Published:Updated:

எண்களும் குணங்களும்...

ஜோதிட புராணம் - 38சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ருவரின் பிறந்த தேதியை, ஆங்கில காலண்டர் முறையிலான மாதம் மற்றும் வருடத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, அதன்படி பெயரை மாற்றிக்கொள்வது ஆதாரபூர்வமான சாஸ்திரப்படி சரியாகாது என்று பார்த்தோம். அப்படியானால் எண்களுக்கு தனிப்பட்ட மகிமை கிடையாதா, சாஸ்திரப்படி நமக்குச் சாதகமான எண்ணைத் தெரிந்துகொள்ள முடியாதா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு ஆதாரத்துடன் கூடிய வழிமுறைகள் உள்ளன.

உங்கள் எண் எது?

உங்கள் ராசியையும் பிறந்த நட்சத்திரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒருவருக்கு மகர ராசி, திருவோண நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மேஷத்திலிருந்து எண்ணினால், மகரம் 10வது ராசி. அசுவினி முதல் எண்ணி வர திருவோணம் 22-வது நட்சத்திரம். ராசி எண்ணையும் நட்சத்திர எண்ணையும் பெருக்கினால் வருவது 22 x 10 = 2+2+0. இதை 2 2 0 என்று கூட்டினால் வருவது 4. இதுவே இந்த அன்பருக்கான எண். இப்படி, ராசி மற்றும் நட்சத்திரத்தை கணக்கிட்டு ஒவ்வொருவரும் உரிய எண்ணை தெரிந்துகொள்ளலாம். இனி அந்த எண்களுக்கான பலனை அறிவோம்.

'0’  பூஜ்யத்துக்கு சைபர், ஜீரோ, சூன்யம் என்ற பெயர்களும் உண்டு. 'பூஜ்யத்தில் இருந்து கொண்டு ராஜ்ஜியத்தை ஆளுகின்றவன்’ என்று கவியரசு கண்ணதாசன் ஒரு கவிதையில் கூறியுள்ளார். பூஜ்யத்தை ஆளும் கிரஹம் சந்திரன். எனவே, பூஜ்யம் ஒருவரின் சிரத்தை, பக்தி போன்றவற்றைக் குறிக்கும். கோபத்தை அடக்குதல், இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல் இவர்களின் இயல்பு. திருப்தி, அமைதி ஆகியவற்றைப் பிரதிபலிப்பது பூஜ்யம்.

எண்களும் குணங்களும்...

'1’  இந்த எண், ஒருவரின் ஆதார எண்ணாக இருந்தால், அவர் தன்னம்பிக்கை, தைரியம், நியாய உணர்வு கொண்டவராக இருப்பார். சுதந்திர உணர்வு உடையவர்கள். இவர்களை ஆள்பவர் சூரியன். ஆளுமைத் திறனும் தலைமை தாங்கும் சக்தியும் உண்டு. கோபமும், அதே நேரம் நல்ல குணங்களும் இருக்கும். தீவிர தெய்வபக்தியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

'2’ இவர்களின் அதிதேவதை அம்பாள். இவர்கள் இனிமையானவர்கள்; நட்பு, பாசம் உள்ளவர்கள்; மென்மையானவர்கள்; சட்டென உணர்ச்சிவசப்படுவார்கள்; கோபப்படுவார்கள்; துன்பம் வந்தால் எளிதில் துவண்டுவிடுவார்கள். இவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். வேகமாகச் செயலாற்றும் தன்மை இவர்களிடம் உண்டு. இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுக்ரன்

'3’ இவர்கள் சுகத்தை விரும்புகிறவர்கள். கவர்ச்சியான தோற்றத்தோடு இருக்க விரும்புவார்கள். ஆடை  அணிகலன்களைப் பெரிதும் விரும்புபவர்கள். நவகிரகங்களில் புதன் இந்த எண்ணுக்கு அதிபதி. பேராசையையும், சுயநலத்தையும் ஒழித்தால் இவர்கள் வாழ்வு குதூகலமாக இருக்கும்.

'4’ நல்லிணக்கம், உண்மை பேசுதல், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழ்வது இவர்களின் லட்சியமாக இருக்கும். நம்பகமானவர்கள், உழைப்பாளிகள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். ஒழுக்கம் தவறாமல் உழைத்து, உயர்பவர்கள் இவர்கள்.

'5’ பஞ்ச பரமேஸ்வரர், பஞ்ச பூதங்கள், பஞ்சேந்திரியங்கள், பஞ்சலோகம் என 5ம் எண்ணின் மகத்துவம் அமைகிறது. இதனை ஆளும் கிரகம் செவ்வாய். சமயோசித புத்தி,  பல்துறைத் திறமை, சொல்வன்மை ஆகியவை இவர்களின் குணாதிசயங்கள். கோப தாபம் மிகுதியாக இருக்கும். பிடிவாதமும் இருக்கும். சொந்த உழைப்பால் பொருளீட்டி உயர்நிலை அடைவார்கள். மஹா கணபதியும், முருகப் பெருமானும் இவர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் தேவர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருகன் கோயில் சென்று வழிபடுவது நலம்.

எண்களும் குணங்களும்...

'6’ இதனை ஆளும் தெய்வம் முருகன். ஒருவரின் எண்  6-ஆக இருந்தால், அவர் நல்லவர்; பொறுமைசாலி; தர்ம சிந்தனை உள்ளவர்; உழைப்பில் நம்பிக்கை கொண்டவர். கோபப்படும் இயல்பு கொண்டவராக இருந்தாலும், 'ஆறுவது சினம்’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர். இளமையில் கஷ்டப்படுவார்; நடுத்தர வயதில் நிறையச் சம்பாதித்து, சௌபாக்யமாக வாழ்வார்.

'7’ அபார தன்னம்பிக்கை உள்ளவர்கள். நிதானத்துடன், சிந்தித்து முடிவெடுத்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம். ஏழு என்பதும் சிறப்பான எண். ஏழு கடல்கள், ஏழு மலைகள், சப்த ரிஷிகள், ஸப்த மாதர்கள் என்று் 7-ம் எண் இயற்கையோடு ஒன்றி விடுகிறது. சந்திரனும் சூரியனும் இந்த எண்ணை ஆள்பவர்கள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் நம் மனத்தையும், சூரியன் நம் ஆன்மாவையும் ஆள்பவர்கள். எனவே, 7-ம் எண் உடையவர்கள், தங்கள் மனதால் விரும்பியதை ஆன்ம பலத்தால் அடையும் ஆற்றல் உள்ளவர்களாகத் திகழ்வார்கள்.

'8’ எண்களில் தனித்துவம் பெற்றது, 8ம் எண். அஷ்டமி திதியைக் குறிக்கும். 'ஜன்மாஷ்டமி’ என்று கிருஷ்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். 'துர்காஷ்டமி’ என்று அம்பாளை பூஜிக்கிறோம். எட்டு திசைகள், எண்திசைக் காவலர்கள் என்று எட்டின் சிறப்பு நீள்கிறது. பிறந்த எண் எட்டாக இருந்தால், அது மிகவும் சிறப்பானது. 8ம் எண் பெற்றவர்கள் சுயதொழில், வாணிகம், அரசியல் போன்ற துறைகளில் வெற்றி பெறுபவர்கள். பொருள் சேர்த்து, பெருமையோடு வாழ ஆசைப்படுபவர்கள்.

'9’ எண்களில் விசித்திரமானது 9. இந்த எண்ணை மற்ற எந்த எண்ணால் பெருக்கினாலும், கிடைக்கும் விடையில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் 9-தான் வரும். இது ஒரு ஸ்திர எண் (Stable Number). இந்த எண்ணைக் கொண்டவர்கள் ஆழ்ந்த அறிவும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவர்கள். சிந்தித்துச் செயலாற்றி, சாதிப்பார்கள். மனித நேயமும், தர்ம சிந்தனையும் உடையவர்கள்.

ற்கெனவே நட்சத்திரங்களுக்கு உரிய குணாதிசயங்கள் பற்றி எழுதியிருந்தோம். அதையும், இங்கே தரப்பட்டுள்ள 'எண்’ணுக்குரிய விவரங்களை வைத்தும் உங்கள் ஜாதக எண்ணைக் கணக்கிட்டு, அதற்கு உரிய பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிட புராணம் முதல் பகுதி இத்துடன் நிறைவுறுகிறது. ஜோதிட புராணத்தின் 2ம் பகுதியாக 'பஞ்சாங்குலி’ என்கிற கைரேகை சாஸ்திரம் பற்றிய விவரங்கள் வெளியாகும்.

(நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு