Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 32சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 32சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:

நம் முன்னோர்கள், எதிர்காலம் பற்றிய வழிமுறை களை, பிறருக்கு எடுத்துக்காட்ட எத்தனையோ யுத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று நட்சத்திர ஆருடம் அல்லது நட்சத்திரச் சக்கரம்.

அவசரமான காலகட்டத்தில் சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும், அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காதபோதும், இந்த ஆருட சாஸ்திரம் நமக்கு முடிவெடுக்கும் ஒரு துணைவனாக நிற்கும்.

இங்கே, அருகில் நீங்கள் பார்ப்பதுதான் 27 நட்சத்திரங்களும் உரிய எண்களும் அடங்கிய நட்சத்திரச் சக்கரம். இதை கத்தரித்து கெட்டியான ஓர் அட்டையில் ஒட்டிக்கொண்டால், பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட பிரச்னைக்கு பதில்காண விரும்பு கிறீர்கள் எனில், காலையில் எழுந்து குளித்து முடித்து முறைப்படி சமயச் சின்னங்கள் தரித்து, கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு, மனத்தில் இருக்கும் பிரச்னையை-கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதன் பின், இறைவனுக்கு சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, அதன் காம்பினால் நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொடவேண்டும்.

இப்போது நட்சத்திரக் கட்டத்தில் பூக்காம்பு தொட்டுக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அல்லது எண் எது என்று பாருங்கள். அந்த நட்சத்திரத்துக்கான பலனை, இங்கு தரப்பட்டிருக்கும் தமிழ்ப்பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இதழில் 9 நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ்ப்பாடல்களை தந்துள்ளோம். மீதமுள்ள பாடல்களை அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்.

அந்தப் பாடல்களில் நம் மனத்தில் இருக்கும் பிரச்னைகள் அல்லது கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கும். அதனைத் தெரிந்துகொண்டு பிரச்னைகளை அணுக வேண்டும். சில தருணங்களில் எதிர்மறையாகப் பலன்கள் வந்தால், அதற்கு ஏற்ப நமது அணுகுமுறையை மாற்றிகொள்ள வேண்டும் என்பது புலனாகும். அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதும் தெரியவரும். சித்தர்களால் அருளப்பட்ட இந்தப் பாடல்கள், ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த நட்சத்திரக் கட்டமும் அது அடையாளம் காட்டும் பாடலும் சொல்லும் பலாபலன்களை அறிந்து, காலச்சூழலுக்கு ஏற்ப செயல்படவேண்டும்.

ஜோதிட புராணம்!

இனி பாடல்களைக் காணலாம்.

1. அஸ்வினி:

முக்கியமாய் அஸ்வனி ஆருடமானால்
மூலாதாரப் பொருளி னருளினாலே
எக்காரியம் செய்தாலும் பலிக்குமப்பா
இவானழி நோய்விலகும் யிடரொன்றில்லை
பக்குவமாய் போன பொருள் வந்து சேரும்
பாலனொன்று உன்மனையில் பிறக்கும்பாரு
சிக்கனமாய் குடும்பமது செழித்தேயோங்கும்
ஜெயமாகும் வாரமொன்றில் கண்டிடாயே.

கருத்து: ஆருடம் அஸ்வனி ஆனதால், ஐங்கரனின் திருவருளால் எந்தக் காரியமாயினும் இடரின்றி பலிதமாகும். நோய், மருந்தினால் நீங்கும். புத்திரப் பாக்கியம் பெருகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். வெளியில் இருந்து பொருளோ, ஜீவனோ கிடைக்கும். எட்டு நாள்போக, உனது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுகப்படுவாய். உத்தமம்.

2. பரணி:

கண்டிடுவாய் பரணியது உதயமாச்சு
கவலையது குடும்பத்தில் அதிகமாச்சு
பெண்டிரும் பிள்ளைகளும் பகையேயாச்சு
பேசினால் உன் வாக்கு விஷம் போலாச்சு
உண்டான சினேகிதரால் விரோதமாச்சு
உதவியதை செய்தாலும் அதர்மமாச்சு
கொண்டாடும் குலதெய்வம் துணையும் போச்சு.
கொடுமையெல்லாம் வாரமெட்டில் தீரும்பாரே.

கருத்து: பரணி ஆருடமாக வந்ததால், பலவிதத்தில் உனது கவலை அதிகரிக்கும். மனைவி, மக்களும்கூட பகையாவார்கள். சினேகிதர்களால் கெடுதல் உண்டாகும். உபகாரம் செய்தாலும் அபகாரம் உண்டாகும். உன் வாக்கு மற்றவர்களுக்கு விஷம் போல் தெரியும். தெய்வப் பலனும் தற்போது விலகி நிற்கும். 8 வாரங்கள் கழிந்ததும் இடையூறுகள் எல்லாம் விலகும். மத்திமப் பலன்.

3. கார்த்திகை:

பாரப்பா கார்த்திகை ஆருடமானால்
பாலகனே ஈராண்டாய் கஷ்டப்பட்டாய்
சீராட்டமே யழிந்தாய் சித்தம் நொந்தாய்
ஜென்மத்தில் கொடிய செவ்வா யமர்ந்ததாலே
போராட்டம் குடும்பத்தில் அதிகமாச்சு
பொன்பொருளும் செய்தொழிலும் நஷ்டமாச்சு
தீராதுன் கவலையென்று தயங்கிடாதே
சிறப்புறவாய் வாரமது மூன்றில்தானே.

ஜோதிட புராணம்!

கருத்து: கார்த்திகை உதயமானதால், கவலை யால் மெலிந்து கலங்கி வாடுகின்றீர்கள். குடும்பத் திலும் சுகமில்லை. நம்பிக்கை வைத்திருந்த பந்துக்களும் உன்னைக் கைவிட்டுவிட்டார்கள். சுமார் இரண்டு வருஷங்களாக, அளவிலாத கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். பொல்லாத நோயினால் பொருள் விரயம் ஆகியிருக்கலாம். இடம் விட்டு வேறிடத்தில் மாற்றி இருக்கலாம். குடும்பத்தில் பலவித கோளாறுகளும் ஏற்பட்டு இருக்கலாம். பொன் - பொருள்கள் அழிந்தும் போயிருக்கும். ஏனென்றால், ஜென்மத்தில் அங்காரகன் இருக்கிறான்.

அவன் மூன்று வாரத்தில் மறைகிறான். அதன் பிறகு சுகப்படுவாய்; இது மத்திமம்.

4. ரோகிணி:

தானாரும் ரோகிணி உதயமானால்
தழைத்திடவே பஞ்சமத்தில் குருவமர்ந்தார்
வீணாக வந்த இன்பம் விலகி நிற்கும்
வெகுநாளாய் பகையானோ ருறவேயாவார்
காணாமல் போன பொருள் வந்து சேரும்
கவலைதரும் நோய்விலகும் மகப்பேராகும்
கோணாமல் மனைவிமக்களுடனே வாழ்வாய்
குறைதீரும் நவக்கிரகத்தை துதித்திடாயே.

கருத்து: குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்திருப் பதால், பலவிதத்திலும் நன்மை உண்டாகும். மலைபோல் வந்த துன்பங்களும் பனிபோல் விலகும். பகையாளிகளும் உறவாகச் சேருவார்கள். தொழில் விருத்தியாகும். காணாமற்போன பொருளாயினும் ஜீவனாயினும் கருத்துடன் வந்து சேரும். புத்திர பாக்கியம் உண்டு. பந்துக்களுடனும், மனைவி- மக்களுடனும் செல்வாக்குடன் வாழ்வீர்கள். கவலையும் நோயும் கஷ்டமும் இன்னும் இரண்டு வாரங்களில் நீங்கும். நாடிய எண்ணம் நல்லவிதமாக முடியும்; உத்தமம்.

5. மிருகசீர்ஷம்:

துதித்து நீ நவக்கிரக பூஜை செய்தால்
தொலையும் துயர் மிருகசீ ரிடமேயானால்
மதித்திடவே மன்னவன்போல் மகிழ்ந்து வாழ்வாய்
மனங்கூடும் மகப்பேரும் செல்வாக்குண்டு
சதிபுரியும் நீங்கும் தொழிலுமோங்கும்
தெற்கெனும் திசையிலிருந்து செய்திதோன்றும்
பதினேழு நாள்போக நன்மையுண்டு
பாலகனே குருமுனிசொல் நம்புவாயே.

கருத்து: உனக்கு கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றிருப்பதால், உன் பூர்வ வினைகளும், வெகு நாட்களாக அனுபவித்த  கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனியாக விலகும். குபேர சம்பத்துடன் புகழ்மிக்க வாழ்ந்திருப்பாய். மனையில் விவாகம் கைகூடும். கொடுமையான நோயாயினும் படிப்படியாக விலகும். தொழில் நீடித்தோங்கும். தெற்கு திசையிலிருந்து நன்மையான செய்தி வரும், 17-நாட்களில் மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி கிட்டும். நினைத்தது பலிதமாகும். புத்திர சம்பத்து உண்டாகும். உத்தமம்.

6. திருவாதிரை:

நம்பின பேர்களை நாசஞ்செய்வார்
நஷ்டம் திருவாதிரைதா னுதயமானால்
வம்புகளும் வழக்குகளும் வந்தே தீரும்
வாதுசெய்வார் கொடுத்தபொருள் கேட்பாயானால்
பம்பரம்போல் பார்முழுவதும் அலைந்திட்டாலும்
பலியாது உனதுயெண்ணம் பகையேயாகும்
சம்பவிக்கும் பலவிதநோய் சஞ்சலங்கள்
சாற்றினேன் வாரமைந்தில் தணியுமப்பா.

கருத்து:  கிரகங்கள் கொடியதாக இருப்பதால், நம்பின பேர்கள் நயவஞ்சகம் செய்வார்கள். குடும்பத்தில் பலவிதத்தில் வம்புவழக்குகளும், தொழிலில் நஷ்டநிஷ்டூரமும், கொடுக்கல் வாங்கலில் வாதும் சூதும் ஏற்படும். மேலும், பாத சனியின் கொடுமையினால் அலைச்சலும், கஷ்டமும், அகால போஜனமும், எண்ணம் தவறான பலன்கூட்டும் நிலையும், நிந்தனையும், பகையும் அதிகரிக்கும். நோயும் சஞ்சலமும் தரும். ஐந்து வாரம் கழித்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன் தரும்.

7. புனர்பூசம்

அப்பனே புனர்பூசம் உதித்தாலே ஆபத்தும்
கொடியபிணி கெண்டம் நீங்கும்
தப்பி தங்களணுகாது மனைத்தழைக்கும்
தனலாபம் மாடுமலை கொள்ளலாகும்
செப்பவே சேனநாள் வழக்கு நீரும்
சேய்பிறக்கும் கடன் தீரும் தொழிலுமோங்கும்
ஒப்பிலா பெரியோர்களுதவியாலே
உறுதியுண்டு சிலநாளை கழித்திடாயே.

கருத்து: புனர்பூசம் ஆருடமானதால் படுமோசமான ஆபத்துகளும், பொல்லாத கண்டங்களும், பாதிக்கும் நோயும் நீங்கும். குறைவின்றி உனது குடும்பம் தழைக்கும். மாடு- மனை வகையில் லாபம் உண்டாம். வழக்குகளில் வெற்றி, புத்திர சம்பத்து, தொழில் விருத்தி உண்டு. அந்நியரான பெரியவர் ஒருவரின் உதவியால் ஆறுதலும் அமோக ஒத்துழைப்பும் உண்டாகும். ஆனால், ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவர, கஷ்டங்கள் விலகும்.

8. பூசம்:

கழித்திடுவாய் இருபத்து ஏழு நாளில்
களிப்புண்டு ஆரூடம் பூசமானால்
பழித்தவரும் இழித்தவரும் தோற்றுப்போவார்
பகைத்தவரும் நகைத்தவரும் உறவேயாவார்
தழைத்திடவே குடும்பமதில் சுபமே கூடும்
தந்தை பொருள் கிடைக்கும் நோயும் நீங்கும்
தொழில் முறையும் விர்த்தியுண்டு மேற்கோபமுண்டு
தோன்றுமுந்தன் குலதெய்வத்தால் சுகமுண்டாமே

கருத்து:  எண்ணிய எண்ணம் இடையூறின்றிப் பலிதமாகும். உன்னை அழிக்க நினைப்பவர்களும் இழிவாகப் பேசியவர்களும் தோல்வி அடைவார்கள்.

பகையாளி உன்னைக் கண்டால் அச்சப்படுவார். தற்போது உனக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால், அதிர்ஷ்டவசமான பொருள்களெல்லாம் கிடைக்கும். சுபம் உண்டாகும், நோய் நீங்கும். மேற்கு திசையிலே லாபம் உண்டு. தொழில் விருத்தியாகும். அதேநேரம், வீட்டில் குலதெய்வங்களை வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்துவர, 27-நாட்களில் உன் கஷ்டங்கள் நீங்கும். இது உத்தமம்.

9. ஆயில்யம்:

உண்டாகு மாயில்ய முதித்ததாலே
உன்மனதில் நினைப்பதெல்லாம் தடங்கலாகும்
சண்டைவரும் தெண்டமுண்டு பொருளுனக்கு
சஞ்சலத்தால் மனஞ்சலிக்கும் இடத்தைமாற்றும்
பெண்டுபிள்ளை தனைபிரிவாய் பிணியுண்டாகும்
பேசினாலுன்வாக்கு விஷம்போல் தோன்றும்
கொண்டயெண்ணம் பகல்கனவாய் மாறுமப்பா
கொடுமையது விலகதுதி நவக்கிரகத்தை

கருத்து: மனத்தில் நினைத்த எண்ணம் தடங்கலாகும். குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பகை ஏற்படும். பலவிதத்தில் பொருள் சேதம் உண்டு. சலிப்பு ஏற்படும். அதனால் இடத்தை விட்டும் மாற்றும். மனைவி- மக்களையும் பிரிய நேரிடும். சொற்பமான நோயாயினும் பெரிதும் பாதிக்கும். உனது வாக்கு பிறருக்கு விஷம் போல் தெரியும். எண்ணங்கள் எல்லாம் பகற் கனவாக மாறும். ஒரு மாதம் கழித்து நன்மை உண்டாகும். இது மத்திமப் பலன்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism