Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 31சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள் தமிழ்

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 31சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள் தமிழ்

Published:Updated:

சுவினி முதல் பூரட்டாதி வரையிலுமாக 25 நட்சத்திரங்களின் குணாதிசயங்களை கடந்த அத்தியாயங்களில் தெரிந்துகொண்டோம். மீதமுள்ள இரண்டு நட்சத்திரங்களான உத்திரட்டாதி மற்றும் ரேவதி குறித்து இப்போது பார்க்கலாம்.

லட்சுமி கடாட்சம் நிறைந்த உத்திரட்டாதி

இது இரண்டு நட்சத்திரங்களால் ஆனது. இதன் அமைப்பை பூரட்டாதி போலவே, ஒரு கத்தியின் வடிவிலோ அல்லது ஒரு கைத்தடியின் வடிவிலோ காணலாம். எனவே இந்த நட்சத்திரத்தை வடமொழியில் 'தண்டாக்ருதி’ என்று குறிப்பிடுவார்கள். இது ஒரு ஸ்திர நட்சத்திரம். இதனை 'துருவதாரா’ என்றும் குறிப்பிடுவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவான குணங்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவர். பேச்சுத் திறமையாலும், இயல்பான நகைச்சுவையாலும் மற்றவரையும் மகிழ்விப்பர். இசை, நாடகம் போன்ற துறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கும். நண்பர்கள் புடைசூழ வாழ்பவர்கள். சுகபோகங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். லட்சுமி கடாட்சம் இவர்களுக்குப் பரிபூரணமாக உண்டு. சிறந்த தொழில் ஆற்றலும், எதையும் வித்தியாசமாகச் செய்து பெயரும் புகழும் வாங்கும் திறமையும் இவர்களிடம் உண்டு. குடும்பத்தில் பற்று, தர்ம சிந்தனை மிகுந்தவர்கள். கடமை, கண்ணியத்தோடு வாழ்வார்கள்.

ஜோதிட புராணம்!

சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் இவர்களை மிஞ்சமுடியாது!

முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன். சுறுசுறுப்பும் துடிப்பும் உள்ளவர்கள். தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். புகழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் பெரிதும் விரும்புபவர்கள். ஆழ்ந்த சிந்தனையும் புத்திக் கூர்மையும் இவர்களது பலம்.

2-ம் பாதம்: இதன் தலைவர் புதன். அறிவாற்றல் மிக்கவர்கள். சாஸ்திர அறிவு உள்ளவர்கள். தெய்வ பக்தியும், சுய ஒழுக்க மும் கொண்டவர்கள். முகராசியும், தோற்றப்பொலிவும் இவர் களுக்குக் கிடைத்திருக்கும் வரம். வேலையில் ஈடுபாடும், உடல் நலத்தில் கவனக்குறைவும் கொண்டவர்கள். மொத்தத்தில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்வார்கள்.

3-ம் பாதம்: இதன் அதிபதி சுக்கிரன். கலைகளில் ஈடுபாடும் திறமையும் உள்ளவர்கள். ஆசை, பாசம், நேசம் இவர்களிடம் மிகுந்திருக்கும். செய்யும் செயல்களை முறைப்படி திட்டமிட்டு அழகுபடச் செய்பவர்கள். தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விரும்புவதுடன், மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதிலும் கில்லாடிகள். குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். நன்றி உடையவர்களாகத் திகழ்வார்கள்.

4-ம் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள், சொத்து சுகங்களை பெரிதும் விரும்புபவராக இருப்பார்கள். கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், எதையும் வேகமாகச் செய்தல் இவர்களது இயல்பு. தோல்வியைக் கண்டு பயப்படுவர். இரக்க சுபாவமும், பிறருக்கு உதவும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்து பொருள் ஈட்டுபவர்களாகத் திகழ்வர்.

ஜோதிட புராணம்!

சீர்மிகு ரேவதி

மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட ரேவதி, வான்வெளியில் மீனைப் போன்ற தோற்றத்துடன் பிரகாசிக்கும். இதனை வைத்தே இந்த நட்சத்திரம் அமைந்த ராசியை மீன ராசி என்று குறிப்பிடுவதாகவும் கூறுவர். இது சிவப்பு நிறம் கொண்டது.

பொதுவான குணங்கள்: வசீகரமான தோற்றமும் பேச்சுத் திறமையும் உள்ளவர்கள். உழைப்பால் உயர்வதில் நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் சௌக்கியமாக வாழ விரும்புவ தோடு, மற்றவர்களையும் அவ்வண்ணம் வாழ வைப்பவர்கள்.

முதல் பாதம்: இதன் அதிபதி குரு. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த முறையில் பொருளீட்டி, சொத்து - சுகங்களை அனுபவிப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமாக வாழ நினைப்பார்கள். சாமர்த்தியசாலிகள். தெய்வ பக்தியும், ஈகையும் இவர்களின் பிறவிக்குணங்கள்.

2-ம் பாதம்: இதனை ஆட்சி செய்பவர் சனி பகவான். சுய நலத்தில் நாட்டம் இருக்கும். எந்த வழியிலாவது முன்னேறிவிட வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள்; இவர்களது எண்ணமும் செயலும் அதை நோக்கியே இருக்கும். சுகபோக வாழ்க்கையில் இவர்களுக்கு அதிகம் விருப்பம் இருக்கும்.

3-ம் பாதம்: இதுவும் சனியின் ஆதிக்கத்தில் அடங்கும். சுகவாசிகளாகத் திகழ்வர். பெரும்பாலானோர் பிறரது உழைப்பில் காலம் கழிப்பவராக இருப்பர். பேராசை மிகுந்தவர்கள்.

4-ம் பாதம்: இதை ஆள்பவர் குரு. இவர்கள் நல்ல அறிஞர்கள்; கல்வியில் புகழ் அடைபவர்கள். நேர்மையானவர்களாகவும், கொள்கைக்காக வாழ்பவர்களாகவும் விளங்குவார்கள். சத்திய நெறியில் நம்பிக்கைகொண்ட இந்த அன்பர்கள், துணிச்சலான காரியங்களில் ஈடுபடுபவர்களாகவும் திகழ்வர்.

அசுவினி முதலாக 27 நட்சத்திரங்களின் அமைப்பையும், இந்த நட்சத்திரங்களில் பிறந்த அன்பர்களின் பொதுவான குண நலன்களையும், ஒவ்வொரு நட்சத்திரத்திலும் நான்கு பாதங் களுக்கு உரிய அன்பர்களின் குணத்தையும் பார்த்தோம். இவை பொதுவாகச் சொல்லப்பட்டவையே! ஜாதகர்கள் பிறந்த நேரத்தில் அமையும் கிரகங்களின் உச்ச, நீச, பகை, சம நிலைகளை அனுசரித்து இந்த இயல்புகள் சற்று மாறுபடலாம். நட்சத்திரங்களினால் ஏற்படும் குணாதிசயங்களில் நல்லவற்றை வளர்த்துக்கொண்டு, தீயவற்றை மாற்றிக்கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த விவரங்களை நமது சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

ஜோதிட புராணம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism