தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்

ராசிப் பொருத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிப் பொருத்தம்

மனிதர்களில் மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்கள் இருப்பது போலவே கிரகங்களிலும் மாறுபட்ட குணங்கள் உண்டு.

வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் இந்தத் தலைமுறையினர் முந்தைய தலைமுறையைவிட அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதை நாம் மறுக்க முடியாது.

அவர்களின் வாழ்வு நல்லவிதமாக அமைந்திட, ஜோதிடம் அருளியுள்ள வழிமுறைகளை நாடுவது அவசியம். அவ்வகையில், எந்தெந்த ராசி- லக்னக் காரர்களுக்கு எந்தெந்த ராசி- லக்னக்காரர்கள் தகுந்த இணையாக இருப்பார்கள் என்பதை ஜோதிட சாஸ்திரம் விளக்குகிறது.

வாழ்க்கையில் இணைய...
ராசிப் பொருத்தம்

குறிப்பாக, சஷ்டாஷ்டகம் என்று சொல்லக்கூடிய 6, 8, 12 ஆகிய வீடுகளைச் சேர்ந்த ராசியோ, லக்னமோ உள்ளவர்கள் இணையக் கூடாது. ராகு, கேது தவிர்த்து ஏழு கிரகங்கள். இந்த ஏழு கிரகங்களும் 12 ராசிகளுக்கும் காரகத்துவம் பெற்றவர்கள். ஒரு ராசியில் ஒரு லக்னத்தில் பிறந்தவர், அந்த லக்னாதிபதியின் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மனிதர்களில் மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்கள் இருப்பது போலவே கிரகங்களிலும் மாறுபட்ட குணங்கள் உண்டு. ஒரே எண்ணம் கொண்டவர்கள், ஒரே ரசனையைக் கொண்டவர்கள், இணைந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

இனி, மேஷ ராசிக்காரர்கள் எவருடன் இணையலாம் என்று பார்ப்போம். இவர்கள் விருச்சிகம், தனுசு, மீனம், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு ராசிக்காரர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றால், வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி யிடையே கருத்துகள் ஒன்றுபட்டிருக்கும்.

எல்லா ராசிக்காரர்களும் ரிஷப ராசிக்காரர் களுக்கு மிகவும் ஒத்துப்போகவே செய்வார்கள். அதற்குக் காரணம் ரிஷப ராசியினர் எல்லோரிடமும் சமாதானமாகப் போவார்கள். நேர்மையோடும் நெறியோடும் இருப்பார்கள். எனினும் ரிஷப ராசிக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளும் மிகவும் பொருத்த மானவை. துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக் காரர்களும் ஒரே கருத்து உடையவர்களாக இருப்பார்கள். மற்ற ராசிக்காரர்களுடன் அவர்கள் இணையலாமா, வேண்டாமா என்பதைப் பார்க்கவேண்டுமென்றால், அதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் இணைய...
ராசிப் பொருத்தம்

மிதுன ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களை முதன்மையாகத் தேர்வு செய்யலாம். மிதுனம், கன்னி ராசிகளுக்குப் புதன் ராசி நாதன் என்பதால், பரஸ்பரம் ஒருவரையொருவர் எளிதாகப் புரிந்துகொள்வார்கள். மேலும் துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தால், சிறப்பாக இருக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம ராசியான கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் முரண்பட்டு ஒத்துப்போக மாட்டார்கள். கடக ராசிக்காரர் களுக்கு நண்பர்களாக இருக்கக்கூடியவர்கள் மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள். சிம்மம் மிகவும் உகந்த ராசி.

சிம்ம ராசிக்காரர்களுக்கு, தனுசு மற்றும் மீன ராசியினர் மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். இதற்கு அடுத்த நிலையில் மேஷம், விருச்சிக ராசிக்காரர்களைத் தேர்வு செய்யலாம். கடக ராசிக்காரர்கள் இவர்களின் அருகிலேயே இருந்து அன்பு பாராட்டுவார்கள்.

வாழ்க்கையில் இணைய...
ராசிப் பொருத்தம்

கன்னி ராசிக்காரர்களை மிகவும் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மிதுன ராசிக்காரர்களே. இதற்கு அடுத்த நிலையில் ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ஏற்புடையவர்கள். அடுத்தபடியாக மகரம், கும்ப ராசியினரை ஏற்கலாம்.

துலாம் ராசியினர் மிதுனம், கன்னி ராசிகாரர்களை முதல் தேர்வாகக் கொள்ளலாம். அடுத்ததாக மகரம், கும்பம் ராசிக்காரர்கள் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள். வழியில்லாத நிலையில் ரிஷப ராசியினரை ஏற்கலாம். துலாம் - ரிஷபம் வாழ்வில் இணையும் நிலையில், இருவருக்குமிடையே பெரும்பாலும் முரண்பாடுகள் தோன்ற வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசிக்காரர்கள், யாரோடு பொருத்தம் கூடாது என்பதை முதலில் பார்ப்போம். விருச்சிக ராசிக்கு எட்டாம் இடமாக வரும் மிதுன ராசிக்காரர்கள் பொருத்தமற்றவர்களாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தனுசு, மீன ராசிக்காரர்களை முதல்நிலைத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம். இரண்டாம் நிலையாக கடகம், சிம்ம ராசிக்காரர்களையும் மூன்றாம் வாய்ப்பாக மேஷ ராசிக்காரர்களையும் ஏற்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் ஒரே கருத்துள்ளவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் அமைந்தால், வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். இருவருக்கும் சரியான புரிதல் இருக்கும். அடுத்த நிலையாக மீனம் மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களைச் சொல்லலாம். கடக ராசியினரை மூன்றாம் நிலையாகத் தேர்வு செய்யலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு ரிஷபம், துலாம் ராசிக் காரர்கள் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்களும் ஒரே நேர்கோட்டில் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். நிறைவாக கன்னி, மிதுன ராசிகளைத் தேர்வு செய்யலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு, மிதுன ராசிக்காரர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பரஸ்பரம் சரியான புரிந்துகொள்ளல் அவர்களுக்குள் நிலவும். மிதுனம் அமையவில்லை எனில் ரிஷபம், துலாம் ராசியினரை ஏற்கலாம். அந்த ராசிகளிலும் இணை அமையவில்லை எனில், மகரம், கன்னி ராசிக்காரர்களையும் இணைக்கலாம்.

மீன ராசிக்காரர்களுக்கு எப்போதும் பொருந்திப் போகக் கூடியவர்கள் கடக ராசிக்காரர்கள்தான். அடுத்த நிலையில் விருச்சிகம், மேஷ ராசிக்காரர்கள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்த நிலையில் மீனம், சிம்மம் ராசிக்காரர்களைத் தேர்வு செய்யலாம்.