Published:Updated:

ஜோதிட புராணம் : பெயரை மாற்றும் வித்தை?

‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

இன்றைய காலத்தில் பெயரை மாற்றிக்கொண்டாலோ அல்லது தனக்கு உரிய அதிர்ஷ்ட எண்ணுக்கு ஏற்ப பெயரின் எழுத்துக்களை மாற்றிக்கொண்டாலோ, துயரங்களெல்லாம் நீங்கி, மகிழ்ச்சியான  வாழ்க்கை அமைந்துவிடும் என்ற நம்பிக்கை பலரிடையே காணப்படுகின்றது.

இப்படியான நம்பிக்கை சரிதானா?

இதன் அடிப்படைத் தத்துவத்தைப் பற்றி சற்று ஆராய்வோம்.

நாம் ஒருவருடைய பிறந்த தேதி என்று குறிப்பிடுவதே ஆங்கிலத் தேதியைத்தான். அதாவது கிறிஸ்துவ ஆண்டுத் தேதி. அதை வைத்துக் கொண்டுதான் ஒருவரது பிறந்த தேதியின் எண் கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக ஜூன் 2, 1949-ல் ஒருவர் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தமிழரசன் என்றும் வைத்துக்கொள்வோம். இவருடைய பிறந்த நாளை, 2-6-1949 என்று குறித்துக்கொண்டு அதிலுள்ள எல்லா எண்களையும் கூட்டி, (2+6+1+9+4+9) என்று கணக்கிட்டால் கூட்டுத் தொகை 31 வருகிறது.

இதிலுள்ள இரண்டு எண்களையும் கூட்டினால் (3+1=4) நான்கு வருகிறது. எனவே, பிறந்த தேதிப்படி அவரது எண் 4 என்று வைத்துக் கொள்கிறார்கள். அதோடு பொருந்தும்படியாக அவருடைய பெயரை ஆங்கிலத்தில் TAMIL ARASAN என்று எழுதி, அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் மதிப்பெண் போட்டு அவற்றை கூட்டி, மொத்தம் வருகின்ற எண், பிறந்த தேதியின் எண்ணுக்கு, அதாவது 4-க்கு பொருத்தமானதா என்று பார்க்கிறார்கள். பொருத்தமாக இல்லையென்றால் ஒரு எழுத்தை மாற்றியோ, அல்லது அந்தப் பெயரையே மாற்றியோ, அல்லது ஒரு எழுத்தை புதிதாகச் சேர்த்துக்கொண்டோ, அதிர்ஷ்டப் பெயர்களை உருவாக்குகிறார்கள். இதன்படி தமிழரசன் என்ற தமிழ்ப் பெயரை, TAMIZH AARASAN என்று ஒருவர் மாற்றி வைத்துக் கொண்டு, அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். இதை எவ்வளவு தூரம் நியாயப்படுத்த முடியும் என்று சற்று சிந்தியுங்கள்.

ஜோதிட புராணம் : பெயரை மாற்றும்  வித்தை?

தமிழரசன் என்பது ஒரு தமிழ்ப் பெயர். அதிலுள்ள ‘ழ’கரமானது தமிழ் மொழிக்கே உண்டான தனிச் சிறப்பு. இதற்குச் சமமான எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும்பொழுது (TAMIL) என்று எழுதினாலும், (TAMIZH) என்று எழுதினாலும் அது தமிழுக்கு ஈடாக எழுதப்பட்டதாகச் சொல்ல முடியாது. இதைப்போலத்தான் சேஷன், யக்ஞ நாராயணன் போன்ற வடமொழிப் பெயர்களையும் அதற்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதுவது கடினம். ஓரளவு உச்சரிப்பையொட்டி எழுதலாம். எனவே, ஒரு பெயரை அதற்கு ஈடாக மற்றொரு மொழியில் எழுதிக்கொண்டு, அதற்கு எண் மதிப்பீடு செய்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
3
பொதுவாக தினசரி காலண்டரில் ஆங்கிலத் தேதி, தமிழ்த்தேதி, இஸ்லாமிய மாதப்படியான தேதி என்று மூன்று தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உதாரணமாக, மார்ச் 31, 2000-ல் பிறந்த ஒரு குழந்தையின் பிறந்த தேதியை ஆங்கிலத்தில் 31-3-2000 என்று குறித்தால், அந்த குழந்தையின் பிறந்த நாள் எண் 9 என்று வரும். அதே பிறந்த நாளை தமிழ் ஆண்டின்படி குறிப்பிட்டால், தமிழ் வருடத்தின் 13-வது ஆண்டான பிரமாதி வருடத்தின் பங்குனி மாதத்தின் 18-ம் நாள் ஆகிறது. எனவே அந்தக் குழந்தையின் பிறந்த நாளை 18-12-13 என்றுதான் குறிக்க வேண்டும். 18 பங்குனி மாதத்தின் தேதி, 12 என்பது தமிழில் பன்னிரண்டாவது மாதமான பங்குனியைக் குறிக்கிறது. 13 என்பது 60 தமிழ் வருஷங்களில் 13-வது வருஷமான பிரமாதி வருடத்தைக் குறிக்கிறது. அப்படியானால், அந்தக் குழந்தையின் பிறந்த எண் (18+12+13=43). அதாவது பிறந்த தேதியின் எண் மதிப்பு 7 (4+3=7) என்றுதான் வரும். இப்போது, அந்த குழந்தையின் பெயரை எந்த எண்ணை வைத்து மாற்றுவது? 9-ஐ வைத்தா? 7-ஐ வைத்தா?

இதையே திருவள்ளுவர் ஆண்டு 2031 என்று வைத்து, ஏன் கணக்கிடக்கூடாது? கலி வருடம் 5102 என்று ஏன் கணக்கிடக்கூடாது? மனிதன் தோன்றி, 2000 வருடம்தான் ஆகியுள்ளதா? அதற்கு முன் மனிதர்கள் வாழவில்லையா? சிந்தியுங்கள்.

‘தமிழரசன்’ என்ற தமிழ்ப் பெயரை, தமிழாண்டு கணக்கில் கணக்கிட்டு, அதற்்கேற்ப பெயர் வைப்பதுதானே நியாயமாகும்?

ஜோதிட புராணம் : பெயரை மாற்றும்  வித்தை?

அப்படியில்லாமல் எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு, பெற்றோர் வைத்த பெயரோடு தொடர்பு இல்லாத உச்சரிப்பைத் தரும் எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு, அதிர்ஷ்டப் பெயர்கள் வைத்துக் கொள்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

ஆண்டுகள் பலவிதம்!

மனிதன் தோன்றிய காலம் முதல் பல்வேறு யுகங்களில், பல்வேறு ஆண்டுகள் இருந்திருக் கின்றன. பஞ்சாங்கங்களைப் பார்த்தீர்கள் என்றால், ஓராண்டுக்குச் சமமாக உள்ள மற்ற ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் 2014-2015 ஆங்கில ஆண்டுக்குச் சமமாய் உள்ள மற்ற ஆண்டுகளின் விவரங்களைப் பாருங்கள்.

ஆங்கில வருடம்  : 2014 - 2015
வள்ளுவர் வருடம் :  2045 - 2046
கொல்லம் வருடம் :  1189 - 1190
பிரதாப ருத்ர வருஷம் :  1327
போஜ ராஜாப்தம் : 1867
சாலிவாகன சகாப்தம் : 1937
விக்ரமாதித்திய வருடம் : 2071 - 2072
கலியப்தம் : 5116.
பாண்டவாப்தம் : 5117

ஏழைகளே இல்லாத நாடு!

இவ்வாறு ஓர் ஆண்டுக்குச் சமமான பல்வேறு ஆண்டுகள் இருக்கும்போது, ஆங்கில ஆண்டின் அடிப்படையில் மட்டும் ஒருவரின் அதிர்ஷ்ட எண்ணைக் கணக்கிடுவது சரியாகுமா?
உண்மையிலேயே ஒருவருடைய அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்ப அவரின் பெயரையோ, எழுத்துக்களையோ மாற்றி, அவரைக் குபேரனாக மாற்ற முடியுமானால், இந்த சாஸ்திரம் நமது நாட்டுக்கு மட்டுமல்ல, வறுமையில் வாடும் மக்கள் நிறைந்துள்ள எல்லா நாடுகளுக்கும் தேவைதான். அப்படி ஒரு சாஸ்திரம் இருக்குமானால், அதனை ஆராய்ந்து, முறைப்படுத்தி, நெறிப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டமான பெயர்களை வைக்கும் பொறுப்பை, அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, அதற்காக ஒரு சட்டமியற்றி, அதன்படி ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், அதன் அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடித்து, அதற்குரிய சரியான பெயரைத் தேர்ந்தெடுத்து, அதை எந்த மொழியில், என்னென்ன எழுத்துக்களால், எப்படி எழுத வேண்டும் என்றும் நிர்ணயித்துவிட்டால், நாட்டில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும், பெரிய டாக்டர்களாகவோ, இன்ஜினீயர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ ஆகி, செல்வமும், புகழும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் அல்லவா? அப்போது நாட்டில் வறுமையும், ஏழ்மையும் இருக்காதே! அனைவரும் கோடீஸ்வரனாக அல்லவா இருப்பார்கள்?!

இதை ஏன் இதுவரை யாரும் செய்யவில்லை? அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா? நீங்களே சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெயரைக் காப்பாற்றுங்கள்!

அவரவர் கர்ம வினைப்படி பிறவி ஏற்படுகிறது. அவரவர் பிறந்த கால நேரத்தின்போது, கிரகங்கள் அமைந்துள்ள நிலவரப்படி, அவரவர் வாழ்க்கை நடக்கின்றது. ஆயினும் தெய்வத்தின் அருளாலும், அயராத முயற்சியாலும், இடர்களை எதிர்த்து முன்னேறிச் செல்லும் சக்தி, மனிதனுக்கு தரப்பட்டிருக்கிறது. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் புராண இதிகாசங்களும் இதைத்தான் வலியுறுத்தி வருகின்றன.

ராமாயண, மகாபாரத காவியங்களிலும், நமது சரித்திர பாரம்பரியத்திலும், யாரும் தங்கள் பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டதால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவோ, விதியை மாற்றியதாகவோ வரலாறுகள் கிடையாது.

ஒருவருக்குப் பல பெயர்கள் இருக்கின்ற உண்மையை வரலாற்றில் பார்க்கிறோம். ராமனுக்கு ரகுவரன், ராகவன், ராமச்சந்திரன் என்றெல்லாம் பெயர் உண்டு. கிருஷ்ணனுக்கு கண்ணன், கோபாலன், கோவிந்தன் என்று ஆயிரம் பெயர்கள் உண்டு. நாம் வழிபடும் தெய்வங்களுக்கெல்லாம் ஸஹஸ்ர நாமங்கள் உள்ளன. அவையெல்லாம் அந்த தெய்வத்தின் ரூபத்தையும், குணத்தையும் சக்தியையும் விளக்குவது.

ஒருவர் குணத்தையும், சக்தியையும் விளக்க, ஒன்றுக்கு மேற்பட்ட பெயரால் அறியப்படுவதும், அழைக்கப்படுவதும் மரபு. அதில் தவறில்லை. ஆனால், அந்தப் பெயரால், பரம ஏழை ஒருவன் மிகப் பெரிய செல்வந்தனாகிவிடுவான் என்பதற்குத்தான் சரியான ஆதாரங்கள் இல்லை. கோழையான ஒருவன் வீரனாகிவிடுவான் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.

எனவே இந்த எண்ணும், எண்ணுக்கேற்ற பெயரின் எழுத்தும் மாறி, அதனால் ஒருவரது விதியே மாறும் என்பது எவ்வளவு தூரம் சாஸ்திர அறிவுக்கும், உண்மைக்கும் ஒத்துவரக் கூடியது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெயரை மாற்றிக்கொண்டு, அதிர்ஷ்டம் வருமா, வராதா என்று போராடுவதைவிட, பெற்றோர்கள் வைத்த பெயருக்கேற்ப நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டு, முயற்சியோடும், தெய்வ நம்பிக்கையோடும் உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றமும் மன நிறைவும் காணமுடியும். எனில், எண்களுக்கான முக்கியத்துவம் எதுவும் கிடையாதா? உண்டு! ‘0’ முதல் ‘9’ வரை உள்ள ஆதார எண்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் உயர்ந்தவைதான். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- தொடரும்

நிம்மதியான உறக்கம் வேண்டுமா..?


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நிம்மதியான உறக்கம் வேண்டும். கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஆனால் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் நமக்குத்தான் உறக்கத்தில் எத்தனை எத்தனை தீய கனவுகள் தோன்றி உறக்கத்தைக் கெடுக்கின்றன. இத்தகைய அச்சம் தரக்கூடிய தீய கனவுகள் இல்லாமல், நிம்மதியாக உறங்கவேண்டும் என்றால், தினமும் படுக்கச் செல்லும்போது, இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஸ்லோகத்தை 3 முறை சொல்லி சிவபெருமானை தியானித்துவிட்டு உறங்கினால், எந்த கெட்ட கனவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம்.

அந்த ஸ்லோகம் இதுதான்:
துஸ்ஸ்வப்ன துஸ்ஸகுன துர்கதிதெளர்மனஸ்ய
துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யஸாம்ஸி:
உத்பாததா பவிஷபீதிமஸத் க்ரஹார்த்திம்
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ:

இதன் பொருள்:

கெட்ட கனவுகள், கெட்ட சகுனங்கள், வறுமை மனக்கவலை, துக்கம், சகித்துக் கொள்ள முடியாத அவமானம், பூகம்பம் முதலான இயற்கை உற்பாதங்கள், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல வகையான கஷ்டங்கள், விஷ ஜந்துக்களால் உண்டாகக் கூடிய ஆபத்துக்கள், ஜாதகரீதியாக கிரகங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், தீராத வியாதிகள் போன்றவைகள் என்னை வருத்தாமல், உலக நாயகனான பரமேஸ்வரன் என்னைக் காப்பாற்றட்டும்.

அடுத்த கட்டுரைக்கு