Election bannerElection banner
Published:Updated:

செல்வமும் கீர்த்தியும் யாருக்கு?

கிரகங்களின் சேர்க்கை...ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். நவகிரகங்களில் புத பகவானின் அனுக்கிரகம் வாய்ப்பதும் அப்படித்தான்! ஒருவர் சீரும்சிறப்புமாக வாழவும், வித்யைகளில் சிறந்து விளங்கவும் புத பகவானின் திருவருள் தேவை. அவரு டைய அருள் பரிபூரணமாகக் கிடைப்பது எப்போது? எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது புதன் என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா!

புதன் - சூரியன்: தெய்விக அருளைப் பெற்றிருப்பார்கள். தனவந்தனாக இருப்பதுடன் புத்தியால் பெயரும் புகழும் பெற்றிருப்பர். அற்பமான எண்ணங்களும் மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசும் குணமும் கொண்டவர்களாக இருப்பர். புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், சரித்திரங்கள் முதலியவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாய் இருப்பர். எல்லோரிடமும் அன்புடன் பழகுவர். நல்ல விஷயங்களை போதிப்பதிலும், வாதம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வர். உடலில் உஷ்ணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

செல்வமும் கீர்த்தியும் யாருக்கு?

புதன் - சந்திரன்:  வேதம், சாஸ்திரம், விஞ்ஞானம், ஜோதிடம் முதலியவற்றில் ஆர்வம்கொண்டவர்கள். தேர்ந்த ஆசானைப் போல் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப்பார்கள். திறமை, அறிவுக்கூர்மையுடன் திகழும் இவர்கள், நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றிகொள்ளும் இவர்களுக்கு அவ்வப்போது கர்வம் தலைதூக்கும். மற்றவர்களால் புகழையும், கீர்த்தியையும் பெறுவார்கள்.

புதன் - செவ்வாய்: விவசாய நிலங்கள், மாடு கன்று பால் பாக்கியங்களுடனும், வீடு- மனைகளுடனும் செல்வந்தராக இருப்பார்கள். கல்வியில் நாட்டம் இருக்காது. ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதில் கண்டிப்புடன் இருப்பர். அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதுக்குள் தகாத எண்ணங்கள் ஏற்பட்டாலும், அவற்றை வெளியில் தெரியாமல் மறைப்பதில் சமர்த்தர். இவர்களுக்கு மனோதைரியம் அவ்வளவாக இருக்காது. சகோதரர்களால் ஏமாற்றப்படக்கூடும். தாய் மாமன் மகளை மணந்துகொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்கக்கூடும். இவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். வாழ்க்கை முழுவதும் சுகபோகங்களுடன் வாழ்வார்கள்.

புதன் - குரு: மனதில் அதிக அளவு ஆசைகளை வளர்த்துக் கொள்வர். பெண்களிடம் நட்புடன் பழகுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். அழகாகவும் கம்பீரமாகவும் தோன்றும் இவர்களுக்கு ஊர் ஊராகச் சுற்றுவதில் விருப்பம் இருக்கும். வாக்கு சாதுரியம் பெற்றிருப்பர். ஞானிகளின் தொடர்பும் அவர்களின் ஆசிகளும் இவர்களுக்குக் கிடைக்கும். கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். மனதில் உள்ளது வெளியில் தெரியாதபடி அழுத்தமாகக் காணப்படுவர். மாயாஜாலங்கள் செய்வதில் வல்லவர். புனித க்ஷேத்திரங்களை தரிசிப்பதில் நாட்டம் கொண்டிருப்பார்கள். எப்போதும் உண்மையைக் கடைப்பிடிக்கும் இவர்களுக்கு பிறர் பொருள்களிடம் ஆசை இருக்காது. முன்கோபம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

புதன் - சுக்ரன்: தாராளமாக உதவும் மனப்பான்மை கொண் டிருக்கும் இவர்கள் ஆசார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பர். தெய்விக வழிபாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வர். சாதுவாகவும், பிறர் மனம் புண்படாதபடி நடந்து கொள்பவராகவும் இருப்பர். எடுத்த பணியைத் திறம்படச் செய்து முடிப்பதில் வல்லவர். சத்தியத்தில் இருந்து தவறாதவர். பிறர் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் வருந்துவதுடன், தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். எல்லோரையும் கவரக்கூடிய காந்த சக்தியைப் பெற்றிருப்பர்.

செல்வமும் கீர்த்தியும் யாருக்கு?

புதன் - சனி:  எல்லோரிடமும் நட்பு பாராட்டி நண்பர்களாக்கிக் கொள்வர். பொருளைச் சேர்த்து வைப்பதிலும் சரி, சேர்த்த பொருளை பாதுகாத்துக் கொள்வதிலும் சரி... இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். பண விஷயத்தில் கணக்காகவும் கறாராகவும் இருப்பார்கள். பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பே அவசரப்பட்டுக் கோபம் கொள்வார்கள். பேச்சிலும் செயலிலும் கண்டிப்பாக இருப்பர். பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதில் சந்தோஷம் அடைவர். துன்பப்படுபவர்களிடம் இவர்கள் இரக்கம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. சரியோ தவறோ, தான் சொல்ல நினைப்பதை ஆணித்தரமாக அழுந்தச் சொல்லு வார்கள்.

புதன் - ராகு: கல்வி கற்பதில் ஊக்கம் கொண்டிருக்கும் இவர் களுக்கு அறிவுக் கூர்மை அதிகம். காது கேட்கும் திறன் சற்று குறைவாக இருக்கும். ஸ்திரமான எண்ணம் என்பது இவர்களுக்கு இருக்காது. மனதில் சதா சஞ்சலம் குடிகொண்டிருக்கும். இவர்கள் மனதில் உள்ளதை உள்ளபடி வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்கள் உடலில் பித்தம் மிகுந்திருக்கும். பிறரை நன்றாகப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள். உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். ஆசார அனுஷ்டானங்களில் அவ்வளவாகப் பற்றுதல் இருக்காது. தெய்வ நம்பிக்கை இவர்களுக்குக் குறைவு என்றே சொல்லலாம். இவர்கள் உடல் நலனில், குறிப்பாக பற்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

புதன் - கேது: அறிவுக்கூர்மையுடன் திகழும் இவர்கள், பிறருக்கு ஆசிரியர்களாக போதிப்பார்கள். சண்டைபோடுவதில் விருப்பத்துடன் ஈடுபடுவர். ஆன்மிக ஞானம் பெற்றிருப்பார்கள். எந்தக் கவலையையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சதா காலமும் சிரித்துப் பேசியபடி வலம் வருவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். எடுத்த காரியம் எதுவானாலும் அதை உடனே முடித்துவிடும் சுபாவம் கொண்டவர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் புகழுடனும் பெருமையுடனும் திகழ்வார்கள். சகல விதமான போகங்களையும் அனுபவிப்பார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு