பிரீமியம் ஸ்டோரி

நாக தோஷத்துக்குரிய கிரகங்கள் ராகு மற்றும் கேது. சில ஜோதிட நூல்கள் சனியைப் போல் ராகு; செவ்வாயைப் போல் கேது எனக் கூறுகின்றன. இவற்றை சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். இந்த கிரகங்கள், நிஜ கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் தன்மையை, வேகத்தைக் குறைக்கச் செய்கின்றன. அதனால்தான் இந்த ராகு, கேது தோஷங்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றன.

நாம் முன்னர் செய்த வினைகளுக்கு ஏற்பவே நாம் அனுபவிக்கும் பலாபலன்கள் உண்டாகின்றன என்பார்கள். நல்லது செய்தால் நன்மையும் தீயவை செய்தால் தீமையும் விளையும் என்பது கண்கூடு. அவ்வகையில் எந்தெந்த தவறுகள், பாவங்கள் எல்லாம் ராகு - கேதுவால் ஏற்படும் நாக தோஷத்துக்குக் காரணமாகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அறுகு வழிபாடு
அறுகு வழிபாடு

ராகு நம் பாட்டன் பாட்டியைக் குறிக்கும் கிரகம். அவர்கள் ஏதேனும் தவறுகள், பாவங்கள் செய்திருந்தால் ராகுவால் தோஷம் ஏற்படும் நிலை வாய்க்கும். அதேபோல், ராகு பெண்கள் ஆதிக்கம் உள்ள கிரகம். பெண்களுக்குத் துரோகம் செய்தாலும் இந்த தோஷம் ஏற்படும்.

கேதுவை ஞானகாரகன் என்பார்கள். குருவை நிந்தனை செய்வது, நமக்கு ஆசானாக இருப்பவர் களுக்குக் கெடுதல் செய்வது, வழிபாட்டுத் தலங்களுக்குச் சேதாரம் ஏற்படுத்துவது, வழிபாட்டுக்கு உரியவர் களை வசைபாடுதல் ஆகிய செயல்களால், கேது தோஷம் ஏற்படும். இந்த தோஷம் அடுத்தடுத்த சந்ததியினரையும் பாதிக்க வாய்ப்பு உண்டு.

அறுகு வழிபாடு
அறுகு வழிபாடு

மேலும், புதையல், அடுத்தவர்களின் பொருள்கள், கோயில் சொத்துகள் ஆகியவற்றை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வது, பிறருக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆலயப் பொருள்களைக் கவர்ந்து கொள்வது, தேவையில்லாமல் நாகங்களைக் கொல்வது, புற்றுகளைச் சிதைப்பது ஆகிய காரணங்களாலும் நாக தோஷம் ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களுக்கு அன்ன தானம் மற்றும் பொருளுதவி செய்வதால், இந்த தோஷத்தின் வேகத் தைக் குறைக்கலாம். யாருமற்ற நிலையில் இறந்தவர்களின் சவ அடக்கத்துக்கு உதவுவதன் மூலமாகவும் இந்த தோஷத்தை விலகச் செய்யலாம்.

அறுகு வழிபாடு
அறுகு வழிபாடு

தெய்வ வழிபாடும் இந்த தோஷத்தின் பாதிப்பைக் குறைத்து நமக்கு நன்மைகளை உண்டாக்கும். குறிப்பாக விநாயகரை அறுகம்புல்லால் வழிபட்டு துதித்தால் ராகு - கேது ஆகிய நாக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்கின்றன ஞான நூல்கள்.

அற்புதமான பலன்களை அள்ளித் தரும் அறுகு வழிபாட்டு நியதிகள், பலாபலன்கள் குறித்த தகவல்கள் இங்கே உங்களுக்காக.

அறுகம்புல்லை எப்படிப் பறிக்க வேண்டும்?

அறுகம்புல் வழிபாட்டுக்கு, சுத்தமான இடத்தில் முளைத்திருக் கும் அறுகம்புல்லையே பயன்படுத்த வேண்டும். அறுகம்புல் மீது சிறிது மஞ்சள் நீரைத் தெளித்து, குறைந்தது மூன்று இன்ச் அளவுள்ள அறுகம்புல்லைத் தேர்வு செய்து பறித்துச் சேகரித்துக்கொள்ள வேண்டும்.

பூஜைக்குத் தயாராவது எப்படி?

சேகரித்து எடுத்துவந்த அறுகம் புல்லின்மீது சிறிது பன்னீர் தெளித்து, சதுர வடிவ பலகையில் விசிறி போல் அதைப் பரப்பவேண்டும். நடுவில் சிறிய தலைவாழையிலை போட்டு, அதில் பச்சரிசி வைத்து, மோதிர விரலால் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும்.

ஒரு பித்தளைச் சொம்பில் மஞ்சள் நிற நூலைச் சுற்றி, சொம்பினுள் பச்சைக்கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு பொடி கலந்த நீர் ஊற்றவேண்டும். தொடர்ந்து, சொம்பு மீது மாவிலைக் கொத்து வைத்து, அதன்மேல் தேங்காயை வைக்கவேண்டும். அதன் பிறகு கதம்பச் சரம், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவேண்டும்.

இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும். பூஜைக்குத் தேவையான 21 அறுகம்புல்லைத் தனியாக வைத்திருக்கவும்.

மூன்று வகை மலர்களோடு கொழுக்கட்டை, தேங்காய், தாம்பூலம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி மற்றும் பழ வகைகளை பூஜையில் வைக்கலாம்.

பூஜையின் பலன்கள் என்ன?

ராகு - கேது தோஷம், காரியத் தடைகள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அறுகு பூஜைக்கான 21 நாமாவளிகள் என்னென்ன?

1. ஓம் பாசாங்குச தராய நம:

2. ஓம் கணாத்யாய நம:

3. ஓம் ஆகு வாகனாய நம:

4. ஓம் விநாயகாய நம:

5. ஓம் ஈச புத்ராய நம:

6. ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம:

7. ஓம் ஏக தந்தாய நம:

8. ஓம் இலவக்த்ராய நம:

9. ஓம் மூஷிக வாகனாய நம:

10. ஓம் குமார குரவே நம:

11. ஓம் கபில வர்ணாய நம:

12. ஓம் ப்ரும்மசாரிணே நம:

13. ஓம் மோதக ஹஸ்தாய நம:

14. ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம:

15. ஓம் கஜ நாசிகாய நம:

16. ஓம் கபித்த பலப்ரியாய நம:

17. ஓம் கஜமுகாய நம:

18. ஓம் சுப்ரசன்னாய நம:

19. ஓம் சுராஸ்ரயாய நம:

20. ஓம் உமா புத்ராய நம:

21. ஓம் ஸ்கந்த ப்ரியாய நம:

இந்த 21 நாமாவளிகளைச் சொல்லி முடித்ததும், தேங்காய் உடைத்து, கலசம் முன்பு வைக்கவும். பிறகு ஊதுவத்தி, தீபம் காட்டி, நிவேதனப் பொருள்களைப் படைக்கவும். கைகளில் மலர் எடுத்து, தன்னையே மும்முறை சுற்றி ஆத்ம பிரதட்சிணம் செய்துகொண்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும். தொடர்ந்து, பூஜைக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நிவேதனப் பொருள்களைப் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, நீங்களும் எடுத்துக்கொள்ளவும்.

எப்படி பூஜிப்பது?

முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள். கைகளில் மலர் எடுத்து கண்கள் மூடி மனமுருகி... ‘விநாயகனே... இங்கே பிரசன்னமாக வேண்டும்’ என்று வேண்டுதல் செய்யுங்கள். பிறகு அர்ச்சனை செய்யவும். அதன்பிறகு, இரு பழங்கள், வெற்றிலைப் பாக்கை வைத்து தூப தீபம் காட்டி, மங்கல ஆரத்தி செய்யவேண்டும். தொடர்ந்து, கை கூப்பியபடி...

‘அறுகில் மகிழும் ஆனந்த கணபதியே

உருகுவோர் மனத்தில் ஒளிதரும் வேந்தே

தொடரும் வினைகள் அறவே காப்பாய்

இடர் களைந்து இன்பம் ஈவாய் எம்மானே!’

என்று மூன்று முறை சொல்லி, கையில் வைத்திருக்கும் மலர்களைக் கலசத்தின் மேல் போட்டு வணங்கவேண்டும்.

பிறகு, ஒரு பஞ்ச பாத்திரத்தில் துளசி, மஞ்சள் தூள் சிறிது இட்டு, கைகளை மூடியபடி ‘கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, சிந்து, காவிரி ஆகிய நதிகள் இதனுள் வந்து இறங்குக’ என மூன்று முறை சொல்லி, அவற்றை கலசம், பூஜை திரவியங்களில் தெளிக்கவேண்டும். பிறகு, முக்கியமான அறுகம்புல் அர்ச்சனையை அதன் நாமாவளியால் செய்யவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு