Published:Updated:

ஜோதிட புராணம்! - 36

பெயரும் புகழும் சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஜோதிட புராணம்! - 36

பெயரும் புகழும் சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:

ருவரது பெயரை அவரது பிறந்த நட்சத்திரம் அல்லது ராசிக்கேற்ப மாற்றி விட்டால், அவருடைய கஷ்டங்களையெல்லாம் போக்கி மிக உயர்ந்த வாழ்க்கை அமைந்திட வழிபிறக்கச் செய்யலாம் என்பது பெயர் ராசியில் நம்பிக்கையுள்ள சிலரது கருத்து.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரல்ல, பல பெயர்கள் வைக்கப்படுகின்றன. நமது இந்து தர்ம மரபின்படி, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவில் பாட்டனார் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் எல்லாவற்றையும் சேர்த்து அனுக்கிரஹமான ஒரு தெய்வத்தின் பெயரோடு அதை இணைத்து, பெயர் சூட்டி, குழந்தையின் காதில் அந்தப் பெயரை சொல்லுகிறார்கள். சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு 'வள்ளியூர் வரதராஜ வேங்கட தாமோதரன்’ என்று நீளமான பெயர், அதனுடைய பெயர்சூட்டு விழாவின்போது வைக்கப்படுகிறது. ஆனால் தாத்தா இருக்கும்போது தாத்தா பெயரைச் சொல்லி கூப்பிடக்கூடாது என்ற சம்பிரதாயத்துக்காக பெயர்கள் சுருக்கப்பட்டு, கூப்பிட அழகாக இருக்கும்படி மாறும். அந்த வகையில் வரதராஜ தாமோதரன் என்ற நீளமான பெயரைக் கூப்பிடும்போது 'வரதா’ என்றோ 'வெங்கட்’ என்றோ 'தாமு’ என்றோ சில நேரங்களில் தாமு என்பதை 'டேம்’ என்றோ அழைப்பார்கள்! சில நேரம் அன்பு, பாசம் காரணமாக 'தாமு குட்டி’ 'தாமுக் கண்ணா’ என்று கூட மாறிவிடலாம்!

பள்ளியில் படிக்கும் நண்பர்கள் நட்பின் காரணமாக இவனுக்கு வேறு பெயர்கள் தருவார்கள். ஆசிரியரும் அவர் விருப்பம் போல் ஒரு பட்டப் பேர் சொல்லி கூப்பிடுவார். பள்ளிக்கு அடிக்கடி லீவ் போட்டுவிடுவதால் அவனை 'வராத’ராஜன் என்று வாத்தியார் கூப்பிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிட புராணம்! - 36

இப்படி பல பெயர்களால் கூப்பிடப்பட்டாலும் ஆசாமி ஒருவன்தான். இவன் எந்தப் பெயரை ராசி பார்த்து வைத்துக்கொள்வது என்று சிந்திக்கும் போது, இவன் பிறந்தநாளைக் குறிப்பிட்டு, அதன் எண்ணிக்கையை கணக்கிட்டு, எண்ணையும் எழுத்தையும் சேர்த்து, அவர் ஒரு புது பெயர் வைத்துக் கொள்கிறார். ஆனால் கையெழுத்து போட எளிதாக இருக்கிறதென்று வரதராஜ வேங்கட தாமோதரன் என்ற பெயரை வி.வி.டி. என்று அவன் போடுகிறான். அதை வைத்துதான் அவன் நண்பர்கள் அவனுக்கு 'தேங்காய் எண்ணெய்’ என்று பட்டப் பெயர் வைத்தார்கள்!

அவனுடைய திருமணப் பத்திரிகையில், ஞாபகமாக முதலில் வைத்த பெயரை நீளமாக 'வரதராஜ வேங்கட தாமோதரன் என்கிற ராஜ் என்பவருக்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். 'ராஜ்’ என்பது அவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் விரும்பியபடி வைத்து கொண்ட பெயர். இதில் எண் ஜோதிடம் பார்த்து, எழுத்தை மாற்றி, எந்தப் பெயர் வைப்பார்கள் என்று புரியவில்லை.

அப்படி மாற்றி கொண்டபின், சரியான பலன் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பழைய பெயர்களில் ஒன்றையே வைத்துக் கொள்வாரா? அல்லது புதிய பெயரை தேடுவாரா? ஒருவர் பெயரை மட்டும் மாற்றி வைத்து, அவரை அதிர்ஷ்டம் மிக்கவராகவும், அறிவாற்றல் உடையவராகவும், செல்வந்தராகவும் ஆக்கிவிடக் கூடிய சாஸ்திரம் ஒன்று நிச்சயமாக இருக்குமானால், அதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடி, வதங்கி, அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் சுமார் 70 கோடி மக்களின் பெயர்களையும் மாற்றி,

அவர்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும்படி செய்துவிட்டால், நம் நாடு ஏழையே இல்லாத, செல்வம் செழிக்கும் நாடாகிவிடும் அல்லவா? பெயரையும் கையெழுத்தையும் மாற்றித் தலையெழுத்தை மாற்றிவிட முடியுமானால், அதை முறைப்படி செய்வோம். முதலில் செய்வோம். வறுமையும் ஏழ்மையும் இல்லா வளமிக்க நாட்டை உருவாக்குவோம்.

எண்ணும் எழுத்தும் ஜோதிடமா?

எண்ணைக் கொண்டு எழுத்தையும், எழுத்தைக் கொண்டு எண்ணையும் கூட்டிக் கழித்து பெயர் வைப்பதால் அந்தப் பெயர் அதிர்ஷ்டப் பெயர் ஆகிவிடுமா?

ஒரு மனிதனுடைய வாழ்க்கை சகல சௌபாக்கியங்களுடன், சிக்கல்களும், பிரச்னைகளும் இல்லாமல், அவன் நினைத்தபடி நடந்து கொண்டிருக்கும்போது, ஜோதிடத்தைப் பற்றியோ, ஆரூடத்தைப் பற்றியோ, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்டக் கல், அதிர்ஷ்டப் பெயர் என்பதைப் பற்றியோ அவன் கவலைப் படுவதில்லை. ஆனால், ஒருவனுடைய வாழ்க்கையில் முயற்சி செய்யும்போதெல்லாம் முட்டுக்கட்டைகள், உயர்கின்ற படிக்கட்டுகளில் எல்லாம் தடைக்கற்கள், தாமதம், ஏமாற்றம், பொருளாதாரச் சிக்கல், குடும்பப் பிரச்னைகள், வழக்குகள் போன்றவை தோன்றும்போதுதான் மனதில் பயமும், பீதியும் அதிகமாகி, பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகிறது. அப்போதுதான் மனிதர்களிடம் ஜோதிட சாஸ்திர நம்பிக்கை, பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் தீவிரமான ஈடுபாடு தோன்றுகிறது.

'பித்தம் தலைக்கேறிய ஒருவன், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைவான்’ என ஒரு பழமொழி உண்டு. அதுபோல கஷ்டங்கள் ஏற்படும்போதும், முன்னேற்றங்களுக்குத் தடை உண்டாகும்போதும், எல்லோரும் ஜோதிடர்களையும், ஆரூடம் பார்ப்பவர்களையும் தேடிச் செல்கிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை.

நமது துன்பங்களுக்கு நாம் காரணமா? அல்லது நம்மை ஆட்டிப்படைக்கும் கிரஹங்களின் சக்தி காரணமா? என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குரிய பரிகாரம் மற்றும் பிரார்த்தனை வழிமுறைகளைத் தெரிந்துகொள்வது, நம் ஆன்றோர்கள் காட்டியுள்ள வழிதான்.

அதேபோல், நியூமராலஜி என்ற பெயரில் மக்களிடையே பிரபலமாகிவரும் எண் ஜோதிடம், பெயர் ராசி, அதிர்ஷ்டப் பெயர்கள் போன்றவை எவ்வளவு தூரம் நமக்கு பலனளிக்கும் என்பதையும் ஆராய்ந்து அறிவது அவசியம்.

அதிர்ஷ்டத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற பெயரை மாற்றிக்கொண்டால் முடியுமா என்பது ஓர் அறிவுபூர்வமான கேள்வி. இந்தப் பெயரை எந்த அடிப்படையில் மாற்றுகிறோம் என்பதே சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

நம் முன்னோர் நமக்குப் பெயர் வைத்ததில் சாஸ்திரம், சம்பிரதாயம், கலாசாரம், தெய்விகம், தார்மிகம் போன்ற அனைத்தும் அடங்கியுள்ளது. அப்படியான பெயரை, எண்கணித அடிப்படையில் அதிர்ஷ்டப் பெயராக மாற்றுவதால் பலன் கிடைக்குமா? என்ன விதமாக கிடைக்கும்? பெயர் மாற்றங்களை என்ன அடிப்படையில் செய்கிறார்கள்... எல்லாவற்றையும் விரிவாக அடுத்த அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம்.

(இன்னும் வரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism