Published:Updated:

புத்திர பாக்கியம்!

புதன்... பூர்வ புண்ணியம்ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்கும்போது ஒரு ஸ்லோகம் தவறாமல் எழுதுவர். அது...

ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்த்தனி குல ஸம்பதாம்!
பதவி பூர்வ புண்யானாம் விக்யதே ஜன்ம பத்ரிகா

இந்த ஸ்லோகத்தில் 'பூர்வ புண்ணியம்’ என்று குறிப்பிடப்படுவது, லக்னத்திலிருந்து எண்ணி வரும் 5-ம் இடமாகும். இதையே பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும், புத்திர பாவம் என்றும் ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. வேறு எந்த பாவங்களும் ஸ்தானங்களும் இப்படிச் சிறப்பித்துச் சொல்லப்படுவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புத்திர பாக்கியம்!

இந்த 5-ம் இடத்துக்கு அப்படியென்ன பெருமை?

இறைவனின் படைப்பான இந்தப் பிரபஞ்சமும், இதில் பிறந்துள்ள மனிதர்கள் உள்ளிட்ட ஜீவன்களும் பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆனவையே என்பது விஞ்ஞான உண்மை. எனவேதான், ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையினால் உருவான மனித வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க, புத்திர ஸ்தானமாக 5-ம் இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று கூறலாம்.

'அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது’ என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனிதராகப் பிறந்துவிட்டாலே முழுமையடைந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தன் பேர் சொல்ல ஒரு குழந்தை பிறந்தால்தான் பிறவியின் பயன் முழுமையடையும். ஆக, தன் பிறப்பையும், தனக்கொரு பிறப்பையும் குறிப்பிடுவதுதான் ஐந்தாம் இடமாகும்.

தன் பிறப்பு எதனால் நேர்கிறது? தான் பூர்வ ஜென்மத்தில் செய்த வினைப்பயனால்தான் பிறவியெடுக்க நேர்கிறது. அதே போல தனக்கு ஒரு வாரிசு பிறப்பதுவும், நம்முடைய முன்வினைப் பயனாலேயே நேரிடுகிறது. எனவேதான், தன் பிறப்பையும், தனக்கொரு பிறப்பையும் குறிப்பிடும் 5-ம் இடத்தை 'பூர்வ புண்ணிய ஸ்தானம்’ என்றும், 'புத்திரஸ்தானம்’ என்றும் கூறுகிறோம். தான் பிறவி எடுத்ததன் காரணத்தையும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளின் தரத்தையும் இந்த இடத்தைக் கொண்டே நிர்ணயிக்கலாம்.

'ஒருவன் செய்த செயல்களுக்கும், அவன் குழந்தையின் தரத்துக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?’ என்று கேட்பவர்களுக்காக ஒரு கதை; நம்மில் பலரும் கேட்டிருப்பதும், நடைமுறையில் சில இடங்களில் நேரடியாகக் கண்டிருப்பதுமான ஒரு கதை இது.

மனைவியின் சொல் கேட்டு, தன்னைப் பெற்ற தந்தையை மிகவும் இழிவாக நடத்தினான் ஒருவன். வயதான அவரை திண்ணையிலேயே இருக்கச் சொன்னான். ஓர் உடைந்த சட்டியில் கஞ்சியோ அல்லது பழைய சாதமோ போட்டு, அதை அவர்முன் தள்ளிவிடுவாள் அவன் மனைவி. வேறு வழியின்றி விதியை நொந்தபடி அதையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், ஒருநாள் இறந்துபோனார்.

புத்திர பாக்கியம்!

இறந்தவர் மோட்சம் செல்லவழி புலப்பட வேண்டும் என்பதற்காக பேரன் நெய்ப் பந்தம் பிடிக்கவேண்டும் என்பது ஐதீகம். எனவே, அந்தப் பெரியவரின் இறுதி ஊர்வலம் நடக்கவேண்டிய நேரத்தில், சம்பிரதாயப்படி அவருக்கு நெய்ப் பந்தம் பிடிப்பதற்கு தன்னுடைய மகனைத் தேடினான் அவன்.

அந்தச் சிறுவனோ, தாத்தா பயன்படுத்திய உடைந்துபோன அந்தச் சட்டியைப் பத்திரப்படுத்துவதில் முனைந்திருந்தான். ''இந்த ஓட்டைச் சட்டியைத் தூக்கிப் போடாம என்னடா செய்துட்டிருக்கே?'' என்று பெரியவரின் மகன் புரியாமல் கேட்க, அந்தச் சிறுவன் சொன்னானாம்... ''நான் பெரியவனானதும், உனக்கும் அம்மாவுக்கும் உணவு கொடுக்க இது எனக்கு வேணுமேப்பா?''

இனி, விஷயத்துக்கு வருவோம்.

பூர்வ புண்ணியம் என்று போற்றப்படும் புத்திர ஸ்தானம் பற்றியும், அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் அந்த ஸ்தானத்தைப் பார்வையிடும் கிரகங்கள், அவற்றால் நேரக்கூடிய விளைவுகள் பற்றியும் விளக்கமாகப் பார்ப்போம்.

உதாரணத்துக்கு, ரிஷப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். ரிஷப லக்னத்துக்கு 2-க்கும், 5-க்கும் உடையவன் புதன். அவன் தனது வீடாகிய மிதுனம் அல்லது கன்னியில் தனித்து இருந்தால், வம்ச விருத்தி அரிது!  

ரிஷப லக்னத்துக்குச் சனி பாக்கியாதிபதி; பாதகாதிபதியும் அவனே! எனவே, பாக்கியாதிபதியாக பொருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும், அவனே பாதகாதிபதியாகவும் இருப்பதால் மழலைச் செல்வத்தை வழங்கத் தவறிவிடுகிறான்.

ரிஷப லக்னத்துக்கு 2 அல்லது 5-ல் உள்ள புதனை, தனுசு அல்லது மீனத்தில் இருந்து செவ்வாய் பார்த்தால், வெளியில் இருந்து ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுக்க வழியுண்டு. அதேபோல், புதனுடன் சுக்கிரன் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ பெண் குழந்தையைத் தத்தெடுக்க வாய்ப்பு உண்டு. இப்படி எதுவும் இல்லாமலோ, பார்க்காமலோ இருப்பின், தான் எடுத்த தத்துக் குழந்தைக்கு தானே கர்மம் செய்யவேண்டியதாகிவிடும். இதைப் பற்றிச் சொல்வதற்கு 'பீஜஸ்புடம்’ என்ற கணக்கைத்தான் நாட வேண்டும்.

அடுத்தபடியாக, ரிஷப லக்னத்துக்கு இரண்டு அல்லது ஐந்தில் உள்ள புதனை குரு பார்த்தால், சற்றுக் காலதாமதமாக பிள்ளை உண்டு என்று கூறுகின்றன ஜோதிட நூல்கள்.

ரிஷப லக்னத்துக்கு 2 மற்றும் 5-க்குரிய புதனை, சனி பார்த்தால், பெண் குழந்தை மட்டுமே பிறக்கும்.

புத்திர பாக்கியம்!

ரிஷப லக்னத்துக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் புதன் மறைந்திருந்தாலும், மீனத்தில் நீசம் பெற்றிருந்தாலும், கால தாமதமாகக் குழந்தை பிறக்கும்.

'மிதுனம் அல்லது கன்னியில் புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெறுகிறார். அதனால் அவருக்கு வலிமை கூடத்தானே செய்யும்? அப்படி இருக்க, குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்தாலோ, மீனத்தில் நீச்சம் பெற்றாலோ குழந்தை பிறக்கும் என்கிறீர்களே, இது எப்படிச் சரியாகும்?’ என்று உங்களில் சிலர் கேட்கலாம்.

இதற்கான பதில், புதன் அலி கிரகம் என்பதுதான். எனவேதான், புதன் மறைந்தோ அல்லது நீசம் பெற்றோ இருக்கவேண்டியது அவசியமாகிறது. இதுவே, கடக லக்னமாகி செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால், குழந்தைச் செல்வம் கிடைப்பது உறுதி!

பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய புத்திரபாவம், ஒருவருடைய ஏழேழு தலைமுறையையும் கூறும். இந்த ஸ்தானத்தை 'பீஜஸ்புடம்’ போட்டு ஆராய்ந்து பார்த்தால், ஜாதகர் எந்தத் தலைமுறையில் (தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத் தாத்தாவாக இருந்து) மீண்டும் பிறந்திருக்கிறார் என்பதையும் கூற முடியும்.

மேலும், அந்தத் தலைமுறையில் ஏற்பட்ட பாவங்கள், அதன் விளைவான சாபங்கள் பற்றியும், அவற்றைப் போக்குவதற்கான பரிகாரங்கள் பற்றியும் உறுதிபடச் சொல்ல முடியும்.