Published:Updated:

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

'கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்’ என்ற சொல்வழக்கு உண்டு. இன்றைய சராசரி மனிதர்கள், அதாவது நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் செய்யும்போதும் சரி, சொந்த வீடு கட்டிக்கொள்ளும்போதும் சரி... பலவிதமான சிரமங்களை அனுபவித்த பிறகே பலன் அடைகின்றனர்.

அண்டத்துக்கு ஒப்பானதே பிண்டம். பஞ்சபூத சக்தியால் இயங்கும் உலகம் போன்றதே நம் உடம்பும்! ஒரு மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளை கோயில், நகரம், வீடு, தடாகம், கூபம் ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத்துகின்றன சிற்ப நூல்கள். இந்த ஐந்தில் ஒன்று குறைவுபட்டாலும் ஊனம்தான் என்பது, அந்த நூல்கள் தரும் விளக்கம்.

'உள்ளமே பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்...’ என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்தர் பாடல் ஒன்று...

'சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு
சொல்லுதற்கோ எங்குமாய் நிறைந்த வீடு
தேமதில் போய் விளங்கும் இந்த வீடு
சித்தாந்த சித்திரவர் தேடும் வீடு
ஓசைமணி பூமரதில் உதிக்கும் வீடு
ஓகோகோ அதிசயங்கள் உள்ள வீடு
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு
அவள் அருளும் கூடி விளையாடும் வீடே!’

என்கிறது. அதாவது, உடம்புக்கு இத்தனை ஆற்றல்கள் உண்டு

என்றும், அவற்றைக் கண்டு தெளிந்து, பேணி வளர்த்து ஆள்வதே ஸித்தியாகும் என்றும் விளக்குகிறது இந்த பாடல்.

வளம் தரும் வாஸ்து!

ஆக, உடம்பையும் உயிரையும் பேணுவதுபோன்று நாம் வசிக்கும் இடங்களையும் முறைப்படி நிர்மாணிப்பதும் பேணுவதும் மிக அவசியம். அதற்கு உறுதுணையாகத் திகழ்வது வாஸ்து சாஸ்திரம்.

ந்திய தேசத்தின் இலக்கண இலக்கிய வரலாற்றைக் காணும் போது ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் முதலிடத்தைப் பெறுகின்றன. சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியன வேதங்களுக்கு உறுப்புகளாகத் திகழ்கின்றன.

அதேபோல், நான்கு வேதங்களுக்கும் உபவேதங்கள் உண்டு. அவற்றுள் அதர்வண வேதத்தின் உபவேதம்தான் ஸ்தாபாத்திய வேதம் என்ற இந்த வாஸ்து சாஸ்திரம். இதுவே, மனையடி சாஸ்திரம் என்று தமிழில் வழங்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், அது முப்பெரும் பிரிவுகளுடன் திகழ்கிறது. அவை கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம் மற்றும் ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும். ஸம்ஹிதா ஸ்கந்தமானது முகூர்த்தம், வாஸ்து, வருஷபலன், ஆரூடம் ஆகிய நான்கு வகை அமைப்பைத் தன்னுள் கொண்டு திகழ்கிறது.

இந்த நான்கில், வாஸ்து சாஸ்திரமானது கோயில், அரண்மனை, வீடு, சத்திரம், மடம் முதலானவற்றைக் கட்டுவதற்கும், குளம், கிணறு ஆகியவற்றை அமைப்பதற்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது. தற்காலத்தில் வாஸ்து மூவகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிரிவுகள்...

1. அன்றாடம் பயன் அனுபவிக்கும் வீடு, தோட்டம், மண்டபம் மற்றும் கிணறு அமைப்பதற்கான நியதிகளைச் சொல்வது.

2. கோயில் நிர்மாணம், சிற்பம், தேர்அமைப்பு மற்றும் ஆகம வழிபாட்டு முறைகளை விவரிப்பது.

3. சீன வாஸ்துவான பெங்-சூயி.

ஆதியில் காடுகளில் வசித்த மனிதன் நெருப்பு மற்றும் தண்ணீரின் பயன்பாட்டை அறிந்துகொண்ட பிறகு, தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான். ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தவன், வசிப்பிடங்களை உருவாக்கத் துவங்கினான். அவனது அடுத்தடுத்த வளர்ச்சியின் விளைவால் காடுகள் திருத்தப்பட்டு, நாடுகள் உருவாக ஆரம்பித்தன.

இந்த நிலையில், தனது வழிபாட்டுக்கு உரிய இறைவனுக்கும், அவருக்கு அடுத்த நிலையில் அரசருக்கும் சிறந்த இடங்களைச் சிறப்பான முறையில் அமைக்கும் எண்ணத்தில், நல்ல இடத்தையும், மர வேலைப்பாடுகளுக்கு மரம் முதலானவற்றையும் தேர்வு செய்ய, கட்டடப் பணிகளை ஆரம்பிக்க, புதிய வசிப்பிடத்தில் குடியேறுவதற்கு உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய என சில வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டான்.

இதன் தொடர்ச்சியாக சிற்ப, மனையடி சாஸ்திரங்கள் உருவாக்கப்பட்டன.

சரி, இவற்றின் தொகுப்புதான் வாஸ்து சாஸ்திரமா?

வாஸ்து குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன?

கட்டடக் கலை, வாஸ்து வழிபாடு... இரண்டுக்கும் என்ன தொடர்பு?

இதுபோன்று இன்னும் பல கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் அடுத்தடுத்த இதழ்களில்..!

(தொடரும்)

அரிய நூல்கள் சில...

ட்டடக் கலை மரபில் மிகச் சிறப்புடன் பேசப்படுபவர் மயன். தற்போது பல்வேறு கட்டடக் கலை மற்றும் சிற்ப நூல்கள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் முதன்மையான நூலாக 'மயமதம்’ பேசப்படுகிறது. இது தமிழில் இரண்டு பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வடமொழியில் வாஸ்து தொடர்பான பல நூல்கள் உண்டு. அவை:

1. சில்பரத்ன சமுச்சயம்
2. தந்திர சமுச்சயம்
3. ஹஸ்தி வித்யை
4. மஹா சந்திரிகா
5. சுபசமயம்
6. ராஜவல்லபம்
7. விஸ்வகர்ம பிரகாசிகா
8. வாஸ்து ரத்னாவழி
9. வாஸ்து ப்ரதீபீகா
10. சூரிய பத்ததி

சரஸ்வதி மஹால் வெளியீடான 'வாஸ்து வித்யை’ என்ற தொகுப்பு நூல் தமிழில் உள்ளது. தத்துவநிதி எனும் மற்றொரு நூலும் உண்டு. மேலும், ஸ்ரீகுமாரரால் இயற்றப்பட்ட 'சிற்ப ரத்தினம்’ நூலும் விசேஷமானது. 1925ல் இரத்தினசாமி நாயக்கர் அண்ட் சன்ஸ் வெளியீடான, ஜோதிடம் வீராசாமி முதலியார் இயற்றிய 'சர்வார்த்த சிந்தாமணி’ எனும் நூல், மனையடி சாஸ்திரம் பற்றிப் பேசுகிறது.

மதுரை தமிழ்ச் சங்கத்தில் பல வாஸ்து நூல்களும், சுவடிகளும் உள்ளன. அண்ணா உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பல வாஸ்து நூல்கள் உண்டு. வாஸ்து பற்றி அறிய விரும்புபவர்கள் இந்த நூல்களை ஆய்ந்தறிந்து பயன்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism