Published:Updated:

இந்த வார ராசிபலன் ஜூலை 10 முதல் 16 வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்த வார ராசிபலன் ஜூலை 10 முதல் 16 வரை
இந்த வார ராசிபலன் ஜூலை 10 முதல் 16 வரை

இந்த வார ராசிபலன் ஜூலை 10 முதல் 16 வரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராசிபலன் ஜூலை 10 முதல் 16 வரை

'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்குப் பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான நிலைமை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் எதிர்பார்க்காத இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நன்மையே உண்டாகும். என்றாலும் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும்.

வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்ததை விடவும் நன்றாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இந்த வாரம் தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்புகளை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்கள் விரும்பிய மேற்படிப்பில் சேருவதற்கு சில தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் விரும்பிய மேற்படிப்பில் சேர்ந்துவிடுவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு நிர்வாகத்தின் பாராட்டும் சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,15,16

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,6

முக்கியக் குறிப்பு: 12-ம் தேதி பணிகளில் கவனமாக இருக்கவும். 13,14-ம் தேதிகளில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களுக்கு பணவசதி திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஒரு சிலருக்கு தாயின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் வழக்கமான சூழ்நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. பணிகளில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய போட்டிகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவோ, கடன் வாங்கவோ வேண்டாம்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனமும் ஆர்வமும் காட்டி படிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்மணிகளுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,12,13,15

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

முக்கியக் குறிப்பு: குடும்பம், வேலை, வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளை இந்த வாரம் எடுக்கலாம்.

வழிபடவேன்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா

வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே

செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

மிதுனம்: பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். மிதுன ராசி அன்பர்களுக்கு சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டு உடனே சரியாகும். முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்கு மிகவும் சாதகமான வாரம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாகக் கையாள்வது நல்லது.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாக நல்ல வாய்ப்புகள் அமையும். ஒரு சிலர் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், நல்லபடி பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சூழ்நிலைகள் குறுக்கிடும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும் என்பதால், தேவையற்ற எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாகவே இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 13,14,15,16

சந்திராஷ்டம நாள்கள்: 10,11

அதிர்ஷ்ட எண்கள்: 4,7,9

முக்கியக் குறிப்பு: 10,11,12 தேதிகளில் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான். அஞ்சிலே ஒன்றைத் தாவி.

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக. ஆர் உயிர் காக்க ஏகி.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

கடகம்: பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. திருமண வயதில் உள்ள கடக ராசி அன்பர்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலநேரங்களில் இனம் தெரியாத குழப்பம் உங்களை ஆட்கொள்ளும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே நீடிக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அவசர முடிவுகளையும் எடுக்கவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்லவும் நேரிடும்.

மாணவர்கள் கடுமையாக உழைத்து படிப்பார்கள். அதன் பலனாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி தரக்கூடிய வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,15,16

சந்திராஷ்டம நாள்கள்: 12,13,14

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

முக்கியக் குறிப்பு: 12,13,14 தேதிகளில் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

சிம்மம்: எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாக இருப்பதால் சிம்ம ராசி அன்பர்களின் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.. ஆனால், அதே நேரம் திடீர் செலவுகளால் சற்று தடுமாறவும் நேரிடும். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். வேலையின் காரணமாக சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை எதுவும் இல்லை. வருமானமும் திருப்திகரமாக இருக்கும். கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும்.

மாணவர்கள் நல்லபடி படித்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். தேவையான பணமும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12,13

சந்திராஷ்டம நாள்கள் 15,16

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதுமே புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.

கன்னி: பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய வாரம். தேவையற்ற பிரச்னைகள் எதிர்ப்படும்போது சாமர்த்தியமாகக் கையாளவும்.. பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், ஊதிய உயர்வுடன் சில சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

வியாபார இடத்தில் சக வியாபாரிகளுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். .

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வாய்ப்புகள் கிடைத்துவிடும்.

மாணவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்களின் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையக்கூடும் என்பதால், தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,12,14,15

அதிர்ஷ்ட எண்கள்; 2,6

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமான பலன்களே உண்டாகும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!

துலாம்: பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நல்லபடியாக முடியும்.

அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். உங்கள் பணிகளை சக பணியாளர்கள் பகிர்ந்துகொள்வார்கள். சிறிய அளவில் சம்பள உயர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும்.

மாணவர்கள் தேர்வுகளை நல்லபடி எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு படிப்பீர்கள். கஷ்டப்பட்டதற்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்:10,11,15,16

அதிர்ஷ்ட எண்கள்: 4,9

முக்கியக் குறிப்பு: 12,13,14 தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது

நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.

விருச்சிகம்: பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். திருமண வயதில் இருக்கும் விருச்சிக ராசியினருக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். ஒருசிலருக்கு பதவி உயர்வோ அல்லது புதுப் பொறுப்போ கிடைக்கக்கூடும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். ஆனாலும், சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு நீடிக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்கள் மேல்படிப்புக்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். விரும்பிய கல்வி நிறுவனத்திலேயே இடம் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,12,13,15

அதிர்ஷ்ட எண்கள்: 1,6,9

முக்கியக் குறிப்பு: 16-ம் தேதியைத் தவிர இந்த வாரம் முழுவதும் அனுகூலமாகவே இருக்கும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

தனுசு: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். தனுசு ராசி அன்பர்களில் சிலருக்கு சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படவும்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் வெளியூர்ப் பயணங்கள் செல்லவும் நேரிடும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும். சக பணியாளர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலித்து விடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு கடினமாக முயற்சித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். அலுவலகம் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12,13,14,15

அதிர்ஷ்ட எண்கள்: 4,6,7

முக்கியக் குறிப்பு: 10,11 தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

மகரம்: நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்விக சொத்து சம்பந்தமான பிரச்னை முடிவுக்கு வரும். திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், அவை அவசியமான செலவுகளாகவே இருக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பமான மனநிலை மாறி தெளிவு பிறக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய வேலை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைப்பதால், கடையை விரிவுபடுத்த நினைத்த உங்கள் விருப்பம் நிறைவேறும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகலாம்.

மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பும் பாடப்பிரிவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 10,11,12,14,15

அதிர்ஷ்ட எண்கள்: 1,2,5

முக்கியக் குறிப்பு16-ம் தேதி கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வெளியூர்ப் பயணங்களையும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி

வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

கும்பம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்னைகள் உங்களுக்கு மன உளைச்சலைத் தரலாம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம். கும்ப ராசி அன்பர்கள் புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் தொடங்கவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நேரம் இது.

அலுவலகத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பாக்கிகளை போராடித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லுவதற்கான வாய்ப்பு உண்டாகும். அப்படி சுற்றுலா செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் சக பணியாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12,13,14,15

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

முக்கியக் குறிப்பு: 10,11,16 தேதிகளில் உங்கள் பணிகளில் மிகவும் கவனம் தேவைப்படும். பேசும் வார்த்தைகளில் பொறுமை அவசியம்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுவனே

மீனம்: பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டி இருக்கும். அதேநேரம் கொடுத்த கடனும் திரும்பி வரும். கணவன் - மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். வழக்குகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைத்து, அதன் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.

வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பண விவகாரத்தில் மிகுந்த கவனம் தேவை. புதிய முடிவுகள் எதையும் இப்போதைக்கு எடுக்கவேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவர்கள் தேர்வுகளை நல்ல முறையில் எழுதி அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14,16

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதுமே புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்

கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு