம் 24 - 28 - 32

சிம்மம் 24 - 27 - 32

கன்னி 25 - 29 - 33

துலாம் 25 - 27 - 30

விருச்சிகம் 26 - 27-1/2 - 30

தனுசு 26 - 29 - 30

மகரம் 22 - 27-1/2 - 31

கும்பம் 22 - 28 - 33

மீனம் 25 - 27 - 30

பொதுவாக ஆண் ஜாதகத்தில் திருமண யோகம் தடைப்படுவதற்கான சில கிரக நிலைகளைக் காண முடிகிறது.

1. லக்னம் அல்லது ராசியை பாவ கிரகங்கள் பார்த்தாலும், லக்னாதிபதி மற்றும் ராசிக்கு உரிய அதிபதியைப் பாவர்கள் பார்வை இட்டாலும் திருமணமாகப் பல ஆண்டுகள் ஆகிவிடலாம்.

2. ஜாதகரின் லக்னத்துக்கு 7, 3-ல் பாவர்கள் அமர்ந்து, 7-க்கு உடையவரோ 3-க்கு உடையவரோ நீசமாகி இருந்தால், திருமணத்தடை உண்டாகும். லக்னத்துக்கு இரண்டுக்கு உடையவரோடு சனி, ராகு, கேது சேர்ந்திருப்பின், திருமணத்தடை வரக்கூடும்.

3. ஒரு ஜாதகருக்கு ஏழாம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை சாரமாகி, பாபர்கள் 7-ம் இடத்தைப் பார்வையிட்டு, சுக்கிரன் கெட்டுவிட்டால், திருமணம் என்ற மங்கள வைபவம் கனவாகவே இருக்கும் என்கிறது ஜோதிடவிதி.

திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..!

4. லக்னத்தில் ராகு அமர்ந்து 4-ல் 6, 7, 8, 12-ம் அதிபதிகள் இருந்தால், திருமணம் தாமதப்படுகிறது. தூமா என்ற உபகிரகம் லக்னம் அல்லது சந்திரனுக்கு 7-ல் இருந்தாலும், திருமணம் நடைபெறாத நிலை உருவாகும்.

5. பொதுவாக, 2-ம் பாவம் பாதிக்கப் படுமானால், குடும்பம் அமைவதற்குத் தாமதம் ஆகிறது. 12-ம் பாவமும் பாதிப்பு அடைந்தால், வாழ்க்கையில் சயன சுகம் பெற இயலாத நிலை உருவாகிறது.

6. ஏழாம் அதிபதி சூரியனாக இருந்து, 4-ல் 4-ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், சுக்கிரன் நவாம்சையில் உச்சம் பெற்றிருந்தாலும், வசதி, வாய்ப்புகள், உத்தியோகம் இருப்பினும் திருமணத் தடை உண்டாகும்.

7. நவாம்சையில் 7-ம் அதிபதி உச்சம் பெற்றிருந்து, லக்னத்தில் இரண்டு வக்கிரம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும், 7-ம் பாவத்தைப் பார்த்தாலும், திருமணம் கனவாகிவிடலாம்.

8. சுக்கிரனும் 2-ம் அதிபதி அல்லது 7-ம் அதிபதி வக்கிரமாகி அல்லது நீசமாகி அல்லது அஸ்தமனம் பெற்ற கிரகங்களின் நட்சத்திரத்தில் இருப்பின், 32 வயது வரை திருமணக் காலம் வருவது கடினம்.

9. புனர்பூ யோகம் என்ற அமைப்பைத் தருவது சனி பகவான்தான். அதாவது, சனியின் பார்வை சந்திரனுக்கும் லக்னத்துக்கும் ஏற்படுவதாலும், இருவரும் 8-1/2 பாகைக்குள் சேர்வதாலும், சனி சந்திரனின் உப, உபசய நட்சத்திரத்தில் இருந்தாலும், சந்திரன் சனியின் உப உபசய நட்சத்திரத்தில் இருப்பினும், புனர்பூ யோகமான அவயோக நிலையைத் தருகிறது. இதுவும் திருமணத் தடைக்குக் காரணமாகும்.

10. முக்கிய கிரக நிலைகளான லக்னத்திலோ, 2-ம் இடத்திலோ, 7-ம் இடத்திலோ, 8-ம் இடத்திலோ, 12-ம் இடத்திலோ ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருப்பினும், 3, 7, 9-ல் அசுபர்கள் இருப்பினும், லக்னத்துக்கு 7-க்குடைய கிரகம் 6, 8, 12-ல் மறைந்திடினும், அசுபர் சேர்ந்தாலும், திருமணம் தடையாகி நிற்கும்.

11. பொது விதியாகக் காண்கையில், லக்னம் அல்லது ராசியை பாப கிரகங்கள் பார்த்தாலும், லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதியைப் பாவர் பார்த்தாலும், திருமணம் தாமதமாகும்.

இனி, கந்தர்வராஜ வழிபாடு குறித்து அறிவோம். ஆணுக்குத் தாரா பலன் உள்ள சுப நாளில் இல்லத்திலோ, ஆலயத்திலோ, அக்னி வழிபாட்டுடன் இதைச் செய்யும் ஆண்களுக்கு ஆறு மாத காலத்துக்குள் திருமணம் கூடிவிடும்.

கந்தர்வராஜ பிரயோகம் என்பது ஸ்ரீசித்திரசேன கந்தர்வராஜனைக் குறித்து சங்கல்பம் செய்துகொண்டு, தாமிரத் தகட்டில் ரட்சா யந்த்ர வரைவு செய்து வைத்து, பூஜிப்பதாகும்.

முதலில், தசாபுக்திக்கு உரிய கிரக பூஜை, விச்சின்ன அக்னி சந்தான பூஜை ஆகியவற்றை விநாயகர் வழிபாட்டுடன் செய்துவிட வேண்டும். ஆண் தன் கழுத்தில் மாலை அணிந்துகொண்டு இவற்றைச் செய்ய வேண்டும்.

பூஜை முறை: சிவப்பு நிறப் பட்டு சாற்றிய கலச கும்பத்தில் கந்தர்வராஜனை ஆவாகனம் செய்து, மலர்கள் சாற்ற வேண்டும்.

ஓம் கந்தர்வாய நம:
ஸ்ரீம் சுகந்த ப்ரியாய நம:
க்லீம் பாச ரூபாய நம:
ஸாம் தோஷ நிவர்த்தகாய நம:
வம் வரப்ரியாய நம:
யம் யக்ஷராஜாய நம:
ரம் ரம்ய காந்தாய நம:
ராம் ராஜ்ய ப்ரியாய நம:
ஓம் கம் ஜனத்திரவராய நம:
கிம் கிருஷ்ணாய நம:
சம் சந்த்ராய நம:
சௌம் சௌக்ய ப்ரதாய நம:
லம் லாஸ்யப்ரியாய நம:
யூம் யோக நாதாய நம:
க்ரீம் கல்யாண ரூபாய நம:
ச்ரௌம் சதிபதி சௌக்யவராய நம:
ஸ்ரீம் - கம் - சௌம் கந்தர்வராஜ மூர்த்தயே நம:

அர்ச்சித்த பிறகு, கலசத்துக்கு தூப- தீப நிவேதனம் (பால் பாயசம், தேங்காய், பழம், தாம்பூலம்) செய்து, கைகளில் மலர்கள் எடுத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

காந்தம் கமலாசனஸ்தம் பரிபாலன ரூபம்
பரிசேவ்யமானம் வகந்தம் கட்கம் கமலகேசம்
தேவ சாந்நித்ய ரூபம் நாணாலங்கார பூஷிதம்
நளின காந்திம் சமஸ்தம் த்யாயேத் சித்திதம்
புருஷத்வ அனுக்ரஹம் கந்தர்வராஜம் நமாமி (3 முறை)

திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..!

அடுத்து, ஆரத்தி. அப்போது

ஓம் கந்தர்வராஜாய வித்மஹே
களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி
தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத்

- என்ற காயத்ரி சொல்லவும்.

எதிரில், 9 செங்கற்களால் அக்னி மேடை அமைத்து, யாகக் கூட்டுப் பொருட்களால் எளிமையாக யாகம்  செய்து, கலச நீரை ஆண் தன் தலையில் ஊற்றி, ஸ்நானம் செய்ய வேண்டும்.

மேலும், கீழ்க்காணும் மந்திரங்களையும் ஒரு நாளைக்கு 32 தடவை ஜபித்தாலும் பலன் கிடைக்கும்.

1. ஓம் விவஸ்வாஸாய, தயாசிந்தாய, பூவித சிக்ரவராய, யக்ஷராஜாய, விவாஹ ஸித்திப்ரதாய, வதூவர தோஷ ஸம்ஹராய, ஸர்வதோஷான் விஸர்ஜயாய, ஸர்வ க்ரஹான் அனுகூல ஸித்திதாய, உத்வாக லாபகராய கம், காம், சௌம் ஸ்ரீம் கந்தர்வராஜ பரப்ரம்மாய ஸ்வாஹா!

2. ஓம் நம: கந்தர்வராஜாய ஹூம்பட் ஸ்வாஹா

  ஓம் நமோ பகவதே கந்தர்வ ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா!

இந்த வழிபாட்டில் ஒரு தேவ ரகசியம் உண்டு அதாவது, தசாகால கிரகத்தை முதலில் வழிபடல் வேண்டும்.

உதாரணமாக, கேது தசை நடந்தால், 'ராகுர் மந்த: கவிர் ஜீவ: புதா பௌம சசீரவி:’ என்றும், புதன் தசை நடந்தால், 'காமஹா காமருக்ருத காந்த: காம: காமப்ரத ப்ரபு:’ என்றும், சூரிய தசை நடந்தால், 'வரோ வராப்ஹோ வரதோ வரேண்ய சாம ஹாஸ்வந:’ என்றும் 16 முறை ஜபித்துவிட்டுத் தொடங்கினால், தசாகால கிரக ப்ரீதி ஆகி, வழிபாடு பரிபூரண பலன் தரும்.

- வழிபடுவோம்