திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

நட்சத்திர ரகசியங்கள்!

நட்சத்திர மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திர மகிமைகள்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ராசிகள் ஜடங்கள். அவற்றுக்கு உயிரூட்டுவது நட்சத்திரங்களும் கிரகங்களுமே. இல்லாள் இருந்தால் இல்லம் உயிர் பெற்றிருக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம் (கிருஹிணீ கிருஹமுச்யதெ...) ஆன்மாவுடன் இணைந்தால் மட்டுமே மனம் செயல்படும். அதற்கு சைதன்யம் அளிப்பதில் நட்சத்திரத்துக்கும் பங்கு உண்டு.

நட்சத்திர ரகசியங்கள்!
monsitj

ட்சத்திரத்தை, ‘ஜோதிஸ்ஸீ’ என்கிறது வேதம் (ஜ்யோதிரிதீநக்ஷத்திரேஷூ). விண்வெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் இருந்தாலும், 27 நட்சத்திரங்கள் மட்டுமே பிறப்புடன் ஒட்டிக்கொண்டு, பிறந்தவனின் குணாதிசயங்களை வெளிப்படுத்த இயலும் என்பதை அறிந்து பரிந்துரைத்தது ஜோதிடம்.

காலத்தை அளவிடும் கருவிகளில் நட்சத்திரமும் அடங்கும். சூரியனை வைத்து ஸெளரமானம்; சந்திரனை வைத்து சாந்திர மானம்; உதயாஸ்தமனத்தை வைத்து ஸாவனமானம் என்று உண்டு. அதேபோல், நட்சத்திரத்தின் ஒரு சுற்றை வைத்து நாக்ஷத்திரமானம் என்று கால கணனம் உண்டு (ஸெளரசாந்திரஸாவன நாக்ஷத்திரமானை: அனுமிதே...).

‘பத்து மாதம் சுமந்து பெற்று’ : என்ற வழக்குச் சொல், நட்சத்திர அளவில் 10 மாதத்தைச் சொல்லும். 27 x 10 = 270 நாள்கள்; பத்து மாதம் ஆகும். பிரசவ காலத்தைத் துல்லியமாக ஜோதிடம் எடுத்துச் சொல்லும். நட்சத்திரத்தின் கால அளவு பிறப்பை உறுதி செய்கிறது. மாதவிடாயின் கால அளவு 27 நாள்கள். அதுவும் நட்சத்திர கால அளவை வைத்து வரும்.

பிறந்தநாளை நட்சத்திர அளவில் நிர்ணயம் செய்வோம். கால மாற்றத்தில் தேதியை ஏற்றாலும், பிறந்தநாளை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டாடும் வழக்கம் தற்போதும் உண்டு.

நமது உடல் பஞ்சபூதங்களின் கலவை. அதில் ஆகாசத்தின் பங்கை நிறைவு செய்வதில், கிரகங்களுடன் நட்சத்திரத்துக்கும் பங்குண்டு. கிரகங்கள் நகர்ந்து செல்ல நட்சத்திரங்கள் உதவுகின்றன. கிரக பாதசாரம் என்ற சொல்லில் ‘பாத’ என்ற பகுதி, நட்சத்திர பாதத்தைக் குறிக்கும். கிரகங்கள் ஊர்ந்து செல்லும் சாலையாக (பாதையாக) நட்சத்திரங்கள் செயல்படுகின்றன.

அமிருத யோகம், சித்த யோகம், மரண யோகம் போன்றவற்றில் நட்சத்திர பங்குதான் யோகத்தை வரையறுக்கிறது. தினப் பொருத்தம் என்பது நட்சத்திரப் பொருத்தம்தான். நல்ல காரியங்களைத் தொடங்க நட்சத்திர பலம் வேண்டும் என்கிறது காலவிதானம் (தாராபலம் சந்திரபலம் ததைவ).

சித்திரா பூர்ணிமா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை நட்சத்திரத்தின் பெருமைக்குச் சான்று. திருவோண விரதம், கார்த்திகை விரதம், ஆருத்ரா தர்சனம் போன்ற விரதங்களும் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும்.

கேரளத்தில் அரச பரம்பரையைச் சுட்டிக்காட்ட நட்சத்திரத்தைப் பயன்படுத்துவர். ஆயில்யம் திருநாள், மூலம் திருநாள் என்று அரசரைக் குறிப்பிடுவர். ஆழ்வார்கள் திருநட்சத்திரம், நாயன்மார் திருநட்சத்திரம் என்று தெய்வ அடியார்களையும் குறிப்பிடுவது உண்டு. இறை வடிவங்களை ஆராதிப்பதிலும் நட்சத்திரத்துக்கு பங்கு உண்டு. புனர்வசுவில் : ராமர் ஆராதனை, திருவோணத்தில் : விஷ்ணு, திருவாதிரையில் : ஈசன், உத்திரத்தில் : சாஸ்தா, மூலத்தில் : கலைமகள், கிருத்திகையில் : கந்தன்... இப்படிப் பட்டியல் நீளும்.

துருவன், அருந்ததீ, அகஸ்தியர், ஸப்த ரிஷிகள் ஆகியோர் நட்சத்திர வடிவில் விண்வெளியில் வீற்றிருப்பார்கள். அழிவற்றவர்களாகத் திகழ நட்சத்திர வடிவை (ஜோதிர் வடிவம்) அவர்கள் தேர்ந்தெடுத்தனர். விண்வெளியில் மிளிர்வதால், உலக மக்கள் அனைவரும் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

அந்தந்த நாளில் தென்படும் நட்சத்திரங்களை விண்வெளியில் சந்திரனின் அருகில் தரிசிக்கலாம். விசாகா நட்சத்திரம் சந்திரனைப் பின்தொடர்ந்து நகருகிறது என்பார் காளிதாசன் (யதிவிசாகே சசாங்கலேகாமனுவர்த்ததே).

நாக ஆராதனையில் ஆயில்யத்துக்குத் தனிப்பெருமை உண்டு. நாட்டில் இருக்கும் நாக வடிவங்களுக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் விசேஷ பூஜை நிகழும். ஆலய ப்ரதிஷ்டா தினத்தை நட்சத்திரம் நிர்ணயிக்கும். பூரம் பிறந்த புருஷன், மகம் பிறந்த மங்கை : இப்படி நட்சத்திர இணைப்பில் மிளிரும் தகுதியை ஆணிலும் பெண்ணிலும் கண்டு களிப்பதுண்டு.

நட்சத்திர ரகசியங்கள்!

படைப்பை ஏற்ற பரம்பொருள் ஹஸ்த நட்சத்திரத்தைத் தனது கைகளாகவும், சித்திரையை சிரசாகவும், ஸ்வாதியை இதயமாகவும், விசாகத்தை இரண்டு துடைகளாகவும், அனுஷத்தை பாதங்களாகவும் தன் உடலோடு இணைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்கிறது வேதம் (ஹஸ்தஏவாஸ்யஹஸ்த சித்ரா சிர:...).

மஹாளயபக்ஷத்தில் ‘மஹா பரணி’ சிறப்புப் பெற்றது. தென்புலத் தாரை வழிபட பரணி நட்சத்திரம் சிறந்தது என்று சாஸ்திரம் சொல்லும். எம பயத்தைப்போக்க பரணி தீபமும் பயன்படும். நட்சத்திரங்களை வழிபட்டால் அவர்கள் இருக்கும் சுவர்க்கத்தை அடைவான்; நட்சத்திர வடிவில் விளங்கிக் கொண்டிருப்பான் என்கிறது வேதம் (அமும்ஸலோகம்நஷதே).

கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் ராகு தீண்டினா லும், அதோடு இணைந்த நட்சத்திரங்களுக்கும் பாதிப்பு இருப்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஆராதனையில் ஈடுபடச் செய்யும் சாஸ்திரம்.

கிருத்திகை முதல் விசாகம் வரையிலானவை தேவ நட்சத்திரங்கள். அனுஷம் முதல் பரணி வரை : யம நட்சத்திரங்கள் என்ற பாகுபாடு உண்டு என்கிறது வேதம் (கிருத்திகா: ப்ரதமம், விசாகே உத்தமம் தானி தேவநக்ஷத்திராணி, அனுராதா: ப்ரதமம் அபபரனீருத்தமம் தானியம நக்ஷத்திராணி...).

கிருத்திகையை முதல் நட்சத்திரமாகவும் பரணியைக் கடைசி நட்சத் திரமாகவும் குறிப்பிடும் வேதம். பிற்பாடு வந்த ஜோதிட வல்லுநர்கள் பலன் சொல்லுவதற்குப் பாங்காக, அச்வினியை முதல் நட்சத்திரமாகவும் ரேவதியைக் கடைசியாகவும் குறிப்பிட்டனர். ஆனால், கிரகநாயகன் சூரியனின் தசையை கிருத்திகையுடன் இணைத்து, வேதக் கருத்துக்கு இயைந்து செயல்பட்டனர். கிருத்திகையில் சூரிய தசை ஆரம்பம், ரோஹிணியில் சந்திரன்... இப்படி தசாகால நிர்ணயத்தில் வேதக் கோட்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தனர்.

கிருத்திகையில் சூரியன் நுழையும் வேளையில் வெப்பம் அதிக மாகும். கிருத்திகைக்கு அக்னி நட்சத்திரம் என்ற பெயர் உண்டு. அந்த வேளையை அக்னி நட்சத்திரம் என்றும், ‘கத்திரி வெயில்’ என்றும் சொல்லுவது உண்டு. க்ருத்திகை என்ற சொல் கத்திரியாக மருவி யிருக்கிறது.

சூரியனின் வெப்பமும் அக்னி நட்சத்திரமான கிருத்திகையின் தேவதையான அக்னியின் வெப்பமும் இணைந்து இருப்பதால் வெப்ப மிகுதியாக வாட்டியெடுக்கும் என்று சொல்வதுண்டு. கிருத்திகை நட்சத்திர ப்ரவேசம் வெப்பத்துக்குக் காரணமாகிறது. வெப்பத்தின் தாக்கம் மனதைத் தளர வைப்பதால், நல்ல காரியங்களை, அதாவது நம் முன்னேற்றத்துக்கு உகந்த காரியங்களைச் செய்வதை அந்த வேளை யில் தள்ளிப்போடச் சொன்னார்கள்.

நட்சத்திர ரகசியங்கள்!

பரணி : யம நட்சத்திரம்; க்ருத்திகை : அக்னி நட்சத்திரம். ஆகையால் இந்த இரண்டிலும் நல்ல காரியங்கள், அதாவது வளர்ச்சியுற்று விளங்க வேண்டியவற்றை தள்ளிப் போட்டார்கள். அதேபோல் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகியன பயணத்துக்கு உகந்ததல்ல என்கிறது ஜோதிடம்.

சுவாதி நட்சத்திரத்தில் மணப்பெண்ணை மணமகனிடம் ஒப்படைத்தால், அவள் புகுந்த வீட்டில் புகழோடு வாழ்வாள் என்கிறது வேதம். முத்துச் சிப்பியில் சுவாதி நட்சத்திரம் இருக்கும் வேளையில் நீர் புகுந்தால், அந்த நீர் முத்தாக மாறும் என்கிறது சாஸ்திரம்.

புஷ்பவதியாகும் வேளையில் இணைந்த நட்சத்திரம் அவளது வருங்காலத்தை நிர்ணயிக்கும் தகுதியைப் பெறுகிறது. இல்லறத்தை இனிமையாக்கவும், நல்லபடி யாக மழலைச் செல்வத்தைப் பெறவும், கர்பாதான வேளையை இறுதி செய்ய நட்சத்திரத்தின் பங்கு முக்கியமாக இருக்கும்.

மேலும் பெயர் சூட்டுதல், காது குத்துதல், திருமணம் போன்ற வேளையை நிர்ணயிப்பதிலும் நட்சத்திர இணைப்பு இறுதி முடிவைத் தரும். குழந்தையைத் தொட்டிலில் போட, மருந்துண்ண, பாலூட்ட, பயணம் மேற்கொள்ள, உழுது பயிரிட, பயிரறுக்க, சேமிக்க, க்ரய விக்ரயம் செய்ய, கடன் வாங்க : கொடுக்க, புது வஸ்திரம் வாங்க: உடுக்க, அணிகலன் வாங்க, கிணறு வெட்ட, வீடுகட்ட, தோட்டம் அமைக்க, குளம் அமைக்க, கூரை போட, புதுமனை புகுவிழா செய்ய, ஒப்பந்தம் செய்ய, பத்திரப்பதிவு : போன்றவற்றிலும், சமுதாய சேவைகளிலும், நமது செயல்பாடுகளிலும் நல்ல நாளை நிறைவு செய்யும் விஷயத்தில் முதலில் நிற்பது நட்சத்திரம்.

இறையுருவத்தை வழிபடவும் நட்சத் திரம் வாயிலாக நம்மை இணைத்துக் கொள்கிறோம். ஆகையால், அர்ச்சகர் நட்சத் திரத்தைக் கேட்டறிந்து, நமது இணைப்பை ஏற்படுத்தி அர்ச்சனை செய்கிறார்.

முற்பிறவி கர்மவினைகள் நட்சத்திரத் துடன் இணைந்த தசாபுத்தி அந்தரங்களால் அனுபவத்துக்கு வருகின்றன. 9 கிரகங்க ளுடைய தசைகளும் நட்சத்திரத்தை ஒட்டி வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 12 ராசிகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட 27 நட்சத் திரங்கள், 9 கிரகங்களுடன் இணைந்து பலனளிக்க உதவுகின்றன.

வேதம் நேரடியாக அறிமுகம் செய்த நட்சத்திர வழிபாடு வேள்விக்கு ஒப்பானது. பயனுள்ள சிறந்த வழிபாடு இது. அவரவர் நட்சத்திர தினத்தில் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

28-வது நட்சத்திரம்

த்திராட நட்சத்திரத்துக்கும் திருவோணத்துக்கும் இடையே ஒரு நட்சத்திரம் உண்டு. அதன் பெயர் அபிஜித். 28:வது நட்சத்திரம். இதன் தேவதை ப்ரஜாபதி என்று விளக்குகிறது வேதம் (உபரிஷ்டாதஷாடானாம் அவஸ்தாத் ச்ரோணாயை...).

நட்சத்திர வேள்வி என்ற தொகுப்பில் அபிஜித் நட்சத்திர வேள்வியும் அடங்கும். ஜோதிடத்தில் இந்த நட்சத்திரம் இடம்பெறவில்லை.

நட்சத்திர ரகசியங்கள்!

தைப்பூசத் திருநாளில்...

இந்த வருடம் வரும் 18.1.2022 செவ்வாய்க்கிழமை அன்று தைப்பூசத் திருநாள் வருகிறது. புஷ்ய நட்சத்திரத்தை பூசம் என்று சொல்வோம். இது, கடக ராசியில் அடங்கிய நட்சத்திரம். கடகத்துக்கு அதிபதி சந்திரன். ஆனால் நவாம்சகத்தில், அதன் நான்கு பாதங்களுக்கும் முறையே சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோருடன் தொடர்பு உண்டு. புஷ்ய நட்சத்திரத்தை ‘திஷ்யம்’ என்கிறது வேதம் (திஷ்யோ நக்ஷத்திரம்...). பும்ஸுவனத்தில் இதன் இணைப்பு சிறப்பு என்கிறது சாஸ்திரம். பூசத்தின் தேவதை பிரஹஸ்பதி அவர் நாவன்மைக்குப் பேர் போனவர். அவரை, தேவர்களின் குரு என்கிறது புராணம்.

பூசம், மூன்று தாரைகளை உள்ளடக்கிய நட்சத்திரம். மென்மை யான நட்சத்திரம் இது. கிரய : விக்ரயம், இயல், இசை, நாடகம், சில்பம், மருந்து, பயணம், அணிகலன், 64 கலைகள், உயர்கல்வி ஆகியவற்றுடன் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பு பெறும் என்கிறார் வராஹமிகிரர். திருமணம் தவிர மற்ற நல்ல காரியங்களுக்கு சிறப்புண்டு என்கிறது ஜோதிடம். பூணூல் கல்யாணத்துக்கு இதன் சேர்க்கை, ‘பிரம்மவச்சஸை’ப் பெருக்கும் அதாவது, வேதக் கல்வியில் ஏற்பட்ட களை மங்காமல் இருக்கும்.

வர்த்தகம், வங்கிகள், பணத்தைப் பெருக்கும் உண்டியல் வணிகம், மாட்டுச் சந்தை, வேள்வி, வேதம் ஓதுதல், சில்பக் கலை, மருத்துவம் போன்றவற்றுக்கு இந்த நட்சத்திரத்தின் சேர்க்கை வலுவூட்டி சிறப்பிக்கும் என்கிறார் பராசரர்.

தைப்பூசத் திருநாளில் முருகனை வழிபடுவோம். அத்துடன் தேவகுருவாம் பிரஹஸ்பதியையும் `ப்ரும் ப்ருஹஸ்பதயெ நம:’ என்று கூறி, வணங்கி வழிபட்டு வரம் பெறலாம்.

நட்சத்திரங்களும் வழிபடவேண்டிய தெய்வங்களும்!

அசுவினி : சரஸ்வதிதேவி

பரணி : துர்கை

கார்த்திகை : முருகப்பெருமான்

ரோகிணி : கிருஷ்ணன்

மிருகசீரிஷம் : சிவபெருமான்

திருவாதிரை : சிவபெருமான்

புனர்பூசம் : ராமபிரான்

பூசம் : தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் : ஆதிசேஷன்

மகம் : சூரிய பகவான்

பூரம் : ஆண்டாள்

உத்திரம் : மகாலட்சுமி

அஸ்தம் : காயத்திரி தேவி

சித்திரை : சக்கரத்தாழ்வார்

சுவாதி : நரசிம்மமூர்த்தி

விசாகம் : முருகப்பெருமான்

அனுஷம் : லட்சுமி நாராயணர்

கேட்டை : வராஹ பெருமாள்

மூலம் : ஆஞ்சநேயர்

பூராடம் : ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் : விநாயகப் பெருமான்

திருவோணம் : ஹயக்ரீவர்

அவிட்டம் : அனந்த சயனப் பெருமாள்

சதயம் : மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி : ஏகபாதர்

உத்திரட்டாதி : மகா ஈஸ்வரர்

ரேவதி : ஶ்ரீரங்கநாதர்