Election bannerElection banner
Published:Updated:

பூர்வ ஜன்ம ஞாபகம்!

செவ்வாய் சேர்க்கை... 'ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி

செவ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. அங்காரகனான இவர் எந்தெந்த கிரகங்களுடன் இணைந்து, என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை அறிவோமா?

செவ்வாய் - சூரியன்: எப்போதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள், எடுத்த காரியத்தை திறமையுடனும், வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக முனைவார்கள். தைரியம் மிக்கவர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். நல்ல குணங்களுடன் திகழ்வார்கள். பரந்த நோக்கம் கொண்டவர்கள்.  கூடப் பிறந்த தம்பிகளிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள். வாழ்க்கையில் சிரமங்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும். கடைசி வரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

பூர்வ ஜன்ம ஞாபகம்!

செவ்வாய் - சந்திரன்: சிவந்த மேனியுடன், அழகான உடல் அமைப்பு பெற்றிருப்பர். கல்வியில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், ஆசார அனுஷ்டானங்களிலும் தெய்வ வழிபாடுகளிலும் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள். விவசாயத்தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபடுவர். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்களாகவும், அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிப்படைபவர்களாகவும் இருப்பர். மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முத்து, பவழம் முதலியவைகளை வியாபாரம் செய்வர்.

செவ்வாய் - புதன்: தாய்மாமன் வகையில் வாழ்க்கைத் துணை அமையும். எதிர்பாராத வகையில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். புளிப்பு, காரம் இவைகள் அதிகமுள்ள உணவு வகைகளை   விரும்பிச் சாப்பிடுவார்கள். ராணுவத்தில் கணக்குத் துறையுடன் தொடர்புடைய வேலையில் அமர்ந்திருப்பார்கள். நல்ல உயரமும் பருமனும் கொண்டிருக்கும் இவர்கள் செய்யும் தொழிலில் இவர்களது பிள்ளைகளும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அந்தஸ்தில் குறைந்தவர்களிடம் அலட்சியத்துடனும், அதிகாரத்துடனும் நடந்துகொள்வார்கள். சொந்த வீட்டில் இவர்களால் இருக்க முடியாது. ஓரளவு தானம், தர்மம் செய்வார்கள்.

செவ்வாய் - குரு: பெரியவர்களிடம் பக்தி காட்டுவர். ஆடம்பரமின்றி அமைதியான குடும்பம் அமையும். கௌரவமான உத்தியோகத்தில் இருந்துகொண்டு  வீடு, வாசல், வாகன சுகங்களை அனுபவிப்பர். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். மடம், கல்வி அறக்கட்டளை போன்ற சமூக நலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சகல சுகங்களையும் அனுபவிப்பர். கல்வித் தகுதி குறைவாக இருந்தாலும் நல்ல உத்தியோகம்  அமையும். மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க கூடியவர்களாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிரிகள் இருந்தாலும் அவர்களால் பாதிப்புகள் இருக்காது.

செவ்வாய் - சுக்கிரன்: தாயாருக்கு உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். தாயாருடனான உறவு சுமுகமாக இருக்காது. எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்துகொண்டே இருக்கும். கடன்களும் தொல்லை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். அழகான உடல் அமைப்புடன் ராஜ கம்பீரம் பெற்றுத் திகழ்வார்கள். விரோதங்கள் நிறைந்திருந்தாலும் சபையில் மரியாதையுடன் நடத்தப்படுவர். மனைவி வழியில் ஆதரவு இருக்காது. கடல் வாழ் பொருள்கள் சார்ந்த வியாபாரம் செய்வர்.

செவ்வாய்- சனி: இரும்பு, திராவகம் தொடர்புள்ள வியாபாரம் செய்வார்கள். தந்திரசாலிகளாக நடந்துகொண்டு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திடமான சரீரம் கொண்டவர்களாக இருப்பர். சுக சௌகர்யங்களுடன் வாழ விரும்புவார்கள். மாந்திரீக சக்தியைப் பெற்றிருப்பர். மனைவியிடம் மிகுந்த அன்புடன் இருப்பார்கள். பெரிய குடும்பத்தைப் போஷிப்பவர்களாகவும்,  சிறந்த கவிஞர்களாகவும் திகழ்வார்கள். நண்பர்களின் கலக வார்த்தைகளைக் கேட்கவும், அதனால் அவ்வப்போது சஞ்சலத்துக்கு ஆட்படவும் நேரிடும்.

செவ்வாய் - ராகு: அடிக்கடி வீண் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் விருப்பம் இருக்காது. தீய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் தொல்லைகளும் உண்டாகும்.  தகாத செயலில் ஈடுபட்டு சிறைக்குச்  செல்லக்கூடிய  வாய்ப்புகள் அதிகம். வீட்டை விட்டும், நாட்டை விட்டும் பிரிந்து வசிக்க நேரிடும். உறவினர்களுடன் பகைமை கொண்டிருப்பர். தெய்வ நம்பிக்கை, சாஸ்திர நம்பிக்கை குறைவாக இருக்கும். மனைவி, மக்களிடத்தில் பிரியமாக இருப்பர். பழைய வாகனங்களை வாங்குவதில் விருப்பம் இருக்கும். வியாபார நோக்கில் பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்து லாபத்துக்கு விற்பர்.

செவ்வாய் - கேது: வாழையடி வாழையாக இவருடைய வம்சம் தழைத்தோங்கும். ஆண்குழந்தைகளே அதிகம் பிறக்கும். உடல் வலிமையும், தேஜஸும், நல்ல குணங்களும், அழகான கண்களும் கொண்டிருக்கும் இவர்கள் தர்ம சிந்தை உள்ளவர்களாகத் திகழ்வர். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். இவர்களில் சிலர் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். எங்கும் எதிலும் வெற்றியே பெறுவர். ஏரி, குளம், கிணறு வெட்டுதல், கோயில் நிர்மாணம் போன்றவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உடன்பிறந்த சகோதரர்களிடம் அதிக பாசம் கொண்டிருப்பதுடன் அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பர். பூர்வஜன்மம் பற்றிய ஞானம் இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு