Published:Updated:

பகை கெடுக்கும் ராவண கட்கம்!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-34 கே.குமார சிவாச்சாரியார்

பகை கெடுக்கும் ராவண கட்கம்!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-34 கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:

'பகை கெடுத்தல்’ என்றதும், பகையாளியை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்ற பொருளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பகைவரின் மனத்தில் உள்ள பகைமையைப் போக்கி, அவரையும் உறவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே இதன் பொருள். 'பகைவனுக்கருள்வாய்நன்னெஞ்சே’ என்று மகாகவி பாடி வைத்ததற்கு ஏற்ப, அன்பாலும் பண்பாலும்  பகையை இல்லாமல் செய்ய வேண்டும்.

பகைவர்கள் அதை விரும்பவில்லை என்றாலும், கெடுதல் ஏதும் நினைக்காமல் அவர்களை விலகிப்போகச் செய்வதற்கான நல்ல உபாயங்களை புராணப் பகுதிகள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் ஒன்று, 'ராவண கட்க பிரயோக விதி’ எனும் வழிபாடு.

பகை கெடுக்கும் ராவண கட்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதென்ன ராவண கட்கம்? ராவணனின் கையில் இருக்கும் ஆயுதம் கட்கம். கடுந் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து வரமாக ராவணன் பெற்ற ஆயுதம் அது. அதற்குரிய மூலமந்திரத்தை பிரயோகித்துச் செய்யப்படும் பூஜையே ராவண கட்கம். எதிரிகளை விலகிப் போகச் செய்யவும், அல்லது அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளவும் உகந்தது இந்த வழிபாடு.

ஸ்ரீராமனின் சத்ரு என்றாலும், அவரை நினைத்தமாத்திரத்தில் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் ராவணன். சிறந்த சிவபக்தன்; கடும் தவத்தால் மூவுலகையும் தன் குடைக்குள் கொணர்ந்த மாலியவானின் பேரன்; இசையில் வல்லுநன்; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் ராவணனின் பெருமைகளை.

வீணை இசைப்பதில் வல்லவனான ராவணன், அகத்தியரை போட்டிக்கு அழைக்க, அவர் தமது இசைத்திறனால் விந்திய மலையை உருகவைத்த கதையைப் படித்திருப்போம். இந்தப் போட்டியில் ராவணன் தோல்வியுற்றாலும், அகத்தியரின் பரிபூரண ஆசி கிடைத்தது அவனுக்கு. இப்படி, தவசீலர்களை வணங்கி அவர்களின் ஆசியால் தெய்வ நிலை பெற்ற ராவணன், தனது வீணையில் இருந்து பல மந்திர ஒலிகளை விடுவித்தான். அவற்றில் இருந்து ராவண கட்க மூலமந்திரத்தை அகத்தியர் உருவாக்கியதாக ஞானநூல்கள் கூறும்.

இந்த மந்திரத்தை ஜபித்து வழிபடுவதால் ஆயுத பயம், ஆயுள் பற்றிய பயம், போர் அச்சம், மறைமுக எதிரிகள், உறவுகளில் ஏற்படும் எதிரிகள் ஆகியோரின் தொல்லைகள் நீங்கி, நன்மை உண்டாகும். பண்டைக்கால மன்னர்கள் பலரும் பகை வெல்லவும், விரோதிகளிடமும் அனுகூலம் பெற்றிடவும் இந்த மந்திரத்தை ஜபித்துப் பலனடைந்ததாகத் தகவல்கள் உண்டு.

ராவண கட்க பிரயோகம் விதி...

தாமிரத் தகடு ஒன்றில், படத்தில் காட்டியபடி ராவண கட்க முறையை வரைந்துகொள்ள வேண்டும். அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஈருள்ளி, வெள்ளுள்ளி ஆகியவற்றை அரைத்துத் தடவி, சந்தன- குங்குமத் திலகம் இட்டு, பூச்சூட்டி, மணைப் பலகையில் வைக்கவேண்டும்.

அடுத்ததாக, நான்கு செங்கற்களால் சதுர வடிவில் யாக பீடம் அமைத்து, சிறிது மணலை நடுவில் பரப்பிக்கொள்ளுங்கள். அதில் அரசங்குச்சிகள் (இரண்டு கைப்பிடி அளவு) வைத்து, கற்பூரம் ஏற்றி, அக்னி வளர்க்கவேண்டும். அதில் நெய் ஊற்றி, தேனில் நனைத்த தாமரை, உப்பு நீரில் நனைத்த கொள்ளு, துளசி, வெற்றிலை, வில்வம், புரசு சமித்து 108, யாகக் கூட்டுப் பொருட்கள் ஆகியவற்றை இட்டு எளிய முறையில் யக்ஞம் நடத்தி, ராவண கட்க மூல மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து தூப- தீப நிவேதனம் சமர்ப்பித்து ஆரத்தி செய்த பின்னர், யாக ரட்சையை எடுத்துத் திலகம் வைத்துக்கொள்ளலாம்.  மறுநாள் முதல், தொடர்ந்து  60 நாட்கள் காலையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்துவர வேண்டும்.

பகை கெடுக்கும் ராவண கட்கம்!

ராவண கட்க பூஜை - ஜபமுறை...

மேற்கு முகமாக மணைப் பலகையில் அமர்ந்து கீழ்க்காணும் மந்திரம் ஜபித்து வழிபட வேண்டும்.

ஓம் அஸ்யஸ்ரீ ராவண கட்க மகா மந்த்ரஸ்ய (நெற்றியில் தொடவும்)

பின்னர் (மூக்கில் தொட்டுக்கொண்டு...)

அகஸ்த்யோ பகவான் ருஷி: அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீராவண தேவதா: ஐம் பீஜம் ஹ்ரீம் சக்தி: பட் கீலகம்

(இதயத்தில் தொட்டு)

ஸ்ரீமகா ராவண க்ருபா ப்ரஸாதேன மம ஜென்ம சத்ரு
நாசன ப்ரயோக ஜபே விநியோக:

(கை கூப்பிக் கொண்டு)

ஓம் வீடன சோதராய நம:
ஓம் லங்கா ராஜ்யப்ரியாய நம:
ஓம் வீணா நாதப்ரியாய நம:
ஓம் சிவபக்தாய நம:
ஓம் தண்ட ஹஸ்தாய நம:

- என ஜபிக்கவும். தொடர்ந்து, கீழ்க்காணும் காயத்ரீ மந்திரத்தை 11 முறை கூறவும்.

ஓம் பூதேசாய வித்மஹே கட்க
                    ஹஸ்தாய தீமஹி
தந்தோ ராவண ப்ரசோதயாத்

மூலமந்திரம்:

'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம்
       க்லீம் கம் பூதேச ஹ்ரீம்
ஹ்ராம் கட்க ராவணாய ஸ்வாஹா’

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஜபித்து வர, எதிரிகளும் நண்பர்களாவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.

எதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்!

இரண்டுக்கு உரியவனுடன் குரு, புதன், சுக்கிரன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால், பொருளாதாரரீதியாக நண்பர்களும் உறவினர்களும் விரோதிகளாகிவிடுவார்கள்.

* லக்னாதிபதி உச்சம் பெற்று சந்திரனைப் பார்த்தால், செல்வம் அதிகமாகச் சேர்வதுடன், பகைவர்களும் அதிகமாவர். எனினும், அவர்களை வெற்றிகொள்ளும் ஆற்றலும் உருவாகும்.

* மூன்றாம் வீட்டோன் 6, 8, 12-ம் வீடுகளில் குரு ஸ்தானத்தில் இருந்து, அந்த ஸ்தானத்தை பாவக்கிரகங்கள் சூழ்ந்திருந்தோ அல்லது பார்த்தபடியோ இருப்பின், சகோதரர்களிடையே பகைமை உருவாகும்.

* லாபாதிபதி 12-லும், பன்னிரண்டாம் அதிபதி 2-லும், இரண்டுக்கு உடையவன் பலம் குறைந்தும் காணப்பட்டால், நட்பில் விரோதமும், சொத்துக்கள் சேதமாகும் நிலையும் உருவாகக்கூடும். தொழிலில் எதிரிகளும் உருவாவார்கள்.

* லக்னாதிபதி பலவீனமாகி, அவரது தசை நடக்கும் காலங்களில் ஜாதகருடைய அரசுப் பணி, நண்பர், உறவினர் மற்றும் திடீர் எதிரிகளால் வழக்கு உருவாகக்கூடும்.

* 10-ம் வீட்டுக்கு உடையவன் 6, 8, 12-ம் வீடுகளில் அமர்ந்து, அவர்களை பாவர் ஒருவர் பார்த்தால், பொதுமக்களிடையே விரோதம் ஏற்பட்டு, வெளிநாட்டுக்குச் செல்லும் துர்பாக்கியம் உண்டாகும்.

* சூரியனும் ராகுவும் 7-ம் இடத்தில் ஒன்றுசேர்ந்தாலும், 12-ல் சேந்திருப்பினும் பெண் வழியிலும், தங்கையின் மூலமும் எதிரிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.

ஜாதகத்தை ஆராய்வது என்பது, வருமுன் காப்பதற்காகவே! எதிரிகள் உருவாகும் காலங்களை அறிந்து, கட்க பூஜையின் மூலம் பகையை விலக்கிப் பயனடையுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism