Published:Updated:

மங்கள யோகங்கள்!

Vikatan Correspondent
மங்கள யோகங்கள்!
மங்கள யோகங்கள்!

செவ்வாய் என்றதுமே தோஷம் குறித்த நினைவுகளே நம்மை பயமுறுத்தும். ஆனால், மங்களகாரகனான செவ்வாய், பல அற்புதமான யோகங்களையும் வாரி வழங்குகிறார். மனோபலம், எதிர்ப்புகள் இல்லாத உயர்ந்தநிலை, தாய்வழிச் சொத்துகள் சேர்தல்... என்று பல்வேறு நன்மைகளை அளிக்கும் அந்த 'மங்கள’ யோகங்களில் சில உங்களுக்காக இங்கே...

மங்கள யோகங்கள்!

வெற்றிகள் குவிக்கும் ருசக யோகம்

லக்னத்துக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்து, அந்த இடம் செவ்வாய்க்கு சொந்தவீடாகவோ, உச்ச வீடாகவோ இருப்பது ருசக யோகம் ஆகும். செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகியவற்றிலும், உச்ச வீடான மகரத்திலும் இருந்தாலும் யோகம் உண்டாகும். செவ்வாய் இப்படி வலுக்கும்போது, சொந்த வீடு-மனை, வாகனங்கள் ஆகியன சேரும். மனத்துணிவு உண்டாகும். தன்னம்பிக்கையோடு செயலாற்ற முடியும். வெற்றிகள் குவியும்.

சொத்து சேர்க்கும் சந்திரமங்கள யோகம்

செவ்வாய் சந்திரனுடன் ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது, சந்திரமங்கள யோகம் உண்டாகும். மனோகாரகன் சந்திரனுடன் தைரியகாரகன் செவ்வாய் இணைவதால் மனோபலம் கூடும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சொத்துகள் சேரும்; அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

அமைச்சராக்கும் குருமங்கள யோகம்

குருவும் செவ்வாயும் ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது குருமங்கள யோகம் உண்டாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கவும், சாதனைகள் பல புரியவும் இந்த யோகம் உதவும். குருவும் செவ்வாயும் ராஜ கிரகங்கள். ஆகவே, அரசாங்கத்தில் மந்திரிகளுக்கு இணையான பதவியும் பொறுப்பும் கிடைக்கும்.

சுகபோகம் தரும் பிருகுமங்கள யோகம்

பிருகு என்றால் சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும்.

- ராம்திலக்