திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

பெண்கள், திருமாங்கல்யச் சரடை மாற்றுவதற்கு உகந்த நாள் எது?

சுப நாள்கள்
News
சுப நாள்கள்

அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்


செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில், பகல்வேளையில் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நூல் அறுந்துவிட்டது எனில், அப்போது நேரம் காலம் பார்க்காமல், உடனே மாற்றிக்கொள்வது சிறப்பு.

திருஷ்டி கழிக்கும் உப்பை என்ன செய்யலாம்?

கற்பூரம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை கொண்டு திருஷ்டி சுற்றுவது வழக்கம். இந்த வரிசையில் உப்பும் உண்டு. வீட்டில் திருஷ்டி சுற்றப்படும் உப்பை நீர்நிலைகளில் சேர்க்கலாம். அருகில் நீர்நிலை இல்லையெனில், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் சேர்த்து, உப்பு கரைந்ததும் அந்தத் தண்ணீரை மற்றவர் கால் படாத இடத்தில் கொட்டலாம்.

திருஷ்டி கழிக்க உகந்த நாள்கள் என்ன?

திருஷ் - பார்வை. `பார்வை மூலம் ஏற்படும் பாதிப்பே திருஷ்டி' என்கின்றன ஞான நூல்கள். சம்பிரதாயம் சார்ந்து பல்வேறு முறைகளில் திருஷ்டி கழிக்கும் வழிமுறைகள் உண்டு. அவ்வாறு திருஷ்டி கழிப்பதற்கு ஞாயிறு, அமாவாசை ஆகிய நாள்கள் ஏற்றவை.

சுபகாரியங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டிய நாள்கள் எவை?

நாள்களில் சனி, செவ்வாய்; நட்சத்திரங்களில் கேட்டை, பூராடம்; திதிகளில் அஷ்டமி, நவமி; யோகங்களில் மரண யோகம் ஆகியவை சுபகாரியங்களில் விலக்கப்படும்.எல்லா காரியங்களுக்கும் கால-நேரம் பார்ப்பது அவசியமா?

கடமையைச் செய்வதற்கு காலம் பார்க்க வேண்டாம். காலம் வரும் வரை காத்திருந்து, கடமைகளைத் தள்ளிப் போடக் கூடாது என்கின்றன ஞானநூல்கள். தாய்- தந்தை கவனிப்பு, நமது காலைக் கடன்கள், குடும்பப் பராமரிப்பு, அரசாங்க உத்தரவு, அலுவலக வேலைகள், கடவுள் வழிபாடு, கொடை வழங்குதல், பிறருக்கு உதவி செய்தல் இவற்றுக்குக் கால- நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் நவகிரக படங்களை வைத்து பூஜிக்கலாமா?

நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் சகல இடங்களிலும் இறை சாந்நித்தியத்தைப் பெற முடியும். ஆகவே, வீட்டிலேயே நவகிரகத்தை ஆராதிக்கலாம். நமது நல்லது- கெட்டதை வரையறுப்பதில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகளுக்குப் பங்கு உண்டு. காலத்துடன் இணைந்தவை இவை. காலத்தை இயக்கும் இறையின் அருளைப் பெற நவகிரக வழிபாடு துணை செய்யும்.

மங்கல ஆரத்தி ஏன் தெரியுமா?

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி எடுப்பர். புதுமணத் தம்பதியிடம் திருஷ்டி தோஷம் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக ஆரத்தி எடுப்பது உண்டு. நிகழ்வின் நிறைவைக் குறிப்பது ஆரத்தி. இதேபோல், என்றும் மங்கலம் பொங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுள் துதியுடன் மங்கல ஆரத்தி எடுப்பது உண்டு

ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

பிறக்கும் நேரத்தால் எந்தக் கெடுதலும் குழந்தைக்கும் இல்லை; பெற்றோருக்கும் இல்லை. ஆக, ராகு காலம் - எமகண்டம் என்று எவ்வித தருணமாயினும் குழந்தை பிறப்பு குறித்து நெருடல் தேவையில்லை. சித்திரை அப்பன் வீதியிலே, மூலத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது... இப்படியெல்லாம் ஆராயாமல் சிலரால் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. பிறப்பு நேரம் குறித்து எவ்வித நெருடலும் தேவையில்லை.

அஷ்டமி என்றாலே கஷ்டமா?

நடைமுறையில் பெரும்பாலானோர் அஷ்டமியை விலக்குவதால், அதுகுறித்து மன நெருடல் உண்டாவது இயற்கை. தேய்பிறை அஷ்டமியில் திருமணம் செய்யலாம் எனும் வழக்கம் கேரளப் பகுதியில் உண்டு. அஷ்டமி, துவாதசி போன்றவை பேச்சு வார்த்தைகளில் வெற்றி பெற ஏற்புடையவை. அம்பாள் பூஜைக்கு அஷ்டமி சிறப்பு. கோகுலாஷ்டமி, பைரவாஷ்டமி வழிபாட்டுக்குரியவை.