Published:Updated:

ஜோதிட புராணம்!

ஆரூடம் அறிவோம் - 34சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ட்சத்திர சக்கரத்தை உபயோகிக்கும் முறை குறித்தும், அஸ்வினி முதல் கேட்டை வரையிலான 18 நட்சத்திரக் கட்டங்கள் மற்றும் அவற்றுக்குத் தமிழ்ப் பாடல்கள் சொன்ன பலன்களையும் சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த இதழில், அடுத்த 9 நட்சத்திரக் கட்டங்கள் குறித்து அறிவோம்.

19. மூலம்:

சுகமுண்டு மூலமது உதித்ததாலே
சூதுடையோர் உறவதனை விட்டுப் போகும்
அகமகிழ ஆண்டவனை நம்பி வாழ
அதனாலேயே வனுகூல மடைவாய் பாரு
ஜெகமாளும் மன்னனைப் போல் வாழ்வாயப்பா
சேய் பிறக்கும் கடன் தீரும் தெற்கே லாபம்
திகழும் தொழில் நிலபுலமும் மேன்மையாகும்
சேதி வரும் நன்மையுண்டு தெரிகுவாயே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொருள்: மூலம் ஆருடம் ஆனதால், மனத்தில் எண்ணிய காரியம் பலிதமாகும். ஆனால், வஞ்சகர்களுடன் உறவு வைத்து நெஞ்சம் கலங்கும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது. இன்னும் கொஞ்சம் நாட்களில் ஆண்டவன் சகாயத்தினால், வேண்டிய செல்வாக்குடனே வாழ்வாய். மனையில் ஒரு பெண் குழந்தை பிறக்கும். குடும்பக் கடன் தீரும். தெற்கு திசையிலே லாபம் உண்டாகும். தொழில் ஓங்கும். நிலபுலமும், நீடித்த செல்வமும், நிந்தையற்ற சிந்தனையும் உண்டாகும். வெளியிலிருந்து சந்தோஷகரமான செய்தியையும் கேட்பாய். இது உத்தமம்.

ஜோதிட புராணம்!

20. பூராடம்:

தெரியவே பூராட முதயமாச்சு
தீதற்ற உன் மனதில் தயக்கமாச்சு
அரிய பெரியோர்களின் நேசம் போச்சு
சையெல்லாம் நிராசையாய் மாறலாச்சு
பெரியோர்கள் தேடி வைத்த பொருளும் போச்சு
பெண்மணியால் குடும்பத்தில் கலகமாச்சு
சரியற்ற குற்றம் பல உனக்குண்டாச்சு
சஞ்சலமே நீங்குமப்பா வருடமொன்றில்

பொருள்: பூராடத்தின் பலன் என்னவென்றால், தைரியமும் அரிய பெரியோர்களுடைய அன்பும் நீங்கும். பிரிவும், துன்பமும் நேரும். தெளிவுள்ள உன் மனத்தில் தயக்கம் உண்டாகும். மூத்தோர்கள் தேடி வைத்த மூலதனம் அழியும். உனது ஆசையெல்லாம் நிராசையாகும். ஒரு கன்னிகையால் குடும்பம் களங்கப்படும். மனம் துணியாத குற்றமெல்லாம் செய்ய நேரிடும். ஒரு வருடம் வரை, கொஞ்சம் சஞ்சலமாகவே இருக்கும். இது மத்திமம்.

21. உத்திராடம்:

வருடமது ஏழுவரை லாபமுண்டு
வருத்தமில்லை உத்திராட முதயமானால்,
பெருமையுறும் குடும்பமதில் செல்வமோங்கும்
பொன் பொருளும் நாணயங்கள் மிகவுண்டாகும்
உனைக் கெடுக்கும் நோயதுதான் ஒழிந்து போகும்
உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியாகும்
சிறுமைப்பட்டு மனையை விட்டு தாண்டினோரும்
சீக்கிரத்தில் வீடு வந்து சேருவாரே

ஜோதிட புராணம்!

பொருள்: உத்திராடத்தின் பலனால் உனக்கு ஏழு வருஷம் வரையில் அதிக செல்வாக்கும், குடும்பச் சிறப்பும், பொன் பூஷண சேகரிப்பும், உடன்பிறந்த சகோதரர்களால் ஒத்துழைப்பும், பந்துக்களின் உதவியும் உண்டாகும். பீடிக்கும் நோயானது நீடிக்காமல் நீங்கும். சில நாளைக்கு முன்பு வறுமையால் வாடி, தேசாந்திரம் சென்றவரும், சீக்கிரத்தில் வீடு வந்து சேருவார். பத்து நாட்களுக்குள் பலவிதமான துயரங்களும் மாறிப் போகும். இது உத்தமம்.

22. திருவோணம்:

சேரவே திருவோண முதயமானால்
சீக்கிரமாய் ஜெயங்கூடும் சிக்கவில்லை
நேரவே வெளியூருக்கு போக நன்றாம்
நிர்மயமாய் யாத்திரையும் போக நன்றாம்
தேரவே வியாபாரம் செய்ய நன்றாம்
சிறுவர்களை பள்ளிதனிலமர்த்த நன்றாம்
கோரவே உந்தன் தெய்வந்தன்னை
குடும்பமது செழித்தோங்கும் குணமிதாமே

பொருள்: நீ எண்ணிய எண்ணமெல்லாம் இன்னல் இல்லாமல் ஜெயமாகும். குடும்பத்தில் சிக்கல் இருக்காது. வியாபார காரியமாக வெளியூருக்குப் போக, லாபம் உண்டாகும். தெய்வ திருத்தலங்களுக்கு யாத்திரை போக, நன்மை உண்டாகும். தொழிலில் மேன்மை உண்டு. பாலர்களை பள்ளியில் அமர்த்த கல்வி ஓங்கும். நாளுக்கு நாள் மேலுக்கு மேலாக உன் குடும்பம் மேன்மை அடையும். குல தெய்வங்களை மறவாமல் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்ய நலம் உண்டாகும். இது உத்தமம்.

23. அவிட்டம்:

குணமான அவிட்டத்தின் குறியைக்கேளாய்
கொற்றவனே வெகுநாளாய் துயர்க்குள்ளானாய்
இனமான பந்துகட்கு எதிரியானாய்
இழிவான துஷ்டர்களால் இடர்க்குள்ளானாய்
பணம் தேட பாடுபட்டும் நஷ்டமானாய்
பாழான நோயினால் பதரலானாய்
கனமான சுக்கிரனும் பார்வை பெற்றான்
கவலையெல்லாம் இனிவிலகும் கலங்கிடாதே.

பொருள்: உங்களுக்கு அவிட்டம் உதயமாகியுள்ளது. இதுவரையில் வெகுகாலமாக மிக மிக துயரப்பட்டீர்கள். சொந்தபந்தங்களுக்கும் பகையானீர்கள். பல துஷ்டர்களின் இடரினால், மனக்கவலையும் தொழிலில் நஷ்டமும் வாய்த்தது. நோயாலும் கண்டங்களாலும் பாதிக்கப்பட்டீர்கள். ஆனால், சுக்கிரன் உங்களுக்கு ஏழாமிடத்தில் பார்வை பெற்றிருக்கிறான். ஆதலால், இனி நாளுக்கு நாள் உங்கள் கவலைகளெல்லாம் படிப்படியாக நீங்கும்; க்ஷேமம் அடைவீர்கள்; அச்சம் தேவையில்லை. இது உத்தமம்.

24 சதயம்:

கலங்காதே சதயமது உதயமானால்
காணாத பொருள்களெல்லாம் கருத்தாய் கிட்டும்
நிலவளமும் மாடுமனை கொள்ள நன்றாம்
நீனிலத்தில் பயிர்செழிக்கும் தனமுமோங்கும்
பலபலவாய் எண்ணமெல்லாம் பலிதமாகும்.
பலமான உத்யோகம் கிடைக்குமப்பா
நலமான காரியங்கள் நடக்கலாகும்
நாளுக்கு நாள் குடும்பம் தழைக்குமாமே!

பொருள்: சதயம் ஆரூடமானதால், கனவில் கண்ட பொருளானாலும், நிஜத்தில் கிட்டும். நில வளமும், மாடு- ஆடு விலைகொள்ள, பால் பாக்கியமும், மனை விலை கொள்ள விருத்திகரமும், தான்ய விளைவும் தன லாபமும், உத்தியோக மேன்மையும், குடும்பத்தில் பலவிதமான நற்காரியங்களும் கைகூடும். நோய்கள் நீங்கும். எந்தவிதமான நல்ல எண்ணமும் நினைத்தபோதில் தடையின்றிப் பலிதமாகும். நாளுக்கு நாள் குடும்பக் கவலைகளும் நீங்கும். இது உத்தமம்.

ஜோதிட புராணம்!

25. பூரட்டாதி:

தழைக்கவே பூரட்டாதி உதயமானால்
தப்பாதுன் வாக்குதான் செல்வமோங்கும்
இழைக்கவே உனக்கிடர் விளைத்த பேர்கள்
இழிவான நோய் நொடியில் மாள்வாரப்பா
குழைக்கவே பொன் பொருளும் குவிய வாழ்வாய்
கொண்ட தொரு பெண்ணாலே குலந்தழைக்கும்
பிழைக்கவே நீடுழிகாலம் வாழ்வாய்
பதினேழு நாள் போக பலிதமாமே!

பொருள்: பூரட்டாதி உதயமானதால், உங்கள் புகழானது ஓங்கும். நாணயம் தவறாத சொல்லுறுதி உண்டாகும். செல்வம் ஓங்கும். உங்களுக்கு இதுவரையிலும் இடைஞ்சல் புரிந்த ஈனர்கள் ஒழிவார்கள். தன-தான்யக் குவியலும், பொன் பூஷண சேர்க்கையும் உண்டாகும். கொண்ட குணவதியினால் குடும்பம் தழைத்தோங்கும். கெடுதலான கண்டங்களும் நீங்கி, ஆயுள் பலத்தைக் கொடுக்கும். எண்ணங்கள் பலவிதமாகும். இது உத்தமம்.

26. உத்திரட்டாதி:  

பலிக்குமுத்தி ரட்டாதி உதயமானால்
பலமான தொழில் பெரும் சுகமுமோங்கும்
களந்திடவே குருபார்வை யாதலாலே
கவலையுடன் கஷ்டமும் கலகமும் நீங்கும்
துளிர்த்திடவே மணங்கூடும் மகப்பேறாகும்
துலைதூர செய்தி வரும் பிணியும் போகும்
அளித்திடுவான் கருணையது கந்தநாதன்
ஆழிசூழ் உலகினிலே வாழி வாழி!

பொருள்: உத்திரட்டாதி ஆரூடமாக வந்ததால், ஆழிசூழ் உலகில் ஆறுமுகனின் கருணையால் ஆனந்தம் பெருக வாழ்வீர்கள். பலமான தொழில் பெருகும். குடும்ப சுகம் ஏற்படும். தவிர, குரு ஐந்தாமிடத்தின் பார்வையாதலால் அலைச்சலும், கவலையும், கஷ்டமும், குடும்பத்தில் கலகமும் நீங்கும். மனையில் கல்யாண காரியங்களும் புத்திர சம்பத்தும் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நோயும் கண்டமும் நீங்கும். இது உத்தமம்.

27 ரேவதி:

வாழவே ரேவதி தானுதயமானால்,
வம்புகளும், வழக்குகளும் விலகிப் போகும்
தாழவே யிருத்திட்ட வியாபாரந்தான்
தனலாபமோங்கிடவே விர்த்தியாகும்
சூழவே உந்தனுட குடும்பந்தன்னில்
சுகம் பெருத்து மிகத்துயரு மற்றுப்போகும்.
ஏழையாயிருந்தாலும் இனிமேலுந்தன்
இடர் நீங்கி சுகம் பெறுவாய் இனிமேல்தானே!

பொருள்: ரேவதியின் பலனாவது என்னவென்றால், குடும்பத்தின் பலவித வம்புகளும், வழக்குகளும் விலகும். கீழ்த்தரமாக இருந்த உங்களின் தொழிலானது உயர்வடைந்து மேலோங்கும். உங்களின் துன்பங்கள் எல்லாம் சில நாளைக்குள் இன்பமாக மாறிப்போகும். எதைச் செய்தபோதிலும் ஒரு இன்னலும் ஏற்படாது. உங்களின் எண்ணமும் பலிதமாகும். இது உத்தமம்.

நட்சத்திர சக்கரத்தைக் கையாளும் முறை

காலையில் எழுந்து குளித்து முடித்து, முறைப்படி சமயச் சின்னங்கள் தரித்து, கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு, மனத்தில் இருக்கும் பிரச்னையை, கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்பின், இறைவனுக்குச் சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு, நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல், பூவின் காம்பினால் கட்டத்தில் உள்ள ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொட வேண்டும். பின்பு, நட்சத்திரக் கட்டத்தில் பூக்காம்பு தொட்டுக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அல்லது எண் எது என்று பாருங்கள். அந்த நட்சத்திரத்துக்கான பலனை, இங்கு தரப் பட்டிருக்கும் தமிழ்ப் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் தொடும் நட்சத்திரத்தை வைத்தே ஆரூடம் சொல்லும் முறை இது. இதன் மூலம் அறியும் பலனை உங்கள் ஜன்ம நட்சத்திரத்துக்கு உரிய பலனாக எண்ணிவிடக் கூடாது.