Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 33சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 33சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:

சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும், அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காத நிலையிலும், எதிர்காலம் குறித்த வழிமுறைகளை அறிவதற்காக நம் முன்னோர் கையாண்ட யுக்திகளில் ஒன்று நட்சத்திர சக்கரம்.

இந்தச் சக்கரத்தை உபயோகிக்கும் முறை குறித்தும், அஸ்வினி முதல் ஆயில்யம் வரையிலான 9 நட்சத்திரக் கட்டங்கள் மற்றும் அவற்றுக்கான தமிழ்ப் பாடல்கள் சொன்ன பலன்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த இதழில், அடுத்த 9 நட்சத்திரக் கட்டங்கள் சொல்லும் பலன்களை அறிவோம்.

முன்னதாக, நட்சத்திர சக்கரத்தைக் கையாளும் முறையை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்வோம். காலையில் எழுந்து குளித்து முடித்து, முறைப்படி சமயச் சின்னங்கள் தரித்து, கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு, மனத்தில் இருக்கும் பிரச்னையை, கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்பின், இறைவனுக்குச் சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு, நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல், பூவின் காம்பினால் கட்டத்தில் உள்ள ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொட வேண்டும். பின்பு, நட்சத்திரக் கட்டத்தில் பூக்காம்பு தொட்டுக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அல்லது எண் எது என்று பாருங்கள். அந்த நட்சத்திரத்துக்கான பலனை, இங்கு தரப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முறையில்... நீங்கள் தொடும் நட்சத்திரத்தை வைத்தே, இந்த ஆரூடம் பலன் சொல்லும். இதனை உங்கள் ஜன்ம நட்சத்திரத் துக்கு உரிய பலனாக எண்ணிவிடக் கூடாது.

10. மகம்:

கிரகங்கள் உந்தனுக்கு பொல்லாதப்பா
கொடுமையுண்டு ஆரூடம் மகமேயானால் உறவான
பந்துக்களும் உனைப் பகைப்பார்
உன்னுடைய கைப்பொ‑ருளே விரோதமாக்கும்
விரதமுள்ள தெய்வமெல்லாம் விலகி நிற்கும்
வீண்சண்டை பொருள் விரயம் நோயுண்டாகும்
சிரமமுண்டு தொழில்தனிலே நஷ்டமுண்டாம்
சீர்பெறுவாய் மண்டலத்தில் சிவனே சாட்சி

கருத்து: நல்ல கிரகங்களெல்லாம் நீச்சம் பெற்றிருப்பதால், பற்பல கவலைகளும் சிநேகித விரோதமும் ஏற்படும். பந்துக்களும் பகைவர்கள் ஆவர். உன்னுடைய பொருளே உன்னை விரோதியாக்கிவிடும். குடும்பத்தில் சச்சரவுகளை உண்டாக்கும். அடிக்கடி நோயின் கவலையும், பொருள் விரயமும், தொழில் நஷ்டமும், மனக்கஷ்டமும் உண்டாகும். தரித்திர திசையால் மனக் கலக்கம் அதிகமாகும். தெய்வ துணையும் தூரமாக நிற்கும். ஆனால், 40 நாட்கள் கழித்து நன்மை உண்டாகும். சிவன் சாட்சியாக இது பொய்க்காது. ஆக, இந்த நட்சத்திரக் கட்டம் சொல்வது மத்திம பலனே!

ஜோதிட புராணம்!

11. பூரம்:

சாட்சியது கூறிடுவார் உனைக் கெடுக்க
சதி நினைப்பார் பூரமது உதயமானால்
தாட்சியுறும் செய்வதெல்லாம் நஷ்டமாகும்
தாயுடனே மனைவிமக்கள் பகையுண்டாகும்
கோசார திசைபோல நலியுங்காணும்
கோபத்தா லிடத்தைவிட்டு மாற்றி வைக்கும்
சூட்சமாய மோசமுனை செய்வாரப்பா
சுகம் பெருவாய் மாதமைந்திலுறுதிதானே

கருத்து: உன் கெட்ட கிரகத்தின் கோசாரத்தினால், உன்னைக் கெடுப்பதற்கு பலரும் சாட்சி கூறி வஞ்சிப்பார்கள். செய்யும் தொழிலில் தாமதமும் நஷ்டமும், காரிய அபஜயமும், நோயின் கவலையும், இடமாற்றமும் உண்டாகும். தாயும், மனைவி- மக்களும் உன்னை நிந்திப்பார்கள். மோசம் பல நேரிடும். 5 மாதங்கள் கழிய, நன்மை உண்டு.

12. உத்திரம்:

உறுதியுடன் உத்திரந்தான் உதித்ததாலே
உந்தனைப்போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை.
வறுமையிணி வாய்த்த கெண்டம் வலுத்திடாது
வம்புவழக் கொழியுமப்பா வடக்கே லாபம்
பருவமணம் கூடுமப்பா தனமேசேரும்
பகையாள ருறவாவார் தொழிலுமோங்கும்
இருபத்தி யோர் நாளில் வெளியூர்சேதி
இனி கெட்பாய் நினைத்ததெல்லாம் பலிதமாமே.

கருத்து: உன் கிரகங்கள் உச்சமாக இருப்பதால், உலகில் நல்லவிதமாக வாழ்வாய். இதுவரை, உன்னை வருத்திய வறுமையும், அல்லல்படுத்திய நோயும், கொல்ல வந்த கண்டமும் ஒழிந்தது. இனி, குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் நீங்கும். மனையில் விவாகம் நடக்கும். தாயாதி வழியில் பொருள் சேரும். வடக்கு திசையில் லாபம் உண்டாகும். பகைவர்களும் உறவாவார்கள். 21-நாட்களில், வெளியிலிருந்து நன்மையான சங்கதி வரும். எண்ணமும் பலிதமாகும். மிக உத்தமமான பலன்!

13. அஸ்தம்:

பலிதமில்லை அஸ்தமது உதயமானால்
பலவிதத்தில் நிபந்தனைகள் நேருமப்பா
வலிசண்டை வம்புகளும் வந்தே தீரும்
வழக்காடினாலுமது தோற்குமப்பா
நலி காட்டும் குடும்பத்தில் கலகமாகும்
நஷ்டமப்பா தொழில் முறைதான் நிந்தையுண்டாம்
தெளிவாகும் இருமாதம் சென்ற பின்னே
தீருமப்பா உந்தனுட துன்பந்தானே

கருத்து: அஸ்தம் உதயமானதால் உலகில் பலவித நிந்தை உண்டாகும். வலிய வரும் சண்டையும், வம்பு- வழக்குகளும் நேரும். விவாதம் செய்தாலும் தோல்வியில் முடிவடையும். நோயும், குடும்பத்தில் கலகமும் உண்டாகும். தொழிலில் நஷ்டமும் நிந்தையும் ஏற்படும். ஆனால், இரண்டு மாதங்கள் கழிந்ததும், துன்பங்கள் ஒழிந்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன்.

ஜோதிட புராணம்!

14. சித்திரை:

துன்பத்தின் மேல் துன்பமதிகரிக்கும்
தொகுத்தோர் சித்திரையு முதயமானால்
அன்புடைய அரசர்களின் பகையுண்டாகும்
ஆதரித்த பேர்களுனை அவமதிப்பார்
கன்றுடனே மாடுமனை நஷ்டமாகும்
கடன் கொடுத்து கேட்டாலே கபடம் நேரும்
ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய்தால்
ஒழியுமப்பா நாளுக்கு நாள் பீடைதானே

கருத்து:  துன்பத்துக்கு மேல் துன்பம் அதிகரிக்கும். அரசாங்க விரோதம் உண்டாகும். நீ ஆதரித்து வளர்ந்த நபர்களும் உன்னை அவமதிப்பார்கள். மாடு- கன்று நஷ்டம் ஏற்படும். மனை கொள்வதற்கு விருத்தி இராது. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால், உன்னைக் கெடுக்கவே நினைப்பார்கள். ஆனால், இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு, நவகோண கர்த்தர்களாகிய நவகிரகங்களைப் பூசிக்க, நன்மை உண்டாகும்.

15. சுவாதி:

தானாகும் சுவாதியுமே உதயமானால்
தரித்திரத்தால் பல நாளும் தயங்கச் செய்யும்
வீணாகும் ஒருவருக்கு செய்த நன்றி
விகர்ப்பமே நினைப்பார்கள் உன்னைக் கண்டால்
காணாமல் பரதேசம் போகச் செய்யும்
கடன்காரர் தொல்லையுனக் கதிகரிக்கும்
கோணாத மனைவியும் பிரிந்து போவாள்
கொடுமையது மாதம் மூன்றில் விலகும்காணே.

கருத்து:  சுவாதி உதயமாகி இருப்பதால், சோம்பல் மிகுதியாகும். தரித்திர திசையால், உதவி செய்தாலும் உபத்திரவமே உண்டாகும். குடும்பத்தில் பகை ஏற்பட்டு, கண்காணாமல் போகவும் நேரிடும். கடன்காரர்களின் தொல்லையும் உண்டு. மனைவியும் உன்னை விட்டுப் பிரிந்து போக நினைப்பாள். பலவிதமான கவலைகள் மனத்தில் குடிகொள்ளும். 3 மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கொடுமைகள் விலகும். ஆக, இந்த நட்சத்திரக்கட்டம் சொல்வது மத்திம பலனே!

16. விசாகம்:

காணவே விசாகமது உதயமானால்
கவலையே குடிகொண்ட மனமதாகும்
வேணவே மனக்கவலை அதிகரிக்கும்
வேதனையும் வாதனையும் முன்னே நிற்கும்
பூணவே பொன் பொருளு மழிந்து போகும்
பொல்லாத கலகத்தால் பெயர் கெடுக்கும்
தோணவே கவலையினால் நோய்தான் காணும்
தீதேழு வாரம் வரை தெரிகுவாயே.

கருத்து:  நீ கொண்ட எண்ணம் அபலமாகும். மனத்தில் கவலை குடிகொண்டு, பைத்தியம் பிடித்தவனாகத் திரியச்செய்யும். நாளுக்கு நாள் மனக் கவலை அதிகரிக்கும். பேய்- பிசாசுகளின் தொல்லைகள் ஏற்படும். நோயின் வாதனையும், மனவேதனையும் உண்டாகும். பொன்- பூஷணங்கள் அழியும். பலபேரின் கலகத்தால் உனக்கு துஷ்டன் என்ற கெட்ட பெயர் உண்டாகும். 7-வது வாரத்தில் இடர்கள் நீங்கி, சுகம் உண்டாகும். மத்திம பலனே!

17. அனுஷம்:

தெரியவே ஆரூடம் அனுஷமானால்
திகட்டாத செல்வமது மனையிலோங்கும்
பரிவான மணங்கூடும் நோயும் போகும்
பாதிவிட்டு போனவர்கள் வரவே நேரும்
அறிவுள்ள ஆண் குழந்தை மனையில் தோன்றும்
அதனாலே குடும்பமது மிகச் செழிக்கும்
இருபத்து மூன்று நாளில் இடரே தீரும்
இசைந்ததெல்லாம் ஜெயமடையும் இல்லை தீதே.

கருத்து: பெரியோர்களின் உதவி கிட்டும்; அபாரமான செல்வம் கிடைக்கும்; மனையில் திருமணம் நடக்கும்; ஆண் குழந்தை பிறக்கும். ஆகாத நோயும் நீங்கும். வீட்டைவிட்டுப் போனவர்களும் அதிவிரைவில் திரும்புவார்கள். குடும்பத்தில் ஒரு குறையும் வராது. மனத்தில் இருக்கும் குறைகளும் 23 நாட்களில் விலகும். உத்தம பலன் இது!

18. கேட்டை:

தீதப்பா கேட்டையது உதயமானால்
தீவிரமாய் உன் மனையில் பகையே மூளும்
வாதனையும் வஞ்சகமும் வறுமைகாட்டும்
வகையற்று பிறரிடத்தில் பொருளைச் சேர்க்கும்
சாதனையாய் வேண குற்றம் சதியும் நேரும்
சலிப்புற்று தெய்வமதை நிந்தை செய்யும்
போதனையால் குடிகெடுக்கும் பெருகும் நஷ்டம்
பேதலித்தே நாளுக்குநாள் சுகமுண்டாமே!

கருத்து: கொடும் பகையும், குடிகெடுக்கும் தீயவர்களின் கோணல் வார்த்தையும், நோயின் வேதனையும், சிநேகித வஞ்சமும், வறுமையும், மனச் சலிப்பால் தெய்வ நிந்தனையும் உண்டாகும். உன் பொருளையே பெற்றுக்கொண்டு, உன்னைப் பெரும் மோசத்துக்கு ஆளாக்குவார்கள். அபாண்டமான குற்றங்களும் உன் மீது சுமத்தப்படும். ஆனாலும், தைரியத்தைக் கைவிடாதே! கஷ்டங்கள் எல்லாம் நவகிரகாதிகளின் சகாயத்தால் சீக்கிரமே நன்மையாக மாறும்.

மீதமுள்ள நட்சத்திர கட்டங்களுக்கான பாடல்களையும் பலன்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism