Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33

காலம் வசப்படும்! கே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33

காலம் வசப்படும்! கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:

காளி என்று சொன்னால்,  உக்கிரமான சக்தி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு, காளி வழிபாட்டை வீட்டில் செய்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் நம் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்களைக் கொண்டுள்ள தேவி மகாத்மியத்தில் சத் - மகாலக்ஷ்மி என்றும், சித் - சரஸ்வதி என்றும், ஆனந்தமே மகாகாளி என்றும் கூறப்பட்டுள்ளது. ஆற்றலே வடிவான காளியைச் சரணடைந்தால், அவள் நம் பாவங்களையெல்லாம் பொசுக்கி, நாம் நம் லட்சியத்தை அடையச் செய்கிறாள்.

நம் உடலில் நரம்புமண்டலத்துக்கு அதிபதியாகத் திகழும் காளிதேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும். தென் திசைக் காவலனாக விளங்கும் எமதர்மராஜன் காளி என்ற பெயரைக் கேட்டால் விலகி ஓடி விடுவான். தேஜஸ்வினீ, பராசக்தி, பரப்பிரம்ம சொரூபிணி, மோட்சதா, திகம்பரா, சித்விலாசனி, சின்மயி ஆகிய நற்பெயர்களைக் கொண்டவள் காளி.

காளிகா லயதே ஸர்வம் பிரம்மாண்டம் ச சராசரம்
கல்பாந்த சமயே யாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறப்புடைய காளிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் உள்ளன. புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு வெற்றிக்குரிய பிரார்த்தனை முறையாகச் சொல்லப்பட்டதைக் கவனிக்க வேண்டும். ஆகம கிரந்தங்களில் காளி தேவியைப் பற்றி பல தியானங்கள் இருக்கின்றன. அவற்றில் பத்ரகாளி தியானம் அனைவராலும் சொல்லப்படுகிறது.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33

ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி!

இந்த தியான விதிப்படி காளிக்கு எட்டு கைகள், மூன்று கண்கள், டமருகம், சூலம், கபாலம் கையில் ஏந்தியபடி, அபய வரத ஹஸ்தங்களுடன் காட்சி தருபவளாகச் சொல்லப்பட்டுள்ளது.

கும்பகோணம், பாபநாசம், திருநாகேஸ்வரம், தேப்பெருமாள் நல்லூர், குத்தாலம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை மாதம் முழுவதுமே மேற்சொன்னபடி 8 கைகளோடு கூடிய காளிதேவியைப் போல ஒரு பக்தருக்கு வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து வந்து ஆரத்தி எடுப்பதைக் காளிகட்டித் திருவிழாவாகக் கொண்டாடுவர்.

காளியை உபாசனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்ற அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்கத் தோன்றும்.

உத்தரகலாமிருதத்தில் காளி வழிபாடு: உடலில் பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை வரவழைக்கும் காளி வழிபாடு பற்றி ஒரு துதியால் அறிய முடிகிறது.

காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33

கருத்து: 'காமேஸ்வரக் கடவுளின் இடது பாகத்தை அலங்கரித்திருப்பவளும், தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அடையாளமாகச் சங்கு சக்கரம் கொண்டு வரம் அளிப்பவளும், பிறை நிலவு தரித்து, பிரகாசமாக விளங்கும் முக்கண்களோடு, சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும், சூரிய வம்சத்தில் பிறந்த விக்ரமார்க்க அரசனைக் காத்து நன்மை தருவதில் அக்கறை உடையவளுமான காளிதேவியை வணங்குவோமாக!’

விஸ்வாமித்ர மகரிஷி அருளிய துதியில், ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்திதி காளி, பத்ரகாளி, மதுகைடப சம்ஹார காளி, குஹ்ய காளி, வர காளி, சதுர்புஜ காளி, நடன காளி என்ற பத்து காளி வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன.

காளியின் அருள்பெற்றதால் தான் மகாகவி காளிதாசன் குமார சம்பவம், ரகுவம்சம்,  மேகசந்தேசம், சாகுந்தலம் போன்ற அமர காவியங்களை இயற்றமுடிந்தது. காளி பூஜையை வீட்டில் செய்வதற்குமுன் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். சில பக்தர்கள் காளிக்கு உகந்தது என்று தவறாக நினைத்துக் கொண்டு, மாமிசம் போன்றவற்றைப் படைக்கின்றனர். அது சரியல்ல. காளிவழிபாடு தொடங்கப்பட்ட ஹர்ஷவர்தனர் காலத்திலும் சரி, மகரிஷிகளின் சக்தி தத்வ நூல்களிலும் சரி... மாமிசப் படையல் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

காளி பூஜை செய்யும்முறை - அமாவாசை அன்று மாலையிலோ, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை அன்றோ, சதுர்த்தசி திதி நாளிலோ காளியை வழிபடுவது நல்லது. அஷ்டமி, நவமி, சிவராத்திரி, பரணி நட்சத்திர தினங்களும் உத்தமம். சாந்தமாக அமைந்த காளி ரூபம் கொண்ட படத்தை கண்ணாடிச் சட்டமிட்டு, சந்தனம் குங்குமம் இட்டு, பூச்சரங்களால் அலங்கரித்து, அதன் முன்பு  சிவப்பு நூல் சுற்றிய கலசம் வைத்துவிட வேண்டும். செவ்வரளி, முல்லை, சாமந்தி மலர்களை வைத்துக் கொண்டு பூஜையைத் தொடங்கவேண்டும். முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, அன்றைய திதி, நாள், நட்சத்திரம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி,'வாக், மனஸ் சாந்தியர்த்தம், உக்ர சக்தி, விசர்ஜனார்த்தம் காளீ உபாசனாக்ரம ஜபக்ரம பூஜாரம்பம் கரிஷ்யே’ என்று கூறியபடி, மஞ்சள் அட்சதையை எடுத்து வடக்கில் இட வேண்டும்.

ஸ்ரீகுருப்யோ நம: என்று மூன்று முறை சொல்லிவிட்டு, காளி சக்த்யை நம: கலச ஆவாஹன பூஜாம் க்ருத்வா’ என்று கலசத்தில் தீர்த்தம் விட்டு, சகலாராதனை ஸ்வர்ச்சிதம்  என்று சொல்லி, பின் புஷ்பம்  எடுத்துக் கொண்டு, 16 மாத்ருகா சக்திகளை அர்ச்சனை செய்யவும்.

ஓம் கௌர்யை நம:
ஓம் மாத்ரு தேவ்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் மேதா சக்த்யை நம:
ஓம் லோகமாத்ரு தேவ்யை நம:
ஓம் சாவித்ரீ தேவ்யை நம:
ஓம் த்ருதி தேவ்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் புஷ்டி தேவ்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் துஷ்டி தேவ்யை நம:
ஓம் தேவ சேனாயை நம:
ஓம் குல தேவி ஸ்ரீமகா காள்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:

என அர்ச்சனை செய்தபின், குங்கிலியம் கலந்த சாம்பிராணி தூபம் காட்டி, சர்க்கரை அன்னம், தயிரன்னம், மூன்று வகையான பழங்கள் நைவேத்தியம் செய்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, ஆத்ம பிரதட்சிணம் செய்து தியானம் கூறி, கலசத்தின் மேலும் காளி படத்தின் மேலும் சமர்ப்பிக்கவும். காலத்தை வென்று தருபவள் காளி என்பதால், இவள் தியானத்தை மூன்றுமுறை கூறுதல் நல்லது.

ஓம் துகூல வளநோபேதாம் சர்வாலங்கார சோபிதாம்
காதகும்ப நிபாம் த்யாயேத் காளீம் முஸல தாரிணீம் -

'ஸ்வர்ணம்போல மஞ்சள் நிறமான மேனியை உடையவளே! பட்டாடையை உடுத்தி இருப்பவளே! அதிகமான ஆபரணங்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டவளே! உலக்கையைக் கையில் வைத்திருக்கும் கால ரூபிணியே! உன்னை வணங்குகிறேன்’ என்பதே இதன் பொருள்.  பின்னர் கற்பூர ஆரத்தி செய்து,

ஓம் பிசாசக் நாஸ்ய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி பிரசோதயாத் - மகாகாள்யை நம:

கற்பூர நீராஜனம் தர்சயாமி என்று பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பிறகு  பிரசாதங்களைக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதுடன், ஒரு சுமங்கலிக்கு சிவப்பு ரவிக்கைத் துணியுடன் வளையல் வைத்துத் தாம்பூலம் தரவேண்டும்.

வெற்றி தரும் காளி அஷ்டகத் துதி - கடந்த நூற்றாண்டில் காஞ்சிப் பெரியவரின் நண்பராக இருந்த ஸ்ரீசெம்மங்குடி முத்துசுவாமிகள் என்பவர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் சேவகம் செய்து வந்தார். முத்துசாமி சிவாச்சாரியார் என்றும் செம்மங்குடி சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் மதுரகாளிதேவியைப் பற்றி சக்தி வாய்ந்த அஷ்டகத்தைப் பாடி உள்ளார். காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் இந்தத் துதியை பூஜை முடிவில் மும்முறை கூறிட, துர்சக்திகள் அகன்று இன்பமே சூழும் - எல்லா நலன்களும் சித்திக்கும். இந்தத் துதிக்கு ஜெய மதுராஷ்டகம் என்று பெயர்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33

ஓம் நமஸ்தே ஏகவஸ்த்ரே சிகிஜ்வால சிகேசுபே
வாமரூபே கபால தகனே சர்வாபரண பூஷிதே
க்ரூர தம்ஷ்ட்ரே ரத்தமால்யே அஷ்டாதச பூஜகரே
மங்களே காரணே மாதே மாதர்பலே ரக்ஷகே
குங்குமப்ரியே குணவாஸினே குலவிருத்திகாரணே ஸ்ரியே
சூல டமருகஞ்சைவ கபாலம் பாசதாரிணே
ஓம்காரரூபிணே சக்தி வரரூபே வராபயே!
ஸுகாசினே சாமுண்டே சுந்தரீ யோகதீஸ்வரி
ஸிம்ஹவாஹனப்ரியே தேவி ச்யாமவர்ணேச சாம்பவீ
மதுரகாளி ஸ்மசானவாஸே மாத்ருகா மகாமங்களீ
சீர்வாச்சூர் வாஸப்ரியே சீக்ர வரமண்டிதே
பூர்வபுண்ய தர்ஸனே தேவி மகாமங்கள தர்ஸனீ
ஜோதிர்மயே ஜயகாளிகே துக்க நாஸன ப்ரியே சிவே
ஜன்மலாப வரே காந்தே மதுரே ஜோதி ரூபிணே
சர்வக்லேச நாசினே மாதே சாவித்ரீ அபீஷ்டானுக்ரஹே
சோடசானுக்ரஹே தேவீ பக்தானுக்ரஹ அர்ச்சிதே
ஏகமாஸம் சுக்ரவாரே ஸெளபாக்யம் காளி தர்ஸனம்
சுக்ரசோம தினஞ் ஜபித்வா ஸர்வமங்கள நிதிபாக்யதம்
அஷ்ட பூர்வம் ஜபேந்நித்யம் அஷ்டஸித்தி ப்ராப்திதஞ்சுபம்
இதிஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம்

ஸம்பூர்ணம்.

காளி பூஜையை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால் வீட்டில் சகல காரிய சித்தியும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism