Published:Updated:

கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...
கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...

வாஸ்து சொல்லும் வழிகள் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டை காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

நம் உடலுக்கு எந்தக் கேடும் வராமல் நூறு வயதுக்கு மேலும் நல்லபடியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆரோக்கியம் சிறக்கவும், ஐஸ்வரியம் மேலோங்கவும் அயராமல் பாடுபடுகிறோம். அதேபோல், நாம் நிரந்தரமாக வசிக்க விரும்பும் வீடும் ஸ்திரமானதாகவும், அங்கே நாம் வாழும் வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி முறை தவறாமல் வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நிலையான ஒரு வாழ்க்கைக்கு வீட்டின் அமைதியான பங்கும் அவசியம். ஓர் இடத்தை அதாவது காலி இடத்தை விலைக்கு வாங்குவதற்கு வாஸ்துவின் பங்கு பெருமளவில் தேவையில்லை. அதேநேரம், அந்த இடத்தில் நாம் என்ன கட்டப்போகிறோம் என்பதைப் பொறுத்து வாஸ்துவுக்கான பரிகாரங்கள் மாறுபடும். அங்கே கட்டடம் கட்டத் துவங்குவதற்கு முன், முதல் செங்கலை எடுத்துவைக்கும்போதே நாள், நட்சத்திரம், கிரகநிலை போன்ற அனைத்தையும் பார்த்து ஆரம்பிக்க வேண்டும். இந்த நிகழ்வை 'ஆதான லக்னம்’ என்கிறது சாஸ்திரம்.

கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...

அடிக்கல் நாட்டுதல் குறித்து அறிவீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில் தங்கப்போகும் நபர்களுக்கு அல்லது துவங்கப்போகும் வியாபாரத்துக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படும் வைபவம் இது. இப்படி, உத்தமமான முறையில் துவங்கிச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நன்மையை மட்டுமே விளைவிக்கும்.

இதுபோன்று இன்னும்பல விரிவான நியதிகளைச் சொல்கிறது வாஸ்து சாஸ்திரம்.

மாதங்களும் திசைகளும்...

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும்.

கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...

மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத்துவங்குவது சிறப்பு.

தெற்கு திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் துவங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்கள் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.

திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு ஜாதகம் பார்ப்பது போன்று, வீடு கட்டும் விஷயத்திலும் ஜாதகம் பார்த்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கான வேளை வந்துவிட்டதா என்பதில் துவங்கி பல விவரங்களையும் தெரிந்துகொண்டு, அதில் ஈடுபடுவது சிறப்பு.

அதேபோன்று வீட்டுக்காக வாங்கும் நிலங்களையும் உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்க வேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.

நாம் வாங்கப்போகும் வீட்டுக்கு பக்கத்தில் என்னென்ன இருக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?

நெல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மலைகள், சமுத்திரம், ஆசிரமம், மயானம் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கக் கூடாது.

கனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...

அதேபோன்று வீட்டு மனை அதாவது வீடு கட்டப்படவுள்ள  நிலங்கள் எப்படியிருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

வீடுகட்ட உகந்த  மனைகள் எவை?

கோவீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோவீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.

ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக் கூடாது.

யம வீதி: வடக்கு  மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும்.  இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.

கஜ வீதி: தெற்கு மூலை உயந்திருந்து, வடக்கு  மூலை தாழ்ந் திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.

பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.

நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.

அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.

தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.

வாங்கியிருக்கும் நிலம் அல்லது மனை வாஸ்து சாஸ்திரம் கூடாது என்று  சொல்லும் அமைப்புப்படி இருந்தால், உரிய பரிகாரங்கள் மற்றும் ஹோமங்களைச் செய்துவிட்டு கட்டடப் பணிகளைத் துவக்கலாம்.

வீடு கட்டும் பணியை எப்போது துவக்கலாம்?

ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது. அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியன விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.

அஷ்டம சித்தி என்று ஒன்று உண்டு. அதாவது எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக்கிறோமோ, அதற்கு எட்டாவது இடத்தில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியன இருக்கக்கூடாது. புதன் தனித்திருந்தால் தப்பில்லை. சூரியன் அல்லது செவ்வாயோடு சேர்ந்து இருக்கக்கூடாது. ராகு, கேது போன்றவையும் இருக்கக்கூடாது. எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு