சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆரூடம் அறிவோம்: 26

ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: தமிழ்

சென்ற அத்தியாயங்களில் அசுவினி முதல் பூசம் வரையிலான நட்சத்திரங்களையும், அவற்றின் குணாதிசயங்கள் குறித்தும் பார்த்தோம். தொடர்ந்து அடுத்தடுத்த நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆரூடம் அறிவோம்: 26

ஆயில்யம்;

பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை 'நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான குணங்கள்:

திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம் வாழ நினைப்பவர்கள். தாங்கள் விரும்பியதை அடைய முயல்பவர்கள். கடுமையான சொல் பேசுபவர்கள். மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்.

ஆரூடம் அறிவோம்: 26

முதல் பாதம்:

இது குருவின் அம்சம். தைரியசாலிகள். புத்திக்கூர்மையும், ஆராய்ச்சி செய்து புதியன கண்டுபிடிப்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். கோபமும் இருக்கும்; குணமும் இருக்கும். புகழ்ச்சியை விரும்புபவர்கள்.

இரண்டாம் பாதம்:

இதன் அதிபதி சனி பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்காக எதையும், எப்படியும் பெற முயல்பவர்கள். அநியாயத்தையும் தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.

மூன்றாம் பாதம்:

இதன் அதிபதியும் சனி பகவான்தான். இவர்கள் அடிக்கடி கோபப்படுபவர்கள். எந்த வழியிலாவது செல்வத்தை அடைய முயற்சிப்பவர்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்பவர்கள். பிறருடைய அறிவுரையைக் கேட்கமாட்டார்கள்.

நான்காம் பாதம்:

ஆரூடம் அறிவோம்: 26

இதன் அதிபதி குரு பகவான். இவர்கள் புத்திசாலிகள். ஆனால் சோம்பேறிகள். கடுமையாக உழைக்க விருப்பமில்லாதவர்கள். குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுபவர்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள்; திட்டமிடாமல் செயல்படுபவர்கள். ஆயில்யம் 4-ம் பாதத்தில் குழந்தைகள் பிறந்தால், பெற்றோர்களுக்கு ஏதாவது கஷ்டம் வரும் என்பதால், இந்த நட்சத்திரத்துக்கு உரிய 'சந்திர சாந்தி’ எனும் பூஜை செய்வது சம்பிரதாயமான பரிகாரம்.

மகம்;

இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மக நட்சத்திரக் கூட்டம். 'மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. ஒருவரது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சமாக இருக்கின்றன என்பதையும், எந்த கிரகங்கள் பகை அல்லது நீசமாக இருக்கின்றன என்பதையும் வைத்தே பலன்கள் கூற வேண்டும். மகத்தில் பிறந்து ஜகத்தை ஆண்டவர்களும் உண்டு; நாடு நகரம் துறந்து வீதிக்கு வந்து திண்டாடியவர்களும் உண்டு. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன்.

பொதுவான குணங்கள்:

கலைத்திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பமும் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்கவேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள். மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்கள். சிறந்த பேச்சாளிகள், வாதத் திறமை மிக்கவர்கள். பொருள்களிடமும் புருஷர்களிடமும் ஆசையும் பாசமும் மிக்கவர்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது.

முதல் பாதம்:

இதன் அதிபதி செவ்வாய். பூமி, நிலபுலன்கள் சேர்ப்பதில் ஆசை உள்ளவர்கள். நல்ல தோற்றம் உள்ளவர்கள். பிறரை வசீகரிக்கும் குணங்கள் உள்ளவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். சொத்து சுகங்களில் பற்றுள்ளவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

இரண்டாம் பாதம்:

இதற்கு உரிய கிரகம் சுக்கிரன். ஆசாபாசங்கள் மிகுந்தவர்கள். இரக்க குணமும், பிறருக்கு உதவும் தன்மையும் இவர்களிடம் இருக்கும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பற்றும் பாசமும் கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் திறமையும், ஈடுபாடும் மிக்கவர்கள். ஆத்திரம் இருக்கும். அனுதாபமும் இருக்கும்.

மூன்றாம் பாதம்:

விஷ்ணுவை அதிபதியாகக் கொண்ட புதன், இந்தப் பாதத்துக்குத் தலைவன். தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணங்களும் இருக்கும். இனிமையான இல்லறம் அல்லது பற்றில்லாத துறவறம் என்று எல்லைகளுக்கப்பால் சிந்திப்பவர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்.

நான்காம் பாதம்:

இதன் அதிபதி சந்திரன். சுயநலம் உள்ளவர்கள். கௌரவம்,  சொத்து சுகங்களை நாடுபவர்கள். பேராசை, பொறாமை, முன்கோபம் இவர்களது முக்கிய குணங்கள். ஆடம்பரத்தில் நாட்டமுள்ளவர்கள். காரியவாதிகள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்துவிடுவார்கள். எப்போதும் முதன்மை ஸ்தானத்தை விரும்புவார்கள்.

ஆரூடம் அறிவோம்: 26

பூரம்;

இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும்.

பொதுவான குணங்கள்:

நுண்கலைகளான ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில் ஈடுபாடும் திறமையும் இருக்கும். கலைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். பேராசை, புகழாசை, பொருளாசை கொண்டவர்கள். ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். தங்கள் புகழையே பேசிக்கொண்டிருப்பவர்கள். தான தர்மங்கள் செய்து அதனால் புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.

முதல் பாதம்:

இதன் அதிபதி சூரியன். திறமைசாலிகள். நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள். பேச்சுத்திறமை மிக்கவர்கள். எதையும் எதிர்த்துப் போராடி, எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். உடல் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

இரண்டாம் பாதம்:

இதன் அதிபதி புதன். நல்ல கல்வியும் திறமையும் இருந்தாலும், அடிக்கடி தோல்வியைச் சந்திப்பார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற பாகுபாடு கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவார்கள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்த்து, பிறரைச் சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

ஆரூடம் அறிவோம்: 26

மூன்றாம் பாதம்:

சுக்கிரன் இதன் அதிபதி. ஆசாபாசம் மிக்கவர்கள். ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். பேராசை மிக்கவர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தன் சுகத்தையும், முன்னேற்றத்தையும் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்.

நான்காம் பாதம்:

செவ்வாய் இதன் அதிபதி. அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள். பணத்தைச் சேர்த்த வேகத்தில் செலவழித்து விட்டுக் கஷ்டப்படுபவர்கள். திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை இருக்காது. தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, அதனால் பெயரும் புகழும் பாதிக்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் பக்தியுடன் முருகனை வழிபட்டால், துயரங்கள் நீங்கும்.

உத்திரம்;

இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன்.

பொதுவான குணங்கள்:

திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். 'தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.

முதல் பாதம்:

இந்தப் பாதத்தின் அதிபதி குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது, கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள் இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.

இரண்டாம் பாதம்:

ஆரூடம் அறிவோம்: 26

இதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும் சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள் மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள். ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.

மூன்றாம் பாதம்:

இதற்கும் அதிபதி சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும் குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம், 'தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால் விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.

நான்காம் பாதம்:

இதன் அதிபதி குரு. நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை உள்ளவர்கள்.

அஸ்தம்;

அஸ்தம் என்றால் 'உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன்.

பொதுவான குணங்கள்:

நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த தன்னம்பிக்கை இவர்களது குணாதிசயங்கள். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். 'அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்துக்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய பதவிகளைப் பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற குணச்சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத காரியத்தைச் செய்யமாட்டார்கள்.

ஆரூடம் அறிவோம்: 26

முதல் பாதம்: இது செவ்வாயின் அம்சம். பொய் புரட்டு இல்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். வீண் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். நல்லவர்கள்.

இரண்டாம் பாதம்: இது சுக்கிரனின் அம்சம். கவர்ச்சியான தோற்றத்தை விரும்புபவர்கள். சுக போகங்களில் நாட்டமுள்ளவர்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மையில் நாட்டம் மிக்கவர்கள்.

மூன்றாம் பாதம்: இதன் அதிபதி புதன். தெய்வ பக்தியும், நேர்மையான குணமும் உள்ளவர்கள். அறிவுப் பசி உள்ளவர்கள். பேச்சுத் திறமையும், வியாபாரத் திறமையும் உள்ளவர்கள். கலைத்துறையிலும் ஈடுபாடு இருக்கும்.

நான்காம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். மனத்தின் விருப்பப்படி வாழ நினைப்பவர்கள். ஆசை, பாசம், நேசம் மிக்கவர்கள். தயை, இரக்கம் உள்ளவர்கள். பகிர்ந்துண்டு வாழ்வதில் மகிழ்ச்சி பெறுபவர்கள். தலைமை தாங்கும் குணங்கள் உண்டு.

- தொடரும்...