சூரியன் 10ம் தேதி வரை அஸ்தத்திலும், 11ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரத்திலும் செல்கிறார்.

செவ்வாய் 13ம் தேதி வரை கேட்டையிலும், 14ம் தேதி முதல் மூலம் நட்சத்திரத்திலும்,

புதன் 11ம் தேதி முதல் அஸ்தத்திலும் (12ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி) பயணிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு பகவான்  ஆயில்யத்திலும்,

சுக்ரன் 14ம் தேதி வரை அஸ்தத்திலும்; 15ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரத்திலும் செல்கின்றனர்.

சனி விசாகத்திலும், ராகு சித்திரையிலும், கேது ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

பரணி, திருவாதிரை, பூசம், மகம், மூலம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும்.

ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சித்திரை, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் இழப்புகள், பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து நீங்கும்.

அசுவினி:

உங்களுடைய நட்சத்திர நாயகன் கேது சாதகமாக இருப்பதால், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சூரியன் முற்பகுதியில் சாதகமாக இருப்பதால், வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் நட்சத்திரத்துக்குச் சாதகமாக இருப்பதால், சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். புதன் சுகத் தாரையில் செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள். உங்கள் யோகாதிபதி குருவும் அதிநட்புத் தாரையில் செல்வதால், பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சனி வதைத் தாரையில் செல்வதால் கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் முற்பகுதியில் லாபம் வரும். பிற்பகுதியில் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமையும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழும்.

 பரணி:

உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியாகிய குருபகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு நட்புத் தாரையில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ராகு சாதகமாக இருப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். சனிபகவான் உதவித் தாரையில் செல்வதால், மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன் பலவீனமாக இருப்பதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ல் மறைந்திருப்பதால், பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் உங்கள் நட்சத்திரத்துக்குச் சாதகமாக இருப்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து  முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

 கிருத்திகை:

புதன் உங்கள் நட்சத்திரத்துக்கு தனத்தாரையில் செல்வதால், இதமாகவும், சமயோசிதமாகவும் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உங்கள் நட்சத்திர நாயகன் சூரியனும் சாதகமாக இருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். செவ்வாயும், குருவும் வதைத் தாரையில் செல்வதால், வழக்குகளால் நிம்மதி குறையும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சனியும், ராகுவும் சாதகமாக இல்லாததால், தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள். சுக்ரன் வலுவாக இருப்பதால், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவு பெருகும். போட்டித் தேர்வுகளில் வெற்றியும், புது வேலையில் சேரும் வாய்ப்பும் உண்டாகும்.

 ரோகிணி:

உங்கள் அனுஜென்மத் தாரையில் சூரியன் செல்வதால், பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களின் வருங்காலம் குறித்த கவலையும் ஏற்படக்கூடும். புதனும், சுக்ரனும் சாதகமாக இல்லாததால், செலவுகள் அதிகமாகும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். குருபகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. சனிபகவான் சுகத்தாரையில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். ராகு தனத்தாரையில் செல்வதால், கம்பீரமாகப் பேசி பல காரியங்களையும் சாதிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனையை மேலதிகாரி ஏற்றுக் கொள்வார். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகளும் தீரும்.

மிருகசீரிடம்:

உங்களுடைய நட்சத்திரத்துக்கு அதிநட்புத் தாரையில் சுக்ரன் செல்வதால், பணவரவு திருப்தி தரும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சூரியனும், புதனும் அதிநட்புத் தாரையில் செல்வதால், அரசால் அனுகூலம் உண்டு. ராகு அனுஜென்மத் தாரையில் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சனியும் சாதகமாக இல்லாததால், அலைச்சல் அதிகமாகும். உங்களுடைய நட்சத்திர நாயகன் செவ்வாய் பகைத் தாரையில் செல்வதால், சகோதர வகையில் சச்சரவு இருக்கும். வியாபாரத்தில் சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் வரும். வேலையாட்களாலும் பிரச்னைகள் ஏற்படும். உத்தியோகத்தில் போராட்டமான சூழ்நிலை காணப்படும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தும் பதவி உயர்வோ, சம்பள உயர்வோ பெற முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

திருவாதிரை:

உங்களுடைய நட்சத்திரத்துக்குச் சாதகமாக முக்கிய கிரகங்கள் செல்வதால், தொட்டதெல்லாம் துலங்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வந்து சேரும். திருமணம் கூடி வரும். வேலையும் கிடைக்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். நாடாளுபவர்களின் அறிமுகமும் அவர்களின் நட்பும் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களும் பணியில் சேருவார்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சம்பளமும் அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல பல புதிய திருப்பங்களும் உண்டாகும்.

புனர்பூசம்:

ராகு உங்களுக்கு நட்புத் தாரையில் செல்வதால், சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. ஆனால், சனிபகவான் உங்களின் அனுஜென்மத் தாரையில் செல்வதால், எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிலர் உங்கள் மீது பழி சுமத்துவார்கள். உங்களுடைய நட்சத்திர நாயகன் குருவும் சாதகமாக இல்லாததால், பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். லாபம் குறையும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் மோதிக் கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும்.

பூசம்:

ராகுவைத் தவிர மற்ற கிரகங்கள் உங்களுடைய நட்சத்திரத்துக்குச் சாதகமாக செல்வதால், செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த வேலைகளும் விரைந்து முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சாதுர்யமான பேச்சால் சவாலான காரியங்களைக் கூட முடித்துக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்கள் நட்சத்திர நாயகன் சனியும் சாதகமாக இருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு இருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்களும் செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாற்றப்படுவார். சம்பள உயர்வு உண்டு.

ஆயில்யம்:

உங்கள் நட்சத்திரத்துக்கு நட்புத் தாரையில் சனி செல்வதால், தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல், கணவன்மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். செவ்வாய் அனுஜென்மத் தாரையில் செல்வதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சூரியன் வலுவிழந்து காணப்படுவதால், அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். உங்கள் பலம் பலவீனங்களை உணர்ந்து செயல்படுவது நல்லது. கேது திரிஜென்மத் தாரையில் செல்வதால், வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்பச் செயல்படுங்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் அதிகமாகும். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகம்:

உங்கள் ராசிக்கு 2ல் சுக்ரன் நிற்பதால், சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொடங்கிய வேலைகள் நல்ல விதத்தில் முடிவடையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனஇறுக்கங்கள் நீங்கும். கல்யாணம் நிச்சயமாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருந்தாலும், உங்கள் நட்சத்திரத்துக்கு அதிநட்புத் தாரையில் செல்வதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். புதன் உங்கள் ராசிக்கு 2ல் உச்சம் பெற்று காணப்படுவதால் ஷேர் மூலம் பணம் வரும்.முற்பகுதியில் செவ்வாய் சாதகமாக இருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். ராகு சரியில்லாததால், வழக்குகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடும். கட்டுமானப் பொருட்கள், உணவு வகைகளால் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் பழைய வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

பூரம்:

உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் சனிபகவான் நிற்பதுடன், உங்களுடைய நட்சத்திரத்துக்கு உதவித் தாரையில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். சகோதர வகையில் இருந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். குரு சாதகமாக இருப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இருப்பதால், வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சுக்ரன் வலுவிழந்து காணப்படுவதால், தவிர்க்க முடியாத செலவினங்களும், சிறுசிறு விபத்துகளும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

உத்திரம்:

உங்களின் தனத்தாரையில் சுக்ரன் செல்வதால், கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். புதன் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் குறையும். உங்களுடைய ஆலோசனைகளை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். செவ்வாயும், குருவும் வதைத் தாரையில் செல்வதால், சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கேது வதைத் தாரையில் செல்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். ராகு சாதகமாக இல்லாததால், தூக்கம் குறையும். குறிப்பாக உத்திர நட்சத்திரம் கன்னி ராசியினர்களுக்கு சோர்வு, களைப்பு, ஆரோக்கியக் குறைவு வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள், வேலைச்சுமைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து முன்னேறுவீர்கள்.

அஸ்தம்:

உங்களுடைய நட்சத்திரத்திலேயே சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்கள் செல்வதாலும், உங்களுடைய ராசியிலேயே ராகு நிற்பதாலும், ஆரோக்கியம் பாதிக்கும். சளித்தொந்தரவு, காய்ச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகளும் வந்து நீங்கும். ஏழரைச் சனி நடைபெறுவதால், மறதி, ஒருவித சோர்வு வந்து நீங்கும். குரு உங்களுடைய ராசிக்குச் சாதகமாக இருப்பதால், எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். செவ்வாய் உங்களுக்கு உதவித் தாரையில் செல்வதால், தைரியம் பிறக்கும். வியாபாரத்தில் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படும். யாருக்கும் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவு இருந்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும்.  

சித்திரை:

புதன் உங்களின் அதிநட்புத் தாரையில் செல்வதால், தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். குடும்பத்தில், கணவன்மனைவிக்குள் இருந்த மோதல்கள் குறையும். உங்களுடைய நட்சத்திரத்திலேயே ராகு செல்வதால், எதிர்காலம் பற்றிய பயம் வரும். புதன் அதிநட்புத் தாரையில் செல்வதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். யோகாதிபதி சுக்ரன் அதிநட்புத் தாரையில் செல்வதால், கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலர் புது முதலீடு செய்து தொழில் தொடங்கக் கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிகாரிகள் மதிப்பார்கள்.

சுவாதி:

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்த்த பணவரவு, உதவிகள் கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். 14ம் தேதி முதல் செவ்வாய் பகைத் தாரையில் செல்வதால், தூக்கமின்மை, அலைச்சல் வந்து நீங்கும்.  வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

விசாகம்:

ராகு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குருவும், புதனும் சாதகமாக இல்லாததால், உறவினர்களுடன் மோதல்கள் வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. 13ம் தேதி வரை சுக்ரன் உதவித் தாரையில் செல்வதால், ஓரளவு பணவரவு உண்டு. சனி உங்களுடைய நட்சத்திரத்திலேயே செல்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

அனுஷம்:

சனி உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதுடன், 10ம் தேதி வரை சூரியனும் சாதகமாக இருப்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வர். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பணவரவும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய வீட்டை விற்று புது இடம் வாங்குவீர்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராகு வதைத் தாரையில் செல்வதால், வீண் சந்தேகம், இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

கேட்டை:

சனியும், ராகுவும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள். கணவன்மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 13ம் தேதி வரை செவ்வாய் ஜன்மத் தாரையில் செல்வதால், எதிலும் ஒருவித சோர்வு, சலிப்பு, முன்கோபம் வந்து செல்லும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது. உங்களுடைய திரிஜென்மத் தாரையிலேயே குரு செல்வதால், பணப்பற்றாக்குறை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.

மூலம்:

13ம் தேதி வரை செவ்வாய் அதிநட்புத் தாரையில் செல்வதால், புகழ், கௌரவம் உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். 14ம் தேதி முதல் செவ்வாய் ஜன்மத் தாரையில் செல்வதால், உணர்ச்சிவசப்படுவீர்கள். புதன் சுகத்தாரையில் செல்வதால், பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். ராகு பகைத் தாரையில் நிற்பதால், வீண் செலவு, டென்ஷன், மனக்குழப்பம் ஏற்படும். கேதுவும் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார்.

பூராடம்:

குரு, ராகு, கேது மற்றும் சனி ஆகிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 10ம் தேதி வரை சூரியன் விபத்துத் தாரையில் செல்வதால், அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். தந்தைவழியில் மோதல்கள் வரக்கூடும். புதன் சாதகமாக இல்லாததால், சளித் தொந்தரவு, காய்ச்சல், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வந்து விலகும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

உத்திராடம்:

10ம் தேதி வரை சூரியன் தனஸ்தானத்தில் நிற்பதால், புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குருவும், கேதுவும் வதைத் தாரையில் செல்வதால், கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போகவும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். 13ம் தேதி வரை செவ்வாய் வதைத் தாரையில் செல்வதால், சொத்துப் பிரச்னையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைக் கடந்து அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

திருவோணம்:

13ம் தேதி வரை செவ்வாய் உதவித் தாரையில் செல்வதால், தைரியம் கூடும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். அயல் நாட்டுப் பயணம் தேடி வரும். குருபகவான் சாதகமாக இருப்பதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சுக்ரன் திரிஜென்மத் தாரையில் செல்வதால், மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனம் செலவு வைக்கும். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புதனும் திரிஜென்மத் தாரையில் செல்வதால் மன அழுத்தம், வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி, சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

அவிட்டம்:

புதன் சாதகமாக இருப்பதால், இங்கிதமாகப் பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். சுக்ரனும் அதிநட்புத் தாரையில் செல்வதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். ராகு திரிஜென்மத் தாரையில் செல்வதால், எதிர்மறை எண்ணங்கள் வரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் அதிகமாகும். குருவும், கேதுவும் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், வீண் பகை, கவலைகள், மனஉளைச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.

சதயம்:

முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனத்தெளிவு பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனதுக்கு இதமான செய்திகள் வரும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வர். அரசுக் காரியங்கள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் திறமைசாலி என்பதை நிரூபிக்க, தக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:

சூரியன் 10ம் தேதி வரை வதைத் தாரையில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மனைவி வழியில் மனவருத்தம் ஏற்படும். 11ம் தேதி முதல் நட்புத் தாரையில் சூரியன் நுழைவதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். என்றாலும், முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், தன்னம்பிக்கை குறையும். குடும்பத்தில், கணவன்மனைவிக்குள் ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையால், பல வேலைகளையும் நீங்களே பார்க்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

உத்திரட்டாதி:

புதன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. கல்யாண பேச்சு வார்த்தைக் கைகூடும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். நீண்ட நாட்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர், நண்பர்களைச் சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். ராகு வதைத்தாரையில் செல்வதால்,  சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். கேது வலுவாக இருப்பதால், சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

ரேவதி:

உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி தொடர்ந்தாலும், உங்களுடைய நட்சத்திரத்துக்கு நட்புத் தாரையில் சனி செல்வதால், மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களுடைய நட்சத்திரத்துக்குத் திரிஜென்மத் தாரையில் செவ்வாய் செல்வதால், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். சொத்து விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச்சனி தொடர்வதாலும், உங்களுடைய ஜன்மத் தாரையிலேயே குரு செல்வதாலும், மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism