Published:Updated:

ஜோதிட புராணம்! - 35

ஜோதிடத்தில் எண்கள்! 'சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர் காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. மேலும் எண்கணிதம் மிக சுலபமானது. இதன் மூலம் ஓர் எண்ணின் சக்தியை நிர்ணயிக்க முடியும் என்றாலும், ஜோதிடம் மற்றும் கைரேகை சாஸ்திரம் ஆகியவற்றின் கூட்டுறவால் நிர்ணயிக்கப்படும் எண்ணானது மிக சக்தி வாய்ந்ததாக அமையும்.

எண்களும் கிரகங்களும்...

சூரியன் - 1

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்திரன் - 2

குரு - 3

ராகு - 4

புதன் - 5

சுக்கிரன் - 6

கேது - 7

சனி - 8

செவ்வாய் - 9

இதேபோன்று மேல்நாட்டு எண் ஜோதிட முறைப்படி, ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அட்டவணை இங்கே...

ஜோதிட புராணம்! -  35

இதைப் பித்தகோரஸ் முறை என்பார்கள். மற்றொரு முறை உண்டு. அதன் விவரம்:

ஜோதிட புராணம்! -  35

இந்த முறையில் 9-ம் எண்ணுக்கு எந்த எழுத்தும் இல்லை. இந்த முறையை சாண்டியல்யர்களும், ஹீப்ரு இனத்தவரும் பயன்படுத்திய விவரம், பண்டைய நூல்களில் இருந்தும் குறிப்புகளில் இருந்தும் தெரிய வருகிறது. மேலும், எண் 9-ஐ கடவுளுக்கு உரியதாகக் குறிப்பிடுகிறார்கள். எண்களுக்கென ஆச்சரியமான விஷயங்கள் உண்டு. அவற்றில் எண் 9-ஐ உதாரணமாகக் கொண்டு சிலவற்றை பார்ப்போம்.

எண் 9-ஐ எதனுடன் பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை 9 ஆகிறது. இது அனைவரும் அறிந்ததே. நவம் என்பது எண் 9-ஐ குறிக்கும். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவபாஷாணம், நவதானியம் என்று பலவும் இந்த எண்ணைச் சார்ந்து வரும். எண் '3’ தேவ குருவைக் குறிப்பது போன்று, எண் '6’ அசுர குருவான சுக்கிரனைக் குறிக்கும். இந்த இரண்டு எண்ணின் கூட்டுத்தொகை 9 என்றாகி கடவுளைக் குறிக்கும். அதேபோன்று அடிப்படை எண்களான 1-ல் இருந்து 9 வரையில் உள்ள எண்களைக் கூட்டி வரும் தொகையானது 45 ஆகிறது. இதையும் 4 5 என்று கூட்டினால் வருவதும் '9’!

ஒரு பெரிய விண்மீனின் இயக்கவைப்பு (Great sidereal Year) ஆண்டு என்பது 25,920 வருடங்களை கொண்டது. இதன் கூட்டுத்தொகையும் 9 ஆகிறது (2 + 5 + 9 + 2 + 0 = 18; 1 + 8 = 9)!

ஓர் ஆய்வின்படி, பூமியில் நடக்கும் பெரும் மாற்றங்கள் எல்லாம், சராசரியாக 180 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாகக் குறிப் பிடப்படுகிறது. இதன் கூட்டுத்தொகையும் ஒன்பதுதான். ஜோதிடம் சொல்லும் 360 டிகிரியிலும் கூட்டுத்தொகை 9. நட்சத்திரங்கள் மொத்தம் 27; கூட்டுத் தொகை 9. அதேபோன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள்; ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்கள் எனும்போது, மொத்தம் 9 பாதங்கள். இதிலும் ஒன்பதுதான்!

ஜோதிட புராணம்! -  35

ஒரு நாளில் 86,400 விநாடிகள். இதிலும் கூட்டுத்தொகை- 9. பிராணாயாமப்படி மனித சுவாசம் சராசரியாக நிமிடத்துக்கு 18 முறையாகும். மனிதனின் சராசரி இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 72 முறை. இவற்றிலும் கூட்டுத்தொகையைக் கவனித்தால் '9’ என்று வரும். ஒரு நாளில் மனிதனின் சுவாசம் 25,920 முறை; எண்களின் கூட்டுத்தொகை -9. ஒருநாளில் மனிதனின் இதயத் துடிப்பு சராசரியாக 1,03,680 முறை. இந்த எண்களின் கூட்டுத்தொகை - 9.

இதுபோலவே ஒவ்வொரு எண்ணுக்கும் உகந்த சிறப்புகளும் மகிமைகளும் நிறைய உண்டு.

உடலில் ஆட்சி செய்யும் சக்கரங்களான சகஸ்ரார மையம், ஆக்ஞா மையம், விசுத்தி மையம், அனாகத மையம், மணிப்பூரக மையம், சுவாதிஷ்டானம், மூலாதார மையம்  ஆகியவற்றை எண்களே ஆட்சி செய்கின்றன. இவை ஒவ்வொன்றுக்குமான எண்கள் கீழ்க்காணும்படி கொடுக்கப்பட்டுள்ளன.

சகஸ்ரார மையம் - எண் 5 - புதன்

ஆக்ஞா மையம் - எண் 3 - குரு

விசுத்தி மையம் - எண் 6 - சுக்கிரன்

அனாகத மையம் - எண் 8 - சனி

மணிப்பூரகம் - எண் 1 - சூரியன்

சுவாதிஷ்டானம் - எண் 2 - சந்திரன்

மூலாதார மையம் - எண் 9 - செவ்வாய்.

இதிலிருந்து எண்கள் நமது புலனுக்கு அப்பாற்பட்ட, நம்மைச் சார்ந்த, நம்முடைய சக்தியை பண்படுத்தவும் செய்கின்றன என்பது உண்மை. அதனை நன்கு ஆராய்ந்து அறிந்து, எண்களைச் சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்.

எண்களின் உயர்வும் மகிமையும்

எண் - 1 : இறைவன் ஒருவனே; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை விளக்கி நிற்பது.

எண் - 2 : சிவனும் சக்தியும் இரண்டாயினும், அந்த இரண்டும்  ஒன்றாகி நிற்கும் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் மூலம் தனது சிறப்பை உணர்த்துகிறது, 2 எனும் எண்.

எண் - 3 : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்கின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மூவர். கல்வி, செல்வம், வீரம் ஆகிய சௌபாக்கியங்களை அருளும் தேவியர் மூவர். சிவனாருக்கு கண்கள் மூன்று, அவர் கையில் இருப்பது மும்முனைகளைக் கொண்ட திரிசூலம். எனவே, எண் 3-ம் தெய்விகமானது.

ஜோதிட புராணம்! -  35

எண் - 4 : வேதங்கள் நான்கு. அவற்றின் உதவியோடு படைத்தலை பரிபாலிக்கும் பிரம்மனுக்கு முகங்கள் நான்கு.

எண் - 5 : இயற்கையில் வியாபித்திருக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்து. மனித உடலில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இந்திரியங்கள் ஐந்து. தொடுதல், ருசித்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகிய உணர்வுகளும் ஐந்து. இது ஐந்தின் சிறப்பு.

எண் - 6 : தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு. ஜீவன்களை யெல்லாம் ஆற்றுப்படுத்துகின்றவனும், அவற்றுக்கு ஆறுதல் கூறுகின்றவனுமான முருகன் ஆறுமுகன். 6 எனும் எண்ணுக்கு இதைவிடச் சிறப்பு வேண்டுமா?!

எண் - 7 : வேதங்களையும், சாஸ்திரங்களையும் உலகுக்குத் தந்து அறிவுஜீவிகளாக, விண்ணிலே நட்சத்திரங்களாக, வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் ரிஷிகள் ஏழுபேர் (சப்தரிஷிகள்).

எண் - 8 : நாம் வாழும் பூமியைச் சூழ்ந்துள்ள திசைகள் எட்டு. அவற்றின் காவலர்களாக விளங்கும் தேவர்கள்... கிழக்கு - சூரியன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - யமன், தென்மேற்கு- நிருருத்தியை, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈஸ்வரன். அதேபோல், செல்வங்களை வாரி வழங்கும் லட்சுமியும் அஷ்ட லட்சுமிகளாக பூஜிக்கப்படுகிறாள். இத்தகைய 8-ம் எண்ணை அதிர்ஷ்டமில்லாத எண் என்று சொல்ல முடியுமா?

எண் - 9: இந்த எண்ணைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். எண் 9-ஐ போன்று நிலையான எண் வேறு எதுவுமில்லை. அதனால்தான் தேவியைப் பூஜிக்க நவராத்திரியை தேர்ந்தெடுத்து உள்ளோம். வாழ்க்கையில் அவரவர் கர்மவினைப்படி நன்மை - தீமைகளை நிகழச்செய்து, நம்மை நடத்திச் செல்லும் நவக்கிரக மூர்த்தியரும் ஒன்பது பேர்.

இப்படி ஒவ்வொரு எண்ணும் ஒரு உயர்ந்த தன்மையை விளக்கி நிற்கும்போது, இந்த எண்தான் ராசியானது- அதிர்ஷ்டமானது; இந்த எண் கெடுதல் விளைவிக்கும் என்று பாகுபாடு பார்ப்பது அறிவீனம். ஒரு தெருவில் வீடுகளுக்கு எண்கள் இடும்போது, ஒன்று முதல் தொடர்வரிசையில் எண்கள் தருவார்கள். இப்போதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருக்களின் பெயர்களையும் வீடுகளின் எண்களையும் மாற்றிவிடுகிறார்கள். சில நேரம் ஊரின் பெயரையே மாற்றிவிடுகிறார்கள்!

இப்படியிருக்க, ஏற்கெனவே ஒரு வீட்டின் எண் அதிர்ஷ்டமானது  என்று நினைத்துக்கொண்டிருப்பவர், அந்த வீட்டின் எண்  மாற்றப்படும்போது... ராசியான எண் வேண்டும் என்பதற்காக வீட்டை மாற்ற முடியுமா?

எண்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், வீடு அல்லது வாகனத்தின் எண்களை, தன் பெயரின் எழுத்துக்களுக்கு உரிய எண்ணாக வைத்துக்கொண்டு, அதன் மூலம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமில்லை என்பது ஆன்றோர் கருத்து. எண்கள் விஷயத்தில் அவர்களின் வழிகாட்டுதல் நிறைய உண்டு. அதுபற்றி அடுத்த இதழில்...

(இன்னும் வரும்)