Published:Updated:

புத பகவான் - அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்கள்! #Video

புதன் வித்யாகாரகன் என்பதால் தொடக்கப்பள்ளியில் கல்வி பயில்வதிலிருந்து கல்லூரிப் படிப்புவரை ஒருவரின் படிப்புக்குக் காரணமாக இருக்கிறார்.

Mercury
Mercury

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை.

நவகிரகங்களுள் புதனின் தன்மைகள் என்ன? அவர் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் தருவார் என்பது பற்றி `ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். அவர் புதன் குறித்து, அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

Mercury
Mercury

``ஜோதிடத்தில் புதனை `வித்தைக்காரகன்', `வித்யாகாரகன்' என்று சொல்வார்கள். `மாதுளக்காரகன்' என்று ஜாதகரின் தாய்மாமனுக்குரிய யோகங்களைக் கூறுபவரும் புதன்தான். புதன் வித்யாகாரகன் என்பதால் தொடக்கப்பள்ளியில் கல்வி பயில்வதிலிருந்து கல்லூரிப் படிப்புவரை ஒருவரின் படிப்புக்குக் காரணமாக இருக்கிறார். பள்ளிக் கல்லூரிகளில் நல்ல ரேங்க் எடுக்கும் மாணவர்களெல்லாம் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

புதன் ஒரு விசித்திரமான கிரகம். செவ்வாயைப் போலவே புதனும் இரு ஆதிபத்திய கிரகமாகும். ஜோதிட ஆச்சர்யமாக மிதுனத்தில் ஆட்சி பெறும் புதன், ஆட்சி வீடான கன்னியில் உச்சம் பெறுகிறார். மீனத்தில் நீசமடைகிறார். அறிவு, ஞானம் இரண்டுக்கும் இவரே அதிபதியாகி படிப்பறிவு, பட்டறிவு இரண்டையும் மனிதனுக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டுக்கும் காரணமாகிறார்.

Gemini
Gemini

புதனின் ஆதிக்கம்பெற்றவர்கள், எதையும் உள்வாங்கி உட்கிரகித்து, வெளிப்படுத்தும் திறன்கொண்ட எழுத்தாளர்களாகப் பத்திரிகையாளர்களாகத் திகழ்வர்.

இன்று உலகையே ஆள்வது கணிப்பொறித்துறை. கணிப்பொறித் துறையில் ஆற்றல் வாய்ந்த பொறியாளர்கள் பலரும் ஜாதகத்தில் புதனின் செல்வாக்குப்பெற்றவர்கள்.

மிதுனம், கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புதன் நன்மை செய்பவராக இருப்பார்.

பரிகாரம்:

ஆறு லக்னங்களில் பிறந்தவர்களில் புதனின் வலு குறைந்து பலவீனமாக இருப்பவர்கள், சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவெண்காடு எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் சுவேதாரண்யேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

சென்னையிலிருப்பவர்கள், போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியிலிருக்கும் கோவூரில் குடிகொண்டிருக்கும் சுந்தரேசுவரரை வணங்கினால், கூடுதலான பலன்களைப் பெறலாம்'' என்றார்.