திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

அஷ்டமத்தில் குரு கஷ்டம் தருமா?

ஶ்ரீகுரு பகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீகுரு பகவான்

ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்

நவகிரகங்களில் முழு முதல் சுபகிரகமாகத் திகழ்பவர் குருபகவான். கோசாரப்படி, அதாவது சந்திர ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு பகவான் உலவும்போது சுப பலன்களைத் தருவார். ஆனால், 1, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் உலவும்போது, அவரால் கிடைக்கும் நற்பலன்கள் குறைவுதான்; 4, 10 ஆகிய இடங்களில் அவர் சஞ்சரிக்கும் போதும் 50% நற்பலன்களையே தருவார் என்பது பொதுவான விளக்கம்.

அஷ்டமத்தில் குரு கஷ்டம் தருமா?

குருவானவர் தான் இருக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்களைப் புனிதப்படுத்துவார் என்கிறது சாஸ்திரம். ஆக, எல்லா ஸ்தானங்களிலும் அவரால் நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவரவர் சுய ஜாதக நிலைப்படி அந்தப் பலன்களின் அளவு அமையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஜன்ம குரு நன்மை உண்டா?

`ஜன்ம குரு வனவாசம்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. ஆனால் குரு பகவான் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ஜன்ம குருவாக அமையும்போது பெரும்பாலும் சுப பலன்களையே தருவார் எனலாம். மேஷத்துக்கும் கடகத்துக்கும் அவர் 9-ம் வீட்டோன், சிம்மம் மற்றும் விருச்சிகத்துக்கு 5-ம் வீட்டோன் ஆவார். அதேபோல், தனுசு மற்றும் மீனத்துக்கு அவர் ராசியாதிபதி. ஆகவே இந்த ராசிகளுக்கு ஜன்மகுருவாக இருந்தாலும் சுபத்தை வழங்குவார்; மதிப்பும் அந்தஸ்தும் உயரும் என்பார்கள்.

மட்டுமன்றி ஜன்ம ராசியில் குரு இருக்கும்பொது, 5, 7, 9-ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், மக்கள் நலம், வாழ்க்கைத்துணை நலம், தந்தை நலம் ஆகியவையும் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும் என்பார்கள்.

அதேபோல் அர்த்தாஷ்டம குரு என்ற நிலையை நினைத்தும் அச்சம் தேவையில்லை. உறவுகளால், பராமரிப்புகளால் செலவுகள் கூடும் என்றாலும், அவர் 5-ம் பார்வையாக 8-ம் இடத்தைப் பார்ப்பதால், திடீர்ப் பணவரவும் உண்டாகும்.

ஆறில் குரு சஞ்சாரம்... என்ன பலன்?

`சத்திய மாமுனி ஆறிலே இருகாலிலே தளை பூண்டதும்...’ என்றொரு பாடல் உண்டு. எனில் `ஆறில் குரு இருப்பது அச்சம் தரும் அம்சமா?’ என்றொரு கேள்வி நம் மனத்தில் எழலாம். குரு 6-ல் உலவும்போது பொருளாதாரச் சிக்கல்கள் எழும் வாய்ப்பு உண்டு. எனினும் கவனமுடன் செயல்பட்டால் எளிதில் சமாளித்துவிடலாம். 6-ல் உள்ள குரு 10, 12, 2-ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், குடும்ப நலம் சிறக்கும். தொழிலில் முழுக்கவனத்துடன் ஈடுபட்டால், வெற்றி காணலாம். ஜாதக பலம் உள்ளவர்களுக்கு 6-ல் குரு உலவும் போது, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

அஷ்டமத்தில் குரு கஷ்டம் தருமா?

பத்தில் குரு பதவியைப் பறிக்குமா?

`பத்தில் குரு பதவியைப் பறிக்குமே’ என்ற பயமும் அன்பர்களிடம் உண்டு. பத்தில் அவர் அமரும்போது குருவின் பார்வை 2, 4, 6-ம் இடங்களுக்குப் பதிவதால், அதன் மூலம் நலம் உண்டாகும். குடும்ப நலம் சீராகும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். எதிரிகளின் வலு குறையும். நோய்நொடி உபத்திரவங்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். இனி அஷ்டமத்தில் குரு சஞ்சரிக்கும் நிலை எப்படி என்பதைப் பார்ப்போம்.

அஷ்டமத்தில் குரு கஷ்டம் தருமா?

ஜன்ம ராசிக்கு 8-ல் குரு உலவுவது விசேஷமாகாது. `அஷ்டமத்துக் குரு பாடாய்ப்படுத்தும்’ என்பார்கள். ஆனால் குரு 8-ல் இருந்தாலும் அவர் சாதகமான நட்சத்திரத்தில் உலவும்போது அதிக கெடுபலன்களைத் தருவதில்லை. ஜாதகத்தில் குரு வலுத்திருக்கும்போது (ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம்) கோசார குரு அதிகம் பாதிப்பதில்லை என்ற விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கோசாரப்படி, ஒவ்வொரு ராசிக்கும் குருபகவான் 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது என்ன பலாபலன்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: இந்த ராசி நேயர்களுக்கு அஷ்டமத்து குரு எனில், அவர் விருச்சிகத்தில் இருப்பார்; நல்லதே செய்வார். எட்டாம் இடத்தில் குரு இருந்தாலும், அவர் எந்த நட்சத்திரக் காலில் செல்கிறார் என்பது முக்கியம். அனுஷம், கேட்டை, விசாகம், ஆகிய நட்சத்திரங்களில் குரு சஞ்சாரம் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்: இவர்களுக்குக் குரு தனுசு ராசியில் இருக்கும்போது அஷ்ட மத்து குருவாக இருப்பார். தனுசு அவரின் சொந்த வீடு என்பதால், பெரிதும் பாதிப்புகள் இருக்காது. எனினும் ரிஷப ராசிக்கு குரு பகை என்பதால், அவரின் தசாகாலாம் நடக்கும்போது சற்று பாதிப்பைக் கொடுக்கலாம். இந்த ராசியில் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு குரு தசை வரும்போது, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் பாதிக்கலாம்

மிதுனம்: இவர்களுக்கு குருபகவான் ராசியில் பகை; அஷ்டமத்தில் நீச்சம். குறிப்பாக இந்த ராசியில் - புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு, அஷ்டம குரு காலத்தில் குரு தசையும் நடக்கிறது எனில், உடல் ஆரோக்கியத்தில் சற்றுப் பாதிப்பை கொடுக்கும். திருமண விவகாரத்தில் குருவிற்குப் பரிகாரங்கள் செய்யின், பாதிப்புகள் இல்லை. வியாழக்கிழமைகளில் நவகிரக குருவை வழிபட்டால், நன்மைகள் கிடைக்கும்

கடகம்: இந்த ராசியில் குரு பகவான் உச்சம் பெறுவார்; அஷ்டமத்தில் சமம். ஆகையால் கடக ராசியினருக்கு அஷ்டமத்துக் குரு நிச்சயமாக கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார் எனலாம். இந்த ராசியில் பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு குருபகவான் உரிய பலனைச் சற்று தாமதமாகக் கொடுப்பார். கல்வி, வேலை விஷயங்களில் குருவிற்குப் பரிகாரங்கள் செய்வது நல்லது. வியாழக் கிழமைகளில் மகான்களின் சந்நிதானத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் பெருகும்.

சிம்மம்: இவர்களுக்கு ராசியில் குரு நட்பு; அஷ்டமத்தில் குரு ஆட்சி. ஆகையால், நல்ல பலன்கள்தான் அதிகம் உண்டு. இந்த ராசியில் பூரம் மற்றும் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு குரு தசையும் நடக்கிறது எனில், ஆன்மிகத்தில் நாட்டமும் குருகடாட்சமும் கிடைக்கும்.

கன்னி: இவர்களுக்கு குரு நட்புக் கிரகம். ஆகையால் அஷ்டமத்தில் இருந்தாலும் கெடுபலன்கள் இல்லை எனலாம். இவர்கள் வியாழக் கிழமைகளில், குரு ஹோரையில் குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், மேலும் நல்ல பலன்கள் உண்டு. இந்த ராசியில் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதக ரீதியாக குரு தசையும் நடக்கிறது எனில், பகைவர்கள் தொல்லை இருக்கும். வியாழக் கிழமைகளில் குருவப் போற்றி வழிபட்டால் சத்ரு தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அஷ்டமத்தில் குரு கஷ்டம் தருமா?

துலாம்: இவர்களுக்குக் குரு ராசியில் பகை. அஷ்டமத்திலும் குரு பகையாக இருக்கிறார். இருந்தபோதிலும் முறையாக குருவை வணங்கினால், அவர் அனுக்கிரஹ மூர்த்தியாக இருப்பார். விசாகம் மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்கள், திருமணத்தின்போது தடைகள் ஏற்பட்டால், குரு பரிகாரம் செய்து பலன் பெறலாம்.

விருச்சிகம்: இவர்களுக்கு ராசியில் குரு நட்பு. அஷ்டமத்தில் பகையாக இருக்கிறார். குரு இந்த ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் - திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்தால், திருமண நேரத்தில் பரிகாரம் செய்யவேண்டும். விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரக் காரர்கள் உடல் ஆரோக்கியத்துக்குக் குருவை வணங்கலாம்.

தனுசு: அஷ்டம குரு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார் என்றே சொல்லலாம். ராசியில் ஆட்சி, 8-ல் உச்சம். ஆகையால் தனுசு ராசி நேயர்களுக்கு குரு நல்லதே செய்வார். இந்த ராசியைச் சேர்ந்த மூலம் மற்றும் பூராட நட்சத்திரக்காரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது இவர்களின் ராசிக்குக் குரு 8-ம் இடத்தில் - கடக ராசியில், பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது பரிகாரங்கள் செய்யவேண்டும்.

மகரம்: ராசியில் குரு நீச்சம்; எட்டில் குரு நட்பு. இவர்களுக்கு அஷ்டமத்து குரு எனும் நிலையில், அவர் சிம்மத்தில் இருப்பார். ஆகவே, எவ்விதத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் குரு பகவான் பூரம் மற்றும் மகம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும்போது, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும்; குரு பகவான் திருத்தலங்களை தரிசித்து வருவதால் மேன்மை உண்டாகும்.

கும்பம்: இந்த ராசியில் குரு சம பலன்; இந்த ராசிக்கு 8-ம் இடத்தில் குரு நட்பு நிலையில் இருப்பார். அவர் அஷ்டமத்து குருவாக கன்னியில் இருக்கும்போது, கும்ப ராசிக்கு நன்மையே நடக்கும். எனினும் குரு பகவான் சித்திரை மற்றும் உத்தரம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும்போது, சதயம் நட்சத்திரக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மற்றும் பிரகஸ்பதியை வழிபடுவதுடன், கொண்டைக் கடலை தானம் செய்வது சிறப்பு.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் ராசியில் ஆட்சி பெறுவார்; அஷ்டமத்தில் பகை ஆவார். குரு வாரத்தில் மனமுருகி குரு பகவானை வழிபட்டு வருவதால் சகல நன்மைகளும் உண்டாகும். இந்த ராசியில் இடம்பெற்றுள்ள உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்... குரு பகவான் விசாகம் மற்றும் சுவாதியில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம் மற்றும் தேக ஆரோக்கியத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று குரு பகவானை வழிபட்டு வாருங்கள். உழவாரப் பணியில் கலந்துகொள்ளுங்கள்; சுபிட்சங்கள் கூடும்.

பன்னிரு ராசிகளுக்கும் `அஷ்டமத்து குரு’ காலத்தில் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். தற்போது நடைபெற்றுள்ள குருப் பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார் குரு பகவான். இந்த ராசிக்குக் குரு பகவான் நட்புக் கிரகமே. ஆகவே நற்பலன்களையே தருவார்.

வியாழக் கிழமைகளில் குருபகவானை மனமுருகி வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றிவைத்து மனதில் அவரைத் தியானித்து, ‘கும் குருப்யோ நம:’ என்று சொல்லி வழிபடுவதால் குருபலம் பெருகும். `குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை குருவே நம:’ என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். சகல நன்மைகளும் தேடிவரும்.

பித்ரு தோஷமா... இதுதான் பரிகாரம்!

பித்ரு தோஷம் இருப்பதைப் பல கிரக அமைப்புகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவர் ராகுகாலத்தில் பிறந்திருந்தால் அவருக்குப் பித்ரு தோஷம் ஏற்படும் என்பார்கள்.அதேபோல், சுபகிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் அமைந்திருத்தல், சூரியன் பகை, நீச்சம் பெற்றிருத்தல் போன்றவையும் பித்ரு தோஷத்தைக் குறிப்பிடும்.

ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். திருமணத்தடை, புத்திரபாக்கியம் பெறுவதில் தடை, பொருளாதார ரீதியில் பிற்போக்கான நிலை போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் காசி, கயா, பிரயாகை, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்குச் சென்று முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். கோயில்களில் விருட்சங்கள் வளர்க்கலாம். தினசரி காகத்துக்கு அன்னம் வைப்பது சிறந்த பரிகாரமாகும்.