Published:Updated:

வீடும் காரும் தேடி வரும்!

'மாளவ்ய யோக ரகசியம்!’ ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

வீடும் காரும் தேடி வரும்!

'மாளவ்ய யோக ரகசியம்!’ ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

Published:Updated:

நாம் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால் நம்முடைய பூர்வ புண்ணியத்தை ஒட்டி அமையும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கை அமையும் என்பது ஜோதிட விதி.

அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றுடன் வாகனத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பரபரப்பான இன்றைய காலத்தில் நம் அன்றாடப் பணிகள் தடையின்றி நடைபெற வாகனத்தேவையும் அவசியமாகின்றது. இப்படிப்பட்ட அவசியத் தேவைகள் நமக்கு கிடைக்க வேண்டுமெனில், ஜாதகத்தில் நவநாயகர்களில் அதிர்ஷ்ட எண்ணான 6-ன் அதிபதியான சுக்கிரன் வலுப் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி பலமாய் அமைந்திருப்பின் ஆயுள் பலம் கூடுவதுடன் உணவும் உடையும் சிரமமின்றி கிடைக்கும். இது போன்றே மிக அழகான நவீன வசதிகள் கொண்ட வீடும், வாகன யோகமும், புகழும், செல்வமும், இசை, நாட்டியம், கவிதை, கற்பனைத்திறன், சினிமாத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்கவும் சுக்கிரபலம் தேவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன் சுக்கிரனின் பலம் அவசியம் தேவை?

பிருகு மகரிஷியின் குமாரரான இவர் தன் ஐம்புலன்களை ஒடுக்கி கடுந்தவம் புரிந்து சர்வேஸ்வரர் அனுக்கிரகத்தால் அற்புதமான மந்திர உபதேசங்களைப் பெற்றவர். மிருதசஞ்சீவினி மந்திரத்தினால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் அற்புத ஆற்றல் கொண்டவர், இதனால் பார்கவன், வெள்ளி, வேதாங்க பாரகன், கவி, பிரபு என பல பெயர்களைத் தாங்கி நிற்பவர்.

பனித்துளி, முல்லை, வெண் தாமரை போன்ற வெண்மை நிறம் உடைய இவர், அசுரர்களின் குரு. சகல கலைகளுக்கும் காரகர் இவரே. நம் உடலில் கண்களைப் பிரதிபலிப்பவர். ஜனன உறுப்புக்களை ஆட்சி செய்பவர். ஆண், பெண் உறவைப் பேணிக் காப்பவர். உடலின் வீரியம் இவர். பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம், கலைகளின் பொக்கிஷம் என அனைத்திற்கும் சொந்தக்காரர் இவரே. எப்போதும் நீர் நிலைகளில் சஞ்சரிப்பவர். பெண்ணின் இளம் வயதில் இவரின் தசை நடைபெறும் எனில், அவள் தேவலோக மங்கையாய் ஒளி வீசுவாள். ஓர் ஆணின் வாலிபப் பருவத்தில் இவரின் யோக தசை ஏற்பட்டால், மன்மதன் எனப் போற்றப்படுவார்.

வீடும் காரும் தேடி வரும்!

சுக்கிரதசைதான் மிக நீண்ட தசையாகும். இவருடைய தசாகாலம்  20 ஆண்டுகளாகும். நவரத்தினங்களில் வைரம் இவருடையது. வெள்ளி உலோகத்துக்கு அதிபதி ஆவார். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் அதிபதி. லட்சுமி, வருணன் போன்றவர்கள் அதிதேவதைகள் ஆவர். தன்னை பூஜிப்பவர் களுக்கு நன்மைகளைச் செய்வதில் வல்லவர்.

ஆய கலைகள் 64-க்கும் காரகத்துவம் வகிக்கும் சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இலக்கினத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நிற்பது நல்ல அமைப்பாகும்.

கும்ப லக்கினத்தில் பிறந்து லக்கினத்துக்கு 4-ம் வீடான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சியாய் அமையப் பெற்ற ஜாதகர் அழகான வீட்டில் வாசம் செய்வார்.

இன்னொரு ஜாதகர் மிதுன லக்கினம் எனக் கொள்வோம். பத்தாம் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் என அமையும் ஜாதகர் கலை உலகில் கொடி கட்டிப் பறப்பார்.

இப்படிப்பட்ட புகழும் பெருமையும் தேடிவர சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திரம், திரிகோணத்தில் பலமாய் இருக்கவேண்டும். இது மாளவ்ய யோகம் எனப்படும்.

நல்ல தோற்றத்துடன், செல்வந்தராக, உறவுகள் போற்றும்படியாய், வாழ்வில் எல்லாவிதமான சுக சௌகர்யங்களுடனும், லட்சுமி கடாட்சத்துடன் நிறைவான வாழ்வை இந்த யோகம் அள்ளித்தரும்.  

இப்படிப்பட்ட மாபெரும் யோகங்களை அள்ளித் தரும் மாளவ்ய யோகம் தங்களின் ஜாதகத்தில் அமையவில்லையே என்றாலும் சுக்கிரன் பகை, நீசம் என்று தங்களின் ஜாதகத்தில் பாதகமாய் அமைந்து இருப்பினும் அச்சம் கொள்ள  வேண்டாம்.

பரிகாரங்கள் மூலம் சுக்கிரனின் அருட்பார்வை பட்டுவிட்டால், பட்டமரமும் துளிர்க்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். உள்ளம் மகிழும்படியான சம்பவங்கள் நிகழும்.

சுக்கிரனின் பார்வை பட்டால் பாலைவனம் சோலைவனம் ஆகும். இல்லறம் இனிக்கும். எளிய பரிகாரங்களால் சுக்கிரனின் கருணையைப் பெற, இவரை பூஜிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் இவரை வணங்குதல் நன்று.

சுக்கிரனுக்கு சிவ வழிபாடும், சிவனடியார் களைப் போற்றுவதும் மிகவும் பிடிக்கும்.

வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம். பூஜையின்போது மஹாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம், ஸ்ரீலட்சுமி துதி, கனகதாரா ஸ்தோத்ரம் போன்றவற்றைக் கூறிய பின்பு தீப ஒளியில் அம்பாளை நமஸ்கரிக்க,  நற்பலன்கள் கூடும். வெண் பொங்கல், மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து, தாமரை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படி இருந்தாலும், சுக்கிரனுக்கு மிகவும் ப்ரீதியான பூஜைகளான சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பௌர்ணமி பூஜை, பஞ்சமி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜை போன்ற பூஜைகளில் தங்களால் இயன்ற பூஜையைச் செய்து சுக்கிர பகவானின் அருளால் சகல செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism