ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: தமிழ்
அசுவினி முதல் விசாகம் வரையிலான நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணாதிசயங்களைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் அனுஷம், கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களை அறிவோம்.
உழைப்பால் உயர்வு தரும் அனுஷம்
வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை 'வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். உழைப்பையும் உயர்வையும் தரும் உத்தம நட்சத்திரம் இது. விருச்சிக ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் தேவதை சூரியன்; ராசி அதிபதி செவ்வாய்.
விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருஷம். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது, அனுஷத்துக்கு மற்றெல்லா நட்சத்திரங்களும் பொருந்தும் என்பார்கள். இது இந்த நட்சத்திரத்தின் தனிச்சிறப்பு.
பொதுவான குணங்கள்: பசி பொறுக்காதவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். அன்பு, பாசம், நேசம் மிகுந்தவர்கள். அதிகம் பேசமாட்டார்கள். உண்மையைப் பேசுபவர்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள். புகழ் அடைபவர்கள். வெளிநாட்டில் வாழ்வதில் விருப்பம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.

முதல் பாதம்: சூரிய ஆதிக்கம் உள்ளதால், புத்திக்கூர்மையும், வைராக்கியமும் மிகுந்திருக்கும். ஞாபக சக்தியும் உண்டு. நூலறிவு பெறுவதில் ஆர்வம் இருக்கும்.
2-ம் பாதம்: புதனின் ஆதிக்கம் உள்ளவர்கள். அழகான தோற்றமும், கலையுணர்வும் கொண்டவர்கள். அலங்காரத்தில் விருப்பமும், இசைக் கருவிகள் வாசிப்பதில் வல்லமையும் உண்டு. பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்.
3-ம் பாதம்: சுக்ர ஆதிக்கம் உள்ளவர்கள். பாசமும் நேசமும் மிகுந்தவர்கள். குடும்பப் பொறுப்புகள் அறிந்து நடப்பவர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பிறருக்கு உதவிசெய்து மகிழ்பவர்கள்.
4-ம் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். இவர்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளும், தடை-தாமதங்களும் இருக்கும். தீவிர முயற்சிக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும்.
முயற்சியால் சாதிக்கவைக்கும் கேட்டை
'கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை 'ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர்.
'கேட்டையில் பிறந்தவன் கோட்டையும் கட்டுவான்; கேட்டையும் விளைவிப்பான்’, 'கேட்டையில் பிறந்தால், சேட்டனுக்கு ஆகாது’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பழமொழி என்பது ஒருவரது அனுபவத்தில் தோன்றிய வாசகம்தான். அதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக, கேட்டை என்பது தமிழ்ச் சொல்; சேட்டன் என்பது மலையாளச் சொல். சேட்டன் என்றால், சகோதரன் என்று பொருள். எதுகை மோனையாக இருப்பதால் யாரோ, எப்போதோ உருவாக்கிய வாசகம் இது. இதையெல்லாம் உண்மையாகக் கருதி, பயப்படக்கூடாது.
விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக இருப்பதால், இதில் பிறந்தவர்கள் தங்கள் மனத்துக்குப் பிடித்ததை அவசரமாகச் செய்வார்கள். இதனால் வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் வருந்தும் சூழல் ஏற்படும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கென ஒரு வழிகாட்டியையோ குருவையோ தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்; அல்லது, சமாளிக்கலாம்.

பொதுவான குணங்கள்: இனிய சுபாவமும், அழகான தோற்றமும் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். ஏதேனும் பாதிப்பு நேரும்போது பயம், பதற்றம், கோபம் ஆகிய உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சுகபோகிகள். பாசம் இருந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். பிறரது அறிவுரையை விரும்பமாட்டார்கள்.
முதல் பாதம்: இந்த பாதத்துக்கு அதிபதி குரு. அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம் இவர்களிடம் உண்டு. நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகச் செயலாற்றி, அதனால் ஏற்படும் விளைவுகளால் வருத்தம் அடைவார்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவது இவர்கள் வழக்கம். கோபம் அதிகமாக இருக்கும். மனத்தில் பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் பிறரால் அதிகம் விரும்பப்படாதவராக இருப்பார்கள். ஆனால், இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.
2-ம் பாதம்: இதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும் தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். தேக சுகத்தை விரும்புபவர்கள். உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.
3-ம் பாதம்: இதற்கும் அதிபதி சனி பகவானே! 2-ம் பாதத்துக்கு உரியவர்களுக்கான எல்லா குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல், கலைகளில் ஈடுபாடு இருக்கும்.
4-ம் பாதம்: முதல் பாதத்தைப் போல் இவர்களுக்கும் அதிபதி குரு பகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங் களில் பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும்.
சிம்மம் போன்று சிறக்கவைக்கும் மூலம்
அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல், இதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை.
அதேபோன்று, 'மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.
பொதுவான குணங்கள்: தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். 'யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஜாதக அம்சங்கள் உயர்வாக இருந்தால், பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம் இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் உண்டு. ஆழ்ந்த தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது சிறப்பான குணங்கள். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு கேது தசை முதல் தசையாக அமையும்.
முதல் பாதம்: செவ்வாய் இதன் அதிபதி. சுதந்திரமானவர்கள். நினைத்ததைச் செய்து முடிக்க விரும்புபவர்கள். பாசமுள்ளவர்கள். வாக்கைக் காப்பாற்றுபவர்கள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.
2-ம் பாதம்: இதன் அதிபதி சுக்கிரன். எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள். கௌரவத்தை விரும்புபவர்கள். வீடு- வாகன யோகம் உள்ளவர்கள். குடும்பத்தில் பற்றுள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்; செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள். ஓவியம், இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.
3-ம் பாதம்: இதன் அதிபதி புதன். அறிவாளி, திறமைசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து பொருளீட்டுபவர்கள். தெய்வ பக்தியும் ஆன்மிகத் தேடலும் கொண்டவர்கள். நட்பு, காதல், பாசம் போன்ற சிறப்பான குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதற்கும் அஞ்சாத போராளிகள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்; சாதனையாளர்கள்; கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். புதுமை விரும்பிகள்; நியாய உணர்வு உள்ளவர்கள். கோபமும் உண்டு, குணமும் உண்டு. பேச்சு, எழுத்தில் திறமை மிகுந்தவர்கள்.
4-ம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். தலைமை தாங்கும் குணம் உண்டு. உயர் பதவி மற்றும் பொருளீட்டுவதில் ஆசை இருக்கும். அனைவரையும் நேசிப்பவர்கள். நல்ல நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள். பிடிவாதமும் கோபமும் உடையவர்கள். வாதத்திறமையும் கடமை உணர்வும் மிகுந்தவர்கள்.
- தொடரும்...