Published:Updated:

ஆரூடம் அறிவோம்: 29

ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: தமிழ்

ஆரூடம் அறிவோம்: 29

ஜோதிட புராணம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: தமிழ்

Published:Updated:

ஸ்வினி முதல் மூலம் வரையிலும் 19 நட்சத்திரங்களின் குணாதிசயங்களையும் சிறப்புகளையும் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அர்த்ததாரா என ஜோதிடம் போற்றும் பூராடம், முக்கால் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் உத்திராடம், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் ஆகிய நட்சத்திரங்களின் விசேஷங்களைத் தெரிந்துகொள்வோம்.

புத்திசாலிகள் ஆக்கும் பூராடம்...

தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். 'பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை 'அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். முழுமையான நட்சத்திரமான இது, பெண்குணத்தைக் கொண்ட மனித கணத்தை சேர்ந்தது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரூடம் அறிவோம்: 29

'பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு வழக்கு சொல் உண்டு. அதாவது, பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிக காலம் சுமங்கலியாக இருக்கமாட்டார்கள் என்ற பொருளில் அப்படிச் சொல்வார்கள். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பூராட நட்சத்திரத்தில் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு பயம் தேவையில்லை. எத்தனையோ பெண்கள் பூராடத்தில் பிறந்து தக்க வயதில் திருமணமாகி, நல்ல குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்துவருவதையும் நாம் காணவே செய்கிறோம்.

பொதுவான குணங்கள்: பூராடத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திமான்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் வல்லமை உள்ளவர்கள். எடுப்பான தோற்றம் உள்ளவர்கள். சாமர்த்தியசாலிகள். எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து முடிவெடுப்பவர்கள். இவர்களால் தோல்வியைத் தாங்க முடியாது. எனவே, தோல்வி நேராதவண்ணம் திட்டமிட்டு செயலாற்றும் இவர்கள், மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.

முதல் பாதம்: பூராடம் முதல் பாத அதிபதி சூரியன். அபார தன்னம்பிக்கை இவர்களின் பலம். எதையும் தான் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும் என நம்புபவர்கள். அதற்கேற்ப, எதையும் குறையின்றி தவறின்றி பூரணமாகச் செய்து முடிக்க விரும்புவார்கள். உழைப்பாளிகள். நியாயம், நேர்மை உள்ளவர்கள். எனினும், இவர்கள் 8 மணி நேரம் உழைத்தால் 6 மணி நேரத்துக்கான பலனே கிடைக்கும்! கடும் உழைப்பும் போதுமென்ற மனமும் இவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்யும்.

2-ம் பாதம்: இதன் அதிபதி புதன். இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனமும் இவர்களின் தனிச்சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். இனிமையான பேச்சு, கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களும் இவர்களுக்குக் கிடைக்கும்.

மூன்றாம் பாதம்: இதன் அதிபதி சுக்கிரன். ஆசை, பாசம், கோபதாபம், விரும்பியதை அடைய நினைக்கும் ஆவேசம் - பிடிவாதம் ஆகியவை இவர்களது குணங்கள். சில தருணங்களில் இவர்களின் இந்த இயல்புகளே வெற்றிக்கு அடிகோலும். ஒழுக்கம், நேர்மை, முன்ஜாக்கிரதை மிகுந்தவர்கள். எதிர்மறைச் சிந்தனைகள் மிகும்போது, இவர்களின் இயல்பான தன்னம்பிக்கைக் குறையும்.

4-ம் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள். பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். எப்போதும் தங்களின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்காக, பிறரை எளிதில் தங்களுடன் பழக விடமாட்டார்கள். தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்ய தயங்காதவர்கள். செய்த தவறுகளையே மீண்டும் செய்து அதனால் துன்பத்துக்கு ஆளாவர். பெரியோர்களின் நல்லுரைகளும் உபதேசங்களும் இவர்களுக்குப் பிடிக்காது. தங்களிடம் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்த்து வாழ்ந்தால், எல்லா செல்வங்களும் இவர்களை வந்தடையும்.

ஆரூடம் அறிவோம்: 29

உன்னத பலனளிக்கும் உத்திராடம்...

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை 'முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், 'மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.

பொதுக் குணங்கள்: அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

முதல் பாதம்: இதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

2-ம் பாதம்: இதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.

3-ம் பாதம்: இதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.

4-ம் பாதம்: இதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.

திருவருள் தரும் திருவோணம்...

ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.

ஆரூடம் அறிவோம்: 29

திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதம்: செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

2-ம் பாதம்: சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.

3-ம் பாதம்: புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம், குணம் இரண்டும் இருக்கும்.

4-ம் பாதம்: சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism