Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29
News
வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

உங்களுக்கும் உயர் பதவி! கிரக அமைப்புகளும் இந்திர வழிபாடும்! கே.குமார சிவாச்சாரியார்

கிராமப்புறங்களில் நண்பர்கள் நான்கு பேர் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒருவர் மட்டும், 'எனக்கு வேலை இருக்கு; கிளம்புறேன்’ என்று சொன்னால், 'ஆமா, இவருக்குப் பெரிய இந்திரபதவி கொடுத்திருக்காங்க. அவசரமா கிளம்புறாரு!’ என்று கேலி செய்வார்கள். ஆனால், ஜோதிடம் என்ன சொல்கிறது தெரியுமா? பூர்வ புண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பும் நன்றாக இருந்தால், இந்திர பதவிக்கு நிகரான பதவி வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்கிறது.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

சுக்கிர யோகம்: இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் உயர்வான அரசு பதவிகள் கிடைத்து, ஏவலாட்கள் மற்றும் வாகன வசதிகளுடன் திகழ்வார்கள். எனினும், எதிலும் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் இவர்களிடம் இருக்காது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதி யோகம்: சந்திரனுக்கு 6,7,8-ல் குரு, சுக்கிரன், புதன் அமர்ந்தால், இந்த யோகம் அமையும். ஆனால், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளே இருக்கும் நிலையில்தான் பதவி உயர்வு வந்துசேரும். சில அதிகாரிகளுக்கு விசித்திரமான பதவி உயர்வு வாய்க்கும். ஓரிரு நாட்களில் ஓய்வு பெறப் போகிறவருக்கு 'சென்ட் ஆஃப்’ நிகழ்ச்சியை நடத்திமுடித்துவிட்டு, மறுநாள் காலையில், 'வாழ்த்துக்கள்! நீங்கள் பதவி உயர்வு பெற்றிருக்கிறீர்கள்’ என்பார்கள். இப்படி 'ஒரு நாள் முதல்வர்’ போல் ஓரிரு நாட்களே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலையும் இந்த யோகம் பெற்றவருக்கு அமையும்.

சமுத்திர யோகம்: 5-ல் சூரியனும் புதனும், 2-ல் சனி, 12-ல் குரு அமையப்பெற்றிருந்தால் இந்த யோகம் வாய்க்கும். இந்த ஜாதகர்களுக்கு அரசுப் பதவி பல நன்மைகளை வாரி வழங்கும்.

மேலும், மேஷம் லக்னமாகி, மேஷத்தில் சூரியனும், துலாத்தில் சந்திரனும் சனியும், தனுசில் குருவும் அமர்ந்திருந்தால், அரசாங்க பதவி உயர்வு கிடைக்கும். 12 லக்னங்களுக்கும் அமைகிற கிரக நிலைகளைப் பார்த்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளின் லாப நிலைகளை அறியமுடியும்.

மகரம் லக்னமாக இருந்து, சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்க, சூரியனும் சந்திரனும் தனுசில் அமர்ந்திருந்தால், அரசுப் பதவியில்  மேன்மேலும் உயரலாம். சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஆறு கிரகங்களின் கூட்டமைப்பைப் பொறுத்து 44 வகையான யோகங்களைக் கூறலாம்.

செவ்வாயும் சனியும் லக்னம் 5 அல்லது 10-ல் அமர்ந்திருந்திருக்க, வளர்பிறைச் சந்திரன் 9-ல் அமர்ந்திருந்தால், அரசு மற்றும் தனியார் பணிகளில் அமர்பவர்கள் பதவி உயர்வு இல்லாமல் அடிக்கடி இடமாற்றங்களுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக 2-க்கு உரியவன் பலவீனமாகி, அவனது தசை நடைபெறுகிற காலத்தில், அரசுப் பதவியில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதன் பொருட்டு வீண் செலவும் அலைச்சலுமே மிஞ்சும். ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமின்றி இருப்பவர்கள், இந்திரனை வழிபட்டு, உயர்பதவி யோகத்தைப் பெறலாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

பதவி உயர்வு தரும் இந்திர வழிபாடு...

இந்திரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த வழிபாட்டுக்கு இந்திராஸ்திர வழிபாடு, ஐந்திராஸ்திர வழிபாடு, இந்திர பூஜா என்றும் பெயர்கள் உண்டு. இந்திரனைக் குறித்த உபாசனா விதிகளின்படியும், புராண- இதிகாசங்களில் குறிப்பிட்டுள்ளபடியும் போகப்பிரியன், யோகாதிபன், சுகம் விரும்பி, மழை தரும் மேகவன், மாயையைக் கொணர்பவன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறான் இந்திரன்.

இந்திரனைக் குறித்த அஸ்திர மந்திரங்களைப் பயன்படுத்தி வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப் பணியாளர்கள் இந்த வழிபாட்டால் இனிய தகவலை விரைவில் பெறலாம்.

உங்களது பதவி உயர்வைத் தடை செய்து வைத்திருக்கும் உயர் அதிகாரிகளும் உங்களின் திறமையை உணர்ந்து, உங்களுக்கு நன்மை தரும் விதமாக பதவி உயர்வு ஆணையைக் கொடுத்துவிடுவார்கள்.

பிரமோஷன் ஃபைல் கிடப்பில் கிடப்பதால் பரிதவித்துக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கும் இந்த வழிபாடு பலன் தரும். ஆனால், கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டுப் பலனை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

குடும்பத்தில் மதிப்பு இல்லையே என வருத்தத்தில் இருப்பவர்கள் இந்த பூஜையைச் செய்வதால், இல்லத்தில் உங்கள் மதிப்பு உயரும். அரசு, தனியார் பணிகளில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் எதிர்ப்புகள் அதிகம் இருந்தால், இந்த வழிபாட்டின் மூலம் சாதகமான சூழலைப் பெறலாம்.

பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்களைத் தவிர்க்கவும் இந்த வழிபாடு ஏற்றது. இந்திராணியுடன் சேர்த்து இந்திரனை வழிபட, கணவனின் புகழ், அந்தஸ்து உயர்வதுடன் குடும்பமும் மேன்மை அடையும்.

சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்கள், குறைந்தபட்ச சௌகரியத்துடனாவது வாழ வேண்டும் என விரும்பினால், இந்த பூஜையைக் கடைப்பிடிக்கலாம்.

வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் இந்திரனுக்கு உரிய கிழக்கு திசையில்தான் குடும்ப உயர்வுக்கான சிந்தனாசக்தி பீடம் அமைந்துள்ளது. பல நன்மைகளை விரும்புவோர் இந்த இடத்தை அதிகம் பயன்படுத்தி பலன் பெறலாம். மேலும் வீட்டில் இந்திரனின் திருவுருவப் படம் வைத்து வழிபட, வி.ஐ.பி-களும் உங்கள் வீட்டுக்கு வந்து உறவாடும் வாய்ப்பு கிடைக்கும்.

எனினும், தகுந்த குருவின் மூலம் பிரயோக முறையை அறிந்து கொண்டு வழிபடுதல் அவசியம்.

இந்திர வழிபாடு செய்வது எப்படி?

முதலில், பஞ்சாங்க சுத்தம் உடைய திங்கள், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில், வளர்பிறை துவாதசியும் சேர்ந்து வரும் நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பூஜை தினத்தன்று அதிகாலையில் நீராடி முடித்து, பூஜையறையைக் கழுவிச் சுத்தம் செய்து, கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அடுத்ததாக, வெள்ளை நூல் சுற்றிய கலசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நைவேத்தியத்துக்கு சர்க்கரை அன்னம் தயார்செய்து வைக்கலாம்.

முதலில், தும்பை மற்றும் அருகம்புல்லால் அர்ச்சித்து, பிள்ளையாரை வழிபட வேண்டும். அடுத்து, நவகிரகங்களுக்கும் அவரவருக்கு உரிய தானியங்களை வைத்து, 16 உபசாரங் களுடன் பூஜிக்க வேண்டும். பின்னர், நடுநாயகமாக கலசத்தையும், எதிரில் செங்கற்களால் அக்னி மேடையையும் அமைக்கவும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

பிறகு...

ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம்
வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம்
ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி

எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் இந்திராய நம:
ஓம் மகேந்திராய நம:
ஓம் தேவேந்திராய நம:
ஓம் விருத்ராதயே நம:
ஓம் பங்கசாசநாய நம:
ஓம் ஐராவத வாகனாய நம:
ஓம் கஜாசன ரூபாய நம:
ஓம் பிடௌஜஸே நம:
ஓம் வஜ்ரபாணயே நம:
ஓம் சகஸ்ராக்ஷ£ய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சதமகாய நம:
ஓம் டிரந்தராய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் சசிபதயே நம:
ஓம் த்ரிலோகேசாய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் போகப்ரியாய நம:
ஓம் ஜகத்ப்ரபவே நம:
ஓம் இந்திரலோக வாசினே நம:
ஓம் இந்திராணி சகித இந்திர மூர்த்தியே நம:
நானாவித பரிமள மந்த்ர புஷ்பாணி சமர்ப்பயாமி!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-29

இதன் பின்னர், தூப-தீப நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்தபிறகு, அந்தத் தீபத்தை அக்னி குண்டத்தில் இட்டு, 'ஓம் இம் இந்திராய நம: அக்னேர் மத்யபாகே ப்ரவேசயோம் ஹீம் பட்’ என்று கூறி (ஹோமத்தில்) நெற்பொரி இட்டு பூஜிக்க வேண்டும்.

தொடர்ந்து, 'ஓம் ஐம் இந்திராருண்யாச சமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத் பிரபும் இந்திரம் த்யாயேத் துதேவேசம் உத்யோக பதவீம் சித்தயேத்’ என்று தியானித்து, மீண்டும் அக்னியில் நெற்பொரியைப் போட்டு,  முக்கிய மூல மந்திரங்களைச் சொல்லி... நெய், நாயுருவி, வெண்கடுகு, புரசு சமித்து, வெற்றிலை, உப்பு, நீரில் நனைத்த கொள்ளு ஆகியவற்றால் அக்னி ஹோமம் செய்து, பூரண ஆகுதியாக தாம்பூலம் இட்டு, யந்திரத்துக்கும் தூப-தீப நிவேதனம் செய்து யாகரட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்ட வேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணத்துடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும்.

இந்திர வழிபாட்டில் வெண்தாமரை மலரைப் பயன்படுத்துவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

மேலும்...

ஓம் ஐம் இம் இந்திராய சதமகாய கால சக்ராய இஷ்டிப்ரதாய
கானவிசாரதாய கோசரநிர்மூலாய ஐம் இம்இந்திராய நம:

யாக பூஜைக்கு முக்கியமான இந்த மந்திரத்தை, பூஜைகள் முடிந்த பின்னர் கிழக்கு முகமாக அமர்ந்து, 108 தடவை ஜபிக்க வேண் டும். இதுவே, ஐந்திராஸ்திர மூலமந்திரம் ஆகும். அத்துடன் இந்திர காயத்ரீயை 12 முறை கூறி, ஜபம்- பூஜைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்திர காயத்ரீ:

ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ராக்ஷ£ய தீமஹி
தந்நோ இந்திர: ப்ரசோதயாத்

தமிழ்ப் பாடல் ஒன்று...

'திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில்
தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே!''

என்கிறது. இதன்படி உரிய நன்னாளில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெறுவோம்.

- வழிபடுவோம்