Published:Updated:

உணவுத் தொழில் கைகொடுக்குமா?

உணவுத் தொழில் கைகொடுக்குமா?

ளிதில் நினைத்ததும் துவங்க சாத்தியமானதும், அதீத லாபம் ஈட்டக்கூடியதுமான தொழில் உணவுத்தொழில். சிறிய முதலீட்டில் சின்னதாக இட்லிக் கடை அல்லது தேனீர் கடை என்று ஆரம்பித்து பொருளீட்டுவோர் இன்று அதிகம். அதே நேரம் இந்தத் தொழிலில் பெரிய அளவில் லாபம் ஈட்டுவதற்கு அன்ன யோகம் கைகூட வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.

அப்படியான யோகம் யாருக்கு வாய்க்கும், ஹோட்டல் தொழில் யார் யாருக்கு கைகொடுக்கும் என அறிவோமா?

ஜாதகத்தில் 2ம் இடம் உணவுப் பொருட்களைக் குறிக்கும். இந்த வீட்டுக்கு அதிபதி வலுத்து தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டு இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் உணவுப்பொருட்கள் மூலம் ஆதாயம் பெறுவார்.

2-ம் இடத்தில் சுபக் கிரகங்களான குரு, சுக்ரன், தனித்து வலுப் பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியோர் அமர்ந்து 10-ம் வீட்டோனுடன் தொடர்புகொண்டிருந்தால் ஹோட்டல் தொழில் மூலமாக நிறைய சம்பாதிக்கலாம்.

உணவுத் தொழில் கைகொடுக்குமா?

இரண்டாம் வீட்டோன் 9ம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டோன் 2ம் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருந்தால் குறிப்பிட்ட ஜாதகர், நிறையபேருக்கு அன்னதானம் செய்வார். அவர் இல்லத்தில் உணவு தானியங்கள் குறைவின்றி பெருகித் திகழும்.

இரண்டாம் வீட்டுக்கு அதிபதி சுபக் கிரகமாகி, 1,4,7,10 ஆகிய இடங்களிலோ, 5 மற்றும் 9-ம் இடங்களிலோ இருப்பது விசேஷம் ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட ஜாதகருக்கு உணவுப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

இரண்டாம் வீட்டோன் 11-லும், பதினோராம் வீட்டோன் 2லும் வலுப்பெற்று இருந்தால் உணவுப் பொருட்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். இரண்டாம் வீட்டு அதிபதியை குரு பார்க்க, உணவு விடுதிகளால் லாபம் கிடைக்கும்.

இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு ஹோட்டல் தொழில் என்றில்லாமல், உணவு தொடர்பான துறைகளில் வேலையில் அமரும் வாய்ப்பும் உண்டாகும்.

இரண்டாம் வீட்டில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது ஆகியோர் பலவீனமாக இருப்பது கூடாது. இத்தகைய கிரக நிலை கொண்டவர்கள் உணவு சம்பந்தப்பட்ட தொழிலைத் தவிர்க்கலாம்.

செய்யும் தொழில் உணவு சம்பந்தமானது எனில், ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தையும், அதற்கு உரிய அதிதேவதையையும் வழிபடுவதன் மூலம் ஆதாயம் கூடப் பெறலாம்.

- ராம்திலக்

அடுத்த கட்டுரைக்கு