Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம்: 30 சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: தமிழ்

நிறைவான செல்வம் தரும் அவிட்டம், சாதிக்க வைக்கும் சதயம், பூரண அன்புக்கும் பரிவுக்கும் காரணமாகும் பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் குறித்தும் இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.

அவிட்டத்தில் பிறந்தால்...

அவிட்ட நட்சத்திரத்தை 'தனிஷ்டா’ என்று சம்ஸ்கிருத  மொழியில் குறிப்பிடுவார்கள். தமிழின் ஆயுத எழுத்தான 'ஃ’ வடிவில் அமைந்துள்ள மூன்று நட்சத்திரக் கூட்டம் அவிட்டம். இந்த மூன்று நட்சத்திரங்களின் தோற்றம் ஒரு மிருதங்கம்போல் அமைந்திருக்கும்.

'அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்’ என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கும் மற்ற நட்சத்திரப் பழமொழி போல் சாஸ்திர ஆதாரம் இல்லை. அவிட்டத்தில் பிறந்து அரசாண்டவர்களும் உண்டு; ஆண்டி ஆனவர்களும் உண்டு. கிரகங்களில் புதனின் தோற்றம் இந்த நட்சத்திரத்தில்தான்.

ஜோதிட புராணம்!

பொதுவான குணங்கள்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்லவர்கள். பிடிவாத குணமுடையவர்கள். சிக்கனமானவர்கள். பிறரை நம்பாதவர்கள். உயர்கல்வி இவர்களுக்கு உண்டு. குறைவான உழைப்பில் நிறைவான செல்வத்தைப் பெறுவர். சுகபோகிகள்.

முதல் பாதம்: சூரியன் இதன் அதிபதி. இவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். சிந்தித்துச் செயலாற்றக்கூடியவர்கள். ஓரளவு நியாய உணர்வு உள்ளவர்கள். சுயநலம் மிக்கவர்கள்.

இரண்டாம் பாதம்: இதன் அதிபதி புதன். இவர்கள் நல்ல தோற்றம் உடையவர்கள். அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்க ஆசைப்படுபவர்கள். பேச்சுத் திறமை உள்ளவர்கள். அறிவாற்றல் மிக்கவர்கள். நியாய உணர்வு உடையவர்கள்.

மூன்றாம் பாதம்: இதன் ஆட்சி கிரகம் சுக்கிரன். தைரியசாலிகளான இவர்கள் பிறருக்கு வழிகாட்டுவர். உயர் கல்வியில் நாட்டம் மிக்கவர்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். பிடிவாதம் உடையவர்கள். சமயோசித அறிவால் வாழ்க்கையில் வெற்றி அடைபவர்கள்.

நான்காம் பாதம்: இதனை செவ்வாய் கிரகம் ஆட்சி செய்கிறது. மண், பொன், பெண் ஆசை மிக்கவர்கள். கோபம் உள்ளவர்கள். சுயநலவாதிகள். தனது காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வர். சுகபோகிகள்.

சாதிக்கவைக்கும் சதயம்...

நட்சத்திர வரிசையில் இது 24-வது நட்சத்திரம். சுமார் 100 நட்சத்திரங்களின் கூட்டம் இது. தோற்றம் ஒரு தாமரை வடிவில் இருக்கும். மனித உள்ளங்கையின் அமைப்பு என்றும் சொல்லலாம்.

பொதுவான குணங்கள்:

சுதந்திரமானவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். போராடி ஜெயிப்பதில் வல்லவர்கள். தவறுகளைச் செய்தாலும், நினைத்ததை நடத்திமுடிப்பதில் வல்லவர்கள். தொலைநோக்கு உடையவர்கள். பொருளீட்டுவதில் அதிக கவனம் செலுத்துபவர்கள்.

ஜோதிட புராணம்!

முதல் பாதம்: இந்தப் பாதத்துக்கு அதிபதி குரு பகவான். இவர்கள் நல்லவர்கள், தெய்வ பக்தி உள்ளவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நீதி நேர்மையுள்ள இவர்கள் பிறர் நலனில் அக்கறை கொண்டிருப்பர். தெளிந்த அறிவாளிகள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள்.

இரண்டாம் பாதம்: சனி பகவான் இதை ஆட்சி செய்கிறார். தன்னம்பிக்கை குறைந்தவர்கள். எதையும் தயக்கத்துடன் செய்பவர்கள். சரியான முடிவெடுக்கத் தெரியாதவர்கள். தனக்குத் தேவையென்றால் எவரையும் நம்புவார்கள்; இல்லையென்றால் எவரையும் நம்ப மாட்டார்கள். காரியங்களைச் சாதிக்க, தெய்வங்களைத் தீவிரமாக வழிபடுவார்கள். கோபமும் ஆவேசமும் மிக்கவர்கள். பொருளீட்டுவதில்  பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள்.

மூன்றாம் பாதம்: இதன் அதிபதி சனி. நல்லது கெட்டது தெரியாதவர்கள். சுயலாபத்துக்காகத் தீய வழிகளில் செல்லவும் தயங்க மாட்டார்கள். மிகுந்த பொருளீட்டி, சுகபோகமாக வாழ விரும்புபவர்கள். தன்னிச்சைப்படி செயலாற்றுபவர்கள். பெரியோர்களின் நல்லுபதேசங்களை விரும்பமாட்டார்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். எல்லாச் செயல்களிலும் ஆதாயம் தேடுவார்கள்.

நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு பகவான். இவர்கள் பொலிவான தோற்றத்துடன் இருப்பவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். பாசமும், நேசமும், கருணையும் மிக்கவர்கள்.

பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவர்கள். புகழையும் பெருமையையும் விரும்புபவர்கள். நல்ல பேச்சாளர்கள். நண்பர்கள் கூட்டத்தை விரும்புபவர்கள். நியாய உணர்வு கொண்டவர்கள்.

காரிய ஜெயம் அளிக்கும் பூரட்டாதி...

கத்தி போல் அமைந்துள்ள இரண்டு நட்சத்திரங்கள் அடங்கியது பூரட்டாதி. இரண்டு நட்சத்திரங்களும் ஒளிமயமாக மின்னும்போது இந்தக் கத்தி வடிவம் தெரிகிறது. இதற்கு முக்கால் நட்சத்திரம் என்றும், சமதாரை என்றும் பெயர்கள் உண்டு. இதன் முதல் மூன்று பாதம் கும்பராசியிலும், கடைசியான நான்காவது பாதம் மீன ராசியிலும் அமைகிறது.

பொதுவான குணங்கள்:

கடுமையாக உழைத்து, பொருளீட்டி ஆடம்பரமாக வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள். அன்பும், பாசமும் மிக்கவர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாக இருக்க விரும்புபவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள். விருப்பு வெறுப்பின்றிப் பழகுபவர்கள். சுகபோகிகள். தலைமை தாங்கும் இயல்பு கொண்டிருப்பர். குடும்பத்தையும் நண்பர்களையும் மிகவும் நேசிப்பவர்கள்.

முதல் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். மற்றவர்களின் மனத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்து தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்வதில் வல்லவர்கள். மனைவியின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவர்கள். கடவுளிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள். பிறர் நலனில் அக்கறை உள்ளவர்கள்.

ஜோதிட புராணம்!

இரண்டாம் பாதம்: சுக்கிரன் இதன் அதிபதி. இவர்கள் அலங்காரப் பிரியர்கள். ஆடம்பரமாக வாழ ஆசை கொண்டவர்கள். புகழை விரும்புபவர்கள். எல்லோரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதை மனத்தில் கொண்டே செயலாற்றுபவர்கள். சக்திக்கு மீறி ஆசைப்பட்டு, அதை அடைய முயன்று, பல நேரம் ஏமாற்றத்தையும் தோல்வியையும் அடைபவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பிறருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள்.

மூன்றாம் பாதம்: இது புதனுடைய அம்சம். நல்ல பேச்சாளர்கள். திறமைசாலிகள். நேர்மையானவர்கள். விடாமுயற்சியால், எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவர்கள். சிந்தித்துச் செயலாற்றும் திறமைமிக்கவர்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது என்பதால், திட்டமிட்டே செயலில் இறங்குவார்கள்.

நான்காம் பாதம்: இந்தப் பாதத்தின் அதிபதி சந்திரன். மனம் விரும்பியபடி வாழ்பவர்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். அறிவாற்றலைவிட உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தயை, கருணை, பிறருக்கு உதவும் தன்மை ஆகிய குணங்கள் இவர்களிடம் இருக்கும். குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரிதும் நேசிப்பவர்கள்.

- தொடரும்...